July 08, 2022

பிரவ்ருத்தி நிவ்ருத்தி (கர்மகாண்டமும் ஞானகாண்டமும்) (From Deivathin kural)

வேதங்கள் வகுத்துள்ள இந்த சநாதன தர்மத்தில் இரண்டு மார்க்கங்கள் — ப்ரவ்ருத்தி மார்க்கமென்றும், நிவ்ருத்தி மார்க்கமென்றும். 

லோக வாழ்க்கையை நன்றாக, தர்மமாக நடத்துவதற்கு ப்ரவ்ருத்தி மார்க்கம். 

லோக வாழ்க்கையை விட்டுவிட்டு, அதை முடித்து விட்டு பரமாத்மாவோடு ஐக்யமாகி ஜனன மரணத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு நிவ்ருத்தி மார்க்கம்.

தர்மமாக, அதாவது தனக்கும் நல்லதாகவும், ஜன ஸமூஹத்துக்கும் நல்லதாகவும் வேத விதிப்படி இல்லற வாழ்க்கை நடத்தி,  கர்ம அநுஷ்டானங்களைச் செய்வதுதான் ப்ரவ்ருத்தி மார்க்கம். இதிலே கர்மாநுஷ்டானம் எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அந்த அளவுக்குப் புண்யம் கிடைத்து, புண்ய பலனாக சுவர்ககம் என்ற இன்ப லோகத்தில் வாஸம் கிடைக்கும். ஆனால் அந்த இன்பம் சாச்வதமல்ல.  மறுபடி இந்த மண்ணுலகிலேயே பிறக்க வேண்டியதுதான். ஆனாலும்  இது நல்ல பிறவியாக, நல்ல வசதிகள் வாய்த்த பிறவியாக இருக்கும். இந்தப் பிறவியிலும் தர்மம் தப்பாமல் வாழ்க்கை நடத்தினால் மறுபடி ஸ்வர்க போகம். முன்பு சொன்னமாதிரி, இந்த போகம் சாச்வதமல்ல.

சாச்வதமல்ல என்பது ஒரு பக்கம். அதோடுகூட அநுபவிக்கும்போதே கூட இந்த இன்பம் பூர்ணமான நிறைவைத் தருவதாக இருக்காது. ‘இனிமேலே 

எதுவும் வேண்டாம்! இந்த நிலை நிரந்தரமாக வாய்த்து விட்டதல்லவா? இதிலிருந்து கொஞ்சங்கூட விலகுவதற்கில்லை. இனியொரு குறை நமக்குக் 

கிடையாது’ என்று எப்போது ஆக முடியுமோ அப்போதுதான் நிறைவான பூர்ணானந்தம். 

பூலோகம், சுவர்கம் ஆகிய இரண்டிலுமே எத்தனைதான் ஸந்தோஷமிருந்தாலும் அது இப்படிப்பட்ட நிறைந்த ஆனந்தத்தைத் தரமுடியாது. பல தினுஸான பயம், துக்கம், காம -க்ரோதாதி இழுபறிகள் இல்லாமல் இந்த லோகங்களில் இருந்துவிட முடியாது. இந்த இன்பங்களைப் பெறுவதற்காக ஓயாமல் போராடிக் கொண்டேதானிருக்க வேண்டும்.

அது மட்டுமில்லை. இந்த இன்பங்கள் ஏதோ கண்ணுக்கு, காதுக்கு, வாய்க்கு, இன்னம்  மனஸுக்கும், அறிவுக்குங்கூட இன்ப அநுபவம் இருக்குமேயொழிய, இதற்கெல்லாமும் உள்ளே, நம்முடைய அந்தஃகரணத்துக்கும் உள்ளே இருக்கப்பட்ட ஆத்மாவுக்கு இவற்றிலே கொஞ்சமும் ஸுகாநுபவம் இருக்காது. 

பூர்ணமான உள்நிறைவைத் தருவது நிவ்ருத்தி மார்க்கம்தான். 

கர்மாக்களை விட்டு, ஜன ஸமூஹத்தை விட்டு ஸந்நியாஸியாகி ஸதா காலமும் ஆத்ம சிந்தனை, த்யானம் என்று இருப்பவன்தான் ஆத்மா ப்ரஹ்மமே என்று அறிந்து அநுபவிப்பதான, நிறைந்த நிறைவான நிலையைப் பெறுவான். ஸமாதி என்றும் ஸாக்ஷாத்காரம் என்றும் சொல்லும் அந்த நிலையொன்றுதான் ஒரு முறை கிட்டினால் அப்படியே சாச்வதமாக இருப்பது. 

ப்ரம்மம் என்று ஒன்றை இன்னொருவன் அநுபவித்து ஆனந்திப்பது அல்ல. ப்ரம்மம் என்ற ஆனந்தம்தான் ப்ரம்மானந்தம்.

நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவன் தானே அந்த ப்ரம்மம் என்ற ஆனந்தமாக ஆகிவிடுகிறான். அங்கேதான் பயமேயில்லை, துக்கமில்லை, காமமும் க்ரோதமும் போட்டு இழுக்கிறதும் இல்லை. ஓயாத முயற்சியும் வேண்டியிருப்பதில்லை. ஸித்தியடைவதற்கு முன்னாடி ரொம்பப் பாடுபடத்தான் வேண்டும். போராட்டம் என்றேனே, அது பெரிசாக இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு தரம் அந்த லக்ஷ்யத்தை அடைந்துவிட்டால் போதும். அப்புறம் அதிலிருந்து நழுவுவது, விலகுவது என்பது கிடையாது.

அதாவது, நிவ்ருத்தி மார்க்கத்தினால்தான் நித்யமான பேரின்பம்.  ப்ரவ்ருத்தியில் பெறுவதெல்லாம் நிலையற்ற சிற்றின்பம்தான்.

‘ப்ர-வ்ருத்தி’ என்றாலே அதுதான் அர்த்தம்; ‘வெளியிலே போய்க்கொண்டேயிருப்பது’ என்றே அர்த்தம்.

இதற்கு எதிர்ப்பதம் ‘நி-வ்ருத்தி’.  ‘திரும்பி வருவது’ தான் ‘நிவ்ருத்தி’ — ஆத்மாவுக்கே திரும்பி வந்துவிடுவது.

ஆனாலும் லோகம், ப்ரஜைகள் என்று ஈச்வரன் நாடகம் ஆடுவதில், ‘ஸந்நியாஸியாகப் போ; காட்டுக்குப்போய் மூக்கைப் பிடிச்சுக்கோ; அப்படியே ‘ஆத்மா, ஆத்மா’ன்னு விசாரம் பண்ணி, அதிலேயே தோஞ்சு போ’ என்றால் ரொம்பப் பேர் அதைக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. 

எல்லாவற்றுக்கும் காரணமான வஸ்துவைத் தெரிந்துகொண்டு–ப்ரஹ்மம், ப்ரஹ்மம் என்னும் அதுதான் தன்னுடைய ஆத்மா என்று தெரிந்துகொண்டு–அதிலேயே ஐக்யமாகிவிட வேண்டுமென்ற தாபம் பெருவாரியானவர்களுக்கு ஏற்படுவதேயில்லை. இந்தத் தாபத்திற்கு ‘முமுக்ஷுத்வம்’ என்று பெயர். ‘விடுபட வேண்டும் என்று ஆசைப்படுவது’ தான் முமுக்ஷுத்வம். ஜனத்தொகையில் அவர்கள் ரொம்பவும் கொஞ்சமாகவே இருப்பார்கள்.

மற்றவர்கள் ஏதாவது கார்யம் செய்வதில்தான் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள்.  

முதலில் ‘கர்மயோகம்’ முதலான அத்யாயங்களில் சொல்லும்போது பகவான், ஜனங்கள் அதாவது ப்ரவருத்தியிலேயே நாட்டமுடையவர்களாக இருப்பதற்குக் காரணம் ப்ரக்ருதி, ப்ரக்ருதி என்றே சொல்லி வந்தார். ப்ரக்ருதி என்றால் மாயைதான். ஸரி, மாயை என்றால் அது மட்டும் தானே ஏதோ பண்ணுகிறதா என்ன? 

ஈச்வரனேதான் அவனுடைய மாய லீலை நடக்கணுமென்றே கர்மசங்கிகளாக ப்ரவ்ருத்தியில் போகிறவர்களையும் அப்படிப் பண்ணியிருக்கிறான் என்று தெரிகிறது. ஜீவர்கள் அத்தனை பேருமே நிவ்ருத்தியில் போனால் என்ன ஆகும்? அவர்கள் ஞானத்தினால் மாயையை உடைத்தெறிந்துவிட்டு ஈச்வரனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்திலேயே ஐக்யமாகிவிடுவார்கள்.

முதலில் ஸ்ருஷ்டியில் தோன்றிய ஸநகாதிகள் நிவ்ருத்தியில் போய்விட்டதால், அப்புறம் ப்ரஜாபதிகள் என்றே ஏகமாகப் பிள்ளை, குட்டிகளைப் பெற்று பூமியை ரொப்புவதற்காக மரீசி முதலான பத்துப்பேரை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தாரென்று பாகவதத்தில் பார்க்கிறோம். ஆகையினால் திவ்ய ஸங்கல்பமே லோகம் பூராவும் ஞானியாகப்போய், லோகத்தையே விட்டு விட்டுப்போய், அவனுடைய ட்ராமா ஸ்டேஜைக் காலியாக, பாழாகப் பண்ணிவிடக் கூடாதென்றுதான் இருக்கிறதென்று தெரிகிறது.

ஆனாலும் அதற்காக ட்ராமாவில் நடிக்கிற எல்லாரையும் தறிகெட்டு அவரவர் இஷ்டத்துக்கு ஆக்ட் பண்ண விட்டு விடலாமா? இப்படிக் கூடாது 

என்றுதான்,   ஒரே கோணா மாணாவாக ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி, ஒட்டு மொத்தமான ஸமூஹவாழ்வு 

ஒழுங்கு கெட்டுப் போகும்படி ஆவதற்கு விட்டு விடக்கூடாது. இதுகள் தனி ப்ரஜைகளாகவும் ஒரேயடியாகத் தப்புப் பண்ணிப் பாபத்தில் 

மாட்டிக்கொள்ளவிடக் கூடாது.  அவரவரும் ஸமூஹத்தில் ஈச்வரன் தங்களைப் பிறப்பித்திருக்கிற நிலைக்கு ஏற்ப இப்படியிப்படி ஸத்கார்யங்களாகப் பண்ணிக்கொண்டு போய், இந்த லோகத்திலே தாங்களும் ச்ரேயஸை அடைந்து, லோகமும் தங்களால் க்ஷேமமடையும்படியாகச் செய்துகொண்டு, அதற்கும் மேலான ஸ்வர்காதி புண்ய லோகங்களிலும் ஸந்தோஷத்தைப் பெறட்டும் என்று வழிபோட்டுக் கொடுத்தார். வேதத்தில் இந்த பாகத்துக்குக் கர்ம காண்டம் என்று பெயர். யஜ்ஞ கர்மாநுஷ்டானமெல்லாம் இதில் அடங்குவதுதான்.

நிவ்ருத்தி மார்க்கமாக மோக்ஷ ஸித்திக்கு அதே வேதத்தில் முடிவு பாகங்களிலுள்ள உபநிஷத்துக்கள் மூலமாக வழி போட்டுக் கொடுத்தார். அதற்கு 

ஞான காண்டம் என்று பெயர். அதில் தத்வோபதேசம் நிரம்ப இருக்கும். 

மோக்ஷம் வேறு, சுவர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம்.  சுவர்கம் என்பது புண்யத்தின் அளவைப் பொருத்து, அது செலவழியும் காலம் வரையில் மாத்திரம், பலவித இந்த்ரிய இன்பங்களை மாத்திரம் கொடுக்கும் லோகம்.

Chapter: ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி Volume 5 

Chapter: இருவித மக்களுக்கான இரு வழிகள் Volume 5 

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment