December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (சௌந்தரியலஹரி-கனகதாரா ஸ்தோத்திரம்)

கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிஷங்கரரால் கூறப்பட்டது. ஏழை அந்தணர்கள் குடும்பத்தை வாழ்விக்க அவர் பாடினார். ஸ்வர்ணத்தில் நெல்லிக்கனி மழை பொழிந்ததாய் கூறுவதுண்டு। அப்படிப்பட்ட ஏழைகளாய் அந்த அந்தணர்கள் வாழ்ந்தனராம். ஏனெனில் அவர்கள் உஞ்சவிருத்தி எடுத்து பிழைத்து வந்தனர். உஞ்சவிருத்தி என்றால், கீழ் சிந்தி வீணாக்கப்பட்ட நெல்லைப் பொறுக்கி அதனை பொங்கி உண்டு ஜீவித்திருப்பது. அவர்கள் ஷங்கரருக்கு வழங்கிய நெல்லிக்கனியும் கூட அழுகிய நெல்லிக்கனி. நல்ல நெல்லிக்கனியாய் இருந்தால் பயன் மற்றோருக்கு உண்டு என்று அதனை தவிர்த்து, பிறர் தவிர்த்த பொருளை உண்டு வாழ்பவர்கள். அப்படிப்பட்ட ஜீவனத்திலும் தன்னால் பிட்சை இட முடியவில்லை என வருந்தி, இருந்த ஒரு நெல்லிக்கனியும் கொடுக்க, ஆதிஷங்கரர் லக்ஷ்மிதேவியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். "இவர்களின் முன்வினைப்பயனோ மிகவும் முற்றியது, வினைப்பயனை ஒதுக்கி எவ்வாறு காத்தருள்வது" என்று லக்ஷ்மிதேவி திகைக்க, "அவளிடம் இருந்த ஒரே சொத்து நெல்லிக்கனி, அந்த நெல்லிக்கனியையும் வழங்கிவிட்டதன் மூலம் அவள் தன் மொத்த செல்வத்தையும் தானம் செய்துவிட்டாள். இந்த ஒரு நற்செயலே அனைத்து பாபங்களையும் கழுவ வல்லது" என்று ஷங்கரர் மீண்டும் வலியுறுத்த, லக்ஷ்மி மனமிரங்கி அருள் புரிந்தாள் என்கிறது புராணம்.

அடுத்து சௌந்தர்ய லஹரி। ஷங்கரர் அம்பாளின் ஸ்வரூபத்தை அழகை வர்ணித்து எழுதுவதாய் இருக்கிறது அனைத்து ஸ்லோகங்களும். ஆனால் அம்பாள் அழகை வர்ணித்து முதலில் பாடியதோ சிவபெருமான். ஒரு முறை ஷங்கரர் கைலாயத்திருக்கு சென்றிருந்தார். சிவன் மகிழ்ந்து அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களை வழங்குகிறார்.

1. யோக லிங்கம் - - காஞ்சிபுரம் (சந்திரமௌலீஸ்வரர்)
2. முக்தி லிங்கம்- - கேதார்நாத்
3. வர லிங்கம்- - நேபாளம்
4. போக லிங்கம்- - ஸ்ருங்கேரி
5. மோக்ஷ லிங்கம் - - சிதம்பரம்


லிங்கங்கள் மேற்கூறிய ஸ்தலங்களில் பின்பு ப்ரதிஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

அம்பாள் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் லஹரியை வழங்குகிறாள்। அதை கொணரும் போது நந்தி வழிமறித்து 59 ஸ்லோகங்களை பிடுங்கிக்கொண்டுவிடுகிறார். அந்த ஸ்லோகங்கள் முறையே சிவன் பார்வதியின் ஸ்வரூபத்தை வர்ணித்து துதித்த ஸ்லோகங்கள். மிச்ச 41 ஸ்லோகங்கள் தந்திர யந்திரங்களைச் சொல்வது. அது ஆனந்த லஹரி எனப்படும். அம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க ஷங்கரர் 59 ஸ்லோகங்களை அவள் த்வ்ய ரூபத்தை வர்ணித்து பின் இயற்றியிருப்பதாய் புராணம் பறைசாற்றுகிறது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (Atheism)


சார்வாகம் என்றால் என்ன? சார்வாகம் என்றால் நாஸ்திக எண்ணங்களின் ஆதிக்கம். நாஸ்திகம் என்பது இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு, நாம் புதிதாக ஆராய்ந்து அதனால் வந்த எழுச்சியா? என்றால்...இல்லை என்கிறது புராணங்களும் வரலாறுகளும். படைப்பு படைக்கபட்ட போதே, சந்தேகங்களும், மாயையும், இறையை அறியாத மனமும், அதோடு சேர்ந்த நாத்திக எண்ணமும் பின்னிப்பிணைக்கப்பட்டிருக்கிறது.

நாஸ்திகம் எனப்ப்படும் சார்வாகம் இராமாயண காலத்திலும் இருந்திருக்கிறது. (அதற்கும் முன்பும் இருந்தது, இன்றக்கும் உண்டு. பின்பும் இருக்கும்) ஜாபாலி என்ற ரிஷி இராமனை காட்டைவிட்டு நாட்டை ஆள புறப்படுவதற்கு வேண்டி சார்வாதம் செய்ததாக சான்று உண்டாம்.

சார்வாகம் என்றால், பரிகசிக்கத் தக்கது, இல்லை என்ற புறக்கணிக்கபட்டது. Something which has been discussed and later dismissed என்ற அர்த்தம் தொனிக்கும் சொல். அதனால் நாத்திகப் பேச்சு இன்றைக்கு வந்த புதிய விஷயம் அல்ல. இன்று நாத்திகம் பேசியவர்கள் மாறவும் செய்யலாம், பொதுவாகவே இன்றைய சமுதாயத்தில் விஞ்ஞானம் மேம்பட்டு விளங்கிவருகிறது. Proof எனப்படும் புலன்களின் புரிதலுக்கு உட்படும் சாட்சிகள் சுட்டிக்காட்டப்படுவதால் விஞ்ஞானிகளின் விளக்கங்களும் அறிக்கைகளும் ஆச்சார்யர்களின் கூற்றை விட ஞானிகளின் விளங்கங்களை விட, ஏன், இறைவனின் வாக்குக்கும் மேலாக கருதப்படுகிறது. நம்மவர்கள் விஞ்ஞானிகளின் பேச்சுக்கு வேறு மறுப்போ அல்லது எதிர்கேள்வியோ கேட்பது கூட இல்லை. பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் (fox-tv) மனிதன் சந்திரனில் கால் பதித்ததை கேள்விக்குறியதாக செய்து சர்ச்சை எழுப்பினர். அதற்கு விஞ்ஞானிகள் தக்கபதில் அளித்தனர் என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞானி ஒருவன் சொல்லிவிட்டால் கேள்விக்கணைகளைக் கூட நம் மக்கள் எழுப்புவதில்லை என்பது எவ்வகையான பகுத்தறிவைக் குறிக்கும் என யோசிக்க வேண்டும். பல நேரங்களில் பிரபல விஞ்ஞானிகள் தவறாக கருத்து கூறிவிடலாம். அவர்களும் மனிதனுக்குறிய குறைபாடுகளுடன் செயல் படுவதால் தவறு நேர்ந்துவிடலாம். சமீபத்தில் பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பின் பேரில் தயாரித்து உபயோகித்து வந்த மருந்து பொருள்கள் தவறான விளைவுகளைக் கொடுத்துள்ளது. குற்றவிசாரணை நடத்தியதனைத் தொடர்ந்து அக்கண்டுபிடிப்பு முறையானதல்ல எனத் தெரியவந்துள்ளது. மருந்து பொருள்களை உலகெங்கும் ரத்து செய்து நேரிட்டது. பகுத்தறிவு ஒரே சீராக எந்தத் துறையிலும் செயல்பட வேண்டும். புராணங்களும் நம் புலன்களுக்கு எட்டாததாக விளங்கும் இறைத் தத்துவத்தை மட்டுமே பகுத்தறிந்து கேட்பது பாரபட்சமான கோணத்தை காட்டுகிறது.

நம் மதத்தில் கேள்விகளைக் கேட்பதும், எதிர்மறை கருத்துக்களுக்கு விளக்கங்கள் அளிப்பதும் பெரிதும் அங்கீகரிப்பப்பட்டவையாகத் தான் இன்று வரை இருந்துவருகிறது. கீதையில் பகவானின் பேச்சுகே "குழப்பாமல் புரியும்படி பேசு" என அர்ஜுனன் எனும் மனிதன் விளங்கக்கேட்கிறான். பகுத்தறிவாதம் வைத்து அதன் பின் விளங்கச்செய்வதால் வேதங்கள் மேலும் சிறப்புறுகிறது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மாயா வாதம்)

ஆதிஷங்கரர் "மாயாவாதத்தை" முன் வைத்து பிரசாரம் செய்தவர். இவ்வுலகம் மாயை. உலகமே மாயை, பிரபஞ்சமே மாயை என்றால், அங்கிருக்கும் தோன்றல்களும் மாயை. "மாயை" என்னும் வார்த்தைக்கும் "பொய்" அல்லது "அசத்தியம்" என்னும் வார்த்தைக்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். பிரபஞ்சம் பொய் என்று சொல்லவில்லை, பிரபஞ்சமும், அதன் தோற்றமும், நடப்பவை, நடந்தவைகளும் மித்யை என்கிறார்கள் மாயாவாதிகள். சத்தியம் என்று ஒரு பொருளை குறிப்பிட வேண்டுமென்றால் அது நிரந்தரமான அழவற்ற நிலையில் இருக்க வேண்டும். சத்தியத்தை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.

* பிரம்மம் அழிவற்றது அதுவே சத்தியம். நித்தியமானது. அதை பரமார்த்திக சத்தியம் என்பர்.

