December 26, 2020

திருப்பாவை பாசுரம் 12 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

 பாசுரத்தில் தேடிய முத்து (12)

ஸ்ரீ ராமகீர்த்தனம் பாடுவோம்
.
(Picture source: Internet) (Rangoli credit : Suganthi Ravi)
.




பொன்னும் பொருளும் மட்டுமல்லாது, நஞ்சை புஞ்சை நிலங்களும், வேளாண்-தொழிலுக்கு உதவும் பசுக்களும் எருமைகளும் செல்வச் செழிப்பை குறிப்பாக உணர்த்த உதவுகின்றன. நிறைவான செல்வமாம் பசுக்களும் எருமைகளும் நிறைந்துள்ள வீட்டு மக்களாக இருந்தால்,
சீமான் வீட்டுப் பிள்ளைகள் தானே!
.
எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்த மாத்திரத்தில் பால் சுரக்கிறது. செழுமையாக வளர்க்கப்பட்ட எருமை. பால் சுரந்தோடியதால் வீட்டைச் சுற்றி நீராலன்றி பாலால் சேறாகிக் கிடக்கும் செல்வந்தரின் செல்லத் தங்கை.
எருமைகள் சொரிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது. நிலையாக நின்றிட முடியாமல், சேறு வழுக்கிவிடும் என்றஞ்சி வாயிற்கட்டையை பற்றியிருக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். மார்கழிப் பனிப்பெய்து அவர்கள் தலையெலாம் குளிர்ந்தேவிட்டது. இவளோ இன்னும் எழுந்தபாடில்லை. தமது அசௌகரியங்களையும் மீறி, இன்னொருவரின் நலனில் அக்கரை கொண்டுள்ள ஆயர்க்குலப் பெண்கள். எத்தனையோ இடர்பாடுக்களையும் தாண்டி கடைபிடிக்கப்படும் நோன்பு.
.
புள்ளினம் எனும் பறவைகள் கூவியாகிவிட்டது. சங்கு ஒலித்தது. ஆனைச்சாத்தன் பேசரவமும் துவங்கிற்று. எருமைகள் பொறுமைக்கு உதாரணமானவை. அவையும் மிகப் பொறுமையாக மேய்ந்து வந்தாகிவிட்டன. பின்னர் தமது கன்றை நினைத்து பால்சுரந்து, அது வாசலிலும் முற்றத்திலும் ஆறாக வழிந்தோடி சேறாகவே ஆகிவிட்டது. அவ்வளவு நேரமும் இவள் எழுந்திருக்கவில்லை! இவர்கள் கூவிக் கூவி அழைப்பதை அனைத்து மக்களும் அறிந்து அவர்களும் வாசலில் கூடிவிட்டனர். யாருக்காகவோ விடுக்கப்படும் அழைப்பு வேறு யாரையெல்லாமோ எழுப்பும் அற்புதமிது!
.
இலங்கைத் தலைவனை கடுஞ்சினத்தினால் வீழ்த்திய ஸ்ரீராமனது புகழை இவர்கள் கீர்த்தனை செய்கிறார்கள். அதைக் கேளாமல் அவள் உறங்குகிறாள். இள நங்கைக்கு ஆழ்ந்த உறக்கம்! இன்னும் எழவில்லையாம். கண்டிப்பாக எழுந்து விடுவாள்.
*******
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
*******

No comments:

Post a Comment