March 16, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 4 )(இடம்: ஒப்பனை அறை)

கதிர் (மெட்டுடன் முணுமுணுக்கிறான்):

"சகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு...."


(நவீன் இளித்தபடி நிற்கிறான்)

குமார்: கிராம்ஃபோன் கால பாட்டெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமா

சுசீலா: பெருமாளே! இதை எப்படியாவது கழட்ட வழி பண்ணு. நான் உண்டியல்ல ஒரு ரூபாய் போடறேன்.

தாமரை: இங்க நாங்க கஷ்டப்படடிட்டிருக்கோம். பெருமாளுக்கு பைசாவா? அதுவும் ஒரு ரூபாய். ரொம்ப தாராள மனசுடீ உனக்கு.

கதிர்: நான் ஒரு ஐடியா தரவா?

நவீன்: சொல்லித் தொலை

கதிர்(அகலமாக கண் விரித்து) : சவுரிய குட்டியா வெட்டி விட்டுட்டு, துஷ்யந்தன் திரும்ப வர சகுந்தலா மாரியம்மனுக்கு முடி  நேர்ந்துகிட்டதா கதைய மாத்திட்டா?


( எல்லோரும் சுட்டெரிப்பது போல் கதிரையே முறைக்க, தன் அபார புத்தியின் அருமை தெரியாத ஜன்மங்களிடம் என்ன பேச்சு என வேறு பழைய பாட்டை முணுமுணுக்க தொடங்கினான்)


சுசீலா: இது எங்க பாட்டியோட நிஜமுடில செஞ்ச சவுரி, அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க

(சரியாக மூன்று நிமிடத்தில் சவுரியை வங்கியிலிருந்து கிட்டத்தட்ட பிடிங்கி எடுத்தனர்.  நவீன் அவசர அவசரமாய் மேடையேறுகிறான். படபடப்பில் சுசீலாவுக்கு அடுத்த வசனம் மறந்ததால், ஸ்க்ரிப்டை வேகமாகப் படித்து விட்டு ஒடுகிறாள்)

விஜி: பார்த்து...நிதானமா ஓடுடீ. சவுரியே இப்பவோ அப்பவோனு இருக்கு, வேகமா ஓடி கீழ விழுந்தடப் போகுது.

( ஒரு வழியாக நாடகம் முடிய, குமார் , ஏணி வழியாய் ஏறி, வாங்கியிருந்த உதிரிப்பூக்களை நடு மேடையைப் பார்த்து எறிகிறான். பலத்த கரகோஷம் எழும்புகிறது.)


தாமரை(குஷியாய்): அப்பாடி! என்ன கிளாப்!!

விஜி: நாடகத்துக்கு தானே? இல்லை நிறுத்தினதுக்கா!

(பார்வையாளர் பகுதியில்)

சபேசன்: இப்போ சுசீலாவைப் பார்த்தா தேவதை மாதிரி இல்ல...

வினோத்(நெகிழ்ந்து): என் தங்கை என்னிக்கு தேவதைக்கு குறைச்சல்

(அடுத்து இன்டெராக்டிவ் கேம் தொடங்குகிறது.)

(விஜியும் கதிரும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.)

(முதல் சீட்டை பிரித்து பார்வையாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பேச அழைக்கின்றனர்.)

மேடையேறிய பார்வையாளர்: முதல் க்ளூ.. இவர் ஆந்தை மாதிரிங்க

கீழிருந்து ஒரு குரல்: அம்மா முன்னாடி முழிக்கிற ஓ.பன்னீர்செல்வம்!!!

மேடையேறியவர்: இல்லை... இரண்டாவது க்ளூ... பகலில் தூங்குபவர்.

கீழே: ஸ்கூல்ல தூங்கற என் பையனோ? ஆந்தை மாதிரி முழிக்கறது கூட பொருந்தி வருதே.....அவ்வளவு famous ஆகிட்டானா அவன்?


மேடை : இன்னுமா யாருக்கும் தெரில?... நம் காவல் தெய்வம்.

கீழ்: எம்.ஜி.ஆர்!!!!

மே.பா: அய்யோ! நம்ம காலனி வாட்ச்மான்!

(ஓ என்ற பேரிரைச்சல் காதை பிளக்கிறது)

(அடுத்து ஒருவரை தேர்ந்தெடுத்து ஆட்டம் தொடர்கிறது.)

மே.பா: முதல் க்ளூ... இதிஹாஸ பாத்திரம்

(மேடையின் பக்கவாட்டில் நிகழ்ச்சி பார்த்தபடி..)

தாமரை: எங்க வீட்டு ஈயப்பாத்திரமே அதுக்குள்ள இளிக்குது. இதிஹாசப் பாத்திரமெல்லாம் உளுத்துப் போயிருக்காதோ?

சுசீலா: நீங்க ரெண்டு பேரும் கெஸ் பண்ணுங்க

தாமரை: உனக்கு மட்டும் எப்படி தெரியும்.

சுசீலா: சிட்ல பேர் எழுதி போட்டதே நான் தான்.

நவீன்: தெரிலை. நீயே சொல்லேன் சூசீ.....

சுசீலா: எங்க அம்மா எனக்கு பழைய பேரா இருந்தாலும் நல்ல பேரா சுசீலான்னு வெச்சுருக்காங்க. அதை சூசீ..னு மாத்தி, க்ருத்துவ மதத்துக்கு  நீயே எக்ஸ்போர்ட் பண்ணிடாத.


நவீன்: சரி க்ளூ குடு, யாரு இதிஹாஸ பாத்திரம்

சுசீலா: அவர் ஒரு பறவை

நவீன்: பறவை முனியம்மா !!

தாமரை ( நற நறவென பல்லைக் கடிக்கிறாள்) : இத்த்திஹாஸ பாத்திரம்

நவீன்: இவ்வளவு அழுத்தி சொன்னா, பாத்திரம் நசுங்கிடும்.

சுசீலா(சிரிக்கிறாள்): ஐயோடா... நவீன். எப்படி உன்னல இப்டி டக்டக்ன்னு கௌன்டர் குடுக்க முடியுது

(தாமரை தலையில் அடித்துக் கொள்கிறாள்)

தாமரை(நவீனிடம் ரகசியமாய்): நீ இம்ப்ரேஸ் பண்ணுற லட்சணத்துகாக இப்படி தாங்க முடியாத ப்ளேட போட்டு எங்கள கொல்லாத.

சுசீலா: த ஆன்ஸர் இஸ் ஜடாயு.

நவீன்(சோகமாக): அப்போ நான் ஃபெயில் ஆய்ட்டேனா?

சுசீலா(சூள் கொட்டியபடி): நீ தேறாத கேஸ். பாஸ் பண்ணறது ரொம்ம்ப கஷ்டம். அடுத்த கேள்வி போலாமா?

நவீன்: நான் ரெடி

சுசீலா: முதல் க்ளூ.... அமெரிக்கப் பெண்மணி

நவீன்: கிரிஸ்டினா ஆகீலேரா

( தாமரை...ஆமா... இந்த பில்ட்-அப் தான் இப்ப பாக்கி என்று முணுமுணுக்கிறாள்)

சுசீலா: இல்ல... பில் க்ளிண்டன் என்றதும் நினைவுக்கு வருபவர்?

நவீன்: ஆ....யெஸ் தெரியும்.....மோனிகா!

சுசீலா(உதட்டைச் சுழித்தபடி): தப்பு! ஹிலரி க்ளிண்டன். பில் க்ளிண்டன் என்றதும் மோனிகா தான் நினைவுக்கு வராங்களா?  ம்ஹீம்... நீ பாஸ் பண்ண மாட்ட.


நவீன்: இன்னொரு கேள்வி. இப்ப கண்டிப்பா சரியான ஆன்ஸர் சொல்லுவேன் பாரு.

சுசீலா: நான் கூட உன்ன என்னவோன்னு நினைச்சேன்...ம்ஹூம். டைம் வேஸ்ட்.

( நவீன் முகம் 99 ல் ரன்-அவுட் ஆன பாட்ஸ்மேன் போல் சுருங்கிப் போகிறது )

குமார்: யப்பா! நாங்க இருக்கவா வேணாமா?

நவீன்(எக்கச்சக்க எரிச்சலில்): ஏன்? இரேன்! இங்க என்ன மிட்நைட் மசாலாவா நடக்குது?

விஜி (அவசரமாய் ஓடிவந்தபடி): எல்லாரும் ஃபார்மல் தாங்க்ஸ் சொல்ல வாங்க, மசாலா ரெசிபியெல்லம் அப்புறம் பேசலாம்.

தாமரை: விஜி, அரைகுறையா காதில் வாங்கி எதையானும் உளறாத.

(மேடையில் எல்லோரையும் அறிமுகப் படுத்தி நன்றியுரையும் வழங்குகிறான் கதிர்)

(பார்வையாளர் பகுதியில்..)

சபேசன்: பரவாயில்லை துஷ்யந்தன் பார்க்க நல்ல பையனாத்தான் இருக்கான்

(மங்களம் கண்டுகொள்ளாமல் மௌனமாய் இருக்க்கிறாள்.)

No comments:

Post a Comment