February 20, 2020

சிறுதொண்டர் நாயனார்

Image result for சிறதொண்டர் நாயன்மார்

பரஞ்சோதி என்பது இவரது இயற்பெயர். நரசிம்ம பல்லவரின் படைத்தலைவனாக பணியாற்றிய பரஞ்சோதியாரைப் பற்றி சரித்திர நிகழ்வுகளை படித்தறியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. வாதாபி நகரை படையெடுத்து அதில் வெற்றி வாகை சூடி, அங்கு நிறந்திருந்த பொன்னும் மணியும் முத்தும் நவரத்தினங்களும், போரில் வென்ற யானை குதிரைகளையும் பல்லவ மன்னனிடம் கொணர்ந்து குவித்தார்.
.
அருகிருந்த அமைச்சர்கள் இவரது பெருமையினை எடுத்துரைப்பவராக, யானையேற்றம் குதிரையேற்றம் தோள்வலிமை போர்திறன் மிக்க நம் சேனாதிபதி, சிவத்தொண்டராக பெரிதும் மதிக்கதக்கவர். அவரது திருத்தொண்டினை புகழ்ந்து கூறக் கூற இப்படிப்பட்ட ஒரு சிவத்தொண்டனை படைத்தலைவனாக்கி போர்முனைக்கு அனுப்பியிருந்தேனே என் மடமையை என் சொல்வேன் என மிக வருந்திய பல்லவ வேந்தன், பல திரவியங்களும் பொருட்களும் செல்வங்களும் பரிசாக வழங்கி, சிவத்தொண்டினையே அனுதினமும் இசைந்து செய்வீர் எனக்கூறி படைத்தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து அனுப்பினான்.
.
வேதங்களும் வடமொழி நூல்கள் பலவும் கற்றவராக சிவத்தொண்டினையே சதா காலமும் சிந்தித்து செய்பவராக விளங்கினார். திருவெண்காட்டு நங்கையை திருமணம் செய்து இல்லறம் நல்லறமாக நடத்திவந்தார். சிவத்தொண்டு செய்தும், அமுதளித்தும், இன்பம் கண்டார். சிவனடியார்களுக்கு பணிவுடன் சிறுதொண்டனைப் போல் பணிந்து தொண்டு செய்தலால் சிறுதொண்டர் என்று பெயர் வரப்பெற்றார். அடியார்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் விரதமிருந்தார். இத்தம்பதிகளுக்கு அருமை மைந்தன் பிறக்க சீராளன் என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்தனர்.
.
சிறுதொண்டர் பெருமை உலகெலாம் அறிய திருவுள்ளம் கொண்ட இறைவன், பைரவ அடியார் வேடம் தாங்கி குடில் வாசலில் தோன்றிபார். தனது செம்மேனிக்கு கருப்பு சட்டை அணிந்து, சடைமுடியை முடித்து, இடது கையில் சூலம் தாங்கி, தும்பைப்பூ சூடியவராக வந்து "அடியார்க்கு அமுதளிக்கும் சிறுதொண்டர் இருக்கிறாரோ" என்றழைத்தார். அதுவரை அடியார் எவரையும் காணாது, அதன் பொருட்டே அடியவரை தேட சென்றுள்ளார் என்றுரை த்த மனைவியிடம் தாம் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாக கூறிச் சென்றார்.
.
தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்த சிறுதொண்டர், ஆத்தி மரத்தடிக்கு ஓடி அடியாரைக் விருந்துக்கு வருந்தி அழைக்க, பைரவ அடியாரோ, தாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உண்பதாகவும், தனக்கு உணவு சமைப்பது கடினம் என்று கூறினார். ஐந்து வயது மிகாத நரப்பசுவை உணவாக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். ஊனம் எதுவும் இல்லாதவனாகவும், அப்பாலகன் தாயாருக்கு ஒரே பிள்ளையாகவும் இருக்க வேண்டும். தாயார் பிள்ளையை பிடித்திருக்க தந்தை அரிந்து கொடுக்க, அதனை பக்குவமாக குறையேதுமின்றி சமைத்த உணவையே உட்கொள்வதாக கூறினார்.
.
வேறெவரும் செய்யத் துணியாத இச்செயலை சிறிதும் தயங்காது இத்தம்பதியினர் மேற்கொண்டனர். பள்ளி சென்றிருந்த தமது மகனான அழைத்து அவனையே உணவாக்கினர். அடியவருக்கு உணவிடும் போது, நாம் தனியே உண்ண மாட்டோம் நம்முடன் சிவனடியார் இன்னொருவரும் உணவு உண்ண வேண்டுமென்றார். வேறு அடியவர் எவரும் வேண்டாம், உம்மை விட சிறந்த அடியவர் உளரோ, நீரே எம்முடன் உண்ண வேண்டும் என்று சிறுதொண்டரை தம்முடன் உணவு உண்ண அழைத்தார். அதற்கும் ஈடுகொடுத்து அருகில் உண்ண அமர்ந்த போது, நாம் உண்ணும் முன் உமது மகனை அழைத்து வாரும் அதன் பின் மூவருமாக உண்போம் என்றார். அடியார் எங்கே உண்ணாமல் சென்று விடுவாரோ என்று பதைத்தை தம்பதியர், மகன் இப்பொழுது வருவது கடினம் எனவே அவரை உண்ண இறைஞ்சினார்கள். அடியார் விடுவதாக இல்லை. பிடிவாதமாக மகனை அழையும் அவன் வந்தாலேயன்றி நாம் உண்ணோம் என்றார்.
.
புறத்தே சென்று "அருமை மகனே சீராளா சிவனடியார் உணவு உண்ண அழைக்கிறார், உடன் வா என் கண்ணே" என்றழைக்க, பேராச்சர்யமாக பள்ளி சென்ற சீராளன் ஓடி வருவது போல் வந்தான். கையில் வாரியணைத்து "அடடா அடியார் அமுது உண்ணும் பாக்கியம் பெற்றோம்" என்று மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் செல்ல அங்கு அடியாரோ அமுதோ காணாமல் மனம் மிகவும் நொந்தார். அமுதளிக்கும் பேறு இழந்தோமே எங்கு சென்றார் என்று துடித்த தம்பதியருக்கு வீட்டின் வெளியே பேரொளி புறப்பட்டதை கண்டனர். அம்பிகை சமேத ஈசனாக முருகப்பெருமானுடன் காட்சியளிக்க பேருவகை அடைந்தவர்கள் நெடிது நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். அவர்களின் சிறந்த தொண்டால் மகிழ்ந்த இறைவன், தம்பதிகளுடன் அவர் மைந்தனையும், அவர்களுக்கு பெருந்துணையாய் இருந்த சந்தனத் தாதியையும் உடன் அழைத்து தமை விட்டு அகலாதபடி கைலாயப்பேறு அருளினார்.
.
ஓம் நமச்சிவாய


No comments:

Post a Comment