December 19, 2020

திருப்பாவை பாசுரம் 1 ( பாசுரத்தில் தேடிய முத்து )

பறைதரும் பரந்தாமன்

Picture Source: Internet ;;; Rangoli Credit : Suganthi Ravi







பாசுரங்கள், பக்திக்கதைகள், அவதார நிகழ்வுகள் முதலியவை, மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாலும் கேட்கப்படுவதாலும் ஆழ்மனப் பதிவுகள் சீராகின்றன.

.
நாராயணன் பறை தருகிறான். பறை எனும் சொல்லுக்கு பலவிதமாகப் பொருள் சொல்லப்படுகிறது. பரிசு, சன்மானம், வாக்கு, அருள், வலிமை என நீள்கிறது.
.
பொக்கிஷமான ஏதோ ஒன்றை அவன் நமக்குத் தருகிறான் என்று புரிந்து கொள்வோம். நமக்குப் பொக்கிஷமானது, நம்மிடம் இல்லாதது, அவனிடம் மட்டுமே இருப்பது, ஞானமும், தெளிவும், பக்தியும் இன்னபிறவும். இவை தான் சன்மானங்கள். இவை தருவதாக அவன் வாக்குக் கொடுக்கிறான், அனுகிரகம் புரிகிறான்.
.
பாவை நோன்பு நோற்கும் கன்னியர்க்கு விரும்பியது கிட்டும். பிடித்த துணை அமையும். இவன் இதையெல்லாம் செய்வான். கூடவே உங்களுக்கு புரியாததும், தெரியாததும் கூட வழங்கப் பெறுவீர்கள் என்று மறைபொருளாக உணர்த்துகிறாள். இகலோக விருப்பங்கள் நிறைவேறும் என்று வாக்களித்து, நம் கவனத்தைத் பக்தியின் பக்கம் நிலைக்கச் செய்து பின் பரலோக பிராப்திக்கும் இட்டுச் செல்கிறாள்.
.
Sugar coated pills என்று சொல்வதுண்டு. மாத்திரை கசக்கும். புறத்தில் இனிக்கும். ஆனால் இங்கோ அருளப்படும் லௌகீக ஆசைகளே கசப்பு, உள்ளிருக்கும் பரமாத்ம அனுபவம் இனிப்பு. அதனை நாம்தான் இன்னும் உணரவில்லை.
.
இதுவெல்லாம் வேண்டுமா? அப்படியென்றால் பாரோர் புகழும் வண்ணம் சிறப்பாக, சீரான நெறிமுறைகளைப் பின்பற்றி அவனையே பணி. அவனைப் புகழ்வதால் உனக்குப் புகழ். அவனைப் புகழ்பவரோடு இணைவதால் நீ மேன்மை பெறுகிறாய்.
.
புகழ். அழகான சொல். அனைவருக்குமே போதையூட்டுவது. ஆனால் இங்கு குறிப்பிடப்படும் புகழ் போதை தருவதல்ல. ஆரவாரமான புகழ் அல்ல. லௌகீகமான புகழ் அல்ல. இது பெரும்புகழ். நீள்புகழ். சிறப்பானதும், நிரந்தரமானதுமான தெளிந்த அமைதியான புகழ். அப்படிப்பட்ட புகழை யார் தான் வேண்டார்! எப்படிக் கிடைக்கும் அந்தப் புகழ்? நாராயணனே கதி என்று பக்தி செய்தால் அவன் நமக்கு பறை தருவதால் நமக்கு வந்து சேரும் நீங்காப் புகழ்.

***

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.***

***

.

No comments:

Post a Comment