January 20, 2021

பெரியது எது

 


பொம்மைகள்,
குச்சிமிட்டாய்,
பெப்பர்மின்ட்,
சின்னச் சின்னக் கனவுகளை
இறுக்கமாகப் பிடித்திருந்த
பிஞ்சுக் கைகளை
வலிக்க வலிக்க விரித்ததில்,
ஒவ்வொன்றாய் சரிந்தது.
பொம்மைக் கனவுகள் வீழ்ந்து போனது....
சும்மா இருக்கும் சுதந்திரக் கைகளில்,
பெரிய குறிக்கோள்
பெரிய கனவுகள் பெரிய இலக்குகள்
எல்லாமே உயர்ந்ததாய் பெரியதாய்
பட்டியலிட்டு படாடோபமாக ஏறிக்கொண்டன.
அவை கூட ஒரு நாள் வீழுந்து போகுமோ!
அல்லது நிலையில்லாதொரு சுழற்சியில்
வீழ்ந்தும் எழுந்தும்...
வீழ்ந்தும் எழுந்தும்
மீண்டும் மீண்டும்..
...மீண்டும் மீண்டும்...

கண் கெட்ட பின்னே....

 


ஈடு செய்ய முடியாத இழப்பு...
ஏடு சொல்லித் தராத பாடம்.
மூடனாய் மயங்கிய மனமும்,
கேடு வரும் என்று தெரிந்தே
ஓடிய குணமும்,
மேடும் பள்ளமும் சூழும் பாதையில்
தேடிய சுகமும், சுவையும்,
ஆடி அடங்கிய பின்பு
வாடி நிற்பதென்ன! பின்
கூடிக் கூத்தாடும் கூட்டத்தை
சாடி உமிழ்வதென்ன!

Clueless

 


Maze of unanswerd questions..
assumptions, evaluations..
clogging my muddled mind
.
Was I mistaken?
or Were you?
What went wrong?
Was anything ever right at all?
.
searching the answers
amidst polluted surroundings..
biased opinions...
.
I may never find the answer,
Questions never cease to exist.
.
Paranoid of future
I lay,
closed in a dark cubicle,
depressed and lifeless..
to be lit by a ray of hope!
.
To be cherished,
kissed..
To shine like a queen
in the kingdom of praise.
.
In a fantasy world
I live, laugh, and
exhaust my existence...
In delusions
I mingle, merge and collapse.
.
Thoughts dwindling as pointless nothing
to become pointless nothing...

எங்கள் நடிகர் திலகம் - சிவாஜிகணேசன்

 


எளிய சொற்கள் கிறுக்கி வைக்கும்
குறையறிவுள்ளப் பேதை நான்
வலிய சொல்லும் தலைவணங்கி ஏற்கும்
சொல்வளம் செழிக்கும் மேதை நீ
*
ஏட்டில் வடிக்காத எண்ணங்களையும்
கண்களால் தீட்டிய கலைஞனே! - உனை
கவிதையாக்கத் துணிந்து - பின்
காவியம் அன்றோ நீ என உணர்ந்து,
சொல்லில் சிக்காமல் நழுவும் உன்
சாமர்த்தியத்தையும் சேர்த்தே ரசிக்கிறேன்.
*
இறைவன் அளித்த வரமோ!
கலையுலக நிலவோ! சிகரமோ!
உன் திறமைக்கு உவமை சேர்க்க மறந்து
செந்தமிழ் மொழியும் மௌனம் கொண்டதோ!
*
கள்வன், கணவன், காதலன்,
கொற்றவன், பெற்றவன், மற்றவன்,
நல்லவன், சற்றே பொல்லாதவன்,
தலைவன் அவன் போற்றும் இறைவன்,
இறைவன் அவன் தேடும் தொண்டன்.
இன்னும் எண்ணற்ற முறை பிறந்தாய்..
வீழ்ந்தும் எம் நெஞ்சத்தில் நிறைந்தாய்.
கணேசன் என்பதை மறந்து
சிவாஜியென உனை செதுக்கிக் கொண்டாய்.
நடையும், அதைத் தாங்கும் உடையும்,
சிரிப்பும் பொல்லாத கண்-விரிப்பும்
துடிப்பும் கம்பீர உச்சரிப்பும்
பல கோடி நெஞ்சங்களில் நின்று வாழும்.
உன் இமாலய வெற்றியின் பெயர் கூறும்.
.



மற்றே நம் காமங்கள் மாற்றேலொரெம்பாவாய்

 



ஏறிவிட்டதாக இறுமாந்திருக்கும் போது
எங்கோ பிறழ்கிறேன்
சற்றே நெகிழ்கிறேன்
இறக்கைகள் முளைக்க - என்
இதயம் இழக்கிறேன்
.
கால்கள் தடுமாற
கைகள் நடுங்க
பிடி தளர்கிறேன்
கீழே கீழே கீழே
விழுந்து கொண்டே....
.
பரந்தாமா!
என் பிடி தளர்ந்தாலும்
நீ எனை இறுகப் பற்று.
புத்திகெட்டு மயக்கத்தில்
நான் உனைவிட்டு அகன்றாலும்
சட்டென தூர விலகாதே
சற்றும் எனை விலக்காதே

விரயம்




நீ பகிர்ந்த முகவரியை
உதறித் தள்ளினாலும்
உனது முக வரிகள்
அனுமதியின்றி
அத்துமீறி நுழைந்து
எனது அகமெங்கும்
தமை எழுதிக் கொண்டன
.

