October 31, 2022

சுந்தரருக்கு பொன்னின் மாற்று உரைத்த பிள்ளையார் (தெய்வத்தின் குரல்)

 #Deivathin_kural Volume 7:

***************************
Leelas of the Lord (shiva) and Ganesha's assistance for Sundarar (short cute story)
------------------------------------------------
ஃப்ரெண்ட் என்கிற முறையிலே ஸுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) ஸ்வாமிகிட்டே (ஈசனிடம்) எதை வேணாலும் கேட்பார். பரவை நாச்சியார் என்று அவருக்கு ப்ரியாமானவள். அவள் ஸுந்தரமூர்த்திகளின் ஊரான திருவாரூர் கோவிலில் நாட்யம் பண்ணுகிறவர்களில் பரம பக்தையான ஒரு உத்தமி. ரொம்பவும் தானதர்மிஷ்டை. அவள் வாரிக் கொடுக்கிறதற்காக ஸுந்தரர் அப்பப்போ "பொன்னு தா", "நெல்லு தா" என்றெல்லாம் ஸ்வாமியிடம் நச்சரித்துப் பெற்றுக் கொள்வார்.
.
ஒருமுறை விருத்தாசலத்திலேயும் அவர் பொன் கேட்டு, ஸ்வாமியும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். ஸுந்தரர் அதோடு விடாமல் "கொடுத்தது மட்டும் போறாது. இதைக் காபந்து பண்ணி எடுத்துண்டு நான் ஊர் ஊராப் போயத் திருவாரூர் சேருகிறது கஷ்டம். ஆனதாலே இதை நீயே எப்படியாவது அங்கே சேர்த்திடு" என்றார்.
.
ஸ்வாமியும் "ஸரி" என்றார். ஆனால் கொஞ்சம் லீலை பண்ண நினைத்து, "இந்தப் பொன்னை இங்கே ஓடற மணிமுத்தாற்றிலே போட்டுடு. அப்பறம் ஊர் ஊரா என்னைப் பாடிண்டு திருவாரூருக்குப் போய் அங்கே கமலாலயத்திலே - அதுதான் அங்கே உள்ள பிரஸித்தி பெற்ற திருக்குளம் - ஈசான்ய 'வடகிழக்கு' மூலையிலிலேருந்து கலெக்ட் பண்ணிக்கோ" என்றார்.
.
"அப்படியே" என்று மணிமுத்தாற்றிலே பொன் மூட்டையைப் போடப் போன ஸுந்தரருக்கு ஒரு ஸந்தேஹம் வந்தது. "நாம் ஸ்வாமியை படுத்தியெடுக்கிறோம் என்கிறதாலே, ஸ்வாமி இங்கே உசந்த மாற்றுத் தங்கமாக் குடுத்துட்டு கமலாலயத்தில எடுக்கறப்போ மாற்று கொறைச்சுடப்போறார்" என்று நினைத்தார். இரண்டு இடத்திலேயும் உரைத்து மாற்றுப் பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்று நினைத்தார்.
.
உடனே அவருக்கு ஸஹாயம் செய்வதற்காகப் பிள்ளையார் வந்து நின்றார். பொன்னை உரைத்துப் பார்த்து, பத்தரை மாற்று - 24 காரட் - என்று - 'ஸர்டிஃபை' பண்ணினார். விருத்தாசலம் கோவிலில் அறுபத்து மூவருக்குப் பக்கத்தில் 'மாற்றுரைத்த பிள்ளையார்' என்றே அவர் இருக்கிறார்,
.
அந்தப் பொன்னில், பின்னாடி 'கம்பேர்' பண்ணுவதற்காக ஸாம்பிளாக ' ஒரு துணுக்கை ஸுந்தரர் வெட்டியெடுத்துக் கொண்டு மூட்டையை அப்படியே மணிமுத்தாற்றில் போட்டு விட்டார். அப்புறம் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் பாடிக்கொண்டே போய்த் திருவாரூரை அடைந்தார்.
.
பரவை நாச்சியாரைக் கமலாலயத்தின் ஈசான்யத்தில் படித்துறையில் நிறுத்தி விட்டுக் பொன்னை எடுப்பதற்காக குளத்துக்குள் இறங்கினார். இவர் நினைக்காததை ஸ்வாமி விளையாடினார். இவர் தேடு தேடு என்று தேடியும் பொன் மூட்டையே அகப்படவில்லை!
.
பரவையானால், "எங்கேயோ ஆத்துலே போட்டுட்டு இங்கே கொளத்துலே தேடறீரே ஸ்வாமி" என்று பரிஹாஸம் பண்ணினாள். அவள் சொன்னது பிற்பாடு வசனமே ஆகிவிட்டது! ஸுந்தரருக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. உணர்ச்சி ஜாஸ்தியானால் அவருக்குப் பாட வந்துவிடும். "பொன் செய்த மேனியினீர்!" என்றே ஆரம்பித்துப் பாடினார். (பிறிதொரு சமயத்தில்) "பொன்னார் மேனியனே!" பாடினதும் ஸுந்தரர்தான்.
.
ஸ்வாமி இவருடைய பாட்டைப் பெறணுமென்றே தான் சோதித்தது இவர் பாடினவுடனே பொன் அகப்படும்படிப் பண்ணிவிட்டார்! இங்கேயும் பிள்ளையார்தான் வந்து மாற்றுப் பார்த்தார். அதனால் திருவாரூரிலும் ஒரு மாற்றுரைத்த விநாயகர் உண்டு. ஸுந்தரர் பயந்த விளையாட்டையும் ஸ்வாமி இப்போது பண்ணியிருந்தார்!மச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்று குறைந்திருந்தது!14 காரட்!
.
பாட்டு ப்ரியரை ஸுந்தரர் மறுபடி ஸ்துதித்தார். ஸ்வாமியும் பதினாலை இருபத்து நாலாகவே மாற்றிக் கொடுத்தார்.
.
Chapter: சுந்தரருக்கு அருள் (VOLUME 7)
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment