ஒரிஸ்ஸாவில் நித்யவாஸம் பண்ணுகிற ஒரு ஸாக்ஷிக்கார ஸ்வாமியின் கதை பார்க்கலாம். அவர் கிருஷ்ண பரமாத்மா. ’ஸாக்ஷி கோபால்’ என்றே அவரைச் சொல்வார்கள். ஒரிஸாவில் அவர் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்ட ஊருக்கும் ’ஸாக்ஷி கோபால்’ என்றே பேர்.
.
காஞ்சீபுரத்திலிருந்து அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வயசான பிராமணரும் ஒரு வாலிபமான பிராமண ப்ரம்மசாரியும் காசி யாத்ரை போனார்கள். போகிற வழியில் வ்ருத்தர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டுப் படுத்துவிட்டார். அப்போது அந்தப் பிள்ளை அவருக்குக் கண்ணும் கருத்துமாக சிசுருஷை பண்ணினான். அசிங்கம் பார்க்காமல் விஸர்ஜனாதிகளைச் சுத்தம் செய்வது உள்பட, மருந்து கொடுப்பது, கஞ்சி கொடுப்பது எல்லாம், ராப்பகல் பார்க்காமல், அபிமானத்தோடு பண்ணினான். உடம்பு குணமாயிற்று. அப்புறமுங்கூட, ’வயசானவர், நடந்தால் நெகிழ்ந்து கொள்ளும்’ என்று அவனே அவரைத் தூக்கிக்கொண்டு மேலே யாத்ரையைத் தொடர்ந்தான். இப்படியே காசிக்குப் போய்விட்டு அப்புறம் இரண்டு பேருக்குமே கிருஷ்ண பரமாத்மாதான் இஷ்ட தெய்வமானதால் ப்ருந்தாவன், மட்ராவுக்குப் போனார்கள்.
.
இஷ்ட மூர்த்தியை இஷ்டம் கொண்ட வரையில் வயசானவர் தர்சனம் செய்து கொண்டார். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே அந்த சந்தோஷம் அப்படியே அந்த பிரம்மசாரியிடம் நன்றியாக மாறி விட்டது.
.
வயசானவரோ நல்ல சொத்துக்காரர். அவருக்கு ஒரே பெண்தான். பிரம்மசாரிப் பிள்ளையோ ஏழை. அநாதை. பிராமணன்தான் என்றாலும்
அதிலும் அவரை விடத் தாழ்வாக நினைக்கப்பட்ட பிரிவை, ஸப்-ஸெக்டைச் சேர்ந்தவன். இருந்தாலும் அவன் அத்தனை பணிவிடை பண்ணி, தன்னுடைய போன உயிரை மீட்டு, தன் உடம்பைத் தூக்கியும் கொண்டு வந்ததால்தானே இஷ்டமூர்த்தி தர்சனம், யமுனா ஸ்நானம் எல்லாம் கிடைத்தது என்று வயோதிகருக்கு நன்றி பெருக்கெடுத்து,
.
“அப்பா, உன்னால்தான் எனக்கு ஜன்மா ஸாபல்யமாயிற்று. என் பெண்ணை உனக்கே கொடுத்து, சொத்தையும் எழுதி விடுகிறேன்”
என்று சொன்னார்.
.
அவனால் நம்ப முடியவில்லை. ”எனக்கா? உங்கள் பெண்ணையா? நான் பாட்டுக்கு எதையும் எதிர்பார்க்காமல் ஏதோ என்னால் முடிந்த ஸஹாயம் பண்ணினேன். கிடைக்கத் தகாத ஆசையை எனக்குக் கிளப்பி விட்டு அப்புறம் ஏமாத்திவிடாதேள்!” என்று கேட்டுக் கொண்டான்.
.
அவன் அப்படிச் சொன்னதாலேயே அவருக்குத் தீர்மானம் நன்றாகக் கெட்டி ஆயிற்று. “ஒருநாளும் உன்னை ஏமாத்தமாட்டேன். தெய்வ
சந்நிதானத்துல ஸத்யமா சொல்றேன். இந்த கோபாலன் ஸாக்ஷி” என்று ஆவேசமாகச் சொன்னார்.
.
ப்ரம்மசாரிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. அப்புறம் இரண்டு பேரும் காஞ்சிபுரத்துக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
.
திரும்பி வந்தவர் நல்ல ரூபவதியாக தன்னுடையப் பெண்ணைப் பார்த்து, தம் வீடு வாசல், சொத்துகளையும் பார்த்து, அதோடு அந்தப் பிள்ளையாண்டான், அவனுடைய பொருளாதார் ’ஸ்டேடஸ்’, ஜாதி ரீதி ‘ஸ்டேடஸ்’ முதலானவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாரோ இல்லையோ, மட்ராஸாவில் அவர் பண்ணின தீர்மானம், கொடுத்த வாக்குறுதி எல்லாம் ஓட்டம் பிடித்து விட்டன!
.
கன்யாதானம் செய்து கொடுக்காமல் அவர் காலம் கடத்திக் கொண்டே போனதைப் பார்த்து விட்டு பிரம்மசாரிப்பிள்ளை துணிந்து அவரை
ஞாபகப் படுத்தினான்.
.
அவ்வளவுதான்! அவர் ஸ்வரத்தை அப்படியே மாற்றிக் கொண்டு விட்டார். “உனக்கா? என் பெண்ணையா? கேட்கிறவாகூடச் சிரிப்பா! மூளை கீளை பிசகி விட்டதா?” என்று ஹேளனமாகப் பேசினார்.
.
தெய்வ ஸாக்ஷியாகக் கொடுத்த வாக்கை மீறிய பாபம் அவருக்குச் சேரக் கூடாதே என்று பிரம்மசாரிக்கு இருந்தது. அநாதையும் தரித்ரனுமான தான் அவரோடு வாதம் செய்து எடுபடாது என்பதால் காஞ்சிபுரத்தில் ராஜாவிடமே பிராது கொடுத்தான்.
.
”கேட்கிறவா சிரிப்பா” என்று வயோதிகர் சொன்னாற்போலவே ராஜா சிரித்தான். அவருடைய குலப்பெருமை, பணப்பெருமை அவனுக்குத் தெரியும். பிராது கொடுத்த பிள்ளையைப் பார்த்தாலோ மலைக்கும் மடுவுக்குமாயிருந்தது. இருந்தாலும் தர்ம ந்யாயப்படி ராஜா அவரைக் கூப்பிட்டு விசாரித்தான்.
.
வயோதிக ப்ராமணர் ஒரு யுக்தியால் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். “அவன் ஏழை என்பதால் நாம் வாக்கை மீறுகிறோம் என்பது நமக்கு அவப்பெயரையே உண்டாக்கும். அதனால் ஜாதி வித்யாஸத்தைக் காரணம் காட்டுவோம். ஒரு ஆசாரக்கார ப்ராமணர் ஜாதியின் உட்பிரிவுகளுக்கிடையே உள்ள வித்தியாஸத்தைப் பொருட்படுத்தாமல், ஒரே பெண்ணை எவனோ ஒரு ஏழைப் பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக ஒருகாலும் வாக்குதத்தம் செய்திருக்க மாட்டார். இப்படி அவர் செய்தாரென்பதற்குத் தக்க சாக்ஷி இருந்தாலொழிய பிரம்மசாரிக்கு ஸாதகமாக நாம் தீர்ப்புப் பண்ணுவதற்கில்லை. வழக்கைத் தள்ளுபடி பண்ணுகிறேன்” என்று ராஜா தீர்ப்புக் கொடுத்தான்.
.
பார்த்தான் பிரம்மசாரி. “ஸாக்ஷியம் இல்லாமலா? யாருக்குமில்லாத தெய்வ ஸாக்ஷியே இருக்கிறதே! அவ்வளவு உசந்த விஷயத்தைக் கோர்ட்டுக்கு இழுக்க வேண்டாமென்று இதுவரை மூடி வைத்திருந்தோம். இனியும் மூடி வைத்தால் கிழவனார் நிச்சயம் தெய்வக் குற்றத்துக்கு ஆளாகி விடுவாரே!” என்று ப்ரம்மசாரிக்கு வேகம் வந்தது.
.
”ஸாக்ஷி இல்லாமலில்லை. மதுரா நகரத்துக் கோயில் ஸ்வாமியே ஸாக்ஷி. உங்களுக்கெல்லாம் நான் ஒரு பொருட்டாயில்லாத அநாதனானாலும்,
இடைப் பசங்களுக்கும் அத்யந்தமாயிருந்த அந்த மதுராநாதன் என்னையும் பொருட்படுத்தி ஸாக்ஷி சொல்ல வருவான்” என்று உறுதியான நம்பிக்கையோடு சொன்னான்.
.
“நல்லது. அப்படியானால் அவரைப் போய் அழைச்சுண்டு வா. இந்த நீதி ஸ்தலத்துக்கு பகவானே வருவானானால் எங்களுக்கும் பரம பாக்யம் தான்” என்று ராஜா சொன்னான்.
.
கோபாலனாவது, வருவதாவது என்று வயோதிகர் – நிறைய சாஸ்திர, புராணங்கள் படித்தவர் – நினைத்தார். அவ்வள்வு படிக்காதவன், அவரை விட ரொம்பச் சின்ன வயசுக்காரன் திடநம்பிக்கையோடு காடு மலை தாண்டி ஆயிரம் மைல் போய் மட்ராவை அடைந்தான். கோவிலுக்குப் போனான்.
..
“கோபாலா! ஸாக்ஷி சொல்ல வா!” என்று ஸ்வாதீனமாகக் கூப்பிட்டான்.
“காத்துக் கொண்டிருக்கேன்!” என்று ஸ்வாமியும் புறப்பட்டார்!
...
பகவான், “நான் உன் பின்னாடியே வரேன். ஆனா நான் வரேனான்னு சந்தேகப்பட்டுண்டு நீ திரும்பிப் பார்க்கப்படாது. பார்த்தியானா அந்த எடத்திலேயே நான் விக்ரஹமா நின்னுடுவேன்!” என்று சொன்னான்.
.
கோபாலன் சொன்னதை பிரம்மசாரி ஒப்புக் கொண்டான். சிலம்பு ஜல் ஜல்லென்று சப்தம் செய்ய, கோபாலனும் அவனுக்குப் பின்னேயே போனான்.
.
ஆனாலும் நீதிஸ்தலம் வரை கோபாலஸ்வாமி போகவில்லை. ஏழை ப்ரம்மசாரிக்குக் கட்டுப்பட்டு ஆயிரம் மைல் வந்தவன், ராஜாவுக்குக் கட்டுப்பட்டு அவன் கோர்ட்டில் ஸாக்ஷிக் கூண்டில் நிற்க இஷ்டப்படவில்லை.
.
அதனால் என்ன ஆச்சு என்றால்: ஊரெல்லைக்கு வந்தபிரம்மசாரிக்கு, “கிருஷ்ணனையாக்கும் இத்தனாம் தூரம் வரப் பண்ணி நமக்கு ஸாக்ஷி
சொல்ல வைக்கப் போகிறோம்!” என்ற ஆச்சர்யமும் பெருமிதமும் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்காக இப்பேர்ப்பட்ட அநுக்ரஹம் பண்ணும் மூர்த்தியைப் பார்க்கிற ஆசை அதை விடப் பொங்கிக் கொண்டு வந்தது! கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிப் பார்த்து விட்டான்!
பகவானும் அந்த எல்லையிலேயே சிலா ரூபமாக நின்று விட்டான்!
.
அதற்காக ப்ரம்மசாரி இடிந்து போய்விடவில்லை. “ஊர் ஜனங்கள் இங்கே வந்து திடீர் விக்ரஹம் முளைத்திருப்பதைப் பார்த்து நிஜத்தைத் தெரிந்து கொள்வார்கள். ராஜாவும் வயோதிகரும் கூட, இரண்டு மைல் இறைவனை எதிர் கொண்டழைப்பது போல நடந்து வந்து, பார்த்து, விஷயம் தெரிந்து கொள்ளட்டுமே!” என்றே நினைத்தான்.
.
அவர்களும் வந்தார்கள்.
கோபாலனும் ஸாக்ஷி சொன்னான்.
அதன்படி ராஜா நீதி வழங்கினான்.
.
வயோதிகருக்கும் கண் திறந்தது. பகவானையே பணி கொண்ட இப்பேர்ப்பட்ட பிள்ளை தனக்கு மாப்பிள்ளையாவது பெரிய பாக்யமென்று, ராஜ ஆக்ஞைக்காக இல்லாமல், மனப்பூர்வமாகவே கன்யாதானம் பண்ணிக் கொடுத்தார்.
...
எல்லாம் சுலபமாக முடிந்தது.
.
Chapter: சாக்ஷி கோபால்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
No comments:
Post a Comment