நம் வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் நாம் கற்றுக்கொண்டே இருக்கிறோம். பலர் நமக்கு பாடம் படிப்பிக்கின்றனர். ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு பாடம் சொல்லிச் செல்கிறது. சில பாடங்கள் சுவையானவை. சிலது நம்மை செம்மைப் படுத்தக் கூடியவை.
ஜாதிவெறி வெறியைத் தாண்டிய வெறி எது தெரியுமா? பொருளாதார நிலையினால் ஒருவரை மட்டம் தட்டுவது. என்னுடைய அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த பிழைகள் நிறைய.
இந்த வெறிகளுக்கெல்லாம் என்ன பெயரிட்டு அழைப்பது என்பது விளங்கியதில்லை. கருப்பாய், நன்றாக உடை உடுத்தாமல், நாகரிகமாய் பழகத் தெரியாமல், ஆங்கிலம் நவநாகரிகமாய் பேசத் தெரியாமல், அழுக்காய், இப்படியெல்லாம் யாராவது இருந்தால், அல்லது இதில் ஒரு குணமாவது இருந்தால், அப்படிப்பட்டவர்களுடன் நான் பழகமாட்டேன். மரியாதைக்கு புன்னகைத்து விட்டு நகர்ந்து விடுவேன். அதற்காக அவர்களை கிண்டல் செய்வேன் என்பது கிடையாது. எனக்கும் அவர்களுக்கும் சரிப்படாது என்ற எண்ணம் மேலிட விலகிவிடுவேன்.
ஒரு சுபயோக சுபதினத்தில்தான் என்னை உலுக்கவைத்த அந்த நிகழ்ச்சி நடந்தது. ரொம்பப் பெரிய சம்பவமெல்லாம் இல்லை. ஆனால் என்னிடம் சுடு சொற்கள் கூட வீசாத அப்பாவிடம் நான் அடிவாங்கிய நாள்.
அப்பா என்றாலே ரொம்ப செல்லம்தான் எனக்கு. அம்மா போல் கடிந்து கொள்ளாமல், கேட்டதை வாங்கித் தருவார். எப்பவும் என் கட்சி பேசுவார். ஒரு முறை பெங்களூருக்கு அலுவலக நிமித்தமாய் சென்று வந்த பொழுது, எனக்காக தோடு ஒன்று வாங்கி வந்தார். சிறு வயது முதல் எனக்கு விதவிதமான காதணிகள் மிகவும் பிடித்தமானவை. குட்டி சிவப்பு கல் வைத்த தொங்கும் காதணி. அப்பா வாங்கி வந்ததாலேயே அதிக நாளைக்கு அதையே போட்டுக்கொள்வேன். எனக்கும் என் தோழிக்கும் சண்டை வந்தால் கூட அப்பா தான் சமாதானப்படுத்துவார்.
"உன் க்ளாஸ்ல யாரு உனக்குப் பக்கத்துல உக்காந்துப்பா"
"ஒ, என் க்ளாஸில் எனக்கு நெக்ஸ்ட் சாண்ரா நொரோனா தான் இருப்பா. ரொம்ப ஸ்டைலா இருப்பா தெரியுமா. ஷீ இஸ் மை பெஸ்ட் ·ப்ரெண்ட்"
"அப்ப நான் பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லையா?"
"நீயா... உனக்கு சாண்ட்ரா நொரோனா என்பதை சரியா சொல்லத் தெரியுமா"
"ஏன் தெரியாம.... சா¡ண்டிரா.. நோர்ர்ர்ரோனா"
"சரி நீ வீட்டுக்குப் போ, சாண்ட்ரா என்ற பெயரைக் கூட சரியா சொல்லத் தெரியாத உன்னோட நான் பேச மாட்டேன்"
அவளை நன்றாகக் கிள்ளிவிட்டேன். அழுது கொண்டே வீடு சென்றவள் அடுத்த பத்து நாளைக்கு வரவே இல்லை. பொதுவாய், இரண்டு நாள்களில் அவளே வந்து நிற்பாள். நான் போய் சகஜமாய் பேசவெல்லாம் மாட்டேன். என் கௌரவம் என்ன ஆவது!! அவளே வரட்டும் என்ற வரட்டு ஜம்பம் நிறைய உண்டு. என்னை விட்டால் அவளுக்கு வேறு கதி உண்டா என்ன!
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இன்னொரு தொழியுடனும் நெருங்கிய தோழமை உண்டு। அவள் பளிங்குக் கலரில் வெள்ளைத் தும்பைப் பூவைப் போல் ஜொலிப்பாள்। இதனாலேயே எனக்கு அவளைப் பிடிக்கும்। குழந்தைகள் யாரேனும் அழகாய் இருந்தாலோ, வெள்ளையாய் இருந்தாலோ, அவர்களின் கன்னத்தைக் கடித்து விடுவேன்। (செல்லமாய்த் தான்)। அப்படி ஒரு என்னையும் மீறிய ஆசையில், ஆவலில்(!!!!) ஒரு நாள் அந்த வெள்ளைப் பெண்ணின் கன்னத்தைக் கடித்து விட்டேன்। வெள்ளைக் கன்னம் சிவந்து போனது. அழுதபடி வீட்டிற்குச் சென்றவள் அதன் பிறகு வரவே இல்லை.
இவர்கள் இருவரும் செட் சேர்ந்து கொண்டார்கள். நான் விளையாட ஆளின்றி, ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமின்றி வீம்புக்கு திரிந்துக் கொண்டிருந்தேன். பத்து நாளைக்குள் அந்த தோழியின் வீட்டிற்கு போனால் போலீஸ் பிடித்துப் போய்விடும் என்று அம்மா பயமுறுத்தியிருந்தார்கள். கன்னத்தை கடித்துவிட்டேன் அல்லவா. எப்படியானும் இப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காய் அம்மா செய்த சதி! செய்யக்கூடாத குற்றம் செய்து விட்டது புரிந்தது. 'அப்படி என்ன ஆசை! கட்டுப்படுத்தத் தெரிய வேண்டாமோ! கன்னம் என்றால் கொழுக் மொழுக்கென்று இருக்கத்தான் செய்யும். அது வெள்ளையாய் வேறு இருந்து தொலைத்தால் அதற்கு நான் என்ன செய்ய? சின்னப் பெண் எப்படி ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பாள்!' இப்படியெல்லாம் வாதிட்டேன். மனதிற்குள்தான். ஆனாலும் அவள் வீட்டிற்கு சென்றால் எங்கே போலிஸ் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்ற பயத்தில் போகவே இல்லை.
சோகமாய் உட்கார்ந்திருந்த என் மேல் அப்பாவின் கருணைக் கண்கள் தீண்ட, இரு தோழியரையும் அழைத்து சமாதானப்படுத்தி, ஆளுக்கு ஒரு பேனா பரிசு கொடுத்தார். அவர்கள் சென்ற பிறகு, அப்பாவிடம், "கன்னத்தை கிள்ளினதும் கடிச்சதும் வேணா தப்பு, பட், அந்த தட் அதர் கேர்ல் இஸ் சோ டம்ப் அப்பா, அவளுக்கு சாண்ட்ரான்னு சொல்லக் கூட தெரில. ஹௌ கேன் ஷீ பீ மை ·ப்ரெண்ட்!" என்றேன்.
"இது தேராத கேஸ்!" என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தார் அப்பா.
அப்பொழுது தான் அவர் வந்தார். வாசலில் கேட்டில், உள்ளே வரத் தயங்கியபடி நின்றிருந்தார். முப்பது வயதிருக்கும். கறுப்பாய், அழுக்குத் துணி அணிந்து, எளிமையும் ஏழ்மையும் முகமெங்கும் அப்பியிருக்க, வெள்ளைப்பற்கள் தெரிய புன்னகைத்துக்கொண்டு,
"அப்பாரு இருக்காரா பாப்பா" என்றார். அவரது பேச்சில் கூட class இல்லாததாய் எனக்குத் தோன்றியது.
"அப்பா உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கா"
"யாருன்னு கேளு" உள்ளிருந்தே அப்பா கூவினார்.
"தெரிலப்பா, யாரோ கறுப்பா பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்" என்றேன்.
அப்பா வெளியே வந்து பார்த்தவுட்ன் முகம் இருண்டு போனது.
"இங்க வா!!" அப்படி ஒரு உறுமலுடன் என்னை அழைத்தார். அப்படி ஒரு கோபத்தையும் குரலையும் அதற்கு முன்பும் கேட்டதில்லை. அதற்குப் பின்பும் கேட்டதில்லை.
"எங்க ஆ·பிஸ்லேருந்து எலெக்ரீஷியனை நான் தான் கூப்பிட்டிருந்தேன். யாருன்னு தெரிலையன்னா தெரியலைன்னு சொல்லணம். இப்படி கன்னாபின்னான்னு மண்டை கர்வம் புடிச்சு பேசக்கூடாது"
"இனிமே இப்படி செய்வியா?" கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் தொடர்ந்து, படீர் படீர் என முதுகில், முகத்தில், கன்னத்தில், முட்டியில், சரமாரியாய் அறை. அம்மா பதற, வந்திருந்த மனிதரோ "போனா போகுது சார் பாப்பா தானே, விடுங்க சார்" என்று கெஞ்ச...
அப்பா அடியை நிறுத்தவே இல்லை.
முகம் முழுவதும், வெளறிய அடையாளங்களுடன், அவமானத்துடன், அந்த இடத்தை விட்டு அழுதபடி சென்று விட்டேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அப்பாவுடன் பேசவே இல்லை.
இரவு அப்பாவும் அம்மாவும் என்னுடன் பேச வந்தனர். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன். அப்பா என்னை மறுபடி தொட்டபோது கூட கையைத் தட்டி விட்டேன். தொடர்ந்து அறிவுரை. எதுவும் முதலில் புரியவில்லை. பிடிக்கவில்லை.
"நான் கூட கறுப்புதான், என்னை ஒதுக்கிடுவியா" என்றார் அப்பா
ஆடிப்போய்விட்டேன்.
"நானும் அம்மாவும் கூட, ஏழ்மைநிலையிலிருந்து வந்தவா தான். இன்னும் ரொம்ப வசதியெல்லாம் நமக்கு இல்லை. உன்னை கான்வெண்டில் படிக்க வெக்கணம்கறது எங்களுடைய சின்ன ஆசை. அதற்கு எவ்வளவோ தியாகம் செய்துதான் படிக்க வெக்கறோம். நீ ஒண்ணும் பணக்கார சீமாட்டி இல்லை, அதைப் புரிஞ்சுக்கோ. இங்க்லிஷ் தெரிலைன்னோ, கறுப்பா இருக்கான்னோ ஒருத்தரை அவமானப் படுத்தலாமா?"
"சரி அதையெல்லாம் விடுங்கோ, இவ என்ன பெரிய உசத்தின்னு மத்தவாளை மட்டம் தட்டறா?" என்று அம்மா எரிச்சலூட்டினாள்.
அம்மா சொன்னது உண்மை என்றாலும் எனக்குப் பிடிக்கவில்லை. அப்பா சொன்னது உண்மை என்பதாலேயே என்னை யோசிக்க வைத்தது.
அன்று வந்தவர் அதன் பின் சில முறை வீட்டிற்கு வந்தது, எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது, என் திருமணத்தின் பொழுது, அவர் தன் குடும்பத்துடன் வந்தது, என்னை வாழ்த்தியது, அவரை பார்த்து நான் நெகிழ்ந்தது, எல்லாம் ஒன்றொன்றாய் பிறகு நடந்தது.
எல்லாமே மெதுவாய் புரிந்தது.
என் தோழிக்கு சாண்ட்ரா பெயர் தெரியவில்லை என்றால் என்ன? சாண்ட்ராவுக்கும் கூடத்தான் என் தொழியின் தமிழ்ப் பெயரை சரியாய் உச்சரிப்பதில்லை என்று தெளிந்தேன். ஆங்கிலம் அதிகம் பேசாத அந்த தமிழ்ச்சிறுமி நேருங்கிய தோழியிலிருந்து, பதவி உயர்வு பெற்று உற்ற தோழியானாள்.
நிற, இன, மொழி வெறிகள் என்னிடம் நிரம்பக் குறைய காரணமாய் இருந்தவர் அப்பா. பவ்யமாய் வலம்வர வேண்டும் என்ற எண்ணம் விதைத்தவர் என் அப்பா.
என் ஆசிரியர்களிலேயே முதன்மையானவரும், என்றும் உயர்ந்து நிற்பவரும் என் அப்பாதான்.
(இன்னும் வரும்)