* வியாவஹாரிக சத்தியம்(உலக நிகழ்வுகள், படைக்கப்பட்டவை, அதன் தோற்றங்கள் அனைத்தும்)

* பிராதிபாசிக சத்தியம் என்பது இல்லாத ஒன்று இருப்பது போல் தோற்றுவிப்பது. இது மாயையின் காரணம்.


இந்த மாயா தத்துவத்தை குறிப்பிட பெரும்பாலும் பலர் கையாள்வது "பாம்பு-பழுது" மேற்கோள். பழுதைப் பார்த்து பாம்பென பயப்படுபவனுக்கு எது சத்தியம்? அங்கே எதோவொன்று இருப்பது சத்தியம். அதை பாம்பாக பார்க்கும் வரை நம் கண்ணுக்கும் மனத்துக்கும் புலனுக்கும் பாம்பு தென்படுவதும் மித்யை. ஆனால் அங்கிருப்பது பழுது அது தான் சத்தியம். அது தெளிந்தவுடன் அங்கு பழுது மட்டுமே தென்படும் அங்கு பாம்பு மறைந்து விடுகிறது.

உறங்கும் மனிதனின் சொப்பனங்கள். உறங்கும் வரை அது மிகவும் உண்மை போன்ற தோற்றத்தை கொடுத்து, பின் மறைந்ததும் தெளிவு பிறக்கிறது. ஞானிகள் பாம்பைத் தாண்டிய பழுது நிலையில் இவ்வுலகை பார்க்கின்றனர். நம் கண்களுக்கு பிராதிபாசிக சத்தியம் விலகி வியாவஹாரிக சத்தியம் தோன்றுவது போல், அவர்களுக்கு இவ்வுலகமே பிராதிபாசிக சத்தியம் என்பதாக உணர்கின்றனர். மீண்டும் ஒடுங்கும் போது நித்தியமான 'ப்ரம்மம்' ஒன்றே சத்தியம் என்ற தெளிவுடன் இருக்கிறது அவர்கள் நோக்கு.

மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

இவையும் கூட இதே தத்துவத்தை சுட்டிக்காட்டும்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஞானி-யோகியின் மனநிலை)

இன்றைக்கு யோகா வகுப்புக்களில் பயிற்றுவிக்கும் சீரான மூச்சு என்பது யோகத்தின் அடிப்படை மட்டுமே. அதனால் மனம் சற்றே சாந்தப்பட்டு இருக்க முடியும். மேலும் உடலுக்கும் ஆரோக்கியம். மற்றபடி இவற்றை செய்வதால் ஒருவன் யோகி ஆகிவிட முடியாது. யோகம் என்பது பெரியதாக பேசப்படும் ஒன்று.

தபஸ்வியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஞானியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஆகவே அர்ஜுனா நீ யோகியாக இரு

என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். அப்படிப்பட்டவன் யோகி. இரட்டை நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். ஸ்திதப்ரக்ஞன். இன்பம்-துன்பம், மானம்-அவமானம், துக்கம்-மகிழ்ச்சி என எல்லா நிலையிலும் அசங்காது ஆடாது நிற்பவன்.

இறைத்தன்மை தேடலுக்கு பல வழிகள், நெறிகள், முறைகள், வகுத்திருக்கின்றது. அதில் அவரவர் தன்மைக்கேற்ப தன் வழியை ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கிறான். ஒருவன் செல்லும் பாதை, அவன் மார்க்கம் மற்றோருக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதே இயற்கை. அவரவர் தம் பாதையை தேர்ந்தெடுப்பதால் ஒருவர்க்கு விதிக்கப்பட்ட அறங்கள் மற்றோனுக்கு பொருந்தாது.

ஞானியின் மனநிலைக்கு ஏற்ப விதிக்கப்பட்ட வழி இல்லற தர்மத்தை கடைபிடிப்போனுக்கு சரியாய் இராது. மேலும், பல படிகள் கடந்தே ஒருவன் எளிதில் வாய்க்காத ஞானியின் அல்லது யோகியின் மனநிலையை அடைகிறான். ஞானியின் / யோகியின் மனநிலை, காண்போர்க்கு இயல்பில்லாமல் தோன்றுவதால், பொதுவான மனவோட்டங்களுக்கு அவர்கள் செயல் அப்பாற்பட்டு வித்தியாசப்பட்டு இருப்பதால் அவர்களை ஏளனமாய்ப் பார்க்கத் துவங்கிறது உலகம். அவர்கள் மஹான் என்று நிரூபிக்க நம்மை பொருத்த வரை, சித்திகள் / அதிசயங்கள் குறைந்த பட்சம் நோய் குணப்படுத்துதல் மற்றோரின் மன ஷாந்திக்கு வழி வகுத்தல் என மாயா வேலைகள் செய்தால் உண்டு.


சாஸ்திரம் தெரிந்த ஒருவனோ அல்லது நல்ல குணம் படைத்த ஒருவரோ, ஞானி ஆகிவிடுகிறார்கள் என தவறான மனக்கணக்கு போட்டுவிடுகிறோம். முன்பு கண்டது போல் இறைவனாக அவதரித்த ராமனுக்கே துக்கமும், சலனமும் குழப்பமும் என்றால், சாதாரண
மனிதர்கள் எம்மாத்திரம்!

ஞானியின் மனநிலை, யோகியின் மனநிலை, லக்ஷத்தில் ஒருவனுக்கு அமைந்தால் அரிது. இரண்டு அல்லது மூன்று நிமிட மாத்திரைகளுக்கு நம் மனம் நிச்சலமற்றி இருப்பதாலேயே நாமோ அல்லது இன்னொருவனோ ஞானி ஆகிவிட முடியாது. அப்பாதையில் நம் மனம் செல்வதாலேயே நாம் முழுமை பெற்றுவிடுவதில்லை. அதற்கென சில லக்ஷணங்கள் உண்டு. நல்ல புத்தங்கள் படிப்பதாலும், பக்தியினாலோ, சாஸ்திர சம்பிரதாயங்களில் மூழ்குவதாலோ, பிரம்மத்தைப் பற்றி படித்து உணர்வதாலோ, தனக்குத் தானே, ஒருவன் ஞானியாகிவிட்டதாய் அவனே நினைத்துக்கொள்வதாலோ அவன் ஞானி ஆகிவிடுவதில்லை. வெகு சிரத்தையாக சலமின்றி முழு நாழிகைகளும் யோக நியமங்களை கடைபிடிப்பத்தாலும் கூட ஒருவன் ஞானி ஆகிவிடுவதில்லை. இத்துடன் சேர்ந்து இறை அருளும் இருந்தால் மட்டுமே, அவன் பூரண ஞானியாக ஜொலிக்கிறான். அப்படிப்பட்டவன் பிறப்பதோ, அவனை நாம் கண்டுக் கொள்வதோ மிகவும் அரிது.

ஞானியின் நிலை இறுதி நிலைக்கு அருகேயுள்ளது. "ஞானி" என்ற சொல்லை வெகு சுலபமாக, அடிக்கடி இன்றைக்கு பலர் உபயோகப்படுத்தி வருகின்றனர். சொற்களின் தன்மை குணம் அறியாமல் பயன்படுத்துவதால் சில சொற்கள் தங்கள் பெருமையை இழக்கிறது. உயர்ந்த சொல்லில் ஒன்றாகிய "ஞானி" இன்றைக்கு பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.


வியாசரின் மகன் சுகர் ஒரு ஞானி எனக் கருதப்படுகிறார். அவர் ஒரு திகம்பர ஞானியும் கூட. குளத்தில் சில பெண்டிர் குளித்துக்கொண்டிருந்தனர். சுகர் அவ்வழி சென்ற போது ஏதொரு வித்தியாசமும் கூச்சமும் இன்றி அவர்கள் இயல்பாய் குளித்துக் கொண்டிருந்தனர். அவரைத் தொடர்ந்து வியாசர் அவ்வழி சென்றார். உடனே கூச்சம் மேலிட பெண்கள் தங்கள் ஆடைகளை சரி செய்தனர். அப்போது வியாசர் "ஆடைகளின்றி திகம்பரமாய் சிறிய வயதோன் என் மகன் சென்று கொண்டிருக்கிறான், அவனை கண்டும் காணாதிருந்த நீங்கள், ஆடைகள் முழுமையாய் அணிந்து இருக்கும் இக்கிழ வயதினனைக் கண்டு பதறுகிறீர்களே" என்றார். அதற்கு அப்பெண்டிர் "அவர் ஞானி, நீர் அப்படி அல்ல" என்று பதிலுரைத்ததாய் கதை உண்டு.

தொண்ணூறு சதவிகிதம் மக்களால் சலனமற்று இருக்க முடியாது. ஞானத்தை ஊட்டும் புத்தகங்கள் படித்தும், அதைத் தேடி ஓடி இளைத்தாலும் கூட, நமக்கென வரும்போது சலனங்கள் விடுபடுவதில்லை. ஏனெனில், ஞானத்தை புத்தகத்தில் படிக்கிறோம். அதை புரிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறோம். ஆனால் இன்னமும் முழுமையாய் உணர்ந்து கொள்ளவில்லை. ஞானியைப் பற்றி பேச முடியும், விவாதிக்க முடியும், ஞானத் தன்மையைப் பற்றி படிக்க முடியும், ஞானியைப் போல் நடிக்கக் கூட முடியும், ஆனால் அவனைப் போல் நடத்தல் அத்தனை சுலபமாக சாத்தியப்படுவதில்லை. கீதையில் கண்ணன் அர்ஜூனனைப் பார்த்து "நீ ஞானியைப் போல் உயர்ந்த வார்த்தைகள் பேசுகிறாய்! ஆனாலும் இப்படி சலனப்படுகிறாயே" என்று கேலிக்கிறான்.


