December 19, 2018

ஆழ்வார்கள் - சிறுகுறிப்பு - பேயாழ்வார்




திருமயிலை கிணற்றில் சிவந்த அல்லிமலரில், மஹாவிஷ்ணுவின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக தோன்றியவர். திவ்யப்பிரபந்த பாடல்களில் மூன்றாம் திருவந்தாதி இவர் புகழைக் கூறும். சிவனும் ஹரியும் ஒன்றென இவர் தரிசித்ததாக கூற்று. சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்ட பெரும்பங்கும் இவருக்கு உண்டு. இறைவன்பாற் கொண்ட பக்தியால் அழுதும் சிரித்தும் பிதற்றியும் (உலகத்தோர் பார்வைக்கு) ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்ததனால் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டார். "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" எனும் பாசுரத்தில் தாயாரையே முதலில் கண்டதாகவும் அவரையே திரு என்று விளிப்பதாக ஆன்றோர் வாக்கு.
நிகழ்வு:
முப்பெரும் ஆழ்வார்களான முதலாழ்வார்கள் மூவரும், திருக்கோவிலூரில் ஒரு சிறு மண்டபத்தில் மழைக்கு அண்டினர். ஒருவர் படுக்கவும், இருவர் அமரவும், மூவர் நிற்கவும் இடம் போதுமானதாக இருந்த அச்சிறு மண்டபத்தில் நாலாமவராக இறைவன் நெருக்கி நின்று இவர்களுக்கு காட்சி தந்தருளினார். இறைவனுக்கு அவ்விடத்திலேயே மூவரும் பாமாலை சூட்டி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment