December 03, 2011

கைகேயி (ஒரு அலசல்)










('எங்கே பிராமணன்' தொகுப்பைச் சார்ந்து எழுதிய பதிவு)




தசரதர், இராமன் பிரிந்து சென்றதும் மயங்கிச் சரிகிறார். பலரும் துயர் தாளாமல் புலம்புகின்றனர்.. சுமந்திரர் கோபம் மேலிட 'குலம் நாசம் செய்யப் பிறந்தவள்,கணவனை கொன்ற பாவம் உன்னைச் சேரும்' என்றெல்லாம் சுடுசொல்லால் தாக்கி, அவளது தாயைக் கொண்டு பிறந்திருப்பதாக சாடுகிறார்.



கைகேயியின் பூர்வீகம் ஆராய்ந்தால், அவளது தாயின் குணத்தோடு கைகேயியை ஒப்பிட முடிகிறது.ஏழு சகோதரர்களின் மத்தியில் ஒரே மகளாய் வளர்ந்தவள் கைகேயி. அன்னையின் அன்பைக் கண்டறியாதவள்.மந்தரா என்ற பணிப்பெண் தான் அவளது வளர்ப்புத் தாய். பிடிவாதக்காரி. கைகேயியின் தாயாரை நாடு கடத்தியிருந்தார் அவளது தந்தை. தனது தந்தையின் செய்கையினால் ஆண் வர்கத்தின் மேல் பெரிதும் நம்பிக்கையற்றவளாக இருந்திருக்கிறாள் என்றும் கோணமும் ஆராயப்பட்டிருக்கிறது. தனது மகன்/சந்ததிமற்றும் தனது பாதுகாப்பைக் கருதி அவள் நடவேடிக்கை இருந்திருக்கலாம். மேலும் கேட்பார் போதனையினால்தன் சுயசிந்தனையை எளிதில் துறந்துவிடக் கூடியவளாக வர்ணிக்கப்படுகிறாள்.



கோசலநாட்டுடன் தோழமை பூண்டிருந்த மன்னன் அஸ்வபதி. அவன் மகள் கைகேயி. அஸ்வபதி பறவைகளின் மொழியை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தான். இந்த விசேஷ சக்தி மூலம்அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்களை வேறொருவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது. இன்னொருவரிடம் இதனை சிலாகித்துக் கொள்ள நேர்ந்தால், அவன் உயிருக்கே பங்கம் விளைந்து விடும். ஒரு முறை தம் மனைவியுடன் சோலையில் உலா வரும் நேரம், உறவில் சுகித்திருந்த இரு அன்னப்பறவைகளின் பேச்சை கேட்க நேர்ந்தது. அவை பேசிக்கொண்டதைக் கேட்டு பெரிதும் ரசித்தும் சிரித்தும் மகிழ்ந்தான். இதை கண்ணுற்ற அவன் மனைவி அவை என்ன பேசின என்பதை தன்னிடம் கூறுமாறு வற்புறுத்துகிறாள். தனது உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று அஸ்வபதி எடுத்துக் கூறியதை பெரிதும் பொருட்படுத்தாமல், பறவைகள் பேசிய விஷயங்களைதன்னுடன் பகிர்ந்து கொள்ள துளைக்கிறாள். கணவனின் உயிரையும் பொருட்படுத்தாத மனைவி என்றுணர்ந்த அஸ்வபதி அவளின் பெற்றோர்கள் வீட்டுக்கே அனுப்பி நாடு கடத்தி விடுகிறான்.



ராஜ்ஜியத்தை தன் மகள் வயிற்றுப் பிள்ளைக்கே கொடுக்கவேண்டுமென தசரதரிடம் சத்தியம் வாங்கிய பின்னரே திருமணத்திற்குச் சம்மதிக்கிறான் அஸ்வபதி. தசரதரும் தனக்கு இது காறும் கௌசல்யாவின் மூலமாக குழந்தை பிறக்காததை எண்ணி அவ்வாறு சத்தியம் செய்து தருகிறார். (இது ஒன்றை மட்டும் கவனம் கொண்டால் அவள் கேட்டசத்தியத்தில் பெரிய தவறிருப்பதாகத் தோன்றாது, தனக்கு வேண்டிய போது சத்தியம் செய்து கொடுத்து பின்னர்அவளை இகழ்ந்திருக்கிறார் தசரதர் என்றால், இரு பக்கமும் யோசித்து we can rest the case) அதன் பின்னரும் புத்திர பாக்கியம் இல்லாததால், மகத நாட்டு இளாவரசி சுமித்ராவை மணக்கிறார்.அழகில் சிறந்தவளான கைகேயியின் வீரத்திற்கும் பஞ்சமில்லை. தேவாஸுர சங்க்ரமத்தில் அவருக்கு தேரோட்டும் சாரதியாக விளங்கினாள். தக்க சமயத்தில் சிறப்பாக தேரைச் செலுத்தி தசரதர் உயிரைக் காப்பாற்றியதன் கைமாறாக இரண்டு வரங்களை அளிக்கிறார் தசரதர். முதலில் மறுத்த கைகேயி தனக்கு தேவை ஏற்பட்டால் பின்னர் கேட்பதாக கூறுகிறாள். இவ்வாறு இரண்டு வழியிலும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு பரதனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார் தசரதர்.



கணவனின் நலனைக் கருதாத தன் காரியத்தில் கண்ணாய் இருக்கும் குணம் கைகேயிக்கு தன் தாயினிடமிருந்தே வந்த்து என சாடுகிறார் சுமந்திரர். பொறுமையின் சிகரமாய் விளங்கும் வசிஷ்டரும் கூட சினங்கொண்டு நிந்திக்கிறார்.புத்திர பாசத்தால் கட்டுண்ட தசரதர், ராமனின் பின் ஓடுகிறார். இதையறிந்த ராமர் தேரை இன்னும் வேகமாகசெலுத்த ஆணையிட்டு தசரதரின் பார்வையிலிருந்து மறைகிறார். ஆற்றாமையின் பிடியில் சிக்கிய தசரதர் 'விதவைக் கோலத்தில் நீ நன்கு ஆட்சியை அனுபவிப்பாய். அப்படியே உன் மகன் இந்த ராஜ்ஜியத்தை ஏற்றானாகில்அவன் செய்யும் ஈமக்கடனும் தன்னைச் சேராது' என்று புலம்புகிறார். கணவன் புலம்பும் போதும்கைகேயி தன் செய்கையை நினைந்து வருந்தியோ மனம் இளகியோ இரங்கி வரவில்லை.


கௌசல்யா தசரதரின் மேல் பழி சுமத்தி தன் மகனைகாட்டுக்கு அனுப்பியதாக கண்ணீர் சிந்த, எல்லோரையும் விட அறிவில் சிறந்தவளான சுமித்ரா, 'ராமன் சாமன்யன் அல்லன், சூரியனுக்குச் சூரியனானவன், அக்னிக்கே நெருப்பின் ஜுவாலையை தரக்கூடியவன், பெருமைக்கு பெருமை, தெய்வத்தின் தெய்வம், அவனுக்கு கெடுதல் விளைவிக்க எவராலும் முடியாது' என்கிறாள்.



இத்தனை நடந்த பின்னும் தசரதரின் உடல் உயிர் சுமந்து கொண்டுதானிருக்கிறது. அவருக்கு வாய்த்த சாபத்தின் படி புத்திர சோகத்தை பூர்த்தியாய் அனுபவித்த பின்னர் உயிர் பிரிய நேரிடவேண்டும் என்பது விதி. தன் சாபத்தை நினைவு கூர்ந்து தனக்கு ஏற்பட்ட சாபம் இதென்று அறிந்து மருகிறார். மறுநாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிடுகிறது.



