April 21, 2023

Virtue of doing Namaskaram




அப்படிக் கீழே விழாமலிருப்பதற்கு நமஸ்காரம் என்பதாக வினயத்தோடு கீழே விழுவதே சஹாயம் பண்ணும்!

.
உசந்த ஸ்தானத்தில் இருக்கிறவன் தப்புப் பண்ணி இடறி விழுகிறபோதுதான் அப்புறம் எழுந்திருக்கவே முடியாமல் – அதாவது, அந்த
உசத்தியை மறுபடி அடையவே முடியாதபடி – ஊர் உலகமெல்லாம் சிரித்து அவனை மட்டந்தட்டி வைத்து விடுகிறது. மனிதன் அகபுற உயர்வு வீழ்ச்சிகள் தலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது
.
உலகம் சிரிப்பது, இருக்கட்டும். ஆத்மார்த்தமாக ஒருத்தனுக்கு எது நல்லது? எப்படி இருந்தால் அவனுக்கு உள்ளூர ஒரு நிறைவு, நிம்மதி ஏற்படுகிறது? பாரம் தூக்கினால் நிம்மதியா, அதை இறக்கிப் போட்டால் நிம்மதியா? பாரம் என்றால் இந்த சம்ஸார ஸாகரத்தில் ஏற்படுகிற கஷ்டங்களின் பாரம் மட்டுமில்லை. பெரிய பாரம் அஹம்பாவந்தான். தற்பெருமைதான். அதை இறக்கினாலே நிரந்தர நிம்மதி. அப்படி இறக்குவதற்கு சஹாயம் செய்யும் க்ரியைதான், ஒரு மநுஷ்ய சரீரத்தை இறக்கி பூமியோடு பூமியாகப் போட்டு நமஸ்கரிப்பது!
.
பிறத்தியார் இறக்கினால் அவமானம்; நாமே இப்படித் தலையை இறக்கினாலோ வெகுமானம்! தலைக் கனம், மூளைப் பெருமை போகவே தலையால் நமஸ்கரிப்பது! “தலையே நீ வணங்காய்!” என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியதும்.
.
உசத்தி ஒன்றும் வேண்டாம்; தாழவே இருக்க வேண்டும். உயர்மட்டத்தில் ஜலம் நிற்காமல் தாழ்மட்டத்திலேயே சேருகிற மாதிரி
நாம் மனோபாவத்தில் தாழ இருந்தால்தான் அருள்மழை – நம்மிடம் பாய்ந்து வந்து தேங்கி நிற்கும். அதற்கு அடையாளமாகத்தான் தலையோடு கால் சரீரத்தை நில மட்டத்தோடு தாழ்த்திக் கிடப்பது.
.
Virtue of being humble
நம்முடைய புராதனமான ‘ட்ரெடிஷ’னில் விநய குணத்திற்கு ரொம்பவும் சிறப்புக் கொடுத்திருக்கிறது. பதவி, பணம், அறிவு, அழகு என்று ஒவ்வொன்றை வைத்தும் அஹங்காரம், தலைக்கனம் ஏற இடமுண்டானாலும் அந்தத் தலைக்கனமும் ரொம்பத் தலைதூக்கி நிற்பது ‘அறிவிலே நாம் பெரியவர்’ என்று ஒருவர் நினைக்கிற போதுதான்! அப்படியிருப்பவர்கள் எதையும் துச்சமாக, தூக்கி எறிந்து, பரிஹஸித்து எல்லாம் பேசுவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட அறிவு விருத்தியை விநயத்தோடு சேர்த்து இறுக்கி முடிச்சுப் போட்டுக் கொடுத்து விட்டால் எல்லாவிதமான தலைக்கனங்களையும் அடக்கி இறக்கி விட்டதாக ஆகிவிடும். இதைத்தான் நம் சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கின்றன.
.
விநயம் இருக்கிற இடத்தில்தான் ஈச்வர கிருபை சேருமாதலால் எல்லாரும் அதற்கு ஆசைப்பட்டு, அதற்கு உபாயமாக உள்ள நமஸ்காரத்தை நிறையப் பண்ண வேண்டும். பெரியவர்களைத் தேடித் தேடிப் போய் நமஸ்காரம் பண்ணணுமென்று அந்த நாளில் சொல்லிக் கொடுப்பார்கள்.
.
People who are physically unfit to do Namaskaram

நான் விஸ்தாரமாய் சொல்வதைக் கேட்டுவிட்டு சரீர உபாதி காரணமாக அப்படிப் பண்ண முடியாதவர்களும் தங்களை வருத்திக் கொண்டு அப்படிப் பண்ண வேண்டும் என்றில்லை. அவர்கள் மானஸீகமாக அப்படிப் பண்ணினாலே போதும். ஸ்தூலமாகப் பண்ண முடியாத அவர்களுக்குத்தான், ‘பண்ண முடியலியே’ என்ற feeling நமஸ்காரம் பண்ணுகிறவர்களின் பக்தியையும் விட ஜாஸ்தியாக ஏற்படும்.
-
Namaskaram as a way for Mukti

‘நிலத்திலே கழி மாதிரி தண்டனிட்டுக் கிடக்கிறவன் அடைகிற ச்ரேயஸை நூறு யாகம் பண்ணினவனும் அடைய முடியாது’; ‘ஒரு நமஸ்காரம் பத்து அச்வமேதத்திற்கு ஸமம் என்பதுகூட ஸரியில்லை. ஏனென்றால் அந்தப் பத்து அச்வமேதக்காரனுக்குப் புனர்ஜன்மா உண்டு. நமஸ்காரமோ ஜன்ம விமோசனத்தையே தருகிறது’ என்றெல்லாம் தர்ம சாஸ்த்ரங்களில் நமஸ்கார பலனைச் சொல்லியிருக்கிறது.
.
Chapter: தலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது
Chapter: அருள்மழை சேரும் ‘தாழ்நிலை’
Chapter: விநயத்தின் சிறப்பு
Chapter: ஜன்ம விமோசனமே அளிப்பது
Chapter: விதி விலக்கு
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 20, 2023

மனிதனின் வீழ்ச்சியும் உயர்வும்

 Growth of Species called human

’மற்ற ப்ராணி வர்க்கங்கள் அத்தனையும் குறுக்கே வளர்கிற ஜந்துக்கள்; மநுஷ்யன் ஒருத்தன் தான் காலுக்கு மேலேயும் உடம்பு, சிரசு என்று உயரவாட்டில் ‘ஊர்த்வமுக’மாக வளர்கிறவன்;
.
சிருஷ்டி வர்க்கங்களிலேயே இவன் தான் உசந்தவன் என்பதால் இப்படி இவனைப் படைத்திருப்பது’ என்று பெருமை சொல்கிறதுண்டு. ஆனால் இந்த உசத்தி அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலேயும் கொண்டு விட்டால் இவன் மிருக ஜாதிக்கும் கீழே போக வேண்டியதுதான்!
.
Think high, walk high
நம்முடைய சிந்தனை, வாழ்க்கை முறை எல்லாம் மற்ற பிராணிகளுடையதைப் போல இந்த்ரிய ஸெளக்யங்களோடு முடிந்து போகாமல் உசந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பகவான் நம்மை இப்படிப் படைத்திருப்பதாகப் புரிந்து கொண்டு அதற்கான ப்ரயாஸைகளைப் பண்ணி இன்னும் உசந்த ஸ்திதிக்குப் போகணுமே தவிர, தற்பெருமைப் பட்டுக் கொண்டு கீழே விழுந்துவிடக் கூடாது.
.
To learn to be humble
தற்பெருமையை என்னவென்று சொல்கிறோம்? ‘தலைக் கனம்’ என்கிறோம். குறுக்கு வாட்டில் வளருகிற பிராணியாயிருந்து அப்படி மண்டைக்கனம் ஏறினால் பரவாயில்லை; ‘பாலன்ஸ்’ கெட்டுப் போகாமல் சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் உயரவாட்டில் இப்போது நாம் இருக்கிற தினுஸில் மண்டைக் கனம் ஏறினால்? ‘ஈக்விலிப்ரியம்’ என்கிற சமசீர் நிலையே கெட்டுப் போய், குலைந்து போய், தடாலென்று விழ வேண்டியதுதான்!
.
பகவான் நாம் உயரவாட்டில் வளரும்படி வைத்து சிரஸை உச்சியில் வைத்திருக்கிறார் என்றால் ஒரு போதும் தலைக் கனம் ஏறாமல், பணிவாயிருந்து நம்மை விழுவதிலிருந்து – வீழ்ச்சியிலிருந்து – காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
..
(அதற்கு என்ன செய்ய வேண்டும்?)
.
Chapter: மனிதனின் அக-புற உயர்வு-வீழ்ச்சிகள்
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 19, 2023

