December 26, 2020

திருப்பாவை பாசுரம் 9 - (பாசுரத்தில் தேடிய முத்து )

ஏமப் பெருந்துயிலில் மந்திரப்பட்டோமே


Picture Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi





வளங்கள் நிறையப் பெற்ற மாளிகை. அதில் வளர்ந்த செல்லச் சிறுமி. மணிமாடத்து சுற்றத்தில் விளக்கு எரிகிறது. நறுமணப்புகை நாசியைத் துளைக்கிறது. இனிய வாழ்வு அள்ளித் தந்த கிறக்கத்தில் மேலும் உறக்க்திற்கு ஆட்படுகிறாள்.
.
இன்பம் பெருகப் பெருக, அது தரும் மாயையில் கட்டுண்டு கிடப்பதும், ஜனனமெடுத்த நோக்கத்தை மறந்தே போவதும் நிகழ்வது தானே!
.
மாமன் மகளே! மணிமாடத்து செல்வ மாளிகையின் மணிக்கதவை திறவாயோ! அடடா! பெரியவர்கள் பக்கத்திலிருந்தும் ஏன் உறங்குகிறாள் ? பெரியவர்களே நல்ல புத்திமதிகள் சொல்லி அவளை எழுப்ப மாட்டீர்களா! நற்பாதையைக் காண்பிப்பது பெரியோரின் கடமை. மாமி அவளை எழுப்பு.
.
அவள் ஊமையா? இவ்வளவு கேள்வி கேட்கிறோம். பதில் சொல்ல மறுக்கிறாளே! இல்லை செவிடாக இருக்கும். செப்பிய எதுவும் செவிக்கெட்டவில்லை. ஒருவேளை சோம்பலுக்கு உட்பட்டாளோ! மந்திரத்தால் கட்டுண்டது போல் மயக்கத்தில் சிறையுண்டிருக்கிறாளே! மாதவனே வைகுந்தனே என்றவன் நாமங்களைச் சொல்லி உய்யவேண்டுமென்று உணர்வாளோ! அவளை எழுப்புங்களேன்!
.
எழுவது நமக்குத் தான் சிறப்பு. நாமாகவே எழ முயல்வது அரிது. நாச்சியாரே கருணை கொண்டு எழுப்பும் போது உறக்கத்திலிருந்து விடுபடுவது கூட எளிதாகிறது. இனியதாகிறது. எழுவோம்.
.
*****
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
*******

No comments:

Post a Comment