CHAPTER 2 VERSE 11/12/13


ashochyaan anvashochah: tvam pragyavaadhan cha baashase
gathasoona agathaasooncha na anushochanthi panditha

na tu eva aham jaathu na asam na tvam na ime janadhipaaha
nacha eva na bhavishyamaha sarvevayam athah param

dehino-asmin yatha dehe kaumaram youvanam jaraa
thatha dehanthara prapthir dheera: thathra na muhyathi


The Lord spoke

"You speak wise words, yet you grieve for what is not worthy. Learned men do not worry about people the dead or living"

Never was it that, at any particular point of time did you exist, nor I , nor these kings. Never at any particular point of time, we would stop existing

Just as body goes thro childhood, youth and oldage, so does the soul transmigrate from one body to another. A realised soul, would not be baffled because of these.


பகவான் பின்வருமாறு கூறினார்.

அறிவுமிக்க சொற்களை கூறும் நீயே வருந்த தேவையற்றதற்கு வருந்துகிறாய். இருப்பவர்களுக்கோ இறந்தவர்களுக்கோ ஞானிகள் வருந்துவதில்லை.

நானோ நீயோ இந்த அரசர்களோ எப்பொழுதும் இருந்ததுமில்லை. இனி இல்லாமல் போகப்போவதும் இல்லை.

இந்த உடல் எவ்வாறு பால்யம், பருவம், மூப்பு என்பதை கடந்து செல்கிறதோ,
அவ்வாறே ஆன்மாவும் ஒரு சரீரத்தை விடுத்து வேறொன்றிற்குள் புகுகிறது.
எல்லாம் அறிந்த ஒருவன் இதைப் பற்றி குழம்பி வருந்துவதில்லை.

ஞானத்தன்மை அடைதவனுக்கு எதுவும் எல்லாமும் ஒன்றாகத் தோன்றும்। தன்னையே எல்லாமுமாகவும் நினைப்பவன்। எல்லா உருவிலும் இருப்பதும் அணுக்கூட்டங்களின் வெளிப்புறத் தோற்றம் என்ற நிலைக்கு எண்ணங்களை உயர்த்தியவன்.
"காக்கை குருவி எங்கள் ஜாதி,
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்"


என்று பாரதி பாடியதை உணரத் துவங்குவது இதன் ஆரம்பக் கட்டம்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (எல்லாம் தெரிந்தவரா நீங்கள்?)

அறிவுரைகள் / யோசனைகள் முவ்வகைப் படுமாம்.

1. ப்ரபு சம்ஹிதே:- அதாவது அரசன், எஜமானன் முதலியோரின் அறிவுரை, ஏறக்குறைய கட்டளை
2. சுகுருத் சம்ஹிதே:- நண்பனின் அறிவுரை. சக தோழன் கூறும் யோசனைகள்.
3. காந்தா சம்ஹிதே:- பெண் - சம வயதையொத்தவள்- பார்யை அல்லது மனைவி- தோழி - ப்ரியத்துடன் நேரம் பார்த்து, அஃதாவது இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்லப்படும் யோசனைகள்.

சமயோசிதமாக பெண்கள் செயல்படுவதால், சில நேரம் அவர்கள் கூறும் அறிவுரைகள் எடுபட்டுவிடும் வாய்ப்பு உண்டு.

நமக்கு பிடிக்காததை நம் நன்மையைக் கருதி சொல்பவர்கள் அரிது என்று விபீஷணன் இராவணனிடம் மனமிசையாத விஷயத்தை பற்றி பேசும் போது கூறுகிறான். அப்படி சொல்பவர்கள் அரிது. அப்படி சொன்னாலும் அந்த அறிவுரையின் படி கேட்டு நடப்பவர்கள் இன்னும் அரிது.

அறிவுரை சொல்பவரின் மனநிலை அஹங்காரமின்றி இருத்தலும் அவசியம். 'தனக்கும் எல்லாமும் தெரியும்' என்ற எண்ணம் பலரிடம் மலிந்திருக்கிறது. ராஜா பத்ருஹரி என்பவர் நீதி சதகம்((on virtues), ஸ்ருங்கார சதகம்(on romance), வைராக்ய சதகம் (finally dismissing all others are useless except the abode of god) என ஒவ்வொரு தலைப்பிலும் 100 ச்லோகங்கள் இயற்றியிருக்கிறார். அவற்றில் வைராக்கிய சதகத்தில், நீதி அறிந்தவன் இருப்பான், விதியைப்பற்றி அறிந்தவன் இருப்பான், சாஸ்திரம் அறிந்தவன், ஏன் பிரம்ம ஞானம் அறிந்தவனைக் கூட கண்டுவிடலாம். ஆனால், தனக்கு என்ன தெரியாது என அறிந்தவன் அரிது என்கிறார். எப்பேற்பட்ட அறிவாளிக்கும் கூட, தனக்கு என்ன தெரியாது என்பது தெரிவதில்லை.


'ஹிந்து மஹா சமுத்திரம்' என்ற புத்தகம் எழுதி வருகிறார் சோ। அதற்காகவும், அவர் முதலில் எழுதிய வால்மீகி இராமாயணம், வியாச மஹாபாரதம், எங்கே பிராமணன், முதலியவற்றிற்கும், இப்போது தொடர் இயக்குவதற்காகவும் அவர் பல நூல்களை ஆராய்ந்துள்ளார் எனக் கூறினார். க்ருஷ்ணப்ரேமியின் வேத விஞ்ஞானம், யோக வாசிஷ்டம், இராமக்ருஷ்ணா -mutt-ன் உபநிஷதம், மனுஸ்ம்ருதி, எளிய முறையில் அரும்பெரும் ஞானத்தை உறைக்கும் காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல், சானக்கிய நீதி, ஆகிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆராய்ந்து எழுதுவதால், "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற அபிப்ராயம் எளிதில் பரவ உதவுகிறது. மற்றபடி எனக்கு ஒன்றுமே தெரியாது என கூறி நகைக்கிறார் சோ.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பொய் சொல்லக் கூடாது பாப்பா)

பொய் சொல்வதும் தவறு. உண்மையை மறைப்பதும் தவறு. உண்மையை பேசாமல் இருப்பதால், பொய் சொல்லவில்லை என்று ஆகிவிடாது. மாண்டவ்யரைக் கழுவில் ஏற்றும் கதை, பல்வேறு விதமாக சொல்லப்படுகிறது. கதையின் கருத்து மாறுபடவில்லை என்றாலும், சிறு மாற்றங்களுடன் பல versions இருக்கிறது. மாண்டவ்யர் என்ற மாமுனிவர் தவமியற்றிக்கொண்டிருந்த போது திருடன் அவர் பரணசாலைக்குள் புகுந்து விடுகிறான். இதையறியாது அவர் நிஷ்டையில் இருக்கிறார். அரசனின் ஒற்றர்கள் வந்து திருடனைப்பற்றிய உண்மையைக் கேட்ட போதும் அவர் நிஷ்டையில் இருந்ததால், அவரின் காதுகளுக்கு எட்டவில்லை. அதையறியாத அறிவீன அரசன், அவரை கொள்ளைக் கூட்ட தலைவன் என முடிவு கட்டி, கழுவில் ஏற்றிவிடுகிறார். கழுவில் ஏற்றுவது என்பது மிகவும் கொடுமையான தண்டனையாம். கூர்முனை மெதுவாக உடலை தைத்து வெளிவரும். slow painful death . கழுவில் ஏற்றியும் அவர் உடல் பொன்னென ஜொலிக்க, பயந்து போன அரசன் தான் தவறு செய்துவிட்டோம் எனப் புரிந்து விடுவித்தான். அதற்குள் ஆணி பாதி உடலை துளைத்து வந்திருந்ததாம். அதனால் அவருக்கு ஆணி-மாண்டவ்யர் என்ற பெயரும் வந்தது. அவர் நேரே தர்மதேவனைத் துதித்து எனக்கேன் இப்படிப்பட்ட துயரம்? என வினவினார். சிறுவயதில்

நீ தும்பிகளை/பூச்சிகளை, ஊசியால் குத்தி விளையாடினால், அதனால் உனக்கிந்த கதி என்று அவர் உரைக்க, சிறுவயது தவறுகள் தெரிந்து செய்யப்படுவதில்லை, அதற்க்காகவா இப்படிப்பட்ட தண்டனை என்று கோபமுற்று அவரை மண்ணில் பிறக்க உத்தரவிட்டார். அவர் தான் விதுரர்.

http://www.maraththadi.com/article.asp?id=1381&print=1
http://www.dinamalar.in/anmegamnews_detail.asp?News_id=978&cls=row3&ncat=HIN&ncat1=STO
http://www.composetamil.com/tamil/content.aspx?typeid=7&Contentid=142

(மாண்டவ்யரின் கதை and diff versions)


மாண்டவ்யர் பொய் சொல்லவில்லை. உண்மையை பேசாமலும் இல்லை. அவர் நிஷ்டையில் இருந்தார் என்று கூறுவதுண்டு.


ஒருவனின் மோசடி செய்கையிலும் கூட, மனம் வெளுத்திருந்து, பிறரை துன்புறுத்தும் நோக்கம் இல்லாமல் இருந்தால் அதற்கு இறைவனும் கூட ஒத்துழைக்கலாம் எனக் கொள்ளலாம். இறைவனே மோசடி பத்திரம் கொண்டு நாடகமாடியது சுந்தரர் வரலாற்றில் உள்ளது.

ஆலகாலவிஷத்தை யார் எடுத்து வருவது? அருகே சென்றாலே அது தகிக்கிறது. அப்போது சிவன் தன் பிம்பத்தை பார்க்க, அங்கிருந்து தோன்றுகிறார் சுந்தரர். வசீகரிக்கும் சுந்தர ரூபம் உடையவர் என்பதால் சுந்தரர். அவர் பூலோகத்தில் தோன்றும் போது இரு பெண்களை இச்சித்து மணந்து கொள்ள ஆசைப்படுகிறார். அவரின் திருமணம் வேறொருத்தியான மூன்றாமவளுடன் நிச்சயிக்கப்படுகிறது. இவ்விடத்தில் அவரை சிவனே, வயோதிக வேடத்தில் வந்து ஆட்கொண்டதாய் கூறப்படுகிறது. சுந்தரன் தனக்கு அடிமை என்று அவன் முன்னோர்கள் சாசனம் எழுதியதாய் கூறுகிறார். அதை காண்பிக்கும் போது சுந்தரர் அதை கிழித்து எறிந்து விட, வெண்ணைநல்லூரில் அவர்களின் வழக்கு தொடர்கிறது. வழக்கு கிழவருக்கே சாதகாக முடிந்துவிட்டது. அவருடன் தன் வினையை நொந்து கொண்டு சுந்தரர் செல்லும் போது கிழ உருவை விடுத்து இறைவனும் இறைவியுமாய் தோன்றினராம். நாத்தழுதழுக்க இறைவனை பாட முற்பட்ட போது, "என்னை பித்தா என்றல்லவா தூஷித்தாய், அதையே முதற் சொல்லாய் வைத்து உன் பாட்டை துவக்கு" என்று இறைவன் அருள....அப்போது தோன்றிய பாடல் "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா"

பல நூல்களும் நற்பண்பினை எடுத்துறைக்கும் நன்னெறிப் புத்தகங்களும் உண்மையை மறைத்தல், பொய் உரைத்ததற்கு ஈடாகும் என்று கூறுகிறது.

ஆனாலும்...

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்


என்னும் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. பொய்யையோ, அல்லது உண்மையை மறைத்தலையோ அலசும் போது, அதன் நோக்கத்தையும் சேர்ந்து அலச வேண்டும். தன்னலமற்று, பிறர் நலனுக்காக பொய் உரைக்கப்பட்டிருப்பின், அது உண்மைக்கு சமம் என்பதே சான்றோர் வாக்கு.

இராமாயணத்திலிருந்து சில உதாரணங்களை எடுக்கலாம். சுமந்திரர் தேர் ஓட்டிச் சென்ற போது துக்கம் தாளாமல் தசரதர் அழுது தேரை நிறுத்தச் சொல்லி கதற, ராமனோ, தேரை செலுத்த ஆணையிடுகிறான். தந்தை கேள்வி வினவினால், உங்கள் காதுகளுக்கு அவரிடம் கூக்குரல் சத்தம் எட்டவில்லை என்று கூறிவிடுங்கள் என சுமந்திரரிடம் கூறுகிறான். இதுவும் பொய் தான், அதன் நோக்கம், தசரதரின் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதே.

அதே போன்று, பரதன் மீண்டும் ராமரை அரசாள அழைக்கும் போது, தசரதன் கைகேயியிடம் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைக்கே பட்டாபிஷேகம் செய்விப்பதாய் வாக்கு கொடுத்திருந்தார் என்று பொய்யுரைக்கிறான். பரதனை சமாதானப்படுத்தி நாடு அனுப்ப வேறுவழியின்று பொய்யுரைக்க நேரிடுகிறது.

ராமனைப்பற்றியே ஏன் பேசுகிறோம் என்றால், மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியதிப்படி வாழ்ந்தவன் அவன். கண்ணனைப் பற்றி இங்கு பேச இயலாது. அவன் செய்கைகளை அதனால் தான் "லீலைகள்" என்று சொல்லிவிடுகிறோம் . ராமன் மனிதனாய் வாழ்ந்தான். கண்ணனோ இறைவனாய் தீர்ப்பு கூறினான்.


ராமனின் வாழ்வை முன்னுதாரணமாய் வைத்து நாம் நம் செய்கைகளை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். அப்பேற்பட்ட ராமனும் ஓரிரு தருணங்களில் பொய்யுரைத்திருப்பதை அலசுதல் அதன் நோக்கத்தை புரிந்து செயல் பட உதவுகிறது.

ராமன் செய்கைகளில் உறுத்தும் இன்னொன்று வாலியை மறைந்து நின்று கொன்றது. இதை அறவே மறுக்கின்றன வேறு சில நூல்கள். கமபனும் துளசிதாசரும் ராமாயணத்தை பக்திததும்ப கற்பனாஷக்தியை புகுத்தி எழுதினர். வால்மீகி ராமாயணம் நடந்ததை அப்படியே
எடுத்துரைக்கும் புத்தகம். அதில் ராமன் மறைந்து நின்று கொன்றதாய் கூறப்படவில்லை. "எத்தனை வலிந்து சண்டையிட்டும் ராமனின் பாணம் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று அழுது புரளும் தாரா முன் வான்ரங்கள் கூறின என செய்யுள் வருகிறது. "யுத்தத்தில் நான் உன்னை வீழ்த்தினேன்" என்கிறான் ராமன். யுத்தநீதிப்படி பார்த்தால், இவற்றை இரு கோணங்களில் அலசலாம். வாலி முதலானோரை மிருகம் என்ற ஜாதியில் சேர்த்தால், மிருகத்தை ராஜா வேட்டையாடிக் கொல்வது என்பது நிகழ்வதே. அவர்களை மனிதர்களாய் பாவித்தால், தம்பி மனைவியை களவாடியவன் என்பதால் அவனுக்கு எத்தகைய தண்டனையும் அரசன் வழங்கலாம் என்பது சட்டம்.

December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( ஜாதிகள் இல்லையடி பாப்பா)



திருமலை நள்ளான் சக்கரவர்த்தி என்று வைணவத்தில் ஒரு பகுதியினர் உண்டு. அதன் தோற்றத்தின் காரணம், வைணவர் ஒருவர் கீழ் ஜாதியினர் ஒருவரின் இறுதிக் கடனை முன்னின்று தாம் நடத்த, அதன் பின் தோன்றிய கிளை தான். இப்பகுதியினர். இந்திய அரசியல் வரலாற்றில் தம் தடத்தை பதித்த, இன்றைக்கும் நாம் மரியாதையுடன் நினைந்து மகிழும் சி. ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி இவ்வழித் தோன்றலே. அவரின் இராமாயண மஹாபாரத மொழிப்பெயர்ப்புகள் இன்றும் தமிழில் முன்னிடத்தில் விளங்கி வருகிறது.

ஜாதிகளைத் தாண்டிய மனித நேயத்தின் அடிப்படையில் எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஒன்றே என்பதை வலியுறுத்த கண்ணப்ப நாயனார் கதைகள் முதல் பல கதைகளில் இறைவன் நேரே உணர்த்தியதும், குறிப்பாலுணர்த்தியதும் உண்டு. அப்படிப்பட்ட கதை தான் பெரிய நம்பியின் கதை.

மாறநேர நம்பி என்பவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். பெரிய நம்பி உயர்குலத்தோன். மாறநேரியின் இறப்பிற்கு பெரிய நம்பி ஈமக் கடன்களை செய்தார். அதனால் அவர் தம் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டு கடுமையாய் நடத்தப்பட்டார். அவர் இருக்கும் தெருவழியே ரங்கநாதரின் தேர்வீதி உலா வந்து கொண்டிருந்தது. அது பெரியநம்பியின் தெருவிலும் வலம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பெரியநம்பியின் பெண், அத்தூழையம்மை அவர் மனையின் வீசப்பட்டிருந்த முட்செடிகளையெல்லாம் கடந்து வந்து, ரங்கநாதரின் தேர் முன் விழுந்து, 'ஜாதிபேதங்களையெல்லாம் கடந்தவன் நீ, மாடு மேய்க்கும் குலத்தோரை சமமாய் நடத்தியவன் நீ. உன் போலவே ஜாதிபேதங்களை பாராத நடந்த எங்களுக்கு நிகழும் அநீதிக்கு ஒரு தீர்ப்பு சொல்லாது இந்த தேர் இங்கிருந்து நகராது' என ஆணையிட்டு கதறுகிறாள். அதன் பின், எவ்வளவு பேர் வலிந்து இழுத்தும், போராடியும் தேர் நகர மறுக்கிறது. தம் தவறை உணர்ந்து, பெரிய நம்பியை அர்ச்சகர் தோளில் சுமந்து கொண்டு தேரில் அமர்த்திய பின்னரே தேர் நகர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. ।


அப்படியெனில் சாஸ்திர சம்பிரதாயங்களே வேண்டாமே, எல்லாவற்றையும் தளர்த்தி விடலாம், அது தான் எழுச்சி, அது தான் மறுமலர்ச்சி என பேசுவதும் தேவையற்து। ஜாதிக்கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் தேவை தான். எல்லாமே தளர்த்தி விட்டால், பின்ஒழுக்கம் கட்டுப்பாடு தளர்ந்து மனிதன் 'எப்படியும் வாழலாம்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவான்.இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளெல்லாம் ஒழுக்கத்திற்காகவும், வழிவகுக்கும் பொருட்டும், அர்த்தமுள்ளதாக படைக்கப்பட்ட ஒன்று. அதை மீறுவது சிறந்ததன்று. "எல்லோரும் மனித ஜாதி" என்ற நிலை, மனதால் பிறரை வித்தியாசமின்றி நடத்தும் நிலை, பலருக்கு சரி வருவதில்லை. அது ஞானமார்கத்தின் பால் செல்லும் மனிதர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த நிலையில் இல்லாத ஒருவர் அப்படிப்பட்ட சிந்தனையை புகுத்திக்கொண்டு ஒழுக்கக்கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளுதல் வாழும் வகைக்கு ஊறு விளைவிக்கும்.

எனினும் ஜாதியும் மதமும் மனிதனை நல்வழிப்படுத்தவும், வாழ்வை சீராக அமைக்கவும் உருவாக்கப்பட்டது என்பதை நினவில் கொண்டு, தேவையான பொழுது சில ஜாதிகோட்பாடுகளுக்கு வளைந்து கொடுப்பதில் தவறில்லை. மனிதநேயத்தின் முன் ஜாதி மத கோட்பாடுகள் தளர்ந்து விடுவது இயற்கை.