Offering Pranams / Namaskarams to Elders - தெய்வத்தின் குரல்

 




Humility of idolized souls.

இத்தனை வருஷமாக நித்யமும் நீங்கள் கூட்டங்கூட்டமாக வந்து எனக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டு வந்திருப்பதில் நானும் உங்களுக்காக அவனை(இறைவனை) மனஸால் நமஸ்கரித்து, உங்கள் நல்லதற்காக ப்ரார்த்தித்துக் கொள்ளத்தான் முடிந்த மட்டும் முயற்சி பண்ணி வந்திருக்கிறேன்.
.
நாங்கள்(துறவிகள்) உங்கள் நமஸ்காரத்தை மனசாலே தூக்கி, உங்களுக்காக நாங்கள் செய்கிற ப்ரார்த்தனையின் ‘வெயிட்’’டையும் அதோடு சேர்த்து நாராயணனிடம் கொண்டு இறக்க வேண்டும்.
.
Offering everything unto Lord NarayaNa
“இது நமக்குக் கொஞ்சங்கூட உரிமைப் பண்டமில்லை. நம் மூலமும் எதாவது நல்லது நடந்தால் அப்படி நடத்துவிக்கும் அந்த நாராயணனுக்கே உரிய ஸாமான் இது. அதை நாம் ஒரு கூலியாகத்தான் தாங்குகிறோம்” என்பது புரிந்து கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பக்தர்களிடம் ப்ரியத்தினால் அந்த பாரத்தை ஸந்தோஷமாகவே தாங்கி – தாற்காலிகமாகத் தாங்கி – பகவானிடம் இறக்க வேண்டும்.
...
அப்படி இறக்காமல் எங்களுக்கே அந்த நமஸ்காரம் என்று நினைத்துக் கொண்டால் அது நிரந்தரமான பாப பாரமே ஆகி விடும்.
-
Devotees carry no baggage
மறுபக்கம், நமஸ்காரம் பண்ணுகிறானே, அவனைப் பார்த்தால் அவன் தான் பாக்யசாலி என்று தெரிகிறது. என்ன பாக்யம் என்றால் பாரத்தைத் தள்ளி விட்டு அக்கடா என்று கிடக்கிற பாக்யம்! பெரியவர் என்று அவன் நினைக்கிற ஒருவருக்கு முன்னாடி தன்னுடைய உடம்பைத் தள்ளி நமஸ்கரிக்கிற போதே அவன், ‘இவர் நம்முடைய ஸமாசாரத்தைப் பார்த்துக் கொள்வார்’ என்று பாரத்தையும் தள்ளி விடுகிறான்.
Acharya talks about he becoming Peetaathipathi at a young age
இந்த மாதிரி பாரத்தைத் தள்ளி லேசாகி, எளிசாகி ஒருத்தருக்கு முன்னே நமஸ்கரித்துக் கிடக்கிற பாக்யம் எனக்கு பால்யத்திலேயே போய் விட்டது! பறிபோய் விட்டது! ‘ஸ்தானம்’ வந்து பாக்யத்தைப் பறித்துக் கொண்டு போய் விட்டது!
.
Chapter: நம் பிரார்த்தனையும் அடியார் நம்பிக்கையும்
Chapter: உயர் ஸ்தானம்; ஆயின் கூலி வேலை!
Chapter: நமஸ்கரிப்பவனே பாக்யசாலி
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 18, 2023

Rudhra - aspect of Shiva - பிரபஞ்சம் Cosmic Dance

Cosmic Dance - Nataraja


Rudhra who is the aspect of Shiva

வடக்கே ஹிமாசல கேதார்நாத், அமர்நாத்திலிருந்து தெற்கே ராம்நாத் (ராமேச்வரம்) வரை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஈச்வரனும் இரண்டு இல்லை.
.
ஒரு ஸமயத்தில் உக்ரம், இன்னொரு சமயத்தில் சௌம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே சௌம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.
.
அந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் சதாசிவ நாமா..
.
Creator and the Protector
மஹாவீரன் ரணபூமியில் உக்ரனாயிருக்கிறான், கிருஹத்தில் ஸெளம்யமாயிருக்கிறான் என்றேன். சுவாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; கிருஹமாகவும் இருக்கிறது! ஒரு பக்கத்தில் ஸம்ஹார கர்த்தாவாக இருக்கிறான்.! இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான்!
.
ஒரே ஸமயத்தில் இந்த இரண்டு கார்யமும் நடக்கிறது. ஒரே ஸமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி
ஸம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது! ஒரே ஸமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக் கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் ஸமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன! இந்த இரண்டு தினுஸான கார்யமும் ஒரே ஸமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த ஸர்வாந்தர்யாமி ஒரே ஸமயத்தில் ஸெளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது?
.
அவன் அவனாக மட்டுமே நிஜ ஸ்வரூபத்தில் இருக்கிறபோது இந்த இரண்டாகவும் இல்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். ஈச்வரனாயிருக்கும் போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான்.
.
மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிற போது ((நாமாக நமக்குள் இருக்கும் போது)) ஒவ்வொரு ஸமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு ஸமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்!
.
Sivan vs Sivam

சிவன்- அநுக்ரஹம் என்கிற கார்யம் செய்கிறவன். சிவம் – ஸகல கார்யமும் நின்று போய் அந்த அநுக்ரஹம் அநுபவ மாத்திரமாகப் பிரகாசிக்கிற பரப்ரம்ம நிலை!
.
அநுக்ரஹ மூர்த்தி சதாசிவன். அநுபவத்தில் அமூர்த்தியாயிருக்கும் ப்ரம்மம் சதாசிவம்.
.
அந்த அமூர்த்த ஸதாசிவம் தான் அநுக்ரஹத்துக்கே மூர்த்தியான ஸதாசிவனில் முடிகிற பஞ்ச க்ருத்ய மூர்த்திகளாகவும் மாயையில் கூத்தடிப்பது!
.
Shivam the eternal

