March 26, 2019

கண்ணப்பர்

Image result for கண்ணப்பர்


வேடுவர் குலத்தில் பிறந்து சிறந்த வில்லாளனாக திகழ்ந்த இவரது இயற்பெயர் திண்ணன்.
நண்பர்களுடன் வேட்டையாட சென்றவருக்கு பூர்வ வினையால், அடர் காட்டின் நடுவே சிறிய சிவன் கோவில் இருப்பதை காண நேர்ந்தது. ஊழ்வினை கரைய, கண்ட க்ஷணத்தில் சிவன் மேல் காதல் கொண்டார் திண்ணன். தன்னிடமிருந்த எதையானும் அர்பணிக்கும் தணியாத் தாகம் அவரை ஆட்கொண்டது. வேட்டையாடிய மாமிசத்தையே படைத்து வணங்கிச் சென்றார். சிவனைக் காண மறு நாளும் ஆவல் எழுந்தது. இம்முறை நிறைய மாமிசம் கொண்டு, சென்று ஆசை தீர பேசி விட்டு வந்தார். ஈசனின் லிங்கத் திருமேனி அழுக்காகி பரமரிப்பின்றி இருப்பதை உணர்ந்து, தன்னிடம் பாத்திரங்கள் ஏதும் இல்லாததால் வாயினால் நீர் கொணர்ந்து, இறைவனின் திருமேனியில் உமிழ்ந்து, தனது பக்தியை வெளிப்படுத்த, அதுவே திருமஞ்சனம் என இறைவன் ஏற்றார். கூடைகள் இல்லாததால் மலரை தன் தன் தலையில் சேகரித்து அதையே இறைவனுக்கு பூசித்தார்.


அக்கோவிலை அந்தணர் ஒருவர் பராமரித்து வந்தார். கண்ணப்பர் சென்ற பிறகு அந்தணர் வருவதும், இறைவனின் கோலத்தைக் கண்டு தாங்கொணா துயர் அடைந்து மறுபடி சுத்தம் செய்து பூஜிப்பதுமாக நாட்கள் சென்றன. இப்படி ஒரு அவச்செயலை செய்வது யார் என்று துக்கம் மேலிட முறையிட்டவருக்கு, உமாபதி, தனது பக்தனின் மேன்மையை மறைந்திருந்து காணப் பணித்தார்.


மறு நாள் கண்ணப்பர் வந்த போது சிவலிங்கத்திலிருந்து ஒரு கண்ணில் குருதி பெருக்கேடுத்தது. பச்சிலை வைத்தியம் செய்தும் பயனின்றி போகவே சற்றும் தயங்காமல் தனது கண்ணை அம்பினால் பெயர்த்தெடுத்து சிவனுக்கு பொருத்தினார். இரத்தம் வருவது நின்றது. ஆனால் அது க்ஷண நேர திருப்தி. உடன் மற்றொரு கண்ணில் குருதி வழிந்தது. இம்முறை நாயனார் தனது காலை லிங்கத்தின் குருதி வழியும் கண்ணின் மேல் வைத்து அடையாளப்படுத்தி, தனது இன்னொரு கண்ணையும் பெயர்த்தெடுக்கும் வேளையில் "நில் கண்ணப்ப" என்று மும்முறை கூறி தடுத்தாட்கொண்டார் இறைவன். இழந்த பார்வையை அருளியவரிடம் தன்னையே அர்பணித்து பக்தியில் சிறந்து விளங்கினார். கண்ணப்பர் என்ற பெயர் காரணம் சொல்லாமலே விளங்கும்.

ஓம் நமச்சிவாய

2 comments:

  1. கதைகள் நல்லதே போதிக்கின்றன ஆனால் நாம்மட்டும் அதைகதையாகத்தான் கொள்வோம்

    ReplyDelete
  2. வாருங்கள் சார். கதைகள் போதிப்பதை அவ்வப்பொழுது சிந்தித்தாலே போதுமே சார்.

    ReplyDelete