April 12, 2023

Sthala purana story of Sakshi Ganapathi: - சாக்ஷி கணபதி - ஸ்தலபுராண கதை (Srisailam)

Sakshi Ganapathi - Srisailam



( On Ganapathi's approval Lord shiva blesses the devotees. )

_______________________
சாக்ஷி கணபதி இருப்பது ஸ்ரீசைலத்தில். அந்த மஹா க்ஷேத்ரத்தில் ஜ்யோதிர்லிங்கமான மல்லிகார்ஜுன மஹாலிங்கம் உள்ள பிரதானமான ஆலயத்திலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தில், ஊர் எல்லையில், சாலை ஓரத்திலேயே அவர் இருக்கிறார்.
.
Glory of Srisailam
இப்போது ஸ்ரீசைலம் கோபுர வாசல் வரை ஸெளகர்யமாக பஸ், கார் போக வசதி ஏற்பட்டு விட்டது. இந்த நூற்றாண்டின் முதல் பாதி
வரையில் சரியான பாதை இல்லாமல் காடு, மலைகள் தாண்டி ரொம்பவும் சிரம சாத்தியமாகத் தான் ஸ்ரீசைல யாத்திரை பண்ண
வேண்டியிருந்தது.
.
இவ்வளவு ச்ரம ஸாத்தியமாகவே அடையக்கூடிய இடமாயிருப்பதால் அங்கே யாத்திரை செய்கிற பக்தர்களுக்கு மற்ற எந்த க்ஷேத்ரத்தையும்விட
அதிகமான இகபர ஸெளக்யங்களைத் தர வேண்டுமென்று பரமேச்வரன் உத்தேசம் பண்ணினார்.
.
Innocence of Lord Shiva
ஆனாலும் அவருடைய குணம் என்னவென்றால்… அவரை ‘ஆசுதோஷி’ என்பார்கள். அதாவது, எளிசாக ஒரு பக்தி பண்ணியே, அது
கபட பக்தியாகக் கூட இருக்கலாம். அப்படிப் பண்ணியே ரொம்ப சீக்கிரத்திலே அவரை ப்ரீதி பண்ணுவித்து எந்த வரத்தை வேண்டுமானாலும்
வாங்கிக் கொண்டு விடலாம். அம்ருத மதனம் பண்ணின போது க்ஷீர ஸாகரத்திலிருந்து ஐராவதமும், கல்பக வ்ருக்ஷமும் வந்தவுடன்
இந்திரன் அதுகளைத் தட்டிக்கொண்டு போய்விட்டான்.
.
காமதேநு வந்தவுடன் ப்ரம்ம ரிஷிகள் எடுத்துக் கொண்டார்கள்.
..
அப்புறம் வந்த கெளஸ்துபமும் மஹாலக்ஷ்மியும் மஹாவிஷ்ணுவிடம் போய்ச் சேர்ந்தது எல்லாருக்கும் தெரியும்.
..
அம்ருதத்தை அத்தனை தேவர்களும் எடுத்துக்கொண்டு சாப்பிட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் முதலில் பயங்கரமான
ஹாலாஹல விஷம் வந்ததே, அதை? அதை மட்டும், “அப்பா பரமேச்வரா, நீதாண்டாப்பா ரொம்ப நல்லவன், பரம உபகாரி. ஆனதினாலே இந்த விஷத்தை வெளியிலே விடாமல் நீயே உள்ளுக்குள்ளே வெச்சுக்கோ!” என்று அந்த ஆசுதோஷியிடம் போய்த்தான் அத்தனை தேவர்களும் குல்லாய் போட்டார்கள்.
..
அவரும் பரம ப்ரீதியுடன் அதைச் சாப்பிட்டார். எவனிடம் தஞ்சமென்று போய் அவனும் ரக்ஷித்தானோ அவனை அப்புறம்
உத்தம வஸ்துக்கள் வந்தபோது யாராவது நினைத்தார்களோ? அப்படியும் அந்தப் பரமேச்வரன் பொருட்படுத்தாமல் அநுக்ரஹம்
பண்ணிக் கொண்டுதான் இருந்தான்!
..
அப்பாக்காரர் ரொம்ப தாக்ஷிண்யமாகவோ அப்பாவியாகவோ இருந்தால் பிள்ளைதான் ‘முழித்துக் கொண்டு’ கறார் கண்டிப்புக் காட்ட வேண்டிய இடத்தில் அவரை ஞாபகப்படுத்தித் தட்டியெழுப்புவான். இப்போது பிள்ளையார் அப்படி ‘முழித்து’க் கொண்டார்.
.
‘மஹா சிரமப் பட்டே வரக்கூடிய ஸ்ரீசைல யாத்ரிகர்களுக்கு விசேஷ பலன் தருவது என்று தகப்பனார் இப்போது விதி பண்ணியிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டு விட்டால் மனஸ் இறங்கி அவர்களுக்கும் எக்ஸ்ட்ரா பலன்
கொடுத்து விடுவார்.
.
