December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மரணம்)

மரணம் தவிர்க்க முடியாதது. கீதையில் கண்ணன்,

'பிறந்த எவனுக்கும் மரணம் உண்டு
மரணித்தவனுக்கு மீண்டும் பிறப்பும் உண்டு'
என்கிறார்.

அசுரர்கள் சிலர் மரணமற்ற இருப்பை நோக்கி தவமியற்றி இறுதியில் தோல்வியே கண்டனர். மரணம் என்பது இயற்கையின் தன்மை, அதன் இன்றியமையாத செயல்பாடு. மரணத்தை ஜெயிப்பதோ வெல்வதோ இயற்கைக்கு எதிராக புறம்பாக செயல்பட நினைப்பது. அது நடவாத காரியம். (யோகிகள் அடையும் மரணமில்லா அமரத்துவம் வேறு) இது தெரிந்தும் மனிதனுக்கு மரண பயம் பீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மரண பயம் அவனை விட்டு விலகுவதே இல்லை. என்றைக்கேனும் மூப்பு எய்தி மடியப்போகும் உடல் என்றாலும் கூட, அது சுலபமாக இலகுவான விடுதலையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ருத்ரனாகிய பரமேச்வரனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற இன்னொரு பெயர் உண்டு. ம்ருத்யு என்ற மரணத்தை வென்றவன் என்று பொருள். அவனை நோக்கி துதிப்பது ம்ருத்யுஞ்ஜய மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிப்பதால் அகால மரணம் நேராது, மரண பயம் விலகும், மரணம் இலகுவாக இருக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல சத்தியமும் கூட.

சிலர் மரணத்தில் வாயில் வரை பயணித்து மீண்டு புனர்ஜன்மம் எடுத்து வருவர். அதை "சுக்ராச்சார்யார் செயல்" என்று சொல்வதுண்டு. அசுர குரு சுக்கிராச்சார்யார் இறந்தவனைக் கூட பிழைக்க வைத்து விடுவார் என்கிறது புராணம். சுக்ராச்சார்யாரின் மகள் தேவயானி ப்ருஹஸ்பதியின் மகன் கசனிடம் தன் மனதை பறிகொடுக்கிறாள். அவனோ தேவர்களின் வெற்றியின் பொருட்டு சுக்ராச்சார்யாரிடம் "ம்ருக சஞ்ஜீவினி" மந்திரத்தை கற்க வந்தவன். 'ம்ருக சஞ்சீவினி' மந்திரம் இறந்தவனை பிழைக்க வைக்கும் மந்திரம். அசுரர்களுக்கு கசனின் எண்ணம் புரிந்து விடுவதால், அவனை கொல்ல பல முறை முயன்று தோற்கின்றனர். இறுதியில், கசன் இறந்தவுடன் அவன் உடலை உடன் எரித்து, உணவில் கலந்து சுக்ராச்சார்யாருக்கு கொடுத்துவிடுகின்றனர். கசன் இறந்தான் என்ற செய்தி தேவயானியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்த, அவள் பொருட்டு சஞ்சீவினி மந்திரத்தை வயிற்றிலிருந்த கசனுக்கு உபதேசிக்கிறார். அவன் வயிற்றைக் கிழித்து வெளியே வந்து மீண்டும் மந்திர பிரயோகம் செய்து சுக்ராச்சார்யாரை உயிர்ப்பிக்கிறான் என்பது கதை.

புராணக் கதைகளும் இதிஹாச கதைகளுக்கும் சான்றுகள் மிகக் குறைவு. வழிவழியாய் செவி வழியாய் வந்த செய்திகள். கல்வெட்டுக்களில் ஏடுகளில் படித்து பரப்பப்பட்ட கதைகள், கருத்துக்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய 'வரலாறு' நம் நம்பிகைக்கு பாத்திரமாவதைப் போல், புராணங்கள் தற்கால நவீன தலைமுறையின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் உட்படுவதில்லை. நூற்றாண்டுகள் முன்பு நடந்தவைகளின் சான்று அழியாமல் இருப்பதால், நம்பிக்கை வைப்பது எளிதாகிறது. இறைத் தத்துவத்தின் பால் உள்ள நம்பிக்கை, சான்று இல்லாததால் தளர்ந்து நாத்திகவாதத்தை தழுவுவதைப் போல், புராணக் கதைகளுக்கு சான்றிதழ் வழங்கமுடியாததால், அவற்றை நாம் புறக்கணிக்க முற்படுகிறோம்.

No comments:

Post a Comment