May 28, 2019

குங்கிலியக்கலய நாயனார்





மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்த பெருமான் திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரராக வீற்றிருக்கிறார். பெருமைவாய்ந்த திருக்கடவூர் திருத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார் குங்கிலியக்கலய நாயனார். திருக்கடவூரில் பிறந்து அங்கு குடிகொண்டுள்ள அமிர்தகடேஸ்வரருக்கு தூபம் இடுவதை தன் திருப்பணி என நினைத்து நாள் தவறாமல் செய்து வந்தார்.
.
வறுமை தோன்றிய பொழுதிலும் தமது அன்றாட ஆடம்பரங்களையும் செலவுகளையும் குறைத்தாலும் குங்கிலியம் இடுவதை தவறாமல் ஆற்றினார். வறுமையின் காரணமாக சில நாட்கள் மக்களும் மனைவியும் உணவின்றி வாடும் நிலைமைக்கு ஆளானார்கள். பொற்தாலியை விற்றுப் பணம் பண்ணி நெல் வாங்கி வரும்படி மனைவி பணித்தமையால் அதை விற்க கொண்டு சென்றார். வழியெங்கும் குங்கிலியம் இடுவதற்கு இனி பணத்திற்கென்ன வழி என்று யோசித்து வருந்தியபடியே சென்றவருக்கு, குங்கிலியப் பொதி விற்றுக்கொண்டு வரும் வணிகன் கண்ணில் தென்பட தாங்கொணா இன்பம் அடைந்து பொற்தாலிக்கு குங்கியம் வாங்கி வந்தவராய், உடன் இறைவனுக்கு குங்கிலியம் ஏற்றி தமை மறந்து சிவனாரையே சிந்தித்தபடி கோவிலில் தங்கிவிட்டார்.
.
வாடிய மனைவி மக்கள் , வயிறு ஒட்டியும் பட்டினியால் மனம் வாடியும் அழுத கண்ணீரோட உறங்கிவிட, கருணை ததும்ப மனைவியின் கனவிலும் தோன்றிய ஈசன், பொன்னும் மணியும் நெல்லும் பல செல்வங்களும் நிறைத்து அருளினோம் என்று கூறி மறைந்தார். உறக்கம் கலைந்த மனைவி இல்லம் முழுதும் வளங்களால் நிரம்பியிருக்க கண்டு இறைவனின் கருணை எண்ணி கண்ணீர் சொறிந்தாள். "பசியுடன் இருக்கும் நீ உன் மனை சென்று பால் சோறு உண்டு பசி நீங்கப்பெருவாய்" என்று குங்கலிய நாயனாருக்கு உமையொருபாகன் உரைத்து அருளினான். இல்லம் வந்த நாயனார் இறைவனின் எல்லையில்லா அன்பை எண்ணி கைகூப்பி தொழுதார்.
.
செல்வத்தைக் கொண்டு தம்பதிகள் இருவரும், சிவபணிகள் இன்புற செய்து கொண்டும் அடியார்களுக்கு இன்னமுதளித்தும் நல்வாழ்வு வாழ்ந்திருந்தனர்.
.
இவ்வாறு இருக்கும் வேளையில், திருப்பனந்தாளில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானின் லிங்கத்திருமேனி, முன்பொரு சமயம் தாடகை என்ற பெண்ணொருத்தியின் மாலையை சுவீகரிக்கும் பொருட்டு சாய்ந்து இடம் கொடுத்திருந்தது. அந்த நிகழ்வுக்கு பின்னர் லிங்கமானது சாய்ந்தே இருந்தது. லிங்கத்தை நிமிர்த்த பெரும் சேனைகொண்டு முயன்றும் சோழ மன்னன் தோல்வியுற்றான். அரசனின் வருத்தம் தெரிந்த குங்கிலிய நாயனார்,
உடன் புறப்பட்டு திருப்பனந்தாளில் தனது நாதனை நேராக்கும் பொருட்டு, பெரிய கயிற்றினை தம் கழுத்தில் பூட்டிக்கொண்டு இழுத்து தம் மென்-மேனியை வருத்திக் கொள்ளலானார். பக்தர் மேனி வருத்துவதை காணப் பொருக்காத ஈசன் தாமே இளகி நேர் நின்று அருளினார். இப்பேற்பட்ட அரிய பக்தியையும் பரமனின் கருணையும் கண்ணாரக் கண்ட தேவர்களும் பூமழை தூவினர்.
.
சில காலம் திருப்பனந்தாளில் இறைவனுக்கு சேவை செய்த நாயனார், பின்னர் திருக்கடவூர் சென்றார். பின்பொரு முறை ஞானசம்பந்தர் பெருமானுக்கும் நாவுக்கரசருக்கும் தமது இல்லத்தில் திருவமுதளித்து அவர்களின் பேரருளுக்கும் ஈசனின் கருணைக்கும் பாத்திரமானார். பலகாலம் சிறப்புற வாழ்ந்து இறுதியில் சிவபதமடைந்து பேரின்ப வாழவை கிடைக்கபெற்று இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய 

No comments:

Post a Comment