October 01, 2022

அம்பாள் திருவடி மகிமை ( #Deivathin_kural Volume 6: )

Thiruvadi Mahimai




திருவடித் தூளி என்னவெல்லாம் அநுக்ரஹம் செய்கிறதென்று மூன்றாம் ச்லோகத்தில் சொல்கிறார். ப்ரபஞ்சத்திலுள்ள ஜீவர்களுக்கு அது எப்படியெல்லாம் அநுக்ரஹிக்கிறது; ப்ரபஞ்சத்திலிருந்தே விடுவித்தும் அநுக்ரஹிக்கிறது என்று சொல்கிறார்.
.
அவித்யா என்றால் அஞ்ஞானம். அது ஒரு பெரிய இருட்டு; ‘திமிரம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருக்கும் இருட்டு. ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது. இப்படி அஞ்ஞானியாக இருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின் பாததூளி கொடுக்கிறது.
.
அவித்யை என்பது ஆத்மாவைத் தெரிந்து கொண்ட மஹான்களைத் தவிர பாக்கி அத்தனை பேரையுமே பிடித்திருப்பது. மஹா புத்திமான்கள், கெட்டிகாரர்களுங்கூட அவித்யையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். '
.
அவர்கள் அறிவு வறண்டு போயிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அதற்குள்ளே அம்பாளின் பாததூளி ஒரு தேனான ப்ரவாஹத்தை ஃபௌன்டனாகப் பீய்ச்சியடித்து பசுமையாகப் பண்ணுகிறது. தேனென்றால் அது ஒரு புஷ்பத்திலேதானே ஊறும்? இங்கே அப்படிப்பட்ட புஷ்பம் எது? எதுவென்றால், 'ஜீவ ஓட்டமுள்ள அறிவென்கிற பூங்கொத்து'. சைதன்யம் என்பது சித் என்கிற பரம ஞானந்தான். அதுவே மந்த புத்திகாரர்களுக்கு புத்திப் பிரகாசத்தை தேனாகப் பாய்ச்சுகிற பூங்கொத்தாக இருக்கிறது.
.
சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதை எல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும் தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். நாம் என்ன இஷ்டப்பட்டாலும் அதை உண்டாக்கிக் கொடுத்துவிடும்.
.
இப்படி மூன்று இருக்கின்றன– காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று.
..
சிந்தாமணி அசேதனமான ஜட பதார்த்தத்தைச் சேர்ந்தது – கல்லு, மண்ணு மாதிரியான பதார்த்த வகை.
.
கல்பக வ்ருக்ஷம் சேதனமும் ஜடமும் சேர்ந்த தாவர வகை. தாவரங்கள் ஜலத்தைக் குடிக்கிறது, வேர் கிளை என்று வளர்கிறது, இனவிருத்தி பண்ணிக் கொள்கிறது ஆகிய அம்சங்களால் சேதன ஜாதியில் வருகின்றன. ஆனால் அவை இருந்த இடத்தை விட்டு நடக்க முடியாது;
காமதேநு பூர்ணமான சேதன ஜீவன். ரூபத்தில் மிருகமான பசுவாயிருப்பது. அறிவிலோ மநுஷ்யர்களுக்கும் மேலே திவ்யமான நிலையிலிருப்பது. இப்படி, இஷ்டத்தைக் கொடுப்பதில் மூன்று தினுஸான ஸ்ருஷ்டியினங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று. Animal Kingdom , Vegetable Kingdom , Mineral Kingdom என்ற மூன்றில் ஒவ்வொன்றிலும் ஸகல இஷ்ட பூர்த்தி பண்ணுவதாகக் காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று ஒவ்வொன்று இருக்கின்றன.
.
அதில் அம்பாளின் பாததூளி தரித்ரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது.
இந்த ஸெளந்தர்ய லஹரியிலேயே சிந்தாமணிகளைக் கோத்துச் செய்த ஜப மாலையையே உருட்டிக் கொண்டு சில மஹா பாக்யசாலிகள் அம்பாள் மந்திரத்தை ஜபிக்கிறார்களென்று வருகிறது: ஒரு சிந்தாமணியே கேட்டதையெல்லாம் கொடுத்து விடும். கேட்டதற்கும் மேலே எத்தனையோ பங்கு [மடங்கு] அம்பாள் பாததூளி கொடுக்குமாதலால் பல சிந்தாமணிகளைக் கோத்த மாலையாக அதைச் சொல்லியிருக்கிறார்.
.
கல்பக வ்ருக்ஷம் பற்றியும் சொல்லியிருக்கிறார். அதுவும் பாத மஹிமையைச் சொல்வதுதான். கல்பகம் மாதிரியே இன்னும் நாலு தேவலோக விருக்ஷங்களும் கேட்டதையெல்லாம் கொடுப்பவையாதலால் எல்லாவற்றையும் சேர்த்து ‘தேவலோக தருக்கள்’ என்கிறார்.
.
அந்த நாலு என்னவென்றால்
பாரிஜாதம் ஒன்று.
மந்தாரம் இன்னொன்று.
ஸந்தானம்,
ஹரிசந்தனம் என்பவை பாக்கி இரண்டு [தெய்விகமான மர வகைகள்]:
.
என்ன சொல்கிறாரென்றால், கல்பக விருக்ஷம் முதலான ஐந்தும் அதன் கீழே வந்து நிற்பவர்களுக்கு அந்த ஸமயத்தில் மாத்திரம் தங்கள் கிளை நுனியிலுள்ள துளிர்கள் மூலம் இஷ்ட பூர்த்தி தருகின்றன. தேவலோகவாஸிகள் மாத்திரந்தான் அப்படி அந்த விருக்ஷங்களுக்குக் கீழே போய் நிற்க முடியும். ஆனால் ஸர்வ ஜனங்களுக்குமே, உன் பாதங்கள் ஸதாகாலமும் இஷ்ட பூர்த்தி தருகின்றன” — என்று சொல்லி, இன்னும் சில சமத்காரங்களும் பண்ணியிருக்கிறார்.
.
இப்படியாக, அம்பாளின் பாததூளி அவித்யை இருட்டுக்கு ஸூர்யோதயமாயும், ஜடத் தன்மை போக்கும் சைதன்யத் தேனாகவும், தரித்ரம் போக்கும் சிந்தாமணியாகவும் இருக்கிறது.
.
இன்னும் என்ன பண்ணுகிறது அந்தப் பாததூளி? நமக்கு முக்யமாகத் தெரிவது அறிவாளியாவதும், ஐச்வர்யவானாவதுந்தான். ஆனால் ஆசார்யாளுக்கு முக்யம் நம்முடைய அவித்யை போய் நாம் ஸம்ஸார நிவ்ருத்தி பெறுவதுதான்.
.
‘பிறவிப் பெருங்கடல்‘ என்று திருவள்ளுவர் சொல்கிறாரே, அதுதான் ‘ஜன்ம ஜலதி’. ‘பொய்ம் மாயப் பெருங்கடல்‘ என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிற ஸம்ஸார ஸாகரமும் அதுதான். அதிலே நாம் அப்படியே முழுகிப் போயிருக்கிறோம். ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிப் போனவர்களுக்கு அம்பாளுடைய பாததூளி என்னவாக இருக்கிறது என்றால், – ”முரரிபு வராஹஸ்ய தம்ஷ்ட்ரா பவதி”: வராஹமாக வந்த மஹாவிஷ்ணுவின் கோரைப் பல்லாக இருக்கிறது. ‘தம்ஷ்ட்ரம்’ என்றால் கோரைப் பல்.
.
வராஹாவதாரத்தின் கோரைப் பல்லாக இருக்கிறதென்று சொன்னால் என்ன அர்த்தம்? சம்ஸார ஸாகரத்தில் முழுகியுள்ள நம்மையெல்லாம் அதிலிருந்து வெளியிலே கொண்டுவந்து தூக்கி நிறுத்தும் கோரைப் பல்லாக அம்பாளின் சரண பாம்ஸு [பாததூளி] இருக்கிறது:
.
Chapter: இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment