October 27, 2022

Lord Vinayaka guided Sambandhar (short incident at thErezhundhur) (தெய்வத்தின் குரல்)

சம்பந்தர் குமாரஸ்வாமி அவதாரம்.

..
தேரழுந்தூர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தமிழ் கவிச் சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். அங்கே ஸ்வாமிக்கு வேதபுரீச்வரர் என்றே
பேராயிருப்பதால் ஊருக்கே வேதபுரி என்று இன்னொரு பேர் இருந்திருக்கணும். அந்த வேதபுரியில்தான் தமிழின் சக்கரவர்த்திக் கவி பிறந்திருக்கிறார் அங்கே "ஞான ஸம்பந்த விநாயகர்" என்றே ஒரு பிள்ளையார் இருக்கிறார்.
.
சம்பந்தரின் பாடல் பெற்ற அந்த ஸ்தலம் வைஷ்ணவர்களின் திவ்ய தேசத்திலும் ஒன்று. ஆமருவியப்பன் என்றும் கோஸகர் என்றும் ப்ரக்யாதி வாய்ந்த பெருமாள் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறார்.
.
ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அந்த ஊருக்குப் போனபோது இரண்டு பக்கங்களில் இரண்டு கோபுரங்கள் தெரிந்தது. ஒன்று ஈச்வரன் கோவில்.
இன்னொன்று பெருமாள் கோவில்.
.
அனன்யமான பக்தியை - அதாவது, ஒரு தெய்வத்திடம் மட்டுமே மனஸைப் பூர்ணமாக அர்ப்பணித்துச் செய்கிற பக்தியை - ஈச்வரனிடமே வைக்கவேண்டுமன்று தான் அவருக்கு அதிகாரம் சிவ பக்தியை வளர்த்துக் கொடுக்கவே அதிகார புருஷராக அவதாரம் செய்திருந்தவர் அவர். அதனால் கண்ணுக்குத் தெரிந்த இரண்டு கோவிலில் எது சிவாலயம் என்று தெரியாமல் அவர் கொஞ்சம் குழம்பினார். அப்போது இந்தப் பிள்ளையார்தான் அவருக்குக் கோவிலை அடையாளம் காட்டினார். அதனால் 'வழிகாட்டி விநாயகர்' என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.
.
ரொம்பவும் ஸந்தோஷத்துடன் சிவாலயம் சென்று பதிகம் பாடின ஸம்பந்தர் ஸ்வாமியிடம், "எனக்கு வழிகாட்டியது பிள்ளையார்தான் என்று
என்றென்றைக்கும் லோகம் நினைவு வைத்துக் கொள்ளும்படியாக அவருக்கு என் பெயரையே சூட்ட வேணும். அதோடு, நீங்கள் ஆர்த்ரா (ஆருத்ரா) தர்சனமும் அந்த ஸந்நதியில்தான் மண்டகப்படி நடத்திக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
.
அதனால்தான் அங்கே அந்தப் பிள்ளையாருக்கு 'ஆளுடைய பிள்ளையார்' என்றே சொல்லப்படும் ஞானஸம்பந்தரின் பேர். அந்த ஊர் சிவன் கோவில் நடராஜாவுக்குத் திருவாதிரையின் போது இன்றைக்கும் அங்கேதான் ஆர்த்ரா தர்சன வைபவம் நடத்தப்படுகிறது.
.
Chapter: சம்பந்தருடன் சம்பந்தம் Volume 7
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment