December 26, 2011

அரசனாக மட்டும் வாழ்ந்த ராமன்




ராமனின் நிலை அரச குலத்தில் பிறந்த நீதி வழுவாத மன்னனின் நிலையாய் இருக்கிறது. விபீஷணன் சரணாகதி அடைகிறான். விபீஷணன் உத்தமமான தம்பியாக செயல்படவில்லை "இவனை நம்பலாமா" என்று கேள்வியை எழுப்புகின்றனர். அதற்கு ராமன், "எல்லா சகோதரர்களும் பரதனைப் போல் இருப்பதில்லை, எல்லா பிள்ளைகளும் என்னைப் போலும் இருப்பதில்லை" என்கிறார்.  விபீஷனனுக்கு ராஜ்ஜியத்தின் மேல் ஆசை வந்ததாக கருதும் ராமன், 'ஒருவனுக்கு உயர்வு வந்தால் மாற்றானுக்கு அதுவும் உறவினனுக்குப் பொறுக்காது'  என்று கூறுகிறார்.


சொல்லக்கூடிய அளவு உயரிய பண்பு அல்லாதவனான விபீஷணனை ராமன் ஏன் காப்பாற்ற வெண்டும் என்ற வினா எழும். அதற்கும் அவரேவிளக்கம் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. "சரணாகதி என்று வந்தவன் தவறியவனே ஆனாலும், காப்பாற்றுவது என் தர்மம்" என்கிறார். இதை அரசன் சொன்னதாகவும் கொள்ளலாம், மேன்மையான இறைவனுக்குறிய குணங்கள் கொண்ட மனிதன் கூறியதாகவும் ஏற்றுக்கொள்ளலாம். இறைவன் கூறியதாக ஏற்றுக்கொள்ளல் கடினம் ஏனென்றால் ராமனுக்கு தான் இறையின் அம்சம் என்றெல்லாம் எண்ணம் இருந்ததாக கூறப்படவில்லை. அனைவரும் நினைவூட்டினாலும் அவர் மனிதனாகவே தன்னை எண்ணி வாழ்ந்ததாகவே குறிப்பு இருக்கிறது.

ராமன் மனிதனுக்குறிய குணங்கள் பெற்றிருந்தான் என்பதற்கு சீதையின் அக்னிப்ரவேசம் முதலியவை சான்று.  பொதுமக்களை மனதில் கொண்டு, சீதையை தன் பல்லக்கில் ஏற்ற மறுத்த ராமன்,  சீதையை களங்கமுள்ள சரித்திரம் கொண்டவளாகவும், இனி அவள் வேறு யாருடனும் தன் வாழ்வை தொடரலாம் என்றெல்லாம் கடுமையாக பேசுவதாக குறிப்பு உள்ளது. அதன் பின் சீதா அக்னி பிரவேசம் செய்ய, அக்னி தேவன் அவள் கற்புக்கு சான்று சொன்ன பிறகு, தனக்கு அவள் கற்பின் தன்மை தெரியும், உலகறியச் செய்யவே இந்தச் சம்பவம் என்று ராமன் சொல்கிறார். எனினும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சீதையை சாடியிருக்கிறார் என்றே குறிப்பு கூறுகிறது.

இது தொடர்கதையானதும், எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பத்ரன் என்ற அரசாங்க அலுவலன், நகர்வலம் வந்த பின் கொணர்ந்த செய்தியில், மக்கள் ராமன் சீதையை ஏற்றுக்கொண்டதை பற்றி அவதூராக பேசியதாக தயங்கியவாறே சொல்கிறான். உடனே லக்ஷ்மணனைக் கொண்டு சீதையை கங்கைக்கரையில் விட்டு வரச் சொல்லி அனுப்புகிறார். ரிஷிகள் ஆசிரமத்துக்கு செல்ல அவளுக்கு பிரியம் இருப்பதை நினைவுறுத்தி அழைத்து செல்ல ஆணையிடுகிறார். சீதாவுக்கு தான் எதற்காக சென்று கொண்டிருக்கிறோம் என்ற நிலைமையே புரியாதது மிகக் கொடுமை. கங்கைக்கரையில் அவளுக்கு உண்மை தெரியவந்ததும் கதறுகிறாள். தன் சேலை விலக்கி வயிற்றை காட்டி "நான் முன்னமே கர்பமுற்றவள் இங்கு வந்து கர்பமுற்றதாக உன் தமயன் நினைக்க வேண்டாம்" என்று அலறுகிறாள். லக்ஷ்மணன் துடித்துப் போகிறான்.