தொலைத்த
முகவரி வேண்டியே
எங்கும் அலைகிறேன்
நீ சுமந்த
முக வரிகளின்
தடயங்கள் தேடுகிறேன்
என் முக வரி
மண்ணில் புதைவதற்குள்...
குரல் கொடு!
-


January 19, 2021

என் காதலே! என் காதலே!

 




ஏ மேகமே!
நீ நீர் சுமப்பதைப் போல்
நான் கண்ணீர் சுமக்கிறேன். 
எனைத் தீண்டாதே!
.
ஏ மேகமே 
நீ பூச்சொரிந்தாலும் - என்
தேகத்தின் தாகம் தணியாது
.
சென்று வா மேகமே
எனை அழ விடாதே
சென்று வா மேகமே
உன் உறவு கசக்கிறது
.
நான்கு முறை கூறியும்
நகராத மேகம் நீ
மின்னலென கண்சிமிட்டி
இடியெனச் சிரித்தாய்
.
ஆதவனின் கருணை வேண்டி
மாதவனை தூதனுப்ப
"உனை சுட்டெரிக்கிறேன் பார்"
"உனை விழுங்கிவிடுகிறேன் வா"
என்றே வெற்றிக் கீற்றாக
பகலவன் உனை நெருங்கினான்..
நீயும் நொறுங்கினாய். 
*
சடுதியில்
மறைந்த உனை நினைத்து - ஆனந்த
மிகுதியில் திளைத்தேன்
*
வெட்கம்கெட்டவனே!
நீயோ என்அழகில் மயங்கி 
வானவில்லை பரிசளித்து 
நட்புக்கரம் நீட்டினாய்.
*
அறிவற்று நானும்
உன் மேன்மையில் மனங்குளிர்ந்து
நாளை மீண்டு(ம்) வருவதற்கு
சம்மதித்தேன்.
நம் காதல் இனி தொடரும்..

வேடதாரிகள்

 


எனக்கு நகை பிடிக்கும்
உன் நகை பிடிக்கும்
'பொன்னே' உன் நகை பிடிக்கும்
சிரித்தாய்..
.
எனக்கு நகைச்சுவை பிடிக்கும்
'பொன்னே' உன் நகையின் சுவை பிடிக்கும்
நீ அணிந்த நகையை சுவைத்தேன்
கிறங்கினாய்..
.
எனக்கு களவு பிடிக்கும்
'பொன்னே' உன்னை களவாடப் பிடிக்கும்
எனக்கு அழைப்பு விடுத்தாய்
உன்னையே களவு தருகிறேன் என்றாய்
விடியல் ஓலமாய் கேட்டது....
.
"ஐய்யோ பொன்னு.....உன் நகையெல்லாம்
களவு போச்சே...."

காக்கையின் பேரெழில்

 


ஒருவாய் சோற்றை
பெருவிருந்தெனவே போற்றி
சுற்றம் கூட்டி; பாட்டுப் பாடி,
ஊரறிய உரக்கக் கூவி,,
வானிலாடி வாழ்த்துபாடும்,,
கருங்காகத்தைப் போன்ற கருணை 
எவரும் கொண்டதுண்டோ சொல்!
அதன் பேரெழிலைப் போல
எங்கும் கண்டதுண்டோ சொல்! 

துவளாதே



மலரே முள்ளாகி மடியாதே
மனம் வெறுத்து
மரணத்தைத் தழுவாதே
மனப்பொருத்தமில்லா 
(திரு)மணப்பொருத்தம் என
துவண்டே தோல்வியைத் தழுவாதே
.
விண்ணை எட்டிப் பிடி - பிறர்
வியப்புற சாதனை புரி - நீயும் 
உன்னை வெற்றி கண்டே - உன் 
வாழ்வின் அர்த்தம் படி.
பொறுமையே ஆடையென்றறி- என்றும்
பெருமை நின்றிடும் சிரி. 

ஐஸ்க்ரீம்



தேனாக உருகி
தொண்டைக்குள்  இறங்கி
தகிக்கும் வெயிலை
தணிக்கும் பாவையே
.
பதமாகப் பாலோடு
சர்க்கரையுந்தான் சேர்த்து
பனியாக்கிக் குழைத்து
கனிகளுடன் சுவைத்திடவே
.
பனித்தேகம் தனைத்தொட்டு
பக்குவமாய் உண்டபின்னே - உன்
வெளிர் முகமே எனது இரு
விழி தன்னில் ஆடுதடி..
.
பகலென்ன இரவென்ன
பாவை நீ இருந்திட்டால்
இடமென்ன பொருளென்ன
தாவி உனை முத்தமிட
.
உயிரோடு உயிராகி
உணர்விலே பூ பூத்து
பல நூறு ஆண்டுகளே
புவி தன்னில் போயிடினும்
.
பிற ஒன்றை நினையாமல்
பத்தினியாய் காத்திருப்பேன் - நின்
பட்டுமேனி தொட்டிடவே
தவமானத் தவமிருப்பேன்