July 29, 2022

Glories of Guru -Excerpts from Deivathin Kural

 Meaning of upadesam

‘உப’ என்பதோடு ‘தேசம்’ என்பதைச் சேர்த்திருக்கிறது. ‘தேசம்’ என்பதை வினைச் சொல்லான ‘திச்’சிலிருந்து derive பண்ணினால், ஒருத்தர் செய்ய வேண்டியதைச் சொல்வது. prefix சேர்த்துக் கொண்டு தான் ‘தேசம்’ என்பது வரும் என்றும் சொன்னேன், அவற்றில் ‘உப’ வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
.
‘உப’ என்பது பல அர்த்தங்களைக் கொடுப்பது. பல அர்த்தங்களில் ஒன்று, “கிட்ட”, “அருகில்” என்பதாகும். ‘உபநயனம்’ என்று பூணூல் கல்யாணத்தைச் சொல்வதற்கு அர்த்தம் “அருகில் கொண்டு போய் சேர்ப்பது”.
.
உப’ என்பது ஒன்றின் கிட்டே போயிருப்பதைக் காட்டும். குருவின் ‘கிட்டே’ என்னும்போதே ஒரு நெருக்கம், ப்ரியம், ப்ரேமை உண்டாகிவிடுகிறது.
‘உபதேசம்’ என்னும்போது, குரு எதைச் செய்யச் சொல்கிறாரோ அதை சிஷ்யனே செய்யும்படி விட்டுவிடாமல், அவரும் கிட்டத்தில், பக்கத்தில்
நின்று ஸஹாயம் பண்ணிச் செய்விக்கிறார் என்று தொனிக்கிறது.
.
அன்பினால் சிஷ்யன் ஹ்ருதயத்தில் குரு கிட்டேயிருந்து சொல்லிக் கொடுப்பது ‘உப’தேசம்.
.
அவர் ஒன்றைச் செய்யச் சொல்கிறார் என்றால் அந்த ஒன்று என்ன? அதுதான் முக்யமான விஷயம். ‘வாழ்க்கைப் பாதையில் இன்ன டைரக்ஷனில் போ!’ என்பதுதான் அவர் கொடுக்கும் டைரக்ஷன்! உத்தம குரு கொடுக்கும் உபதேசம் இந்த லோகத்திற்கான அநித்யமான வாழ்க்கைப் பாதையோடு முடிந்து விடாது. இதைக் கொண்டே நித்ய வாழ்க்கையான பிரஹ்ம அநுபவத்தில் சேர்வதில்தான் அவர் முடிப்பார். அதற்காக சிஷ்யன் செய்ய வேண்டியதைச் செய்யும்போது அவரும் ஸ்தூலமாகவோ ஸூக்ஷ்மமாகவோ கூடவேயிருந்து அவனுக்குப் பக்க பலம் கொடுத்துத் தாம் சொல்வதை ‘உப’தேசமாக்குவார்.
.
Role of a SadGuru

அவர் பண்ணும் உபகாரம் யாரும் பண்ண முடியாது. “கடைத்தேற வேண்டுமானால் அம்மா நமக்கு சரணமாக மாட்டாள். அதாவது அம்மாவிடம் அடைக்கலம் புகுந்தால் அவளால் நம்மை மாயைக்கு அந்தண்டை தூக்கிப் போட முடியாது. நம்மிடம் எவ்வளவோ ப்ரியம் காட்டி நமக்காக எத்தனையோ த்யாகங்களெல்லாம் செய்கிறவள்தான் அவள் என்றாலுங்கூட அவளும் மாயைச் சேற்றில்தான் இருப்பவளாகையால் அதிலிருந்து நம்மை அவளால் தூக்கிப் போட முடியாது. தூக்கினால் பளு கூடுவதில் இரண்டு பேரும் இன்னம் புதைவதாகத்தான் ஆகும்.
.
அதே மாதிரிதான் அப்பாவும் சரணமாக மாட்டார். கூடப் பிறந்தவர்கள், மற்ற பந்து மித்ராள் எவரும் சரணமாக மாட்டார்கள். குருபாதம் தான் சரணம்”
என்று ஆசார்யாள் நெஞ்சைத் தொடுவதுபோலச் சொல்கிறார்.
.
தாயார் தகப்பனார்கள் இஹ லோகத்தில் ஜன்மாவைக் கொடுத்து, இந்த லோகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த லோகத்துக்கான ஸொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இதெல்லாம் நிலையில்லாதவை. நிலையான ஸொத்தை – என்றும் அழியாத பிரஹ்ம அநுபவத்தைத் தருபவர் குருதான். “சொந்தப் பிள்ளையாட்டமா நெனச்சு ஆத்ம வித்யையை உனக்குக் கொடுத்திருக்கேம்பா’, என்று குரு சிஷ்யனிடம் உபதேச முடிவில் சொல்வதாக ரொம்பவும் touching-ஆக ‘விவேக சூடாமணி’யில் ஆசார்யர் சொல்லியிருக்கிறார்.
.
Mercy of Sadguru

சிஷ்யனுக்குப் புரிகிறமட்டும் திரும்பத் திரும்ப உபதேசிக்க வேண்டியது ஆசார்ய தர்மம் என்று ஆசார்யாள் அபிப்ராயப் பட்டிருப்பதை கீதா பாஷ்ய முடிவிலேயும் தெரிவித்திருக்கிறார்.
.
"" “நான் சொன்னதையெல்லாம் மனசு குவிந்து சரியாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று பகவான் கீதையில் விசாரிக்கிறார். ஏன் அப்படிக் கேட்டாரென்றால், தாம் சொன்னதை சிஷ்யன் பிடித்துக் கொண்டானா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காகவே பகவான் இப்படிக் கேட்பது. அப்படி இவன் பிடித்துக் கொள்ளவில்லையானால் நாம் மறுபடி வேறேதாவது உபாயம் பண்ணியாவது பிடித்துக் கொள்ளப் பண்ணணும் என்ற அபிப்ராயத்தில் தான் கேட்கிறார் """ என்று ஆச்சாரியர் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.
.
தாயார் எப்படிச் சாப்பாடு இறங்காத குழந்தைக்கு விளையாட்டு கிளையாட்டு காட்டி எப்படியாவது உள்ளே ஆஹாரத்தைப் போட்டுவிடுகிறாளோ அப்படி உபதேசம் இறங்காத சிஷ்யனுக்கும் குருவானவர் எப்பாடு பட்டாவது உள்ளே இறக்குகிறார் என்றால் அவருடைய அபார கருணை தெரிகிறது. அம்மா போடும் சாப்பாடு அந்த வேளைக்குத்தான் பிரயோஜனமாவது. அடுத்த வேளை மறுபடி பசி வந்துவிடுகிறது, பலம் குறைகிறது. குரு செய்யும் உபதேசமோ அம்ருதமாக, சாச்வதமான ஆத்ம புஷ்டியைக் கொடுத்து விடுகிறது.
.
அம்மாவின் சாப்பாட்டை விட சாச்வதமானது, அப்பாவின் ஸொத்தைவிட சாச்வதமானது குரு கொடுக்கும் உபதேசம்தான்.
.
ச(sa)ரணம் தேசிக ச(cha)ரணம்’. Saranam என்றால் அடைக்கலம்; Charanam என்றால் பாதம். “அடைக்கலம் குரு பாதமே” என்பதை “ச(sa)ரணம் தேசிக ச(cha)ரணம்” என்று சொல்லியிருக்கிறார்.
.
Chapter: ‘உப’ என்பதன் உட்பொருள்
Chapter: அன்னை தந்தைக்கும் மேல் ஆசானே !
chapter: ஆசாரிய தர்மம் :
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

July 26, 2022

Mahaperiyava's personal Experience with Lord Ganesha (Also Miracle experienced by Thukkoji )