‘ஸத்’தோடு ஸம்பந்தப்பட்டதாக ‘ஸதா’ என்பதைச் சொல்லலாம். எப்போதும் மாறாமல், சாகாமல் இருக்கிறதே ஸத். ‘ஸத்யம்’. ; ஸத் – Eternity; ஸதா - Eternal.
.
சாந்தமாக என்றும் உள்ள ஸத்ய வஸ்து ஸதாசிவம். அந்த சாந்தம் மாயையில் சலனமுற்றுத்தான் ஸ்ருஷ்டி – ஸ்திதி – லய (ஸம்ஹார) – திரோதான – அநுக்ரஹங்கள் நடப்பது. வெளியிலே இப்படி சலிக்கிற அப்போதும், எப்போதும் – ஸதா – உள்ளே சாந்தம் சாந்தமாகவே இருக்கிறது. ஸ்ருஷ்டிக்கு முந்தி, லயத்துக்குப் பிந்தி ஸதாவும் சாந்த சிவம் இருந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது.
.
அதுதான் மாயா ஸ்ருஷ்டியின் Base. மாறிக்கொண்டேயிருந்து அப்புறம் அழிந்தே போகிற சிருஷ்டியின் மாறாத Base;
அழிவேயில்லாத base.
.
Moolam (the Origin)
.
மரத்துக்கு base ஆன மண் மாதிரி அது. மண்ணில் விதை முளைக்கிறது. மரமாகிறது; அப்புறம் கடைசியில் அந்த மரம் மட்கிப் போகிறது. இதில் எத்தனையோ மாறுதல்கள்; முடிவாக அழிவு. விதையைத் தாங்கி உயிர் கொடுத்த மண்ணோ மாறாமலே இருக்கிறது. மாறாத அதன் மேலேயே விதை செடியானது; மரமானது; மரம் முற்றி, அப்புறம் மட்கியும் போனது! மட்கின மரமும் அந்த மண்ணோடேயேதான் மண்ணாக ஆகி விடுகிறது! அப்படி, மாயை நடக்கும் பிரபஞ்சத்துக்கும், அந்த மாயையையே நடத்தும் மஹேச்வரனுக்கும் ஸதாசிவமே base. அது மட்டுமில்லை; மாயையிலிருந்து விடுவிப்பதான அநுக்ரஹத்தைச் செய்யும் மூர்த்தியாக ஸதாசிவன் என்று இருக்கிறானே, அவனுக்கும் சதாசிவம் base. ஸதாசிவம் அமூர்த்தி, தத்வமயம்.
.
மாயா ப்ரபஞ்சம் எத்தனையோ கோடி கோடி வருஷம் நடந்து விட்டு – இத்தனை கோடி என்று கணக்கே இருக்கிறது – அப்புறம் ப்ரம்மத்தோடு
ஐக்கியமாகிவிடும்.
.
மாய ப்ரபஞ்சம் உள்ளவரை அதை ஸதாவும் நடத்துபவன், அதிலிருந்து கடத்துபவன் சதாசிவன். கடந்தபின், மாயமும் ப்ரபஞ்சமும் அடிபட்டுப் போனபின் ஏக ஆத்மாவாக நிற்கிற சாந்த அத்வைதமே சதாசிவம்.
.
Chapter: எப்போதும் உக்ரனே எப்போதும் ஸெளம்யனும்
Chapter: சிவனும் சிவமும்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 17, 2023

Glory of Cauvery and Thula Snanam (காவிரியின் பெருமை - துலா ஸ்நானத்தின் மகிமை)




(Glory of Cauvery and Thula Snanam) (Dosha Nivarthi)

.
இராமனாக ராவணனை வதம் செய்த பின் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா நரகாசுர வதத்திற்குப்பிறகு வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார்; கைலாஸத்துக்குப் போனார்.
Shankar-Narayana : Love and Respect for each other.
.
சைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இரண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டத் தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேருக்குமோ, ‘தாங்கள் இரண்டு பேருமே சாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோக அநுக்ரஹத்துக்காகவும், நிர்வாஹம் – சம்ஹாரம் என்று தொழில் பிரிவினை பண்ணிக் கொண்டு வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும்.
.
அதனால் அவரும் இவர் காலில் விழுவார்; இவரும் அவர் காலில் விழுவார். அடித்துக் கொண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு சமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு சமயம் மற்றவர் தோற்பார். அப்படியே அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.
.
இப்போது க்ருஷ்ண பரமாத்மா கைலாஸத்துக்குப் போய் ஈச்வரனிடம், “என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
.
Solution given by Lord Shiva
ஈச்வரன், “இது துலா மாஸம். (அதாவது நம் ஐப்பசி)*. இந்த மாஸம் பூராவும் புரதி தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீர ஹத்தி தோஷம் போயே போய்விடும்” என்று சொன்னார்.
.
Thula Snaanam
காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.
.
அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.
.
Dosha Nivirthi
யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.
.
உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.
.
ஆகையால் துலா மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸுர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கின்றன.
.
Detoxifying ourselves
புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உன் அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப்பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்பதுண்டு. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!
.
Chapter: ஈசன் சொன்ன பிராயச்சித்தம்
Chapter: காவேரி துலா கட்டம்
Chapter: தீபாவளியில் காவேரி ஸ்நானம்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 16, 2023

சாக்ஷி நாதேஸ்வரர் - Miracle and Grace by Lord Shiva , who stood as witness to the marriage (தெய்வத்தின் குரல்)

Pic source: Internet 
Calling Lord shiva as witness 




(சாக்ஷி நாதேஸ்வரர் ஸ்தல புராணம்) . 
(தொடர்கிறது...) . 

லிங்கமென்பதே அக்னி ஸ்வரூபந்தான். ‘வன்ஹி’ என்றாலும் அக்னி என்றே அர்த்தம். இப்படி இரட்டை அக்னி ஸாக்ஷி! தம்பதியாக மதுரைக்குத் திரும்பினார்கள். 

திடுதிப்பென்று மாமா பெண் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளையாளை அகமுடையான் அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும் மூத்தாளுக்கு ஆத்திரமும் அஸூயையுமாக வந்தது. ஆனாலும் மென்று முழுங்கிக் கொண்டு அவர்களை வரவேற்றாள். 

அப்புறம் சண்டை என்று மூளாமலே உள்ளூர கமுக்கமாக cold war என்று சொல்கிறார்களே, அந்தச் சூழ்நிலையிலே அந்தக் குடும்பம் சில வருஷங்கள் நடந்தது. இதற்கிடையில் இளையாளுக்கும் குழந்தை பிறந்து வளர்ந்தது. '

ஒரு நாள் மூத்தாள் பிள்ளை இளையாள் பிள்ளையைக் காட்டடியாக அடித்து விட்டது. அதுவரை எவ்வளவோ பொறுமையாயிருந்து வந்த இளையாள் அடித்த பிள்ளையை அதட்டினாள். அப்போதுங்கூட அடிக்காமல் அதட்டத்தான் செய்தாள்.

ஆனால் அதுவே எரிமலை மாதிரி வெடிக்கத் தயாராயிருந்த மூத்தாளைக் கிளறிவிட்டு நெருப்பைக் கக்க வைக்கப் போதுமானதாயிருந்தது. “குலம் கோத்ரம் இல்லாம, முறைப்படி கல்யாணம் பண்ணிக்காம என் புருஷனைக் கையில போட்டுண்ட” – சின்ன பாஷையில் அவளை ஒரு சொல் சொல்லி – “அப்படிப்பட்டவளுக்கு சாஸ்த்ரப்படி, ஸம்ப்ரதாயப்படி, சட்டப்படி இந்த வீட்டுக்கு வார்ஸா இருக்கிற பிள்ளையை ஏச வாயேது?” என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் தீர்த்து விட்டாள்.

அவமானத்தில் அப்படியே மட்கி மண்ணாகிவிட்ட மாதிரி உட்கார்ந்த இளையாள் அப்புறம் மீனாக்ஷி – ஸுந்தரேச்வரர் ஆலயத்துக்கு ஓடினாள். பொற்றாமரைக் குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸ்வாமி ஸந்நிதிக்குப் போய்க் கதறினாள். “அப்பா! உன்னையும், உன் ஸ்தல வ்ருக்ஷத்தையும், உன் அபிஷேகக் கிணற்றையும் ( – உனக்கு நைவேத்யம் பண்ணும் மடைப்பள்ளியையும் என்றும் வைத்துக் கொள்ளலாம் –) ஸாக்ஷி சொல்லியே என் முறைப் பிள்ளையான அத்தான் என்னைக் கைப்பிடித்தார். இதை இன்றைக்கு ஒருத்தி ஸந்தேஹப்பட்டு வாய்விட்டுச் சொல்கிறாளென்றால், சொல்லாமலே ஸந்தேஹப் படுகிறவர்கள் பல பேர் இருப்பார்கள். எல்லார் சந்தேஹத்தையும் நீதான் தீர்த்து வைக்கணும், இல்லாவிட்டால் உன் ஸந்நிதியிலேயே உயிரை விட்டு விடுவேன்” என்று கதறினாள். ”உன் மூத்தாளையும் ஊராரையும் இங்கு அழைத்து வருக!” என்று ஸ்வாமி அசரீரியாகச் சொன்னார். 

அப்படியே அழைத்துக் கொண்டு வந்தாள். 


சுந்தரேச்வர ஸ்வாமி, ஸோமஸுந்தரக் கடவுள் என்றும் சொக்கநாதப் பெருமான் என்றும் தமிழ் நூல்களில் அன்போடு சொல்லப்படுபவர், தமது அறுபத்து நாலாவது லீலையாக, தாமே நேரில் ஒன்றும் செய்யாமல் ஸினிமா ‘ட்ரிக்-ஷாட்’ காட்சி மாதிரித் திருப்புறம்புயத்து ஸாக்ஷிகளை மட்டும் மதுரையில் தன் ஸந்நிதிக்கே வருவித்துக் காட்டினார்! 

ஸந்நிதியின் ஈசான்ய திசையில் திருப்புறம்புய சிவலிங்கம், வன்னி, கிணறு ( – மடைப்பள்ளி சேர்த்துக் கொள்ளலாம் – ) எல்லாம் தோன்றின. ஒரு முஹூர்த்த காலம் அப்படித் தோன்றிவிட்டு யதா ஸ்தானம் போய்ச் சேர்ந்தன. 

ஊரே அதிசயப்பட்டு ஆஹாகாரம் பண்ணி, இளையாளுடைய பக்தி மஹிமையை ஸ்தோத்ரம் செய்தது. .. மூத்தாளும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். .. கோபம் தணியாத புருஷன், அவளைத் தள்ளி வைக்க நினைத்தான். 

அப்போது இளையாள் அவனிடம், “அப்படிப் பண்ணாதீங்க! யாருக்கும் தோணக் கூடிய ஸந்தேஹந்தான் அக்காவுக்கும் தோணிச்சு. அவங்க அதை மறைக்காம சொன்னதாலதான் இந்தச் சின்னவளோட கற்பு, பக்திங்களை ஸ்வாமியே ரூபிச்சுக்காட்டி, உலகம் தெரியப் பண்ணியிருக்காரு” என்று கேட்டுக் கொண்டாள். . 

புருஷனும் மனஸை மாற்றிக் கொண்டான். 

கதை மங்களமாக முடிந்தது. 

***** 

Chapter: ஸாக்ஷி நாதேச்வரர் 

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

#Sthala #Purana #Thirupurambiyam #Madhurai 

April 15, 2023

Sthala purana story of Sakshi Nadheswarara - சாக்ஷி நாதேஸ்வரர் திருப்புறம்பியம்

Sakshi NadhEswarar 


சாக்ஷி நாதேச்வரர் என்ற பேரில் ஈச்வரன் இருப்பது திருப்புறம்பியம் என்ற க்ஷேத்திரத்தில். அது கும்பகோணத்துக்கு வடமேற்கே ஐந்து, ஆறு மைலில் மண்ணியாற்றின் வடகரையிலிருக்கிறது. சுந்தரேச்வரரின் கடைசியான அறுபத்து நாலாவது லீலையாகத் திருப்புறம்பய ஸாக்ஷிநாதர் சமாசாரந்தான் வருகிறது.
.
Two Families and their dispute
காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகர், இருந்தார். அவருடைய சகோதரியை மதுரையிலிருந்த ஒரு வணிகருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தது. கொஞ்ச நாளில் அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது.
.
எதனாலோ அவளுடைய பிறந்தகம், புகுந்த அகம் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கும் சம்பந்தம் கத்தரித்துப் போய்விட்டது.
.
Trying to renew the relationship
காவேரி பூம்பட்டின வணிகருக்கு ஒரு பெண் பிறந்தது. உடனே அவருக்கு முறைப்பிள்ளை நினைவு வந்தது. ‘மருமகன் பிறந்தானே! முறை விட்டுப் போகாம அவனுக்குத்தான் பெண்ணைக் கொடுக்கணும்’ என்று முடிவு பண்ணினார். முடிவு பண்ணினாரே தவிர, கத்திரித்துப் போன உறவை புதுப்பிக்க முனையவில்லை. துரத்ருஷ்ட காலம், வணிகர், அவருடைய சம்ஸாரம் ஆகிய இரண்டு பேரும் கண்ணை மூடிவிட்டார்கள்.
.
கல்யாண வயசுக் கன்யாப் பெண் அநாதையாக நின்றது. தனக்கு ஒரு அத்தான் உண்டு; அவனுக்குத்தான் தன்னைக் கொடுக்க அப்பா உத்தேசித்திருந்தார் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அ அந்தப் பிள்ளைதான் தன் பதி என்று அவள் கற்பு நெறி அநுஷ்டிக்க ஆரம்பித்து விட்டாள்.
.
அந்தப் பெண்ணிடம் அபிமானமும் இரக்கமும் கொண்ட ஊர் ஜனங்கள் மதுரையிலிருந்த மருமான் அட்ரஸைக் கண்டு அவனுக்கு ஓலை அனுப்பினார்கள். அவனும் காவிரிப்பூம்பட்டினம் வந்தான்.
.
Groom agreeign to marry the bride
அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிப் பசங்கள் கூட இருந்தது. ஆனாலும் இரண்டாம் கல்யாணம் அப்போது வழக்கத்தில் இருந்ததால், மாமா பெண்ணுக்கு அவள் ஊரிலிருந்த கொடுக்கல்-வாங்கல்களைப் பைஸல் பண்ணிவிட்டு, சோழ நாட்டில் கொஞ்சம் க்ஷேத்ராடனமும் அவளோடு பண்ணிவிட்டு மதுரைக்குத் திரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தோடு வந்தான்.
.
Groom and bride decide to go on pilgrimage
திருப்புறம்புய ‌க்ஷேத்திரத்தில் அவர்கள் ஒருநாள் ராத்தங்க வேண்டி வந்தது. ரொம்ப தூரம் நடந்து வந்த அலுப்பும் புழுதியும் போவதற்காக அவன் கோவில் கிணற்றில் குளித்தான். மடப்பள்ளிக்குப் போய் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். அப்புறம் ப்ராகாரத்திலேயே தள்ளித் தள்ளிப் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விட்டார்கள்.
.
Danger that awaited
பாதி ராத்ரியில் ஒரு பாம்பு வந்து அவனைக் கடித்தது. முழித்துக் கொண்டு “ஐயோ!” என்று அலறினான். சத்தம் கேட்டு அந்தப் பெண்ணும் எழுந்திருந்து வந்து அவனைப் பார்த்தாள். கிடுகிடுவென்று அவன் உடம்பு நீலம் பாரித்துப் போயிற்று. அப்புறம் அவனிடமிருந்து பேச்சு மூச்சு இல்லை. பாம்புக்கடி என்று புரிந்து கொண்டு நடுநடுங்கிப் போய் விட்டாள். ‘கல்யாணம் பண்ணிக் கொண்டு நல்வாழ்வு தர இருந்தவன், பாவம் போய் விட்டான்’ என்று தெரிந்தது. அந்தப் பெண் அழுது துடித்தது. இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.
.
Thirugnaana sambandhar bringing back toe groom to life
அப்போது அந்த ஊருக்குத் திருஞானஸம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அவர் காதுக்குத் துக்க ஸமாசாரம் போயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம் ரொம்பவும் கருணை கொண்டார். உடனே, ஹாலாஹால விஷ பானம் பண்ணிய ஸ்வாமியிடம் போய் அந்த மதுரை வணிகனுக்கு விஷத்தை இறக்கி மறுபடி உயிர் கொடுக்கும்படிப் பதிகம் பாடினார். (அப்பூதி பிள்ளைக்கு விஷம் இறங்க அப்பர் பாடின மாதிரியே!)
.
ஸ்வாமி அநுக்ரஹம் செய்தார். விஷம் ஏறின வேகத்திலேயே கிறுகிறுவென்று இறங்கிற்று. ‘மாண்டவன் மீண்டான்’ என்பது நிஜமாயிற்று.
.
Thiru Gnanasambandhar urging an urgent marriage
“அப்பா, இன்னமும் இந்தப் பொண்ணைக் காக்க வைக்காதே! மொதல்ல கல்யாணத்தைப் பண்ணிக்கோ. அப்புறம் க்ஷேத்ராடனம் முடிச்சுட்டு மதுரைக்குத் தம்பதியாப் போய்ச் சேருங்கோ” என்று ஸம்பந்தர் அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு அங்கேயிருந்து புறப்பட்டார்.
.
”மஹான் சொன்னதை மீறப்படாது. ஆனாலும் இங்கே கல்யாணமாச்சுன்னு ஊர்ல போய்ச் சொன்னா ஊர்க்காரா ஸாக்ஷி கேட்பாளே! இங்கே
யாரைப் பிடிச்சு, அவச்யம் ஏற்படறப்போ, அங்கே ஸாக்ஷி சொல்ல வரப்பண்ண முடியும்?” என்று அவனுக்கு யோசனையாயிற்று.
.
முடிவாக ஸ்வாமியேதான் சாக்‌ஷி என்று வைத்துக் கொண்டான்.
.
Sakshi of Vanni tree, temple well and the shivalinga

‘ஸ்வாமி’ என்று நினைத்தவுடன் அவன் மனக் கண்ணில் ஸ்வாமி – சிவலிங்கம் – மட்டுமில்லாமல் கோவில் இருந்த முழு ‘ஸெட்-அப்’பும் தோன்றிற்று. குறிப்பாக,
.
மனஸில் பார்த்தது அப்படியே அவன் வாயில் வர, “ஸ்வாமி, வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி ஸாக்ஷியாக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி மாமா பெண் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
..
( நிகழ்வுகள் அடுத்த பதிவில் தொடரும்)
.
Chapter: ஸாக்ஷி நாதேச்வரர்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
#Thirupurambiyam #திருப்புறம்பியம் #Sakshi #Nadeswarar

April 14, 2023

Story of Raja Purushothama - Sakshi Gopal (Odisha)

 

(AS recap please refer to Sakshi Gopal incident where Lord Krishna came as witness link shared below

http://minminipoochchigal.blogspot.com/2023/04/story-of-sakshi-gopal-lord-krishna-who.html )

Sakshi Gopal - Odisha


Continued)

Story of Raja Purushothama

ஸ்ரீ கிருஷ்ணன், ஒரிஸ்ஸாவில் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்டதாக நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? காஞ்சி எல்லைக்கு வந்த ஸாக்ஷி கோபாலர் ஏன் எப்படி ஒரிஸ்ஸாவுக்குப் போனார் என்றால்:
.
மேலே சொன்ன கதை நடந்த பிறகு மட்ரா கோபாலன் காஞ்சி கோபாலனாகிவிட்டான் என்பது வட தேசம், உத்கலம் என்கிற ஒரிஸ்ஸா முதலிய எல்லா இடங்களிலும் பரவிற்று.
.
Raja Purushotham of Orissa
ஒரிஸ்ஸாவில் புரி ஜகந்நாத்தில் , புருஷோத்தமன் என்று ஒரு ராஜா இருந்தார். ஜகந்நாத சுவாமிக்கும் புருஷோத்தமன் என்ற பெயருண்டு. ராஜாக்கள் ராஜ்யம் விட்டு ராஜ்யம் விவாஹ ஸம்பந்தம் பண்ணிக் கொள்வது உண்டல்லவா? அப்படி இந்த ராஜா அப்போது காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்திய தொண்டை மண்டலாதிபதியின் பெண் பத்மாவதியைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஏற்பாடாயிற்று…
.
Krishna chaitanya, Jayadeva: Saints... a recap
பக்தி, ஸங்கீர்த்தனம் என்று இருப்பவர்களுக்கு ஜகந்நாத க்ஷேத்ரம் என்றவுடன் இரண்டு மஹான்களின் நினைவே வரும். ஒருவர் ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர். மற்றவர், 'எட்வின் ஆர்னால்ட்' இங்கிலீஷ் பொயட்ரியாக மொழி பெயர்த்திருக்கும் “கீத கோவிந்த மஹா காவ்ய”த்தைச் செய்த ஜயதேவ ஸ்வாமி. அவர் பாட, அதற்கு நர்த்தனமாடிய அவருடைய பத்னியின் பெயரும் பத்மாவதிதான்.
.
Falling in Love with Sakshi Gopal
காஞ்சீபுர ராஜகுமாரி பத்மாவதியை புரி ராஜா புருஷோத்தமன் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஸம்மதித்ததற்கு ஒரு முக்ய காரணம், அங்கே போனால் சாக்ஷி கோபாலனைத் தரிசனம் பண்ணிவிட்டு வரலாமென்பதுதான். அப்படியே அவர் கல்யாண்மாகி ஸ்வாமி தரிசனம் செய்தாரோ இல்லையோ, இளம் பத்னியைக் கூட மறந்து அந்த ஸ்வாமியிடமே அவருக்கு மஹா ப்ரேமை உண்டாகிவிட்டது. விக்ரஹத்தைத் தமக்குக் கொடுக்கும்படி மாமனாரைக் கேட்டுக் கொண்டார்.
.
புது மாப்பிள்ளை கேட்பதை மாமனார் மறுக்க முடியுமா? ‘பெண்ணைக் கொடுத்தாயோ, கண்ணைக் கொடுத்தாயோ?” என்று வசனம். பெண்ணைக் கொடுத்த காஞ்சீபுர ராஜர் கண்ணனையும் கொடுத்தார்!
.
Krishna stays put as Sakshi Gopal in Mukunthapur
மாப்பிள்ளை தன்னுடைய ராஜ்யத்துக்குப் பத்னியோடும் பகவானோடும் திரும்பினார். புரியில் ஏற்கெனவே பிரஸித்தமான ஜகந்நாத ஸ்வாமி இருந்ததால் அவருக்குப் போட்டியாக ஸாக்ஷி கோபால் அங்கே இருக்க வேண்டாம், தனி ராஜாவாக அவர் வேறே ஊரில் கோவில் கொள்ளட்டும் என்று அவர் நினைத்தார். க்ருஷ்ணன் பெயரில் முகுந்தபுர் என்று ஒரு க்ஷேத்ரம் அவருடைய ராஜ்யத்திலிருந்தது. அதை அடுத்துள்ள ஊரில் முக்யமான ஆலயம் எதுவுமில்லாததால் அங்கே ஸாக்ஷி கோபாலுக்குக் கோவில் கட்டி ப்ரதிஷ்டை பண்ணினார்.
.
அதுவே இப்போது ஸாக்ஷி கோபால் என்று வழங்கும் க்ஷேத்ரம்.
.
Chapter: சாக்ஷி கோபால்\

#SakshiGopal #Krishna #Odisha #King #purushothama

April 13, 2023

Story of Sakshi Gopal: Lord Krishna who came as witness - சாக்ஷி கோபால் - ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை




Lord Krishna Gracing as Witness


ஒரிஸ்ஸாவில் நித்யவாஸம் பண்ணுகிற ஒரு ஸாக்ஷிக்கார ஸ்வாமியின் கதை பார்க்கலாம். அவர் கிருஷ்ண பரமாத்மா. ’ஸாக்ஷி கோபால்’ என்றே அவரைச் சொல்வார்கள். ஒரிஸாவில் அவர் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்ட ஊருக்கும் ’ஸாக்ஷி கோபால்’ என்றே பேர்.

.
காஞ்சீபுரத்திலிருந்து அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வயசான பிராமணரும் ஒரு வாலிபமான பிராமண ப்ரம்மசாரியும் காசி யாத்ரை போனார்கள். போகிற வழியில் வ்ருத்தர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டுப் படுத்துவிட்டார். அப்போது அந்தப் பிள்ளை அவருக்குக் கண்ணும் கருத்துமாக சிசுருஷை பண்ணினான். அசிங்கம் பார்க்காமல் விஸர்ஜனாதிகளைச் சுத்தம் செய்வது உள்பட, மருந்து கொடுப்பது, கஞ்சி கொடுப்பது எல்லாம், ராப்பகல் பார்க்காமல், அபிமானத்தோடு பண்ணினான். உடம்பு குணமாயிற்று. அப்புறமுங்கூட, ’வயசானவர், நடந்தால் நெகிழ்ந்து கொள்ளும்’ என்று அவனே அவரைத் தூக்கிக்கொண்டு மேலே யாத்ரையைத் தொடர்ந்தான். இப்படியே காசிக்குப் போய்விட்டு அப்புறம் இரண்டு பேருக்குமே கிருஷ்ண பரமாத்மாதான் இஷ்ட தெய்வமானதால் ப்ருந்தாவன், மட்ராவுக்குப் போனார்கள்.
.
இஷ்ட மூர்த்தியை இஷ்டம் கொண்ட வரையில் வயசானவர் தர்சனம் செய்து கொண்டார். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே அந்த சந்தோஷம் அப்படியே அந்த பிரம்மசாரியிடம் நன்றியாக மாறி விட்டது.
.
வயசானவரோ நல்ல சொத்துக்காரர். அவருக்கு ஒரே பெண்தான். பிரம்மசாரிப் பிள்ளையோ ஏழை. அநாதை. பிராமணன்தான் என்றாலும்
அதிலும் அவரை விடத் தாழ்வாக நினைக்கப்பட்ட பிரிவை, ஸப்-ஸெக்டைச் சேர்ந்தவன். இருந்தாலும் அவன் அத்தனை பணிவிடை பண்ணி, தன்னுடைய போன உயிரை மீட்டு, தன் உடம்பைத் தூக்கியும் கொண்டு வந்ததால்தானே இஷ்டமூர்த்தி தர்சனம், யமுனா ஸ்நானம் எல்லாம் கிடைத்தது என்று வயோதிகருக்கு நன்றி பெருக்கெடுத்து,
.
“அப்பா, உன்னால்தான் எனக்கு ஜன்மா ஸாபல்யமாயிற்று. என் பெண்ணை உனக்கே கொடுத்து, சொத்தையும் எழுதி விடுகிறேன்”
என்று சொன்னார்.
.
அவனால் நம்ப முடியவில்லை. ”எனக்கா? உங்கள் பெண்ணையா? நான் பாட்டுக்கு எதையும் எதிர்பார்க்காமல் ஏதோ என்னால் முடிந்த ஸஹாயம் பண்ணினேன். கிடைக்கத் தகாத ஆசையை எனக்குக் கிளப்பி விட்டு அப்புறம் ஏமாத்திவிடாதேள்!” என்று கேட்டுக் கொண்டான்.
.
அவன் அப்படிச் சொன்னதாலேயே அவருக்குத் தீர்மானம் நன்றாகக் கெட்டி ஆயிற்று. “ஒருநாளும் உன்னை ஏமாத்தமாட்டேன். தெய்வ
சந்நிதானத்துல ஸத்யமா சொல்றேன். இந்த கோபாலன் ஸாக்ஷி” என்று ஆவேசமாகச் சொன்னார்.
.
ப்ரம்மசாரிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. அப்புறம் இரண்டு பேரும் காஞ்சிபுரத்துக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
.
திரும்பி வந்தவர் நல்ல ரூபவதியாக தன்னுடையப் பெண்ணைப் பார்த்து, தம் வீடு வாசல், சொத்துகளையும் பார்த்து, அதோடு அந்தப் பிள்ளையாண்டான், அவனுடைய பொருளாதார் ’ஸ்டேடஸ்’, ஜாதி ரீதி ‘ஸ்டேடஸ்’ முதலானவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாரோ இல்லையோ, மட்ராஸாவில் அவர் பண்ணின தீர்மானம், கொடுத்த வாக்குறுதி எல்லாம் ஓட்டம் பிடித்து விட்டன!
.
கன்யாதானம் செய்து கொடுக்காமல் அவர் காலம் கடத்திக் கொண்டே போனதைப் பார்த்து விட்டு பிரம்மசாரிப்பிள்ளை துணிந்து அவரை
ஞாபகப் படுத்தினான்.
.
அவ்வளவுதான்! அவர் ஸ்வரத்தை அப்படியே மாற்றிக் கொண்டு விட்டார். “உனக்கா? என் பெண்ணையா? கேட்கிறவாகூடச் சிரிப்பா! மூளை கீளை பிசகி விட்டதா?” என்று ஹேளனமாகப் பேசினார்.
.
தெய்வ ஸாக்ஷியாகக் கொடுத்த வாக்கை மீறிய பாபம் அவருக்குச் சேரக் கூடாதே என்று பிரம்மசாரிக்கு இருந்தது. அநாதையும் தரித்ரனுமான தான் அவரோடு வாதம் செய்து எடுபடாது என்பதால் காஞ்சிபுரத்தில் ராஜாவிடமே பிராது கொடுத்தான்.
.
”கேட்கிறவா சிரிப்பா” என்று வயோதிகர் சொன்னாற்போலவே ராஜா சிரித்தான். அவருடைய குலப்பெருமை, பணப்பெருமை அவனுக்குத் தெரியும். பிராது கொடுத்த பிள்ளையைப் பார்த்தாலோ மலைக்கும் மடுவுக்குமாயிருந்தது. இருந்தாலும் தர்ம ந்யாயப்படி ராஜா அவரைக் கூப்பிட்டு விசாரித்தான்.
.
