நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் )
*************
.
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
நான் பிறந்த வீடு - அதன்
சின்னஞ்சிறு சாளரத்தின் வழியே
பகலவன் எட்டிப் பார்க்கும்
பரபரப்பான காலைப்பொழுது...
இம்மியும் நேரம்பிசகி - கதிரவன்
உதித்ததுமில்லை, மறைந்ததுமில்லை;
இப்பொழுதென்னவோ
இரவின் இறுக்கத்தில்
இறுதி மூச்சை முடித்துவிடவே
இறைஞ்சுகிறேன்.
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
சிவப்பும் வெளுப்புமான
ரோஜாக்கள், ஊதாப்பூக்கள், லில்லி மலர்கள்;
வெளிச்சத்தால் செதுக்கப்பட்ட வண்ண மலர்களவை..
இளஞ்சிவப்பு மலர்ப்புதரில் ஒளிந்திருக்கும்
சிட்டுக்குருவிக் கூடுகள்;.
தனது பிறந்ததினத்தில் தமையன் ஊன்றிய
தங்கக் கொன்றையும்..
தழைத்தோங்கி மரமாகி
மண்ணை நேசிக்கிறது..
இன்றோ கொன்றை மட்டுமே
நின்று சுவாசிகிறது!
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
ஊஞ்சல் பழகிய இடங்கள்
தாவும் இளங்காற்றை விழுங்கி,
இறக்கைகளை விரித்து,
ஜிவ்வென விண்ணில் சிறகடித்திருந்த உணர்வுகளோ
இப்போது பாரமாகித் தளர்ந்திருக்கிறது.
என் நெற்றிக்காய்ச்சலை
கோடைகாலத்துக் வாவிகளெதுவும்
குளிர்விப்பதில்லை!
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
அடர்ந்துயர்ந்த ஊசியிலை மரங்கள்;
அதன் மெல்லிய நுனி
வானை எட்டியதென்றே கற்பித்திருந்த
அறியாமைக் களிப்பு அகன்றதும்
பாலகனாக கைப்பற்றிய சுவர்க்கத்திலிருந்து
பல காததூரம் விலகியிருக்கிறேன்!
***
மூலம்: I remember, I remebmber - Thomas Hood
மொழியாக்கம்: ஷக்திப்ரபா
No comments:
Post a Comment