லவனும் குசனும் ராமன் சபையேறி பாடல் பாடிய பின்னர் ராமன் இறுதியாக சீதையை கண்ட போதும் கூட, வால்மீகி முனிவர் "சீதா களங்கமுள்ளவளென்றால் நான் செய்த தபஸ் எல்லாம் வீணாக கலைந்து போகும்" என்று ராமனிடம் கூறுகிறார். அப்பொழுதும் ராமன் ஊரறிய சபதம் செய்ய வேண்டுமாய் கேட்க, சீதை பூமி மாதாவை தன்னை ரக்ஷிக்குமாறு  வேண்டுகிறாள். பூமியைப் பிளந்து சிம்மான்சனம் எழுந்து வர, உள்ளே அமிழ்ந்துவிடுகிறாள் சீதா. அதை கண்ணுற்ற ராமன் கதறுகிறார்.

இதையெல்லாம் ராஜநீதிக்கு உட்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். ராஜாவின் மனைவி சிறந்த உதாரணமாக, களங்கத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டிய கடமையில் தள்ளப்படுகிறாள். ஊரறிய நிரூபிப்பதும் பிரஜையின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து தன் விருப்பு வெறுப்பை தள்ளிப் போடுவதுமான ராஜ தர்மம்.   சுய வாழ்கையில் இழுக்கு வராமல்   கவனித்துக் கொண்டாலன்றி  பிரஜைகளுக்கு ராஜாவின் மேல் மரியாதையும் ஒப்புதலும் பிறக்காது. ஊரின் நன்மைகாக தனிமனித ஆசாபாசங்கள் விட்டுவிட வேண்டிய கட்டாயம் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சமாதானம் செய்துகொள்ளலாம்.


(சோவின் எங்கே பிராமணன் குறிப்பிலிருந்து தொகுக்கப்பட்டது)


இதை  தொகுத்த பின்பு எனக்கு ஒன்றே ஒன்று தோன்றுகிறது. இறைவி என்பதால் அல்ல, பெண் எனபதால் அல்ல, பெண்ணுக்கு மட்டுமே கற்பு சொந்தமா என்ற  வாதத்தில் நான் இறங்கி நேரம் விரையமாக்க விரும்பவில்லை.    ஆனால் ஒரு மனுஷ ஜன்மாவாக...பாவம் சீதா :(



17 comments:

  1. முற்றிலும் உண்மை. இதுபோன்றவைகளைக் கண்டுதான் பாரதி ரௌத்திரமாக ‘கற்பு நெறியை இருபாலருக்கும் பொதுவினில் வைப்போம்’ என்றார். அரசனாக ராமன் உயர்ந்திருந்தாலும் கணவனாக கடமையில் தவறியவன்தான் என்பது என் எண்ணம் ஷக்தி மேம்! சரிதானா...

    ReplyDelete
  2. கற்பனைக் கதைகளில் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும்
    போது எந்தக் குறையும் இல்லாமல் சித்தரிக்கப்படும்
    கதாமாந்தர்களைக் காண்பது அரிது. அப்படி இருந்தால் கதையின் சுவை குறையும். ராமாயணமோ பாரதமோ விதிவிலக்கல்ல. இந்த பதிவில் உங்கள் அணுகுமுறை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி ஜி.எம்.பி சார், கணேஷ்.

    ராமன் நல்ல கணவனாக இருந்தானா என்பதை இரு கோணத்தில் பார்க்கலாம். அவனும் கற்புள்ளவனாக ஏக பத்தினி விரதானாக வாழ்ந்து இருந்தாலும், தீப்பிழம்பாய் வார்த்தைகள் ஏவியிருக்கிறான் என்பதில் வருத்தம்.

    கானகத்தில் வாழ்ந்த சில காலமே அவர்கள் வாழ்வில் இனிய காலம் போலும். "சீதா கல்யாண வைபோகமே" என்று கூறி இக்காலத்தில் பாடுவது யோசிக்க வேண்டியது தான். கணவன் தனக்கு மட்டுமே உரியவன் என்ற திருப்தி மட்டுமே சுமந்து, அவள் தாங்கிய துன்பம் சொல்லி மாளாது.

    ReplyDelete
  4. //கதைகளில் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும்
    போது எந்தக் குறையும் இல்லாமல் சித்தரிக்கப்படும்
    கதாமாந்தர்களைக் காண்பது //

    கதையோ நிஜமோ, "மிகச் சரியான ஒரு மனிதன்" பிறக்க முடியுமா என்பது சந்தேகம். இறையம்சம் இருந்தவர்களும் அவரவர்க்கேற்ப குறைகளுடனே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்......

    "குறையில்லாத மனுஷன் யாரு" மனுஷன் மட்டுமல்ல, குறையில்லாத தோன்றலே இல்லை.

    ReplyDelete
  5. மிக நன்றாக இராமயணத்தை வெவ்வேறு கோணங்களில் அலசியுள்ளீர்கள்.

    //ஆனால் ஒரு மனுஷ ஜன்மாவாக...பாவம் சீதா :(
    //

    ஆம் ஸீதையின் இதுபோன்ற நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது.;((

    [“சோ” அவர்களின் எங்கே பிராமணன்? எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. எல்லோரையும் நன்றாகக் குழப்பி ஒரு கலக்குக் கலக்கி விடுவார். அனைவரையும் அனைத்தையும் அனைத்துக் கோணங்களிலும் ஆராய வைத்துவிடுவார்.]

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள். பிரியமுள்ள vgk

    ReplyDelete
  6. நன்றி வை.கோ sir. இந்த தொலைக்காட்சி தொடரில், சோவின் ஈடுபாடு,சொல்லபட்ட விஷயங்களில் அவருக்குள்ள தெளிவு பிரமிக்க வைத்தது . கருத்துக்கு நன்றி.

    நிறைய பதிவு எழுதி விட்டேன். கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு பகுதியில் என் தொகுப்பு முடிந்து விடும்.

    ReplyDelete
  7. கற்பு என்பது இருபாலருக்கும் இணையாக பாவிக்கவேண்டும்.
    பாகுபாடு கூடாது..
    அவதாரமாக இருந்தாலும் ராமன் ஆணாதிக்கம் மிகுந்தவன்
    என்பது இந்த விஷயத்தில் தெளிவு.
    பெரும்பாற்க்கடலில் ஒரு துளி விஷம் கலந்தாலும்
    கடலுக்கு பெருமை குறைவுதானே.
    இன்னும் எத்தனையோ சீதைகள் தினமும் தீக்குளித்துக் கொண்டு தான்
    இருக்கிறார்கள்.

    அருமையான தொகுப்புக்கும்ம் அழகிய கருத்துக்கும் நன்றிகள் பல சகோதரி.

    ReplyDelete
  8. நன்றி மகேந்திரன். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  9. பதிவின் கடைசியில் உங்களின் ஆதங்கம் தான் என்னை உறுத்திற்று... அது மிக நியாயமானதே..

    "கற்பு நிலையென்று சொல்லவந் தார்இரு
    கஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
    -----------------------------------------------------------------" மகாகவி...

    ஆணெல்லாம் ஒழுக்கத்தோடு நடந்துக் கொண்டால் தான் அங்கே எந்தப் பெண்ணும் எப்படி கற்பை இழப்பால் என்றும் கேட்கிறான் மகாகவி.... இதை இவ்வளவு அழுத்தமாக திருவள்ளுவர் கூட எங்கேயும் கூறவே இல்லை மாறாக அவரும் ஒரு பக்க நியாமே பேசுகிறார். எனினும் எந்த ஒரு புலவனும் தனது காலத்திற்கு வெகு தூரமானக் கருத்துக்களை அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது என்பது அப்படிக் கூறுங்கள் நம்ம பாரதிக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கும் நேர்ந்திருக்கும் என்பதற்கும் மறுப்பேதும் கூற முடியாது.....

    கம்பன் மிகவும் கவனமாக தனது படைப்பை சமைத்து இருக்கிறான் இருந்தும் அவனின் நாயகன் ஒரு அரசன் ஏகபத்தினி விரதம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று கூறிய காரணத்தாலே... அதுவும் வைணவத் தலைவனை பெருமைப் படுத்தியதாலே சடையப்ப வல்லளைப் போன்ற செல்வப் பெருந்தகையே அவரை ஆதரிக்கும் நிலையம் இருந்திருக்கிறது... அதோடு சோழ பரணி பாடியவனுக்கேல்லாம் பொன்னும் பொருளும் தந்த அரண்மனை இவ்வளவு பெரிய இதிகாசத்தை அரங்கன் முன்னிலையிலே அரங்கேற்றிய விசயத்தைக் கூட பெரிதாக பதிந்து வைக்கவில்லை என்பது தான் கொடுமை... கம்பன் பெண்ணுக்கு முன்னுரிமையை ஆரம்பித்து நமது தமிழ் சமூகத்தில் புரட்சியை மறைமுகமாகவே ஆரம்பித்து இருக்கிறான் என்பதை பல இடங்களிலே பார்க்க முடிகிறது...
    "கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
    பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
    தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை,
    அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்".

    "பெண்மையும், பிறப்பும், பெருமையும் கற்பு எனும்
    திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
    உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்
    வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்".

    "நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!" என்று வெகுண்டு கூறினான், மெய் உணர்ந்தோர் உள்லத்தில் வீற்றிருக்கும் இறைவனாகிய இராமன்."...

    ஆனால் வால்மீகி கற்பின் கனலியான அன்னையை ராமன் வழியே நீ, இலக்குவன், பரதன், சுக்ரீவன்,விபீசணன் என்று யாரோடு வீட்டில் வேண்டுமானாலும் சென்றுத் தங்கி உன் விருப்பம் போல் வாழ்ந்துக் கொள் என்று கூறுவதாக சொல்லி.. சீதையை மட்டும் அல்ல மேற்படி யாவரையும் மட்டும் அல்ல.. raamanaiye மிகவும் அசிங்கமாக சித்தரித்து இருக்கிறார்...

    நான் கம்பராமாயணத்தை படித்துவிட்டு இப்போது தான் வால்மீகியைப் படித்துக் கொண்டிருக்கிறேன் இவைகளைக் கண்டு அதிர்ந்தும் போனேன்..

    கம்பனை இங்கே சென்று யாவரும் படியுங்கள்..

    http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/

    நம் சக்ரவர்த்தி இந்த சக்ரவர்த்தி திருமகனின் புகழையை அருமையாக ஓவியமாக தீட்டியுள்ளான்...

    சகோதிரி பின்னூட்டம் நீண்டு விட்டது.... உங்களை ஆக்கம் இன்னும் பலரை ராமகாவியத்தைப் படிக்க ஹேதுவாக அமையும்....

    பதிவும்,பகிர்வும் நன்று.. நன்றிகள் சகோதிரி..

    ReplyDelete
  10. நல்ல இடுகை சக்தி.பொறுமையாய் நன்கு எழுதி வருகிறாய்

    ReplyDelete
  11. மிக்க நன்றி ஷைலஜா :)

    ReplyDelete
  12. தமிழ்விரும்பி,

    நீங்கள் குறிப்பிட்டு கூறிய இடங்கள்...இன்னமும் கூட கம்பனையும் வால்மீகியையும் படிக்கத்த் தூண்டுகிறது. பாரதியின் புதுமையை, கம்பன் காவியத்திற்கு இன்னும் அதிகம் கிடைத்திருக்க வேண்டிய பெருமையை அழகாய் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். நன்றி.....

    வால்மீகி ராமாயணம், ராமனை அவர் வாழ்ந்த காலத்து முனிவர் எழுதிய, 'மனிதனுக்கு உரிய குணங்களுடன் கூடிய ராமனாய்', உள்ளதை உள்ளபடியே சித்தரிக்கிறது" பல இடங்களில், கம்பரின் கவித்துவமும், ராமன் மேல் அவருக்கு இருந்த இறை பக்தியும் மின்னுவதாக கம்ப ராமாயணத்தில் பக்தி அதிகம் என்பது சிலரின் பார்வை.

    So I assume we can safely say, valmiki ramanayan is more authentic? அப்படியென்றால், ராமன் சொன்ன வார்த்தைகள்.....ரொம்பவே மனதை புண்படுத்துகிறதாக அமைகிறது... :)

    ReplyDelete
  13. ஒரு அரசன் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற கோணத்தில் இது ராஜதர்மம் கூட இல்லை. மனித நியமப்படி இருந்தான் ராமன் என்பதை வேண்டுமானால் ஓரளவுக்கு ஏற்கலாம் இங்கே - காரணம், மிகச்சாதாரணமான சந்தேகப்பிராணிக் கணவனாக நடந்து கொண்டிருக்கிறான். ஆண்களுக்கு ஒரு பாடம் என்று தோன்றுகிறது. இந்தியப் புராணங்கள் பெண்களை மதிக்கவில்லை என்பது என் கருத்து.

    கற்பு பெண்களுக்கு மட்டுமா என்ற வாதம் இங்கே பொருந்துமா என்று தோன்றவில்லையே? இன்னொரு இடத்தில் - சூர்ப்பனகை சந்திப்பில் - பொருந்துமோ? ஒரு தடவை கூட ராமன் சூர்ப்பனகையிடம், 'பெண்ணே, திருமணமானவன் என்ற முறையில் இன்னொரு பெண்ணை நான் ஏறிட்டும் பாரேன்' என்று சொல்லவில்லை. மாறாக திருமணமான அண்ணனும் தம்பியும் flirt. அரக்கப் பெண்தானே என்ற நினைப்போ?

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை,

    பல இடங்களில் ஏனைய பலருக்கும் உதாரணமாய் உயர்ந்த மனிதனாக பார்த்தாலும், சீதையை பொருத்த வரை பெரும் துக்கத்தையே பரிசளித்திருக்கிறான்.

    நான் முன் கூறியது போல், தோன்றலாகிப் போன எதுவுமே (இறைவன் உட்பட) நிறை குறைகளுக்கு கட்டுப்பட்டதே என்பது என் கருத்து. என்ன...சதவிகிதம் மாறும்.

    ReplyDelete
  15. ஆனால் ஒரு மனுஷ ஜன்மாவாக...பாவம் சீதா :(

    ஆம். இந்த உணர்வு இருந்தால் (எப்போதோ அவதாரம் செய்த ராமன் இருக்கட்டும்) இந்த நாள் மனிதர்கள் ‘செய்யக் கூடாதது’ எது என்று புரிந்து கொள்ளலாம் இல்லையா..

    ReplyDelete
  16. // இந்த நாள் மனிதர்கள் ‘செய்யக் கூடாதது’ எது என்று புரிந்து கொள்ளலாம் இல்லையா..
    ///

    ஆம். நிச்சயமாக. ஆனாலும் இந்த நாட்களில் அதிகபட்சமாக இது தான் தொடருகிறது. என்ன திரும்ப பதில் பேச பெண்களும் ரெடி.

    வாருங்கள் ரிஷபன். கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete
  17. பெண் அடிமைத்தனம் இருந்த காலம் எப்படி இருந்து இருக்கும் என யூகிக்க முடிகிறது!

    ReplyDelete