December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (அறிவூட்டலின் சிறப்பு)

ஆலயங்களின் சிறப்பும் சரித்திரமும் ஸ்தலபுராணமும் கேட்கத் திகட்டாதவை. ஆலய தரிசனம் ஒன்றே மன அமைதியைத் தரவல்லது என்றால் ஆலயத்தை நிறுவுதல் அதை விட சிறந்தது அதை போல் பன்படங்கு சிறந்தது ஒருவனுக்கு எழுத்தறிவித்தல்.

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. இப்பூதங்களைக் குளிர்வித்தல் புண்ய காரியம். அதாவது உடற்பசி போக்குதல், கண்ணுக்கு /செவிக்கு விருந்து, இவையெல்லாம் உடலை சாந்திப்படுத்தக்கூடியது. அடுத்தது மனம். மனம் என்னும் இந்திரியத்தை அமைதியைக் கொண்டு சாந்தப்படுத்தலாம். ஆலயம் செல்வதோ, இறை வழிபாடோ, இறை நம்பிக்கை அற்ற பொதுவானதொரு நற்சிந்தனையோ கூட மனதை சாந்தி படுத்த போதுமானது. உடலைக் காட்டிலும் மனம் சூட்சுமம் என்றால், மனதைக் கட்டிலும் அறிவு சூட்சுமம். அந்த அறிவுக்கு கல்வி அவசியம். கல்வி என்றால் இங்கு உயர்ந்த ஞானத்தை புகட்டக்கூடிய கல்வி என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகவே தான் அறிவை சுடர் விட்டு எரியச்செய்யும் கல்விக்கு மேலும் உயர்ந்த இடம். இதைச் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதைகளுள் சில ஞானத்தின் இருப்பிடமான சரஸ்வதி தேவியை பாடியுள்ளது.

”வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முழுதும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலப்பல பள்ளி”


என பள்ளியின் பெருமையைப் பாடியுள்ளார். மேலும் ஒரு படி சென்று அவரே, புண்ணியம் யாவிலும் சிறந்தது எழுத்தறிவித்தலே ஆகும் என்கிறார்.

"இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்,
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்"

மேலே உள்ள கவிதையில் பேசப்படுவது பலன் பொருள் எதிர்பாராது ஒருவருக்கேனும் அறிவை ஊட்டுவது. பலன்/பொருள் எதிர்பார்த்தே இருந்தாலும் கூட, அறிவை ஊட்டும் ஆசிரியர் பணி, உயர்ந்ததாக இன்றும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment