December 30, 2020

திருப்பாவை பாசுரம் 15 - பாசுரத்தில் தெடிய முத்து

பக்தர்களுடன் இணைவோம்


Rangoli Credit : Suganthi Ravi :: Photography source: Internet







பகவானுக்கே பணி செய்து கிடக்க நமக்கு தாகமிருக்கிறது. ஆனாலும் லோகத்து இச்சை விடவில்லையே! இங்கே இந்தப் பெண்ணைப் பாருங்களேன்! அனைத்து தோழியரும் திரண்டு வந்து எழுப்புகின்றனர். அவள் ஒன்றும் ஆழ்ந்து உறங்கவில்லை. ஆழ்நிலைத் தூக்கத்திலிருந்து விழித்து விட்டவள். உறக்கம் தெளிந்தாலும் மயக்கம் தெளியவில்லையே!
.
கிழக்கும் வெளுக்கத் துவங்கி விட்டது. பாவை நோன்பு நோற்கும் எல்லா ஆயர்ப் பெண்களும் திரண்டு வந்துவிட்ட நிலையில், மயக்கம் தெளியாத நிலையில் இருக்கும் இந்தத் தோழி ஒரு வாயாடிப் பெண். கோபியர் பாடும் தேமதுரப் பாசுரமும், இதமாக உறங்கிக் கிடந்த செவிக்கு, பளீரென்ற கூச்சலாக செவிப்பறையில் தெறிக்கிறது. மார்கழிப் பனியைப் போல சில்லென்று ஊடுருவுகிறது.
.
அடடா! சில்லென்று அழைக்காதீர்கள். இதோ வருகிறேன், என்று சற்றே படபடப்புடன் கூடிய துடுக்குத்தனமான பதில். வாயாடிப் பெண்! இப்பெண் எழுந்தும் விட்டாள், நன்று பதிலளிக்கிறாள். புறப்படுவதைத் தான் தள்ளிப் போடுகிறாள்.
.
உன் துடுக்குத் தனத்தையும் நீ கூறும் சாக்குப் போக்குக் கதைகளையும் நாங்கள் அறிவோம். அவர்கள் வம்பிழுக்க, நீங்கள் தான் வாய்ச்சொல் வலிமையுடையவர்கள். எனக்கென்ன, பெசவே தெரியாது எனப் பேச்சை நீட்டுகிறாள்.
.
இன்னும் வேளை வரவில்லை சிலருக்கு. இவளுக்கும் அப்படியே, தட்டிக் கழிக்கிறாள். சோம்பலால் தள்ளிப் போடுகிறாள். நேரமாகிறதே, சீக்கிரம் வா என்று உற்சாகப் படுத்தும் பக்தர்கள். எல்லாரும் வந்தாகிவிட்டதா என்ற எதிர்வினா விடுக்கிறாள். ஆம் நீயே வந்து கணக்கெடுத்துக் கொள்ளேன்! உனைத் தவிர உலகமே இங்கு இருக்கிறது, நீ ஒருத்தி தான் இன்னும் வராமல் அடம் பிடிக்கிறாய்!
.
வலிமை மிகுந்த குவலயாபீடம் எனும் யானையை வென்றவனை, பகைவர்களை அழிக்க அற்புத லீலைகள் புரியும் மாயவனை, மாதவனைப் பாடுவதே உன் வேலையாக இருக்க வேண்டும். வேறென்ன வேலையுனக்கு! புறப்பட்டு வா. அவள் அடம்பிடிப்பது இனி செல்லுபடி ஆகாது.
.
கோதை நாச்சியார் முதலில் ஆழ்ந்து தூங்குபவர்களை தட்டி எழுப்புகிறாள். பின்னர் அரை மயக்கத்திலிருப்பவர்களுக்கும், விழித்தும் கூட சோம்பலுக்கும் ஆசைக்கும் ஆட்பட்டு உய்ய மறுக்கும் பக்தர்களுக்கும் பொறுமையாக அழைப்பு விடுக்கிறாள்.
.
பக்தனுக்குத் தான் எத்தனை கருணை. தான் மட்டும் உய்வதை ஒருபோதும் அவன் விரும்புவதில்லை. உலகமெலாம் உய்யவேண்டும். பகவான் நாமத்தை ஊரெல்லாம் பரப்பி உச்சரிக்கத் தூண்டுவான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் பரந்த குணம். இதுவே அவர்களை இறைவனை நோக்கு விரிவடைவதற்கான சாட்சி.
.
இதோ எல்லோருமாக கிளம்பிவிட்டனர். நாமும் சேர்ந்து செல்வோம்.
****
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

***

No comments:

Post a Comment