அதன் பின்னர் பரதன் வரும் பொழுதும் பரதனை அரசாளச் சொல்லி கேட்கிறாள் என்றால் கணவனின் இறப்போ பிறரின் நிந்தனையோ அவளை பெரிதும் பாதிக்கவில்லை என்றாகிறது. தன் செயலில் குறியாய் இருக்கும்சுயநலமிக்கவளாகவும் பிடிவாத குணம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள் கைகேயி.

23 comments:

  1. இராமயணத்தில் வரும் கைகேயி என்ற கதாபாத்திரத்தின் குணங்களையும், அதற்கான பின்னனியில் அமைந்த காரணங்களையும், அழகாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பிரியமுள்ள vgk

    ReplyDelete
  2. //எல்லோரையும் விட அறிவில் சிறந்தவளான சுமித்ரா, 'ராமன் சாமன்யன் அல்லன், சூரியனுக்குச் சூரியனானவன், அக்னிக்கே நெருப்பின் ஜுவாலையை தரக்கூடியவன், பெருமைக்கு பெருமை, தெய்வத்தின் தெய்வம், அவனுக்கு கெடுதல் விளைவிக்க எவராலும் முடியாது' என்கிறாள்.//

    இதைச்சொன்ன சுமித்ரா மிகவும் அறிவாளியே தான்! இதைப்பதிவிட்ட தங்களைப்போலவே. ; )))))) vgk

    ReplyDelete
  3. தமிழ்மணத்தில் நானே உங்களுக்கு பதிலாக முதல் வோட் போட்டு துவக்கி வைத்துள்ளேன். நீங்கள் 2 வது வோட் பதிவு செய்து கொள்ளவும். vgk

    ReplyDelete
  4. மிக்க நன்றி வை.கோ sir...வாக்களிப்பிற்கும் நன்றி :)

    எனக்கு நானே வாக்களிப்பதா....அதெல்லாம் பண்ண மாட்டேன் சார்! :)

    ReplyDelete
  5. கைகேயி ஒரு தாய். யார் என்ன சொன்னாலும் ஒரு தாய்க்கு தன் பிள்ளையிடம் அன்பும் பாசமும் கூடவே இருக்கும். அறிவு பூர்வமாக அவளது செய்கைகளை அணுகுவதை விட உணர்வு பூர்வமாக அணுகுவதே சிறப்பு. வால்மீகியும் சரி கம்பனும் சரி, அவளுடைய செய்கைகளுக்குத் துணை சேர்க்க சம்பவங்களையும் பிற கதா பாத்திரங்களையும் காரணகர்த்தாவக்கி இருக்கிறார்கள். கதைக்கு சுவையும் கூடுகிறது.

    ReplyDelete
  6. கைகேயி ஒரு தாயும் கூட. அதற்கு முன் அவள் ஒரு மனைவி. கணவனிடத்தே கடுகளவு பாசமும் அற்றுப் போய் அவள் பிடித்த பிடியில் வழுவாதும், சற்றும் வருந்தாதும் இருக்கும் கதாபாத்திரமாகத் தான் என்னால் காண முடிகிறது. தாய்மைக்காக காதலை துறந்துவிடத் துணியும் மனைவிகள் எத்தனை பேர்கள் இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி gmb sir. :)

    ReplyDelete
  8. அருமையாக எழுதுகிறீர்கள்.. உங்கள் மிச்சப் பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    கைகேயி சுயநலக்காரியாகச் சித்தரிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? அவள் வேண்டிய வரங்களினால் அவளுக்கென்று ஏதாவது ஒரு பலனும் கிடைத்ததா? கிடைக்காது என்று தெரிந்தும் அந்த வரங்களை அவள் கேட்டாள் - வித்தியாசமான தாய், அவ்வளவு தான். அத்தனை பிள்ளைகள் இருக்கையில் ஒரு பிள்ளை மீது அதீத பாசம் செலுத்தும் தந்தைத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வித்தியாசமான தாய். ராமாயணம் பற்றி எழுதும் அத்தனை பேரும் கைகேயியைச் சண்டாளி என்ற கோணத்திலேயே பார்ப்பது unfortunate.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை.

    கைகேயியை சண்டாளி என்று பார்க்கும் வகையை செர்ந்தவள் அல்ல நான். சிறுவயதில் ஏன் என்று தெரியாமலே எனக்கு கைகேயியை அதிகம் பிடித்தது. மூன்று மனைவிகளில் ஒருத்தியாக இருந்தால், சில ஏமாற்றங்களும் போட்டி பொறாமைகளும் தாங்கி பக்குவம் பெற வேண்டிய கட்டாயம் வேறு. அவள் வரம் கேட்டதையும் கூட நான் புரிந்து கொள்ள தயாராய் இருக்கிறேன். ஆனால் கட்டிய கணவனின் பரிதவிப்பும் அத்தனை பேரின் கண்ணீரையும் தாண்டி அவளது பிடிவாதம் நின்றது மட்டுமே வருத்தமுறச் செய்கிறது.

    மூன்று மனைவியருக்கு கணவன் என்றால், பகிர்ந்து வாழ்ந்த கணவனிடத்து பாசமும் காதலும் கூட கூறுப்போடப்படுகிறதோ!!?

    ராமனைத் தவிர அனனவரின் சாமான்ய குணங்களும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.
    ராமனும் சில இடங்களில் சாமன்யனின் குணத்துடன் விளங்கியிருக்கிறான்.
    பல நேரங்களில் உத்தம மனிதனின் குணமும் வெளிப்பட்டிருக்கிறது.

    இதையெல்லாம் அலச பெரும்பாலான இக்காலத்தவர்களுக்கு தகுதி இல்லை
    என்றாலும் ஆர்வம் குறையவில்லை. :)

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இப்படி தொகுப்பு இருக்கா என்ன? அந்தப்பேர்ல சோ எழுதின நாவல் ஒன்னுதான் படிச்சுருக்கேன்.

    இது என்ன script இது bogy.in...? உங்க பதிவுப்பக்கங்கள் எல்லாம் load ஆக நிறைய நேரம் எடுக்கிறது. இன்னொரு வரம் எதையாவது கேட்டுக்கொள்ளுங்கள், ஆனால் முதல் வரத்தைப் பயன்படுத்தி இந்த bogy.in scriptஐ அகற்றிவிட்டால், பிறகு உங்கள் வலைப்பதிவுக்கு பட்டாபிஷேகம் நடந்து பல ப்ரௌசர்களை ஆள வாய்ப்பு ஏற்படும்.

    ReplyDelete
  13. க்ருபா, இந்த நாவலைத் தொடராக தொலைக்காட்சியில் ஒளிபரப்பிட்டு இருந்தாங்க. அதில் சோ off the serial தொகுத்த சில கருத்துக்கள்/கதைகள் ஆன்மீக விளக்கங்களளயும் நான் என்னுடைய வார்த்தைகளில் எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  14. கம்பனில் வரும் வரி ரொம்ப பிரபலம்:

    'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
    தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு
    பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
    ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள்


    சும்மா 'பரதன் ஆள்வான், நீ காட்டுக்குப் போ' என்று ஏன் சொல்லவில்லை.

    ஏன் தவம் மேற்கொள்ளச் சொல்கிறாள்? ஏன் புண்ணித் துறைகள் ஆடச் சொல்கிறாள்?

    பூழி என்றால் புழுதி. கானம் என்றால் கானகம். கானகத்தில் ஏது புழுதி?

    சும்மா மோனைக்காக எழுதுபவரா கம்பர்?

    அதற்கு ஒரு காரணம் சொல்வார்கள்.

    என்னதான் விஸ்வாமித்ரர் சொல்படி செய்தது என்றாலும், தாடகை ஒரு அரக்கி என்றாலும், இராமனின் வில் கொன்ற முதல் உயிர் ஒரு பெண். அப்படிப்பட்டவன் அதற்குண்டான பிராயச்சித்தங்களை செய்யாமல் அயோத்தியில் அரியணை ஏறக் கூடாது. தாங்கரும் தவம் மேற்கொண்டு, புண்ணிய துறைகள் ஆடி அவனைத் திரும்பி வரச் சொல்கிறாள்

    அவன் அவதார நோக்கம் இராவணனை போர்க்களத்தில் அழிப்பது. அதனால் தானோ என்னவோ 'பூழி வெங்கான'த்துள் புகச் சொல்கிறான்.

    இவை எல்லாம் பிற்கால வாசகர்களின் readings. ஏற்பதும், மறுப்பதும் நம் விருப்பம். ஏற்கிறோமோ, மறுக்கிறோமோ, லயிக்கலாம் என்பது என் கட்சி :-)

    ReplyDelete
  15. நன்றி பிரபுராம்.

    // ஏற்கிறோமோ, மறுக்கிறோமோ, லயிக்கலாம் என்பது என் கட்சி :-)
    //

    உண்மை தான். அப்படி லயித்தல் மட்டுமே சந்தோஷம் தரக்கூடியது. சார்புடைமையை விட ரசிப்பு சிறந்தது.

    ReplyDelete
  16. பிரபா, வலைச்சரத்தில் அறிமுகம் பார்த்து தங்களின் பதிவிற்கு வந்துள்ளேன்.சிறப்பாக இருக்கு தங்களின் எழுத்து.கைகேயியை பற்றிய இந்தப் பதிவு அருமை.

    ReplyDelete
  17. வருகைக்கும் தொடர்வதற்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி ராம்வி. :)

    ReplyDelete
  18. கைகேயி தான் அதர்மத்தை அடியோடு வீழ்த்த ராமனுக்கு வாயில் திறந்தவள்... அவளின் அறிவு, திறமை யாவும் ஆங்காங்கே கண்டாலும்...
    "இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைப் போல்
    துன்னருங் கொடுமனக் கூனித் தோன்றினாள்"

    அவள் கைகேயியை வந்து துயில் எழுப்புகிறாள்...
    "தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினள்" என்று கம்பன் இப்படிக் கூறுகிறான் (இங்கே தூங்கும் பொது தொடுவது யார் என்பதையே உணரும் உணர்வு இது பெண்களுக்கே இருக்கும் இருக்க வேண்டிய சிறப்பானக் குணமான நான்கில் முக்கியமான ஒன்று அது 'பயிர்ப்பு' என்பர் புலவர்)

    "தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
    தூய சிந்தனை திரிந்ததே"

    அடுத்ததாக பாடலை நிறைவு செய்ய கம்பர்..

    "சூழ்ச்சியின் இமையோர் மாயையையும் அவர் பெற்ற
    நல்வரம் உண்மையாலும் ஆய அந்தணர் இயற்றிய
    அருந் தவத்தாலும்" இது நடந்ததாகவே நடாத்துகிறார்...

    ராவணவதம் என்பதே நோக்கம் அதுவே தேவர்கள் பெற்ற வரம் அதை நடாத்த ராமன் அவதாரம் அதை ஆரம்பித்து வைப்பவள் இந்தக் கைகேயி....

    சென்றாளே... ராமனை அழைக்க பரதன் கானகம் ஓடும் போது கைகேயும் கூடவே தானே சென்றாள். குற்ற உணர்வே அவளிடம் இல்லை... அவள் மிகவும் தெளிவாகவே காணப் படுகிறாள்... அவள் ராமனின் மீது வைத்திருந்த பாசத்தை பல இடங்களில் கண்டாலும்.. கைகேயின் இச்செயலை ராமன் எப்படி எடுத்துக் கொள்கிறான்....

    "இராமன் தசரதனிடம் ஒரு வரம் கேட்கிறான், அது:-

    "ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை என, அழகன்
    தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும்
    தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்
    வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி!".