வயோதிக ப்ராமணர் ஒரு யுக்தியால் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். “அவன் ஏழை என்பதால் நாம் வாக்கை மீறுகிறோம் என்பது நமக்கு அவப்பெயரையே உண்டாக்கும். அதனால் ஜாதி வித்யாஸத்தைக் காரணம் காட்டுவோம். ஒரு ஆசாரக்கார ப்ராமணர் ஜாதியின் உட்பிரிவுகளுக்கிடையே உள்ள வித்தியாஸத்தைப் பொருட்படுத்தாமல், ஒரே பெண்ணை எவனோ ஒரு ஏழைப் பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக ஒருகாலும் வாக்குதத்தம் செய்திருக்க மாட்டார். இப்படி அவர் செய்தாரென்பதற்குத் தக்க சாக்ஷி இருந்தாலொழிய பிரம்மசாரிக்கு ஸாதகமாக நாம் தீர்ப்புப் பண்ணுவதற்கில்லை. வழக்கைத் தள்ளுபடி பண்ணுகிறேன்” என்று ராஜா தீர்ப்புக் கொடுத்தான்.
.
பார்த்தான் பிரம்மசாரி. “ஸாக்ஷியம் இல்லாமலா? யாருக்குமில்லாத தெய்வ ஸாக்ஷியே இருக்கிறதே! அவ்வளவு உசந்த விஷயத்தைக் கோர்ட்டுக்கு இழுக்க வேண்டாமென்று இதுவரை மூடி வைத்திருந்தோம். இனியும் மூடி வைத்தால் கிழவனார் நிச்சயம் தெய்வக் குற்றத்துக்கு ஆளாகி விடுவாரே!” என்று ப்ரம்மசாரிக்கு வேகம் வந்தது.
.
”ஸாக்ஷி இல்லாமலில்லை. மதுரா நகரத்துக் கோயில் ஸ்வாமியே ஸாக்ஷி. உங்களுக்கெல்லாம் நான் ஒரு பொருட்டாயில்லாத அநாதனானாலும்,
இடைப் பசங்களுக்கும் அத்யந்தமாயிருந்த அந்த மதுராநாதன் என்னையும் பொருட்படுத்தி ஸாக்ஷி சொல்ல வருவான்” என்று உறுதியான நம்பிக்கையோடு சொன்னான்.
.
“நல்லது. அப்படியானால் அவரைப் போய் அழைச்சுண்டு வா. இந்த நீதி ஸ்தலத்துக்கு பகவானே வருவானானால் எங்களுக்கும் பரம பாக்யம் தான்” என்று ராஜா சொன்னான்.
.
கோபாலனாவது, வருவதாவது என்று வயோதிகர் – நிறைய சாஸ்திர, புராணங்கள் படித்தவர் – நினைத்தார். அவ்வள்வு படிக்காதவன், அவரை விட ரொம்பச் சின்ன வயசுக்காரன் திடநம்பிக்கையோடு காடு மலை தாண்டி ஆயிரம் மைல் போய் மட்ராவை அடைந்தான். கோவிலுக்குப் போனான்.
..
“கோபாலா! ஸாக்ஷி சொல்ல வா!” என்று ஸ்வாதீனமாகக் கூப்பிட்டான்.
“காத்துக் கொண்டிருக்கேன்!” என்று ஸ்வாமியும் புறப்பட்டார்!
...
பகவான், “நான் உன் பின்னாடியே வரேன். ஆனா நான் வரேனான்னு சந்தேகப்பட்டுண்டு நீ திரும்பிப் பார்க்கப்படாது. பார்த்தியானா அந்த எடத்திலேயே நான் விக்ரஹமா நின்னுடுவேன்!” என்று சொன்னான்.
.
கோபாலன் சொன்னதை பிரம்மசாரி ஒப்புக் கொண்டான். சிலம்பு ஜல் ஜல்லென்று சப்தம் செய்ய, கோபாலனும் அவனுக்குப் பின்னேயே போனான்.
.
ஆனாலும் நீதிஸ்தலம் வரை கோபாலஸ்வாமி போகவில்லை. ஏழை ப்ரம்மசாரிக்குக் கட்டுப்பட்டு ஆயிரம் மைல் வந்தவன், ராஜாவுக்குக் கட்டுப்பட்டு அவன் கோர்ட்டில் ஸாக்ஷிக் கூண்டில் நிற்க இஷ்டப்படவில்லை.
.
அதனால் என்ன ஆச்சு என்றால்: ஊரெல்லைக்கு வந்தபிரம்மசாரிக்கு, “கிருஷ்ணனையாக்கும் இத்தனாம் தூரம் வரப் பண்ணி நமக்கு ஸாக்ஷி
சொல்ல வைக்கப் போகிறோம்!” என்ற ஆச்சர்யமும் பெருமிதமும் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்காக இப்பேர்ப்பட்ட அநுக்ரஹம் பண்ணும் மூர்த்தியைப் பார்க்கிற ஆசை அதை விடப் பொங்கிக் கொண்டு வந்தது! கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிப் பார்த்து விட்டான்!
பகவானும் அந்த எல்லையிலேயே சிலா ரூபமாக நின்று விட்டான்!
.
அதற்காக ப்ரம்மசாரி இடிந்து போய்விடவில்லை. “ஊர் ஜனங்கள் இங்கே வந்து திடீர் விக்ரஹம் முளைத்திருப்பதைப் பார்த்து நிஜத்தைத் தெரிந்து கொள்வார்கள். ராஜாவும் வயோதிகரும் கூட, இரண்டு மைல் இறைவனை எதிர் கொண்டழைப்பது போல நடந்து வந்து, பார்த்து, விஷயம் தெரிந்து கொள்ளட்டுமே!” என்றே நினைத்தான்.
.
அவர்களும் வந்தார்கள்.
கோபாலனும் ஸாக்ஷி சொன்னான்.
அதன்படி ராஜா நீதி வழங்கினான்.
.
வயோதிகருக்கும் கண் திறந்தது. பகவானையே பணி கொண்ட இப்பேர்ப்பட்ட பிள்ளை தனக்கு மாப்பிள்ளையாவது பெரிய பாக்யமென்று, ராஜ ஆக்ஞைக்காக இல்லாமல், மனப்பூர்வமாகவே கன்யாதானம் பண்ணிக் கொடுத்தார்.
...
எல்லாம் சுலபமாக முடிந்தது.
.
Chapter: சாக்ஷி கோபால்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 12, 2023