காசிதான் தன்னுடைய ராஜதானி, அங்கே மரணம் அடைகிறவர்களுக்கு எல்லாம் முக்தி என்று விதி பண்ணினவர் அப்புறம் காசிக்கு ஸமானம் என்று அநேக க்ஷேத்ரங்களையும், ‘காசிக்கும் வீச்ம் அதிகம் என்று கும்பகோணத்தையும் ஒப்புக் கொண்டவர்தானே? இந்த ஸ்ரீசைல விஷயத்திலும் அந்த மாதிரி ஆக விடப்படாது’ என்று பிள்ளையார் தீர்மானம் பண்ணிக் கொண்டார்.
.
Ganesha takes incharge of selecting the devotees
பிதாவிடம் போனார். “ஸ்ரீசைலம் போகிறவர்களுக்கு மட்டுமே நீங்கள் தருவதாக இருக்கும் பலன்களை வேறே யாருக்கும் தரக் கூடாது. அங்கே யார் யார் வருகிறார்களென்று நான் பார்த்து ஸாக்ஷி சொல்கிறேனோ அவர்களுக்குத்தான் அந்த எக்ஸ்ட்ரா நன்மைகளைக் கொடுக்கணும். உங்களுக்குக் கருணை ஸ்வபாவம்.” (நீங்கள் ஈஸியாக ஏமாந்து போய் விடுவீர்கள்” என்று எப்படி ஒரு பிள்ளை அப்பாவிடம் சொல்ல முடியும்?)
.
“அதனால் பொய்யாகக் கூட யாராவது ஸ்ரீசைல யாத்ரை பண்ணினதாகச் சொல்லி வரத்தைத்
தட்டிக் கொள்ள முடியும். அப்படி ஆகாமல் ஊர் எல்லையிலேயே நான் ஸாக்ஷி கணபதியாக உட்கார்ந்து கொண்டு நிஜமாகவே யார்
வருகிறார்களோ அவர்கள் ஊர், பேர், அங்கே வந்த தேதி எல்லாவற்றையும் எழுதி வைத்துக் கொண்டு உங்களுக்குக் காட்டுகிறேன்.
அவர்களுக்கே ஸ்பெஷல் அநுக்ரஹத்தைப் பண்ணுங்கள்” என்று சொன்னார்.
.
”அப்படியே!” என்று ஸ்வாமியும் ஒப்புக் கொண்டார்.
.
ஸ்ரீசைல எல்லையில் அந்த ஸாக்ஷி கணபதி, ‘ஸாக்ஷி கணபதி’ என்றே பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறார். இன்றைக்கும் சிலா மூர்த்தமாக இருக்கிறார். நல்ல கம்பீரமான மூர்த்தம். பாங்காக ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் ஒரு காலை மடித்துக்கொண்டும் உட்கார்ந்திருப்பார்.
.
மேல் இரண்டு ஹஸ்தங்களில் எல்லாப் பிள்ளையார்களையும் போலப் பாசாங்குசம் வைத்துக் கொண்டிருப்பார். கீழ் ஹஸ்தம் இரண்டிலும்தான் அபூர்வமான மாறுபாடு: “இவர் ஸாக்ஷி கணபதி” என்று ஸாக்ஷி சொல்கிற மாதிரி, வேறெங்கேயுமில்லாத புதுமையாகச் சுவடியும் எழுத்தாணியும் அந்த இரண்டு கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
.
நிஜமான ஸ்ரீசைல யாத்ரிகர்களின் பேர், ஊர், அவர்கள் யாத்ரை பண்ணின காலம் முதலியவற்றைக் குறித்துக் கொள்வதற்குத்தான் ஏடும் எழுத்தாணியும்.
.
“பூணலைப் பிடிச்சுண்டு ஸத்ய ஸாக்ஷி சொல்றேன்” என்பது வழக்கம். இந்த ஸாக்ஷி கணபதி மூர்த்தத்தில் அந்தப் பூணூல் வரி வரியாக எடுப்பாகத் தெரியும். கணபதியின் ஆனந்த நிறைவைக் காட்டும் தொந்தியைக் கட்டியிருக்கிற ஸர்ப்ப உதர பந்தமும் ஸ்பஷ்டமாக இருக்கும்.
.
Lord Ganesha records the details of the visitors
யாத்ரையை யதோக்தமாக முடித்துவிட்டு நாம் புறப்படும்போது கடைசியில் எல்லையில் அவரிடம் போய்ச் சொல்லிக் கொள்ள வேண்டும்.
நாம் இன்னார் முதலிய ‘டீடெய்ல்’களை அவரிடம் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவர் தாம் வைத்திருக்கும் பேரேட்டில் அதைப் பதிவு பண்ணிக் கொண்டு, அப்புறம் பிதாவிடம் சொல்லி, “நான் ஸாக்ஷி! அவர்கள் வந்தது வாஸ்தவந்தான்” என்று நமக்காகப் பரம க்ருபையோடு ‘காரண்டி’ கொடுத்து யதேஷ்டமாக ஈச்வர ப்ரஸாதத்தை வாங்கிக் கொடுப்பார்.
.
Chapter: ஸாக்ஷி கணபதி
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)


No comments:

Post a Comment