    "இராமா! நீ கேட்டுக் கொண்டபடியே, பரதன் என் மகனாக ஆகட்டும், அவனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாவி கைகேயி மீது நான் கொண்ட கோபம் தீராது" என்றான்.

    அது கேட்ட இராமன், "நான் சுமக்கவிருந்த பெருஞ்சுமையான அரச பதவியை நீக்கிப் புண்ணியத் துறைகள் ஆடி, தீயோரை ஒறுத்து, நல்லோரைக் காக்கும் இவ்வாய்ப்பினை அருளிய எம் அன்னையின் செயல் எங்ஙனம் குற்றமுடையது? குற்றமுடையது அல்ல!" என்றான். மெய்ம்மையை உணர்ந்த தசரதன், தான் கைகேயியின் பால் கொண்ட வெகுளியை விட்டு ஒழித்தான்.

    இப்படி இராமனுக்கு வரம் அளித்துவிட்டு, தசரதன் விமான்மேறி வைகுந்தம் போய்ச்சேர்கிறான்."

    விதி வலிது... நாம் விரும்பும் படி வாழ்க்கை அமைவதில்லை... காரணம் அதன் காரண காரியம் அவனன்றி யாரறிவார்...

    அருமையானப் பதிவு... அருமையான சிந்தனை.. நானும் உங்களைப் போலவே கைகேயியை ரசிக்கும் இடம் பல உண்டு...
    பதிவு பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  19. அப்பா எவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. உங்க கிட்ட தெரிஞ்சுக்க நிறைய இருக்கு!!! awesome quotings...மிக மிக நன்றி. கருத்துக்கு.

    நீங்கள் கூறிய கருத்தை (without quoting) சிலர் சொல்லி கேட்டதுண்டு. கைகேயி மேலுள்ள அபிமானத்தால் அது பிடித்தும் போகும் :)

    கருத்துக்கு நன்றி :)


    //விதி வலிது... நாம் விரும்பும் படி வாழ்க்கை அமைவதில்லை... காரணம் அதன் காரண காரியம் அவனன்றி யாரறிவார்...
    //

    உண்மை தான் :)

    ReplyDelete
  20. கைகேயி போல் இருக்கும் பெண்கள் தான் வாழ்வில் சாதிக்கிறார்கள். :)

    தங்கள் எழுத்து பிரமிக்க வைத்த நிலையில் தமிழ் விரும்பி ஐயாவின் எழுத்தை கண்டு கம்பராமாயணத்தை பேசாமல் படிக்க ஆரம்பித்துவிடலாம் என தோன்றியது.

    நன்றி சகோதரி, தங்களுக்கும் தமிழ் விரும்பி ஐயாவுக்கும்.

    ReplyDelete
  21. கைகேயி மாதிரி இருந்து சாதித்து என்ன செய்ய போகிறோம்? :(

    ஆனால் தமிழ்விரும்பி கூறியது போல் கைகேயியால் தான் ராமாயணமே சாத்தியபட்டது!

    நன்றி கருத்துக்கு :)

    ஆம் கம்பரும் வால்மீகியும் கூட படிக்க வெண்டும். ஏகப்பட்டது இருக்கு படிக்க, தெரிந்து கொள்ள. வாழ்கையின் ஆயுட்காலம் போதாது....

    ReplyDelete
  22. சுவாரசியமான அலசல்.
    கைகேயி மட்டுமல்ல கூனியும் கூட கொடுத்த வேஷத்தை ஒழுங்காக செய்து ராமாயணத்தை ஜோராக்கி விட்டார்கள். நெகட்டிவ் ரோல் கேட்டு வாங்கிக் கொண்ட கைகேயிக்கு ஜே!

    ReplyDelete
  23. //நெகட்டிவ் ரோல் கேட்டு வாங்கிக் கொண்ட கைகேயிக்கு ஜே!
    //

    :)) உண்மை தான். எல்லாமே பாஸிடிவ் ரோல் மட்டுமே செய்தால் ஆட்டம் களை இழந்து விடும்

    ReplyDelete