Sthala purana story of Sakshi Ganapathi: - சாக்ஷி கணபதி - ஸ்தலபுராண கதை (Srisailam)

Sakshi Ganapathi - Srisailam



( On Ganapathi's approval Lord shiva blesses the devotees. )

_______________________
சாக்ஷி கணபதி இருப்பது ஸ்ரீசைலத்தில். அந்த மஹா க்ஷேத்ரத்தில் ஜ்யோதிர்லிங்கமான மல்லிகார்ஜுன மஹாலிங்கம் உள்ள பிரதானமான ஆலயத்திலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தில், ஊர் எல்லையில், சாலை ஓரத்திலேயே அவர் இருக்கிறார்.
.
Glory of Srisailam
இப்போது ஸ்ரீசைலம் கோபுர வாசல் வரை ஸெளகர்யமாக பஸ், கார் போக வசதி ஏற்பட்டு விட்டது. இந்த நூற்றாண்டின் முதல் பாதி
வரையில் சரியான பாதை இல்லாமல் காடு, மலைகள் தாண்டி ரொம்பவும் சிரம சாத்தியமாகத் தான் ஸ்ரீசைல யாத்திரை பண்ண
வேண்டியிருந்தது.
.
இவ்வளவு ச்ரம ஸாத்தியமாகவே அடையக்கூடிய இடமாயிருப்பதால் அங்கே யாத்திரை செய்கிற பக்தர்களுக்கு மற்ற எந்த க்ஷேத்ரத்தையும்விட
அதிகமான இகபர ஸெளக்யங்களைத் தர வேண்டுமென்று பரமேச்வரன் உத்தேசம் பண்ணினார்.
.
Innocence of Lord Shiva
ஆனாலும் அவருடைய குணம் என்னவென்றால்… அவரை ‘ஆசுதோஷி’ என்பார்கள். அதாவது, எளிசாக ஒரு பக்தி பண்ணியே, அது
கபட பக்தியாகக் கூட இருக்கலாம். அப்படிப் பண்ணியே ரொம்ப சீக்கிரத்திலே அவரை ப்ரீதி பண்ணுவித்து எந்த வரத்தை வேண்டுமானாலும்
வாங்கிக் கொண்டு விடலாம். அம்ருத மதனம் பண்ணின போது க்ஷீர ஸாகரத்திலிருந்து ஐராவதமும், கல்பக வ்ருக்ஷமும் வந்தவுடன்
இந்திரன் அதுகளைத் தட்டிக்கொண்டு போய்விட்டான்.
.
காமதேநு வந்தவுடன் ப்ரம்ம ரிஷிகள் எடுத்துக் கொண்டார்கள்.
..
அப்புறம் வந்த கெளஸ்துபமும் மஹாலக்ஷ்மியும் மஹாவிஷ்ணுவிடம் போய்ச் சேர்ந்தது எல்லாருக்கும் தெரியும்.
..
அம்ருதத்தை அத்தனை தேவர்களும் எடுத்துக்கொண்டு சாப்பிட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் முதலில் பயங்கரமான
ஹாலாஹல விஷம் வந்ததே, அதை? அதை மட்டும், “அப்பா பரமேச்வரா, நீதாண்டாப்பா ரொம்ப நல்லவன், பரம உபகாரி. ஆனதினாலே இந்த விஷத்தை வெளியிலே விடாமல் நீயே உள்ளுக்குள்ளே வெச்சுக்கோ!” என்று அந்த ஆசுதோஷியிடம் போய்த்தான் அத்தனை தேவர்களும் குல்லாய் போட்டார்கள்.
..
அவரும் பரம ப்ரீதியுடன் அதைச் சாப்பிட்டார். எவனிடம் தஞ்சமென்று போய் அவனும் ரக்ஷித்தானோ அவனை அப்புறம்
உத்தம வஸ்துக்கள் வந்தபோது யாராவது நினைத்தார்களோ? அப்படியும் அந்தப் பரமேச்வரன் பொருட்படுத்தாமல் அநுக்ரஹம்
பண்ணிக் கொண்டுதான் இருந்தான்!
..
அப்பாக்காரர் ரொம்ப தாக்ஷிண்யமாகவோ அப்பாவியாகவோ இருந்தால் பிள்ளைதான் ‘முழித்துக் கொண்டு’ கறார் கண்டிப்புக் காட்ட வேண்டிய இடத்தில் அவரை ஞாபகப்படுத்தித் தட்டியெழுப்புவான். இப்போது பிள்ளையார் அப்படி ‘முழித்து’க் கொண்டார்.
.
‘மஹா சிரமப் பட்டே வரக்கூடிய ஸ்ரீசைல யாத்ரிகர்களுக்கு விசேஷ பலன் தருவது என்று தகப்பனார் இப்போது விதி பண்ணியிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டு விட்டால் மனஸ் இறங்கி அவர்களுக்கும் எக்ஸ்ட்ரா பலன்
கொடுத்து விடுவார்.
.
காசிதான் தன்னுடைய ராஜதானி, அங்கே மரணம் அடைகிறவர்களுக்கு எல்லாம் முக்தி என்று விதி பண்ணினவர் அப்புறம் காசிக்கு ஸமானம் என்று அநேக க்ஷேத்ரங்களையும், ‘காசிக்கும் வீச்ம் அதிகம் என்று கும்பகோணத்தையும் ஒப்புக் கொண்டவர்தானே? இந்த ஸ்ரீசைல விஷயத்திலும் அந்த மாதிரி ஆக விடப்படாது’ என்று பிள்ளையார் தீர்மானம் பண்ணிக் கொண்டார்.
.
Ganesha takes incharge of selecting the devotees
பிதாவிடம் போனார். “ஸ்ரீசைலம் போகிறவர்களுக்கு மட்டுமே நீங்கள் தருவதாக இருக்கும் பலன்களை வேறே யாருக்கும் தரக் கூடாது. அங்கே யார் யார் வருகிறார்களென்று நான் பார்த்து ஸாக்ஷி சொல்கிறேனோ அவர்களுக்குத்தான் அந்த எக்ஸ்ட்ரா நன்மைகளைக் கொடுக்கணும். உங்களுக்குக் கருணை ஸ்வபாவம்.” (நீங்கள் ஈஸியாக ஏமாந்து போய் விடுவீர்கள்” என்று எப்படி ஒரு பிள்ளை அப்பாவிடம் சொல்ல முடியும்?)
.
“அதனால் பொய்யாகக் கூட யாராவது ஸ்ரீசைல யாத்ரை பண்ணினதாகச் சொல்லி வரத்தைத்
தட்டிக் கொள்ள முடியும். அப்படி ஆகாமல் ஊர் எல்லையிலேயே நான் ஸாக்ஷி கணபதியாக உட்கார்ந்து கொண்டு நிஜமாகவே யார்
வருகிறார்களோ அவர்கள் ஊர், பேர், அங்கே வந்த தேதி எல்லாவற்றையும் எழுதி வைத்துக் கொண்டு உங்களுக்குக் காட்டுகிறேன்.
அவர்களுக்கே ஸ்பெஷல் அநுக்ரஹத்தைப் பண்ணுங்கள்” என்று சொன்னார்.
.
”அப்படியே!” என்று ஸ்வாமியும் ஒப்புக் கொண்டார்.
.
ஸ்ரீசைல எல்லையில் அந்த ஸாக்ஷி கணபதி, ‘ஸாக்ஷி கணபதி’ என்றே பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறார். இன்றைக்கும் சிலா மூர்த்தமாக இருக்கிறார். நல்ல கம்பீரமான மூர்த்தம். பாங்காக ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் ஒரு காலை மடித்துக்கொண்டும் உட்கார்ந்திருப்பார்.
.
மேல் இரண்டு ஹஸ்தங்களில் எல்லாப் பிள்ளையார்களையும் போலப் பாசாங்குசம் வைத்துக் கொண்டிருப்பார். கீழ் ஹஸ்தம் இரண்டிலும்தான் அபூர்வமான மாறுபாடு: “இவர் ஸாக்ஷி கணபதி” என்று ஸாக்ஷி சொல்கிற மாதிரி, வேறெங்கேயுமில்லாத புதுமையாகச் சுவடியும் எழுத்தாணியும் அந்த இரண்டு கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
.
நிஜமான ஸ்ரீசைல யாத்ரிகர்களின் பேர், ஊர், அவர்கள் யாத்ரை பண்ணின காலம் முதலியவற்றைக் குறித்துக் கொள்வதற்குத்தான் ஏடும் எழுத்தாணியும்.
.
“பூணலைப் பிடிச்சுண்டு ஸத்ய ஸாக்ஷி சொல்றேன்” என்பது வழக்கம். இந்த ஸாக்ஷி கணபதி மூர்த்தத்தில் அந்தப் பூணூல் வரி வரியாக எடுப்பாகத் தெரியும். கணபதியின் ஆனந்த நிறைவைக் காட்டும் தொந்தியைக் கட்டியிருக்கிற ஸர்ப்ப உதர பந்தமும் ஸ்பஷ்டமாக இருக்கும்.
.
Lord Ganesha records the details of the visitors
யாத்ரையை யதோக்தமாக முடித்துவிட்டு நாம் புறப்படும்போது கடைசியில் எல்லையில் அவரிடம் போய்ச் சொல்லிக் கொள்ள வேண்டும்.
நாம் இன்னார் முதலிய ‘டீடெய்ல்’களை அவரிடம் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவர் தாம் வைத்திருக்கும் பேரேட்டில் அதைப் பதிவு பண்ணிக் கொண்டு, அப்புறம் பிதாவிடம் சொல்லி, “நான் ஸாக்ஷி! அவர்கள் வந்தது வாஸ்தவந்தான்” என்று நமக்காகப் பரம க்ருபையோடு ‘காரண்டி’ கொடுத்து யதேஷ்டமாக ஈச்வர ப்ரஸாதத்தை வாங்கிக் கொடுப்பார்.
.
Chapter: ஸாக்ஷி கணபதி
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)