December 19, 2020

திருப்பாவை பாசுரம் 2 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

பாவை நோன்பு


Pic Source: Internet ;; Rangoli credit : Suganthi Ravi





வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறுகச்சிறுக சேமித்து உழைப்பிலே உயர்ந்த வீடு. வாயை கட்டுவது என்பது கண்டதை தின்னாதிருத்தல், தேவையற்றதை பேசாதிருத்தல், இப்படிச் செய்தால், வயிறும் கட்டுபடும். உண்பது செரிக்கும். பண விரயம் தவிர்க்கப்படும். சேமித்த பணத்தைக் கொண்டு நமக்கென்ற தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். நிலையற்ற செல்வத்தை நிலைக்கச் செய்ய இவ்வளவு கட்ட வேண்டியிருக்கிறது. சேமிக்க வேண்டும். கவனமாக செலவு செய்ய வேண்டும். அத்தியாவசியங்களைத் தவிர அனாவசியங்களை தவிர்க்க வேண்டும்.
.
நிலையான அந்த எம்பெருமானை சேவிப்பதென்பது எளிதா? பெருவீடு என்பது எளிதா? எளிது தான். நோன்பு இருப்பவர்களுக்கு. எப்படிப்பட்ட நோன்பு?
.
பாமரனாக நலிந்திருக்கும் நம் மேல் கருணைக் கொண்டு, தானே குருவாகி நோன்புக் கிரியைகளை அறிவுறுத்துகிறாள் ஆண்டாள். பாலும் நெய்யும் புஷ்டி சேர்ப்பவை. வளமானவை. செழித்தவைகளையும் பிடித்தவைகளையும் துறக்க வேண்டும். சோறு உண்ணாதே எனச் சொல்லவில்லை. Rich food எனப்படுபவைகளை தவிர்க்க சொல்கிறது நோன்பு. அத்தியாவசியங்களைச் செய். அனாவசியங்களைத் தவிர்த்து விடு. விடியற்காலை குளிர் நீராடு, தூய ஆடையை நேர்த்தியாக உடுத்து. ஆனால் கண்ணுக்கு மையிட்டு எழுதவேண்டிய அவசியமில்லை, மலரிட்டு முடிந்து அலங்கரித்துக் கொள்ளுதலை தள்ளிப் போடு. அலங்காரங்கள் அவசியமில்லை. ( அலங்காரங்கள் என்பது புலன்களுக்கு தேவைப்படும் இன்பங்கள் என்று உணர்ந்து கொள்ளலாம் ) இப்படி இருந்தால் அகத்தூய்மையுடன் புறத்தூய்மையும் சித்திக்கும். தேவையானவற்றை மட்டுமே செய்வதால், ஐம்புலன்களின் ஓட்டமும் சிதறலும் தவிர்க்கப்படும். இப்போழுது ஒரே நோக்கம் தான். அவனை நினைக்க வேண்டிய பரிபூரண கவனம், பக்தி.
.
செய்ய வேண்டியவற்றை செய்யவதும், செய்யக் கூடாது என்று பெரியோர்கள் தடுப்பவற்றை செய்யாதிருக்கவும் வேண்டும். தீய பேச்சை தவிர்க்க வேண்டும். எளிய முறையில் உணவாக்கி இல்லாதவர்க்கு பகிர்ந்து, இவ்வாறாக நாம் சிறந்த நோன்பிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் விரும்பிச் செய்து, பரந்தாமன் அடி பற்றும் எண்ணமும் வலுப்பெற்றால், சித்தமும் சுத்தமாகி நோன்புக்கு தயாராகி விடும்.
.
எப்பொழுதெல்லாம் செய்வது? முப்பொழுதும். எப்பொழுதும்.

No comments:

Post a Comment