December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஞானி-யோகியின் மனநிலை)

இன்றைக்கு யோகா வகுப்புக்களில் பயிற்றுவிக்கும் சீரான மூச்சு என்பது யோகத்தின் அடிப்படை மட்டுமே. அதனால் மனம் சற்றே சாந்தப்பட்டு இருக்க முடியும். மேலும் உடலுக்கும் ஆரோக்கியம். மற்றபடி இவற்றை செய்வதால் ஒருவன் யோகி ஆகிவிட முடியாது. யோகம் என்பது பெரியதாக பேசப்படும் ஒன்று.

தபஸ்வியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஞானியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஆகவே அர்ஜுனா நீ யோகியாக இரு

என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். அப்படிப்பட்டவன் யோகி. இரட்டை நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். ஸ்திதப்ரக்ஞன். இன்பம்-துன்பம், மானம்-அவமானம், துக்கம்-மகிழ்ச்சி என எல்லா நிலையிலும் அசங்காது ஆடாது நிற்பவன்.

இறைத்தன்மை தேடலுக்கு பல வழிகள், நெறிகள், முறைகள், வகுத்திருக்கின்றது. அதில் அவரவர் தன்மைக்கேற்ப தன் வழியை ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கிறான். ஒருவன் செல்லும் பாதை, அவன் மார்க்கம் மற்றோருக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதே இயற்கை. அவரவர் தம் பாதையை தேர்ந்தெடுப்பதால் ஒருவர்க்கு விதிக்கப்பட்ட அறங்கள் மற்றோனுக்கு பொருந்தாது.

ஞானியின் மனநிலைக்கு ஏற்ப விதிக்கப்பட்ட வழி இல்லற தர்மத்தை கடைபிடிப்போனுக்கு சரியாய் இராது. மேலும், பல படிகள் கடந்தே ஒருவன் எளிதில் வாய்க்காத ஞானியின் அல்லது யோகியின் மனநிலையை அடைகிறான். ஞானியின் / யோகியின் மனநிலை, காண்போர்க்கு இயல்பில்லாமல் தோன்றுவதால், பொதுவான மனவோட்டங்களுக்கு அவர்கள் செயல் அப்பாற்பட்டு வித்தியாசப்பட்டு இருப்பதால் அவர்களை ஏளனமாய்ப் பார்க்கத் துவங்கிறது உலகம். அவர்கள் மஹான் என்று நிரூபிக்க நம்மை பொருத்த வரை, சித்திகள் / அதிசயங்கள் குறைந்த பட்சம் நோய் குணப்படுத்துதல் மற்றோரின் மன ஷாந்திக்கு வழி வகுத்தல் என மாயா வேலைகள் செய்தால் உண்டு.


சாஸ்திரம் தெரிந்த ஒருவனோ அல்லது நல்ல குணம் படைத்த ஒருவரோ, ஞானி ஆகிவிடுகிறார்கள் என தவறான மனக்கணக்கு போட்டுவிடுகிறோம். முன்பு கண்டது போல் இறைவனாக அவதரித்த ராமனுக்கே துக்கமும், சலனமும் குழப்பமும் என்றால், சாதாரண
மனிதர்கள் எம்மாத்திரம்!

ஞானியின் மனநிலை, யோகியின் மனநிலை, லக்ஷத்தில் ஒருவனுக்கு அமைந்தால் அரிது. இரண்டு அல்லது மூன்று நிமிட மாத்திரைகளுக்கு நம் மனம் நிச்சலமற்றி இருப்பதாலேயே நாமோ அல்லது இன்னொருவனோ ஞானி ஆகிவிட முடியாது. அப்பாதையில் நம் மனம் செல்வதாலேயே நாம் முழுமை பெற்றுவிடுவதில்லை. அதற்கென சில லக்ஷணங்கள் உண்டு. நல்ல புத்தங்கள் படிப்பதாலும், பக்தியினாலோ, சாஸ்திர சம்பிரதாயங்களில் மூழ்குவதாலோ, பிரம்மத்தைப் பற்றி படித்து உணர்வதாலோ, தனக்குத் தானே, ஒருவன் ஞானியாகிவிட்டதாய் அவனே நினைத்துக்கொள்வதாலோ அவன் ஞானி ஆகிவிடுவதில்லை. வெகு சிரத்தையாக சலமின்றி முழு நாழிகைகளும் யோக நியமங்களை கடைபிடிப்பத்தாலும் கூட ஒருவன் ஞானி ஆகிவிடுவதில்லை. இத்துடன் சேர்ந்து இறை அருளும் இருந்தால் மட்டுமே, அவன் பூரண ஞானியாக ஜொலிக்கிறான். அப்படிப்பட்டவன் பிறப்பதோ, அவனை நாம் கண்டுக் கொள்வதோ மிகவும் அரிது.

ஞானியின் நிலை இறுதி நிலைக்கு அருகேயுள்ளது. "ஞானி" என்ற சொல்லை வெகு சுலபமாக, அடிக்கடி இன்றைக்கு பலர் உபயோகப்படுத்தி வருகின்றனர். சொற்களின் தன்மை குணம் அறியாமல் பயன்படுத்துவதால் சில சொற்கள் தங்கள் பெருமையை இழக்கிறது. உயர்ந்த சொல்லில் ஒன்றாகிய "ஞானி" இன்றைக்கு பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.


வியாசரின் மகன் சுகர் ஒரு ஞானி எனக் கருதப்படுகிறார். அவர் ஒரு திகம்பர ஞானியும் கூட. குளத்தில் சில பெண்டிர் குளித்துக்கொண்டிருந்தனர். சுகர் அவ்வழி சென்ற போது ஏதொரு வித்தியாசமும் கூச்சமும் இன்றி அவர்கள் இயல்பாய் குளித்துக் கொண்டிருந்தனர். அவரைத் தொடர்ந்து வியாசர் அவ்வழி சென்றார். உடனே கூச்சம் மேலிட பெண்கள் தங்கள் ஆடைகளை சரி செய்தனர். அப்போது வியாசர் "ஆடைகளின்றி திகம்பரமாய் சிறிய வயதோன் என் மகன் சென்று கொண்டிருக்கிறான், அவனை கண்டும் காணாதிருந்த நீங்கள், ஆடைகள் முழுமையாய் அணிந்து இருக்கும் இக்கிழ வயதினனைக் கண்டு பதறுகிறீர்களே" என்றார். அதற்கு அப்பெண்டிர் "அவர் ஞானி, நீர் அப்படி அல்ல" என்று பதிலுரைத்ததாய் கதை உண்டு.

தொண்ணூறு சதவிகிதம் மக்களால் சலனமற்று இருக்க முடியாது. ஞானத்தை ஊட்டும் புத்தகங்கள் படித்தும், அதைத் தேடி ஓடி இளைத்தாலும் கூட, நமக்கென வரும்போது சலனங்கள் விடுபடுவதில்லை. ஏனெனில், ஞானத்தை புத்தகத்தில் படிக்கிறோம். அதை புரிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறோம். ஆனால் இன்னமும் முழுமையாய் உணர்ந்து கொள்ளவில்லை. ஞானியைப் பற்றி பேச முடியும், விவாதிக்க முடியும், ஞானத் தன்மையைப் பற்றி படிக்க முடியும், ஞானியைப் போல் நடிக்கக் கூட முடியும், ஆனால் அவனைப் போல் நடத்தல் அத்தனை சுலபமாக சாத்தியப்படுவதில்லை. கீதையில் கண்ணன் அர்ஜூனனைப் பார்த்து "நீ ஞானியைப் போல் உயர்ந்த வார்த்தைகள் பேசுகிறாய்! ஆனாலும் இப்படி சலனப்படுகிறாயே" என்று கேலிக்கிறான்.


CHAPTER 2 VERSE 11/12/13


ashochyaan anvashochah: tvam pragyavaadhan cha baashase
gathasoona agathaasooncha na anushochanthi panditha

na tu eva aham jaathu na asam na tvam na ime janadhipaaha
nacha eva na bhavishyamaha sarvevayam athah param

dehino-asmin yatha dehe kaumaram youvanam jaraa
thatha dehanthara prapthir dheera: thathra na muhyathi


The Lord spoke

"You speak wise words, yet you grieve for what is not worthy. Learned men do not worry about people the dead or living"

Never was it that, at any particular point of time did you exist, nor I , nor these kings. Never at any particular point of time, we would stop existing

Just as body goes thro childhood, youth and oldage, so does the soul transmigrate from one body to another. A realised soul, would not be baffled because of these.


பகவான் பின்வருமாறு கூறினார்.

அறிவுமிக்க சொற்களை கூறும் நீயே வருந்த தேவையற்றதற்கு வருந்துகிறாய். இருப்பவர்களுக்கோ இறந்தவர்களுக்கோ ஞானிகள் வருந்துவதில்லை.

நானோ நீயோ இந்த அரசர்களோ எப்பொழுதும் இருந்ததுமில்லை. இனி இல்லாமல் போகப்போவதும் இல்லை.

இந்த உடல் எவ்வாறு பால்யம், பருவம், மூப்பு என்பதை கடந்து செல்கிறதோ,
அவ்வாறே ஆன்மாவும் ஒரு சரீரத்தை விடுத்து வேறொன்றிற்குள் புகுகிறது.
எல்லாம் அறிந்த ஒருவன் இதைப் பற்றி குழம்பி வருந்துவதில்லை.

ஞானத்தன்மை அடைதவனுக்கு எதுவும் எல்லாமும் ஒன்றாகத் தோன்றும்। தன்னையே எல்லாமுமாகவும் நினைப்பவன்। எல்லா உருவிலும் இருப்பதும் அணுக்கூட்டங்களின் வெளிப்புறத் தோற்றம் என்ற நிலைக்கு எண்ணங்களை உயர்த்தியவன்.
"காக்கை குருவி எங்கள் ஜாதி,
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்"


என்று பாரதி பாடியதை உணரத் துவங்குவது இதன் ஆரம்பக் கட்டம்.

No comments:

Post a Comment