Pic source: Internet Calling Lord shiva as witness |
(சாக்ஷி நாதேஸ்வரர் ஸ்தல புராணம்) .
(தொடர்கிறது...) .
லிங்கமென்பதே அக்னி ஸ்வரூபந்தான். ‘வன்ஹி’ என்றாலும் அக்னி என்றே
அர்த்தம். இப்படி இரட்டை அக்னி ஸாக்ஷி! தம்பதியாக மதுரைக்குத் திரும்பினார்கள்.
திடுதிப்பென்று மாமா பெண் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளையாளை அகமுடையான் அழைத்துக்
கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும் மூத்தாளுக்கு ஆத்திரமும் அஸூயையுமாக வந்தது.
ஆனாலும் மென்று முழுங்கிக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.
அப்புறம் சண்டை என்று
மூளாமலே உள்ளூர கமுக்கமாக cold war என்று சொல்கிறார்களே, அந்தச் சூழ்நிலையிலே
அந்தக் குடும்பம் சில வருஷங்கள் நடந்தது. இதற்கிடையில் இளையாளுக்கும் குழந்தை
பிறந்து வளர்ந்தது. '
ஒரு நாள் மூத்தாள் பிள்ளை இளையாள் பிள்ளையைக் காட்டடியாக
அடித்து விட்டது. அதுவரை எவ்வளவோ பொறுமையாயிருந்து வந்த இளையாள் அடித்த பிள்ளையை
அதட்டினாள். அப்போதுங்கூட அடிக்காமல் அதட்டத்தான் செய்தாள்.
ஆனால் அதுவே எரிமலை
மாதிரி வெடிக்கத் தயாராயிருந்த மூத்தாளைக் கிளறிவிட்டு நெருப்பைக் கக்க வைக்கப்
போதுமானதாயிருந்தது. “குலம் கோத்ரம் இல்லாம, முறைப்படி கல்யாணம் பண்ணிக்காம என்
புருஷனைக் கையில போட்டுண்ட” – சின்ன பாஷையில் அவளை ஒரு சொல் சொல்லி –
“அப்படிப்பட்டவளுக்கு சாஸ்த்ரப்படி, ஸம்ப்ரதாயப்படி, சட்டப்படி இந்த வீட்டுக்கு
வார்ஸா இருக்கிற பிள்ளையை ஏச வாயேது?” என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் தீர்த்து
விட்டாள்.
அவமானத்தில் அப்படியே மட்கி மண்ணாகிவிட்ட மாதிரி உட்கார்ந்த இளையாள்
அப்புறம் மீனாக்ஷி – ஸுந்தரேச்வரர் ஆலயத்துக்கு ஓடினாள். பொற்றாமரைக் குளத்தில்
ஸ்நானம் பண்ணிவிட்டு ஸ்வாமி ஸந்நிதிக்குப் போய்க் கதறினாள். “அப்பா! உன்னையும், உன்
ஸ்தல வ்ருக்ஷத்தையும், உன் அபிஷேகக் கிணற்றையும் ( – உனக்கு நைவேத்யம் பண்ணும்
மடைப்பள்ளியையும் என்றும் வைத்துக் கொள்ளலாம் –) ஸாக்ஷி சொல்லியே என் முறைப்
பிள்ளையான அத்தான் என்னைக் கைப்பிடித்தார். இதை இன்றைக்கு ஒருத்தி ஸந்தேஹப்பட்டு
வாய்விட்டுச் சொல்கிறாளென்றால், சொல்லாமலே ஸந்தேஹப் படுகிறவர்கள் பல பேர்
இருப்பார்கள். எல்லார் சந்தேஹத்தையும் நீதான் தீர்த்து வைக்கணும், இல்லாவிட்டால்
உன் ஸந்நிதியிலேயே உயிரை விட்டு விடுவேன்” என்று கதறினாள். ”உன் மூத்தாளையும்
ஊராரையும் இங்கு அழைத்து வருக!” என்று ஸ்வாமி அசரீரியாகச் சொன்னார்.
அப்படியே
அழைத்துக் கொண்டு வந்தாள்.
சுந்தரேச்வர ஸ்வாமி, ஸோமஸுந்தரக் கடவுள் என்றும்
சொக்கநாதப் பெருமான் என்றும் தமிழ் நூல்களில் அன்போடு சொல்லப்படுபவர், தமது
அறுபத்து நாலாவது லீலையாக, தாமே நேரில் ஒன்றும் செய்யாமல் ஸினிமா ‘ட்ரிக்-ஷாட்’
காட்சி மாதிரித் திருப்புறம்புயத்து ஸாக்ஷிகளை மட்டும் மதுரையில் தன் ஸந்நிதிக்கே
வருவித்துக் காட்டினார்!
ஸந்நிதியின் ஈசான்ய திசையில் திருப்புறம்புய சிவலிங்கம்,
வன்னி, கிணறு ( – மடைப்பள்ளி சேர்த்துக் கொள்ளலாம் – ) எல்லாம் தோன்றின. ஒரு
முஹூர்த்த காலம் அப்படித் தோன்றிவிட்டு யதா ஸ்தானம் போய்ச் சேர்ந்தன.
ஊரே
அதிசயப்பட்டு ஆஹாகாரம் பண்ணி, இளையாளுடைய பக்தி மஹிமையை ஸ்தோத்ரம் செய்தது. ..
மூத்தாளும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். .. கோபம் தணியாத புருஷன், அவளைத் தள்ளி
வைக்க நினைத்தான்.
அப்போது இளையாள் அவனிடம், “அப்படிப் பண்ணாதீங்க! யாருக்கும்
தோணக் கூடிய ஸந்தேஹந்தான் அக்காவுக்கும் தோணிச்சு. அவங்க அதை மறைக்காம சொன்னதாலதான்
இந்தச் சின்னவளோட கற்பு, பக்திங்களை ஸ்வாமியே ரூபிச்சுக்காட்டி, உலகம் தெரியப்
பண்ணியிருக்காரு” என்று கேட்டுக் கொண்டாள். .
புருஷனும் மனஸை மாற்றிக் கொண்டான்.
கதை மங்களமாக முடிந்தது.
*****
Chapter: ஸாக்ஷி நாதேச்வரர்
(Excerpts from
Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
#Sthala #Purana #Thirupurambiyam #Madhurai
No comments:
Post a Comment