வேலூருக்குப் போயிருந்தோம். அங்கே சேண்பாக்கம் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு பிள்ளையார், இரட்டைப் பிள்ளையார் இல்லை; பதினோரு பிள்ளையார்கள்! அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அவை சில்பி அடித்துப் பண்ணியவையல்ல; பதினொன்றும் ஸ்வயம்பு மூர்த்திகள். ஏகாதச ருத்ரர்கள் உண்டு. இங்கே ஏகாதச விநாயகர்கள் இருக்கிறார்கள். பதினொன்றும் அமைந்திருக்கும் அமைப்பு ப்ரவணவாகாரமாக இருக்கும்.
.
Story of Ganesha revealing himself to Thukkoji
நடுவாந்தரத்தில் பூமி மட்டத்தோடு மட்டமாக அந்த மூர்த்திகள் மூடிப் போயிருந்ததாம். துக்கோஜி என்ற மஹாராஷ்டிர மந்திரி அந்த வழியாக ஒரு ராத்திரி வேளையில் ஸாரட்டில் போய்க் கொண்டிருந்தாராம். ‘டக்’கென்று அச்சு முறிந்து வண்டி நின்றுவிட்டது. இறங்கிப் பார்த்தால் பூமியில் ரத்தக் கறை இருந்தது. ஆனால் ஆள் யாரையும் காணோம். என்னவென்று புரியாமல் மனஸ் கலங்கி ராத்ரி பூராவும் அங்கேயே இருந்தாராம். பிரயாணத்துக்கு இப்படி விக்னம் வந்ததே என்று வருத்தப்பட்டு, விக்நேச்வரரை ப்ரார்த்தித்துக் கொண்டு தூங்கிப் போய் விட்டார்.
.
விக்நேச்வரர் ஸ்வப்னத்தில் வந்தார். “அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் புதைந்து போயிருக்கின்றன. அதன்மேல் உன் வண்டிச்சக்கரம் இடித்ததினால்தான் ரத்தம் வந்துவிட்டது. அதைப் பற்றி வருத்தப்படாதே! கோவில் கட்டிக் கொண்டு எல்லோரும் வரப்ரஸாதியாகப் பிரகாசிக்க வேண்டும் என்கிற ஸங்கல்பத்தில் நானேதான் பண்ணுவித்தது! அங்கே கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணிப் பரம புண்ணியம் ஸம்பாதிச்சுக்கோ!” என்றார். துக்கோஜி எத்தனை வருத்தப்பட்டாரோ அதற்கு வட்டியும் முதலுமாக ஸந்தோஷப்பட்டுக் கொண்டு அப்படியே பண்ணினார்.
.
Elephant refusing to move
அந்தக் கோவில் இருக்கிற பக்கமாக நாங்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தோம். அப்போது என்ன ஆச்சு என்றால், சின்ன ஸ்வாமிகள் யானை மேல் வந்து கொண்டிருந்தார். அந்த யானை இடத்தை விட்டு மேலே போகாமல் அங்கேயே சுழண்டு சுழண்டு வந்தது. யானைப்பாகனும் மற்றவர்களுக்கும் எத்தனை தாஜா பண்ணியும் கேட்காமல் ரொம்ப நேரம் இப்படி முரண்டு பண்ணிற்று. ‘மேலேயானால் ஸ்வாமிகள் இருக்கிறார். இது இப்படிப் பண்ணுகிறதே! மதம் பிடித்து விட்டதா என்ன? கூட்டமாக ஜனங்கள் சேர்ந்திருக்கிறார்களே!’ என்று எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
.
Acharya recollecting his prayer
அப்புறம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. ‘பக்கத்திலே சேண்பாக்கம் பிள்ளையார் இருக்கிறார். அவருக்கு 108 சிதறுகாய் போடுவதாக வேண்டிக் கொண்டிருந்தோம். ஆனால் ஸமயத்தில் அது மறந்து போயிடுத்து’ என்று! மறந்து போச்சு என்றால் என்ன? அசிரத்தை என்றுதான் அர்த்தம்! பூர்ண கும்ப மரியாதை, மாலை மரியாதை ஜனங்களுடைய நமஸ்காரம் எல்லாம் நிறைய வாங்கிக் கொள்வதற்காக பவனி வருவதற்கு மறந்து போகவில்லையே! பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டதைச் செய்ய மட்டும் மறந்து போகலாமா? ஜனங்களுக்கு சிரத்தை – பக்திகளை உண்டு பண்ண வேண்டிய பொறுப்புள்ளவர்களே இப்படிப் பண்ணலாமா என்று பாடம் கற்பிக்கிறதற்காகத்தான் ஸ்வாமி இப்படிப் பண்ணியிருக்கிறார் என்று புரிந்தது. எனக்கே ஏதாவது கஷ்டம் உண்டாக்கினால்கூட அவ்வளவு மனஸில் தைக்காது எனறுதான் சின்ன ஸ்வாமிகள் ஏறி வந்த தம்முடைய ஸ்வரூபமான யானை மூலமே இடக்குப் பண்ணியிருக்கிறார் என்று தோன்றிற்று. அவர் [சின்ன ஸ்வாமிகள்] ஒன்றும் பயப்படாமல் தைரியமாகத்தான் இருந்தார். வேண்டிக் கொண்ட எனக்கும், அதைத் தெரிந்து கொண்டிருந்த கார்யஸ்தர்களுக்குந்தான் பயம், பாடம் எல்லாம்!
Divine will
உடனே பிள்ளையாருக்குச் சிதறுகாய் போட்டது. யானையும் சட்டென்று ஸரியாகித் தன் பாட்டுக்கு மேலே போக ஆரம்பித்தது. இது ப்ரத்யக்ஷத்தில் பார்த்தது.
.
கார்ய பூர்த்தி இருக்கட்டும். அதோடு, அதைவிட பக்தியானந்தம் உண்டாவது விசேஷம். ‘நாம் மறந்து போனாலும் அவ்வளவு பெரிய ஸ்வாமி – எதுவும் தேவை இல்லாதவர், நம் தேவைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவர் – நம்முடைய அல்பப் பிரார்த்தனையை மறந்து போகாமல் நினைவு வைத்துக் கொண்டு, தெய்வ சகாயமில்லாமல் நம்மால் முடியாது என்ற அறிவு அடக்கங்களையும் நமக்கு உண்டாக்கும் விதத்தில், இடைஞ்சல் என்ற பெயரில் பெரிய அநுக்ரஹமே பண்ணியிருக்கிறார்’ என்று பக்தியான ஒரு ஆனந்தம் உண்டாகிறது!
Chapter: “சொந்த” அநுபவம்

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL) 

July 24, 2022

விநாயகரின் வேடிக்கை கதைகள் (Excerpts from Deivathin Kural)

Hiding amruta from devas

‘கள்ளவாரணப் பிள்ளையார்’ என்று அவருக்குத் திருக்கடையூரில் திருட்டுப் பேரே இருக்கிறது. தப்புப் பண்ணிய தேவர்களிடமிருந்து அம்ருத கலசத்தை ‘அபேஸ்’ பண்ணிவிட்டு, அப்புறம் அவர்கள் தங்கள் தப்பை தெரிந்து கொண்டு பூஜை பண்ணிய பிறகு அதைக் கொடுத்தவர் அவர். இப்படி அநேக க்ஷேத்ரங்களில் விகடங்கள் பண்ணி, வேடிக்கை வேடிக்கையாய்ப் பெயர் வாங்கியவர்.

Teaching lesson to Kadukkai MErchant
‘கடுக்காய்ப் பிள்ளையார்’ என்று இப்படியொருத்தர். திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்று ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகள் விற்பனை பண்ணுவதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் ‘டோல்கேட்’ என்ற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை எனறு பொய் சொல்லி — (முன்னேற்பாடாக வண்டியில் முன்னாடியும் பின்னாடியும் கடுக்காய் மூட்டைகளும் போட்டுக் கொண்டு வந்திருந்தான்) — வரியை ஏமாற்றிவிட்டு, கொண்டு வந்து விட்டான்.

விக்நேச்வரர் நீதி நியாயம் தப்பினால் தண்டனை கொடுத்து விடுவார். அதையும் விகடமாகப் பண்ணிவிடுவார். அதனால் நிஜமாகவே ராவோடு
ராவாக எல்லா மூட்டைகளில் இருந்ததையும் கடுக்காயாகவே மாற்றிவிட்டார். மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, “ஐயோ!” என்று உட்கார்ந்து விட்டான். அப்புறம் புத்தி வந்து பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு, கடுக்காய் மறுபடி ஜாதிக்காயானால் அதற்குண்டான வரியும், வரிக்கு மேல் அபராதமும் கட்டுவதாக ஒப்புக்கொண்டான்.
.
அவரும் மனஸ் இறங்கி கடுக்காயை மாற்றிப் பழையபடியே ஜாதிக்காயாகப் பண்ணினார். தித்திக்கும் மோதகப் பிள்ளையாருக்கு அங்கே
கடுக்காய்ப் பிள்ளையாரென்று பேர் வந்துவிட்டது!

Story of Sugarcane turning bitter
‘கரும்பாயிரப் பிள்ளையார்’ என்று கும்பகோணத்தில் ஒருத்தர். என்ன கதை என்றால்: ஆதியில் அவருக்கு வராஹப் பிள்ளையாரென்று பெயராம். வராஹ அவதாரத்தின்போது பகவான் அவரை வேண்டிக் கொண்டே பூமாதேவியை ஹிரண்யாக்ஷனிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்ததால் வராஹப் பிள்ளையார் என்று பெயராம். அந்தப் பிள்ளையார் கோவில் வாசலில் ஒருநாள் ராத்ரி ஒரு கரும்பு வண்டிக்காரன் ஆலைக்குச் சரக்கு எடுத்துப் போகிற வழியில் தங்கினானாம். வண்டியில் ஆயிரம் கரும்பைக் கட்டுக் கட்டாகப் போட்டிருந்ததாம்.

Ganesha resides in Anandha Bhuvanam
விக்நேச்வரருடைய வாஸம் கருப்பஞ்சாற்று ஸமுத்ரத்துக்கு உள்ளேதான். கைலாஸம், வைகுண்டம் மாதிரி அவருக்கென்று ஒரு லோகம் உண்டு. ஆனந்த ஸ்வரூபமான அவருடைய அந்த லோகத்தின் பேர் ஆனந்த புவனம் என்பது. மஹாவிஷ்ணு க்ஷீரஸாகரத்தில் சயனித்துக் கொண்டிருக்கிறார். அம்பாள் அம்ருத ஸாகரத்துக்குள் இருக்கிற மணி த்வீபத்தில் இருக்கிறார். பிள்ளையாருடைய ஆனந்த புவனத்தைச் சுற்றி கருப்பஞ்சாற்றுக் கடல் இருக்கிறது. அவர் ரொம்பவும் ஸ்வீட் என்பதைக் கையிலிருக்கும் மோதகம் மட்டுமில்லாமல் அவரைச் சூழ்ந்திருக்கும் பெரிய ஸமுத்ரமே தெரிவித்துவிடுகிறது!

வேடிக்கையாக ஒரு பாலப்ரம்மச்சாரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து வண்டிக்காரனிடம் ஒரு கரும்பு கேட்டாராம். தரமுடியாது என்று அவன்
சொன்னானாம். போகிறவர்கள் வருகிறவர்கள், “வண்டி நிறைய இவ்வளவு வெச்சுண்டிருக்கே, அந்தக் குழந்தை வாயைத் திறந்து கேக்கறச்சே ஒன்று குடுக்கப்படாதா?” என்றார்களாம். ஏதாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளணுமென்று அவன், “இது ஒரு தினுஸுக் கரும்பு. அப்படியே சாப்பிட்டா கரிக்கும். ஆலையில் காச்சி வெல்லம் எடுக்கறப்போதான் தித்திப்பாகும்” என்று அளந்தானாம்! பிள்ளையாரும் சிரித்துக் கொண்டாராம்.

மறுநாள் அத்தனை கரும்பும் ஒரே கரிப்பாக கரிக்க ஆரம்பித்துவிட்டதாம். ஆலையில் அவன் கரும்பைக் கொண்டு போய் இறக்கியவுடன் அந்த விஷயம் தெரிந்தது. பிள்ளையார் கோவில் வாசலில் வந்து கரும்பு கேட்ட ப்ரம்மச்சாரி யாரென்று அவனுக்குப் புரிந்தது. ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டு வேண்டிக் கொண்டானாம். ஸ்வாமியும் அநுக்ரஹம் பண்ணிக் கரும்பெல்லாம் பழையபடி தித்திப்பாக மாற்றினாராம். வராஹப் பிள்ளையார் என்ற பேரும் கரும்பாயிரப் பிள்ளையார் என்று மாறிற்று.

Gracing Mukti to Avvaiyar
இப்படி விகட அமசமிருப்பதாக அநேகக் கதைகள். இந்த மாதிரி விளையாடியே அவர் மோக்ஷ பர்யந்தம் எல்லா அநுக்ரஹமும் பண்ணுவாரென்பது ஒளவையார் கதையிலிருந்து தெரிகிறது. அவளைத் தன்னுடைய தும்பிக்கையை வளைத்துத் தூக்கி, விகட விளையாட்டாக அதை அப்படியே நீட்டிக் கொண்டு போய்தான் கைலாஸத்தில் தொப்பென்று போட்டிருக்கிறார்.

Chapter: திருத்தலங்களில் விகட விநாயகர்கள் :

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

July 19, 2022

வண்ண வண்ணா விநாயகர் - கணபதீஸ்வரம் பெயர் கதை


‘கபிலர்’. பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பவரென்று அர்த்தம். பல ரூப பேதங்களில் வெவ்வேறு நிறங்களாக விக்நேச்வரர் இருக்கிறார்.

‘சசிவர்ணம்’ என்று நிலா மாதிரி வெளுப்பாகச் சொல்லியிருக்கிறது.

கும்பகோணத்திற்கு கிட்டே திருவலஞ்சுழியிலும் திருத்துறைப்பூண்டிக்குக் கிட்டே இடும்பாவனத்திலும் வெள்ளைப் பிள்ளையார் — ச்வேத விநாயகர் — இருக்கிறார்.

ஒளவையார், ‘அகவ’லிலோ அவரை “நீலமேனி” என்று சொல்லியிருக்கிறாள்.

அவளே “வாக்குண்டாம்” பாட்டில் “துப்பார் திருமேனி” என்று பவள வர்ணமாகவும் பாடியிருக்கிறாள். பல ரூபங்களிலும் குழந்தை ஸ்வாமி அந்தக் கிழப்பாட்டிக்கு தர்சனம் தந்திருப்பார்!

வடக்கேயெல்லாம் விக்நேச்வரர் என்றாலே ஒரே சிவப்பாக ஸிந்தூரத்தைப் பூசித்தான் வைத்திருப்பார்கள்.

நம் சோழ தேசத்தில் “கணபதீச்சுரம்” என்றே பேர் பெற்றிருக்கிற கோவில் இருக்கிற ஊருக்கு முன்னே திருச்செங்காட்டாங்குடி என்று பேர். திருச்செங்காட்டங்குடி என்று தமிழ் நூல்களில் இருக்கும். அது செங்காடு ஆனதற்குக் காரணம் விக்நேச்வரர் கஜமுகாஸுரனை ஸம்ஹாரம் செய்தபோது அவனுடைய ரத்தம் அந்தக் காடு முழுதும் பாய்ந்ததுதான். அப்போது பிள்ளையாரும் கறுப்பான ஆனை உடம்பில் ரத்த வர்ணம் தோய்ந்து ‘கபில’ நிறமாகி விட்டார்.

ஒரு மஹாவீரனை அடியோடு ரத்தம் போகப் பண்ணிக் கொன்றதால் தமக்கு வீரஹத்தி தோஷம் வந்ததாக விக்நேச்வரர் நினைத்தாராம். ராவணனைக் கொன்றதால் ராமர் தோஷம் வந்துவிட்டதாக நினைத்து ப்ராயச்சித்தமாக ராமலிங்கம் ஸ்தாபித்தாரல்லவா? அந்த மாதிரி பிள்ளையாரும் இந்தச் திருச்செங்காட்டாங்குடியில் லிங்கம் ஸ்தாபித்து சிவ பூஜை பண்ணி தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம். அதனால் ராமர் சிவ பூஜை பண்ணிய இடம் ராமேச்வரம் ஆனது மாதிரி அந்தக் கோயிலுக்கு கணபதீச்வரம் என்று பேர் ஏற்பட்டுவிட்டது.

Chapter: கபிலர் : திருச்செங்கட்டான்குடி விநாயகர்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

July 11, 2022

Humlity of Mahaperiyava - His Gurubhakhti for Adishankaracharya

 #Deivathin_kural   Volume 5 

இப்படிப்பட்ட சிஷ்யர்கள் ஆறாயிரம் பேரோடு ஆசார்யாள் தேசம் முழுதும் திக்விஜயம் செய்தார். திக்விஜயம் என்றால் அதுதான் திக்விஜயம்! ஞானராஜா பரதகண்டத்தின் 56 தேசங்களிலேயும் பரமதங்கள் அத்தனையையும் ஜயித்து ஸநாதன வேத தர்மத்துக்கும், அதில் குறிப்பாக அத்வைதத்துக்கும் வெற்றிக்கொடி நாட்டிய திக்விஜயம்! 


எவரையும் சாக அடிக்காமல், அமரமாக ஆக்குகிற வாதச் சண்டையினாலேயே தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமுள்ள பர ஸமயவாதிகளை ஜயித்த ஆசார்யாளைப் போல ஜயசாலி லோக சரித்ரத்திலேயே இல்லை! அதனால்தான் “ஜய ஜய சங்கர” என்றே கோஷிப்பதாக, அதுவே அவருக்கு மந்த்ரம் மாதிரியாக இருப்பது.


வாதச் சண்டை என்றுகூடப் போடாமல் தர்சன மாத்திரத்திலேயே பெரும்பாலானவரை ஆகர்ஷித்து வேத வழியில் செலுத்தினார்.


மடங்கள் என்று வைத்து மதத்தை சாச்வதமாகக் காப்பாற்ற அவர் ஏற்பாடு செய்ததைத்தான் ஆர்கனைஸிங் ஸாமர்த்தியம் என்கிறார். ஆசார்யருக்கு முன்பு ஹிந்து மதத்தில் அப்படியில்லை. தனி மநுஷ்யர்களின் தபோசக்தியிலேயே மதம் வ்ருத்தியானதுதான்.


இப்போது, கூட 6000 சிஷ்யர்கள் இல்லை. மடத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் எந்த ஊரில் நன்றாக பிக்ஷை நடக்கும் என்று பார்த்தே போவதாயிருக்கிறது! ‘ஏதோ ஒரு சக்தி நடத்துகிறது; தர்மத்தைச் சொல்லிக்கொண்டு போ என்று எது இப்படி உட்கார்த்தி வைத்திருக்கிறதோ அதுவே எங்கே நம் கார்யத்துக்குத் தேவையிருக்கிறதோ அங்கே போனாலும் நடத்திக் கொடுக்கும்; அதனால் நம் தேவைக்கு யார் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்று பார்த்துக்கொண்டு போக வேண்டாம்’ என்ற ஞானம் எப்போதாவது கொஞ்சம் வருவதோடு சரி! 


இப்படி லாப-நஷ்டக் கணக்குப் போட்டுக்கொண்டா ஆசார்யாள் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேசம் பூரா போனார்? ஒரு தரத்துக்கு மூன்று தரம் போனார்?


வாஸ்தவத்தில் நாளுக்கு நாள் தர்மங்களைப் பறிகொடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறது, ஐம்பது, நாற்பது, முப்பது வருஷம் முன்னாலிருந்த ஆசாரங்கள்கூட இப்போது பூதக்கண்ணாடி வைத்துத் தேடும்படி இருக்கிறது! நம் பிழைப்பு நடந்தால் போதுமென்று, “சிகை இல்லையா, ஸரி,” “மடிச்சார் இல்லையா அதுவும் ஸரி!”, “ஸூட் போட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை – இன்னம் நாமே போட்டுக்கலையோன்னோ?” என்று எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கிகொண்டு, broad-minded என்றெல்லாம் நிறையப் புகழ் மாலைகள் போட்டுக்கொண்டு- இப்படியா அவர் இருந்தார்?  


அவர் பண்ணியது, இப்போது ஒன்றுமே பண்ண முடியாமல் அவர் பெயரை வைத்துக்கொண்டு புகழ்மாலையும் பாராட்டு விழாவும் பெறுவது இரண்டையும் நினைத்துப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது.

.


Chapter: அதிசயம் சாதித்த அமோக திக்விஜயம் : ஆன்மிய ஐக்கியமும் தேசிய ஐக்கியமும்  


(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL) 

July 08, 2022

பிரவ்ருத்தி நிவ்ருத்தி (கர்மகாண்டமும் ஞானகாண்டமும்) (From Deivathin kural)

வேதங்கள் வகுத்துள்ள இந்த சநாதன தர்மத்தில் இரண்டு மார்க்கங்கள் — ப்ரவ்ருத்தி மார்க்கமென்றும், நிவ்ருத்தி மார்க்கமென்றும். 

லோக வாழ்க்கையை நன்றாக, தர்மமாக நடத்துவதற்கு ப்ரவ்ருத்தி மார்க்கம். 

லோக வாழ்க்கையை விட்டுவிட்டு, அதை முடித்து விட்டு பரமாத்மாவோடு ஐக்யமாகி ஜனன மரணத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு நிவ்ருத்தி மார்க்கம்.

தர்மமாக, அதாவது தனக்கும் நல்லதாகவும், ஜன ஸமூஹத்துக்கும் நல்லதாகவும் வேத விதிப்படி இல்லற வாழ்க்கை நடத்தி,  கர்ம அநுஷ்டானங்களைச் செய்வதுதான் ப்ரவ்ருத்தி மார்க்கம். இதிலே கர்மாநுஷ்டானம் எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அந்த அளவுக்குப் புண்யம் கிடைத்து, புண்ய பலனாக சுவர்ககம் என்ற இன்ப லோகத்தில் வாஸம் கிடைக்கும். ஆனால் அந்த இன்பம் சாச்வதமல்ல.  மறுபடி இந்த மண்ணுலகிலேயே பிறக்க வேண்டியதுதான். ஆனாலும்  இது நல்ல பிறவியாக, நல்ல வசதிகள் வாய்த்த பிறவியாக இருக்கும். இந்தப் பிறவியிலும் தர்மம் தப்பாமல் வாழ்க்கை நடத்தினால் மறுபடி ஸ்வர்க போகம். முன்பு சொன்னமாதிரி, இந்த போகம் சாச்வதமல்ல.

சாச்வதமல்ல என்பது ஒரு பக்கம். அதோடுகூட அநுபவிக்கும்போதே கூட இந்த இன்பம் பூர்ணமான நிறைவைத் தருவதாக இருக்காது. ‘இனிமேலே 

எதுவும் வேண்டாம்! இந்த நிலை நிரந்தரமாக வாய்த்து விட்டதல்லவா? இதிலிருந்து கொஞ்சங்கூட விலகுவதற்கில்லை. இனியொரு குறை நமக்குக் 

கிடையாது’ என்று எப்போது ஆக முடியுமோ அப்போதுதான் நிறைவான பூர்ணானந்தம். 

பூலோகம், சுவர்கம் ஆகிய இரண்டிலுமே எத்தனைதான் ஸந்தோஷமிருந்தாலும் அது இப்படிப்பட்ட நிறைந்த ஆனந்தத்தைத் தரமுடியாது. பல தினுஸான பயம், துக்கம், காம -க்ரோதாதி இழுபறிகள் இல்லாமல் இந்த லோகங்களில் இருந்துவிட முடியாது. இந்த இன்பங்களைப் பெறுவதற்காக ஓயாமல் போராடிக் கொண்டேதானிருக்க வேண்டும்.

அது மட்டுமில்லை. இந்த இன்பங்கள் ஏதோ கண்ணுக்கு, காதுக்கு, வாய்க்கு, இன்னம்  மனஸுக்கும், அறிவுக்குங்கூட இன்ப அநுபவம் இருக்குமேயொழிய, இதற்கெல்லாமும் உள்ளே, நம்முடைய அந்தஃகரணத்துக்கும் உள்ளே இருக்கப்பட்ட ஆத்மாவுக்கு இவற்றிலே கொஞ்சமும் ஸுகாநுபவம் இருக்காது. 

பூர்ணமான உள்நிறைவைத் தருவது நிவ்ருத்தி மார்க்கம்தான். 

கர்மாக்களை விட்டு, ஜன ஸமூஹத்தை விட்டு ஸந்நியாஸியாகி ஸதா காலமும் ஆத்ம சிந்தனை, த்யானம் என்று இருப்பவன்தான் ஆத்மா ப்ரஹ்மமே என்று அறிந்து அநுபவிப்பதான, நிறைந்த நிறைவான நிலையைப் பெறுவான். ஸமாதி என்றும் ஸாக்ஷாத்காரம் என்றும் சொல்லும் அந்த நிலையொன்றுதான் ஒரு முறை கிட்டினால் அப்படியே சாச்வதமாக இருப்பது. 

ப்ரம்மம் என்று ஒன்றை இன்னொருவன் அநுபவித்து ஆனந்திப்பது அல்ல. ப்ரம்மம் என்ற ஆனந்தம்தான் ப்ரம்மானந்தம்.

நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவன் தானே அந்த ப்ரம்மம் என்ற ஆனந்தமாக ஆகிவிடுகிறான். அங்கேதான் பயமேயில்லை, துக்கமில்லை, காமமும் க்ரோதமும் போட்டு இழுக்கிறதும் இல்லை. ஓயாத முயற்சியும் வேண்டியிருப்பதில்லை. ஸித்தியடைவதற்கு முன்னாடி ரொம்பப் பாடுபடத்தான் வேண்டும். போராட்டம் என்றேனே, அது பெரிசாக இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு தரம் அந்த லக்ஷ்யத்தை அடைந்துவிட்டால் போதும். அப்புறம் அதிலிருந்து நழுவுவது, விலகுவது என்பது கிடையாது.

அதாவது, நிவ்ருத்தி மார்க்கத்தினால்தான் நித்யமான பேரின்பம்.  ப்ரவ்ருத்தியில் பெறுவதெல்லாம் நிலையற்ற சிற்றின்பம்தான்.

‘ப்ர-வ்ருத்தி’ என்றாலே அதுதான் அர்த்தம்; ‘வெளியிலே போய்க்கொண்டேயிருப்பது’ என்றே அர்த்தம்.

இதற்கு எதிர்ப்பதம் ‘நி-வ்ருத்தி’.  ‘திரும்பி வருவது’ தான் ‘நிவ்ருத்தி’ — ஆத்மாவுக்கே திரும்பி வந்துவிடுவது.

ஆனாலும் லோகம், ப்ரஜைகள் என்று ஈச்வரன் நாடகம் ஆடுவதில், ‘ஸந்நியாஸியாகப் போ; காட்டுக்குப்போய் மூக்கைப் பிடிச்சுக்கோ; அப்படியே ‘ஆத்மா, ஆத்மா’ன்னு விசாரம் பண்ணி, அதிலேயே தோஞ்சு போ’ என்றால் ரொம்பப் பேர் அதைக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. 

எல்லாவற்றுக்கும் காரணமான வஸ்துவைத் தெரிந்துகொண்டு–ப்ரஹ்மம், ப்ரஹ்மம் என்னும் அதுதான் தன்னுடைய ஆத்மா என்று தெரிந்துகொண்டு–அதிலேயே ஐக்யமாகிவிட வேண்டுமென்ற தாபம் பெருவாரியானவர்களுக்கு ஏற்படுவதேயில்லை. இந்தத் தாபத்திற்கு ‘முமுக்ஷுத்வம்’ என்று பெயர். ‘விடுபட வேண்டும் என்று ஆசைப்படுவது’ தான் முமுக்ஷுத்வம். ஜனத்தொகையில் அவர்கள் ரொம்பவும் கொஞ்சமாகவே இருப்பார்கள்.

மற்றவர்கள் ஏதாவது கார்யம் செய்வதில்தான் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள்.  

முதலில் ‘கர்மயோகம்’ முதலான அத்யாயங்களில் சொல்லும்போது பகவான், ஜனங்கள் அதாவது ப்ரவருத்தியிலேயே நாட்டமுடையவர்களாக இருப்பதற்குக் காரணம் ப்ரக்ருதி, ப்ரக்ருதி என்றே சொல்லி வந்தார். ப்ரக்ருதி என்றால் மாயைதான். ஸரி, மாயை என்றால் அது மட்டும் தானே ஏதோ பண்ணுகிறதா என்ன? 

ஈச்வரனேதான் அவனுடைய மாய லீலை நடக்கணுமென்றே கர்மசங்கிகளாக ப்ரவ்ருத்தியில் போகிறவர்களையும் அப்படிப் பண்ணியிருக்கிறான் என்று தெரிகிறது. ஜீவர்கள் அத்தனை பேருமே நிவ்ருத்தியில் போனால் என்ன ஆகும்? அவர்கள் ஞானத்தினால் மாயையை உடைத்தெறிந்துவிட்டு ஈச்வரனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்திலேயே ஐக்யமாகிவிடுவார்கள்.

முதலில் ஸ்ருஷ்டியில் தோன்றிய ஸநகாதிகள் நிவ்ருத்தியில் போய்விட்டதால், அப்புறம் ப்ரஜாபதிகள் என்றே ஏகமாகப் பிள்ளை, குட்டிகளைப் பெற்று பூமியை ரொப்புவதற்காக மரீசி முதலான பத்துப்பேரை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தாரென்று பாகவதத்தில் பார்க்கிறோம். ஆகையினால் திவ்ய ஸங்கல்பமே லோகம் பூராவும் ஞானியாகப்போய், லோகத்தையே விட்டு விட்டுப்போய், அவனுடைய ட்ராமா ஸ்டேஜைக் காலியாக, பாழாகப் பண்ணிவிடக் கூடாதென்றுதான் இருக்கிறதென்று தெரிகிறது.

ஆனாலும் அதற்காக ட்ராமாவில் நடிக்கிற எல்லாரையும் தறிகெட்டு அவரவர் இஷ்டத்துக்கு ஆக்ட் பண்ண விட்டு விடலாமா? இப்படிக் கூடாது 

என்றுதான்,   ஒரே கோணா மாணாவாக ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி, ஒட்டு மொத்தமான ஸமூஹவாழ்வு 

ஒழுங்கு கெட்டுப் போகும்படி ஆவதற்கு விட்டு விடக்கூடாது. இதுகள் தனி ப்ரஜைகளாகவும் ஒரேயடியாகத் தப்புப் பண்ணிப் பாபத்தில் 

மாட்டிக்கொள்ளவிடக் கூடாது.  அவரவரும் ஸமூஹத்தில் ஈச்வரன் தங்களைப் பிறப்பித்திருக்கிற நிலைக்கு ஏற்ப இப்படியிப்படி ஸத்கார்யங்களாகப் பண்ணிக்கொண்டு போய், இந்த லோகத்திலே தாங்களும் ச்ரேயஸை அடைந்து, லோகமும் தங்களால் க்ஷேமமடையும்படியாகச் செய்துகொண்டு, அதற்கும் மேலான ஸ்வர்காதி புண்ய லோகங்களிலும் ஸந்தோஷத்தைப் பெறட்டும் என்று வழிபோட்டுக் கொடுத்தார். வேதத்தில் இந்த பாகத்துக்குக் கர்ம காண்டம் என்று பெயர். யஜ்ஞ கர்மாநுஷ்டானமெல்லாம் இதில் அடங்குவதுதான்.

நிவ்ருத்தி மார்க்கமாக மோக்ஷ ஸித்திக்கு அதே வேதத்தில் முடிவு பாகங்களிலுள்ள உபநிஷத்துக்கள் மூலமாக வழி போட்டுக் கொடுத்தார். அதற்கு 

ஞான காண்டம் என்று பெயர். அதில் தத்வோபதேசம் நிரம்ப இருக்கும். 

மோக்ஷம் வேறு, சுவர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம்.  சுவர்கம் என்பது புண்யத்தின் அளவைப் பொருத்து, அது செலவழியும் காலம் வரையில் மாத்திரம், பலவித இந்த்ரிய இன்பங்களை மாத்திரம் கொடுக்கும் லோகம்.

Chapter: ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி Volume 5 

Chapter: இருவித மக்களுக்கான இரு வழிகள் Volume 5 

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

July 04, 2022

Short story contest

 

தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் எனது கதை.

உங்களுக்கு என் கதை பிடித்திருந்தால் "Star rating" கொடுத்து எனக்கு  ஆதரவளியுங்கள். மிக்க நன்றி.  

(To read and rate click the link below) (Anyone can rate until July 25th) 

https://notionpress.com/ta/story/ssc/21111/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5?fbclid=IwAR3Y0CFe_QRIGVnzfWNaosfT9icS5FWqWgrdaANMrD_81lIEnFWNw8en_ao


Thanks and regards,

ShakthiPrabha