Hiding amruta from devas
‘கள்ளவாரணப் பிள்ளையார்’ என்று அவருக்குத் திருக்கடையூரில் திருட்டுப் பேரே இருக்கிறது. தப்புப் பண்ணிய தேவர்களிடமிருந்து அம்ருத கலசத்தை ‘அபேஸ்’ பண்ணிவிட்டு, அப்புறம் அவர்கள் தங்கள் தப்பை தெரிந்து கொண்டு பூஜை பண்ணிய பிறகு அதைக் கொடுத்தவர் அவர். இப்படி அநேக க்ஷேத்ரங்களில் விகடங்கள் பண்ணி, வேடிக்கை வேடிக்கையாய்ப் பெயர் வாங்கியவர்.
Teaching lesson to Kadukkai MErchant
‘கடுக்காய்ப் பிள்ளையார்’ என்று இப்படியொருத்தர். திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்று ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகள் விற்பனை பண்ணுவதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் ‘டோல்கேட்’ என்ற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை எனறு பொய் சொல்லி — (முன்னேற்பாடாக வண்டியில் முன்னாடியும் பின்னாடியும் கடுக்காய் மூட்டைகளும் போட்டுக் கொண்டு வந்திருந்தான்) — வரியை ஏமாற்றிவிட்டு, கொண்டு வந்து விட்டான்.
விக்நேச்வரர் நீதி நியாயம் தப்பினால் தண்டனை கொடுத்து விடுவார். அதையும் விகடமாகப் பண்ணிவிடுவார். அதனால் நிஜமாகவே ராவோடு
ராவாக எல்லா மூட்டைகளில் இருந்ததையும் கடுக்காயாகவே மாற்றிவிட்டார். மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, “ஐயோ!” என்று உட்கார்ந்து விட்டான். அப்புறம் புத்தி வந்து பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு, கடுக்காய் மறுபடி ஜாதிக்காயானால் அதற்குண்டான வரியும், வரிக்கு மேல் அபராதமும் கட்டுவதாக ஒப்புக்கொண்டான்.
.
அவரும் மனஸ் இறங்கி கடுக்காயை மாற்றிப் பழையபடியே ஜாதிக்காயாகப் பண்ணினார். தித்திக்கும் மோதகப் பிள்ளையாருக்கு அங்கே
கடுக்காய்ப் பிள்ளையாரென்று பேர் வந்துவிட்டது!
Story of Sugarcane turning bitter
‘கரும்பாயிரப் பிள்ளையார்’ என்று கும்பகோணத்தில் ஒருத்தர். என்ன கதை என்றால்: ஆதியில் அவருக்கு வராஹப் பிள்ளையாரென்று பெயராம். வராஹ அவதாரத்தின்போது பகவான் அவரை வேண்டிக் கொண்டே பூமாதேவியை ஹிரண்யாக்ஷனிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்ததால் வராஹப் பிள்ளையார் என்று பெயராம். அந்தப் பிள்ளையார் கோவில் வாசலில் ஒருநாள் ராத்ரி ஒரு கரும்பு வண்டிக்காரன் ஆலைக்குச் சரக்கு எடுத்துப் போகிற வழியில் தங்கினானாம். வண்டியில் ஆயிரம் கரும்பைக் கட்டுக் கட்டாகப் போட்டிருந்ததாம்.
Ganesha resides in Anandha Bhuvanam
விக்நேச்வரருடைய வாஸம் கருப்பஞ்சாற்று ஸமுத்ரத்துக்கு உள்ளேதான். கைலாஸம், வைகுண்டம் மாதிரி அவருக்கென்று ஒரு லோகம் உண்டு. ஆனந்த ஸ்வரூபமான அவருடைய அந்த லோகத்தின் பேர் ஆனந்த புவனம் என்பது. மஹாவிஷ்ணு க்ஷீரஸாகரத்தில் சயனித்துக் கொண்டிருக்கிறார். அம்பாள் அம்ருத ஸாகரத்துக்குள் இருக்கிற மணி த்வீபத்தில் இருக்கிறார். பிள்ளையாருடைய ஆனந்த புவனத்தைச் சுற்றி கருப்பஞ்சாற்றுக் கடல் இருக்கிறது. அவர் ரொம்பவும் ஸ்வீட் என்பதைக் கையிலிருக்கும் மோதகம் மட்டுமில்லாமல் அவரைச் சூழ்ந்திருக்கும் பெரிய ஸமுத்ரமே தெரிவித்துவிடுகிறது!
வேடிக்கையாக ஒரு பாலப்ரம்மச்சாரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து வண்டிக்காரனிடம் ஒரு கரும்பு கேட்டாராம். தரமுடியாது என்று அவன்
சொன்னானாம். போகிறவர்கள் வருகிறவர்கள், “வண்டி நிறைய இவ்வளவு வெச்சுண்டிருக்கே, அந்தக் குழந்தை வாயைத் திறந்து கேக்கறச்சே ஒன்று குடுக்கப்படாதா?” என்றார்களாம். ஏதாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளணுமென்று அவன், “இது ஒரு தினுஸுக் கரும்பு. அப்படியே சாப்பிட்டா கரிக்கும். ஆலையில் காச்சி வெல்லம் எடுக்கறப்போதான் தித்திப்பாகும்” என்று அளந்தானாம்! பிள்ளையாரும் சிரித்துக் கொண்டாராம்.
மறுநாள் அத்தனை கரும்பும் ஒரே கரிப்பாக கரிக்க ஆரம்பித்துவிட்டதாம். ஆலையில் அவன் கரும்பைக் கொண்டு போய் இறக்கியவுடன் அந்த விஷயம் தெரிந்தது. பிள்ளையார் கோவில் வாசலில் வந்து கரும்பு கேட்ட ப்ரம்மச்சாரி யாரென்று அவனுக்குப் புரிந்தது. ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டு வேண்டிக் கொண்டானாம். ஸ்வாமியும் அநுக்ரஹம் பண்ணிக் கரும்பெல்லாம் பழையபடி தித்திப்பாக மாற்றினாராம். வராஹப் பிள்ளையார் என்ற பேரும் கரும்பாயிரப் பிள்ளையார் என்று மாறிற்று.
Gracing Mukti to Avvaiyar
இப்படி விகட அமசமிருப்பதாக அநேகக் கதைகள். இந்த மாதிரி விளையாடியே அவர் மோக்ஷ பர்யந்தம் எல்லா அநுக்ரஹமும் பண்ணுவாரென்பது ஒளவையார் கதையிலிருந்து தெரிகிறது. அவளைத் தன்னுடைய தும்பிக்கையை வளைத்துத் தூக்கி, விகட விளையாட்டாக அதை அப்படியே நீட்டிக் கொண்டு போய்தான் கைலாஸத்தில் தொப்பென்று போட்டிருக்கிறார்.
Chapter: திருத்தலங்களில் விகட விநாயகர்கள் :
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
No comments:
Post a Comment