#Deivathin_kural Volume 5
இப்படிப்பட்ட சிஷ்யர்கள் ஆறாயிரம் பேரோடு ஆசார்யாள் தேசம் முழுதும் திக்விஜயம் செய்தார். திக்விஜயம் என்றால் அதுதான் திக்விஜயம்! ஞானராஜா பரதகண்டத்தின் 56 தேசங்களிலேயும் பரமதங்கள் அத்தனையையும் ஜயித்து ஸநாதன வேத தர்மத்துக்கும், அதில் குறிப்பாக அத்வைதத்துக்கும் வெற்றிக்கொடி நாட்டிய திக்விஜயம்!
எவரையும் சாக அடிக்காமல், அமரமாக ஆக்குகிற வாதச் சண்டையினாலேயே தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமுள்ள பர ஸமயவாதிகளை ஜயித்த ஆசார்யாளைப் போல ஜயசாலி லோக சரித்ரத்திலேயே இல்லை! அதனால்தான் “ஜய ஜய சங்கர” என்றே கோஷிப்பதாக, அதுவே அவருக்கு மந்த்ரம் மாதிரியாக இருப்பது.
வாதச் சண்டை என்றுகூடப் போடாமல் தர்சன மாத்திரத்திலேயே பெரும்பாலானவரை ஆகர்ஷித்து வேத வழியில் செலுத்தினார்.
மடங்கள் என்று வைத்து மதத்தை சாச்வதமாகக் காப்பாற்ற அவர் ஏற்பாடு செய்ததைத்தான் ஆர்கனைஸிங் ஸாமர்த்தியம் என்கிறார். ஆசார்யருக்கு முன்பு ஹிந்து மதத்தில் அப்படியில்லை. தனி மநுஷ்யர்களின் தபோசக்தியிலேயே மதம் வ்ருத்தியானதுதான்.
இப்போது, கூட 6000 சிஷ்யர்கள் இல்லை. மடத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் எந்த ஊரில் நன்றாக பிக்ஷை நடக்கும் என்று பார்த்தே போவதாயிருக்கிறது! ‘ஏதோ ஒரு சக்தி நடத்துகிறது; தர்மத்தைச் சொல்லிக்கொண்டு போ என்று எது இப்படி உட்கார்த்தி வைத்திருக்கிறதோ அதுவே எங்கே நம் கார்யத்துக்குத் தேவையிருக்கிறதோ அங்கே போனாலும் நடத்திக் கொடுக்கும்; அதனால் நம் தேவைக்கு யார் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்று பார்த்துக்கொண்டு போக வேண்டாம்’ என்ற ஞானம் எப்போதாவது கொஞ்சம் வருவதோடு சரி!
இப்படி லாப-நஷ்டக் கணக்குப் போட்டுக்கொண்டா ஆசார்யாள் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேசம் பூரா போனார்? ஒரு தரத்துக்கு மூன்று தரம் போனார்?
வாஸ்தவத்தில் நாளுக்கு நாள் தர்மங்களைப் பறிகொடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறது, ஐம்பது, நாற்பது, முப்பது வருஷம் முன்னாலிருந்த ஆசாரங்கள்கூட இப்போது பூதக்கண்ணாடி வைத்துத் தேடும்படி இருக்கிறது! நம் பிழைப்பு நடந்தால் போதுமென்று, “சிகை இல்லையா, ஸரி,” “மடிச்சார் இல்லையா அதுவும் ஸரி!”, “ஸூட் போட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை – இன்னம் நாமே போட்டுக்கலையோன்னோ?” என்று எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கிகொண்டு, broad-minded என்றெல்லாம் நிறையப் புகழ் மாலைகள் போட்டுக்கொண்டு- இப்படியா அவர் இருந்தார்?
அவர் பண்ணியது, இப்போது ஒன்றுமே பண்ண முடியாமல் அவர் பெயரை வைத்துக்கொண்டு புகழ்மாலையும் பாராட்டு விழாவும் பெறுவது இரண்டையும் நினைத்துப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது.
.
Chapter: அதிசயம் சாதித்த அமோக திக்விஜயம் : ஆன்மிய ஐக்கியமும் தேசிய ஐக்கியமும்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
No comments:
Post a Comment