September 16, 2012

நன்றி ஜெயமோகன் ... ஆனால்...!




ஜெயமோகன் அவர்கள் "நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்" என்ற தலைப்பில் தமிழர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய தன் கண்ணோட்டத்தை எழுதியுள்ளார்.



இவர் சொல்வதில் ஏறக்குறைய பல விஷயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். இவ்வளவு கோர்வையாக, தெளிவாக, சரியான மேற்கொள்களைக் காட்டி  அழ்கான வார்த்தை பிரயோகத்துடன் இத்தனைச் சிறப்பாக என்னால்  சொல்லியிருக்க முடியாது. அதனால் தான் அவர் ஜெயமோகன்...நான் வெறும் "மின்மினிப்பூச்சி"


நான் சொல்ல வந்ததை, என் போன்ற சிலர் (பலர்) சொல்ல வந்ததை எங்கள் சார்ப்பில் சொல்லியிருக்கிறார். நன்றி...... ஜெ.மோ. சார்.. ஆனால், தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஒட்டுமொத்தமாக இல்லை  என்பதை என்னால் ஏனோ ஒத்துக்கொள்ள முடிவதில்லை.

'நக்கல்' , கேலி வகை நகைச்சுவையைத் தாண்டி, மொழிப்பகடிகளை தமிழர்கள் அன்றாட வாழ்வில் நிறையவே ரசித்து சொல்லாடி வருகிறார்கள். நகைச்சுவையை இயல்பாய், பேசும் வாக்கிலேயே உதிர்த்தும் வருவதுண்டு.  (cliche வகை காப்பியடிக்கும் சொற்களையும் தாண்டி)


சிரிப்புகென தனி "ட்ராக்" தேவைப்படும் திரைப்படகளில் மட்டுமே ஜெ.மோ அவர்கள் சொல்வது போல், நகைச்சுவைக்கென  அஷ்டகோணல் முகமோ, நடையோ, உடையோ, பாவனையோ, பெரும்பாலும் அவசியமாகிப் போகிறது.  நகைச்சுவை "ட்ராக்" என்கிற பாணியைத் தாண்டி, முழு நீள நகைச்சுவை படங்கள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. பாமா விஜயம் , வீட்டுக்கு வீடு வாசப்படி, மணல்கயிறு இப்படி அடுக்கிக்கொண்டே பொகலாம்

உலக நாயகன் கமலஹாசன் போன்றவர்கள்   தனக்கென அருமையான பாணியை கொடுத்துள்ளார். நீங்கள் குறிப்பிட்டிருந்த "மைக்கேல் மதன காமராஜன்"   நான் ரசித்த மிகச் சிறந்த நகைச்சுவை படமாக முதலிடத்தில் உள்ளது. க்ரேஸி மோகனின் வசனங்களில் பூடக நகைச்சுவையும் மொழிப்பகடிகளின் வகையும் பின்னிப் பிணைந்திருக்கும். பாலச்சந்தரின் சில நகைச்சுவை படங்களும் விதிவிலக்காக இயல்பான நகைச்சுவையுடன் மிளிர்பவை.


எஸ்.வி.சேகர்,  ஒய்.ஜி. மகேந்திரன் , மௌலி முதலியோரும் இயல்பான நகைச்சுவைகளை அள்ளி வழங்கியிருப்பவர்கள். ஜெ.மோ அவர்கள் ஒட்டுமொத்தமாக நகைச்சுவை சினிமாக்களில் இல்லை என்று கூறும் அளவு குறைந்து விடவில்லை என்பது என் எண்ணம்.

ஜெ.மோ சார்...எங்களைப் போன்ற பலரின் எண்ணத்தை மிக அழகாக பிரதிபலித்த உங்களுக்கு கோடி நன்றி. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி வெகு சிலதே இருக்கின்றன என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டீர்கள் போலும்.

சினிமாக்களைத் தாண்டி நாடகமேடைகளில் பல நகைச்சுவை மேதைகள் மிளிர்ந்திருக்கிறார்கள். இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் தேவன், பாக்கியம் ராமசாமி, அகஸ்தியன் போன்ற பலரின் ரசிக்கவைக்கும் எழுத்துக்கள் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளன.  சுஜாதா போன்ற  பன்முக எழுத்தாளர்களின்  கதைகளிலும்  ஊடே இயல்பான நகைச்சுவை ஒளிந்திருக்கும்.  அவற்றையெல்லாம் தமிழக மக்களாகிய நாம் தான் ரசித்து அங்கீகரிக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேனும் ஒட்டுமொத்தமாக "தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு" என்ற பொது அவதானிப்பை பரிசீலித்திருக்கலாம் :)

March 05, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொ. ப)





பள்ளி நினைவுகளை பதிவிட ஷைலஜா அழைத்திருக்கிறார். சுயபுராணம் பாடுவதே தனி சுகம்.  கரும்புத் தின்ன கூலியா! நினைவுகளை அசைப்போடுவதில் ஒன்றும் சிரமமே இல்லை. ஒரே ஒரு பிரச்சனை தான்.  மீண்டும் பள்ளிக்கூடம் போனால், எளிதில் திரும்ப மாட்டென்.  சில மணி நேரம், அப்படியே தொலைந்து போய்விடும் அபாயம் உண்டு...


பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று ஷைலஜா என்னை விட அழகா சொல்லிட்டாங்க.

சின்ன வயது (நினைவு தெரிந்த நாள்) முதலே 'குருகுல வாசம்' என்றால் ரொம்ப பிடிக்கும். புராணப் படங்கள் பார்க்க நேர்ந்தால், பள்ளிக் கூடங்கள் ஏன் குருகுல வாசம்  போல் இல்லை என வருந்தியதுண்டு. சொர்கத்துக்கு இணையாக ஒலிக்கும் வார்த்தை "குருகுலம்". ஏன் தான் குருகுலம் வழக்கொழிந்த இந்நாளில்  பிறந்தோமோ என்று  நொந்து கொண்டிருக்கிறேன்.

நான் பிறந்த காலகட்டத்துல குருகுல வாசம் மறைந்து போய் விட்டதால் ஆரம்ப பள்ளிக்காக பக்கத்தில் இருக்கும் தனியார் மாண்டீஸ்வரி பள்ளிக்குடத்தில் சேர்த்தார்கள்.

சில பல நினைவில் நின்றவை நிகழ்ச்சிகளாக கோர்கிறேன்....

எல்.கே. ஜி தூக்கம்

** எல்.கே.ஜியின் நினைவு கிண்டிப் பார்த்தாலும் ஒன்றிரண்டு தான்.  கீதா மிஸ் ஸ்கேல் வைத்திருப்பார்கள்.  ஏபிசிடி சொல்லித் தந்ததும், நான் கற்றதும், அறவே நினைவு இல்லை. தினம் ஒரு பீரியட் ஸ்லீபிங்க் பீரியட். ஸ்கேல் வைத்து, எங்களையெல்லாம் தூங்கச் சொல்லி மிரட்டுவார்கள். நீட்டி நெடுக படுத்து, கண் மூடுவது போல் இடுக்கு வழியாக மிஸ் என்ன செய்கிறார்கள் என்று பார்த்த நினைவு இருக்கிறது...இடது புற செவுத்தை ஒட்டிப் படுத்திருப்பேன். நினைவிலிருக்கிறது. 

சுமாராய் படிக்கும் பாபு

** யூகேஜி யில் சியாமளா மிஸ்-ஸின் பையன் பாபு தான் என் பக்கத்தில் அமர்வான். அவன் நன்றாக படிக்க மாட்டான். அதனால் அதிகமாக திட்டு வாங்குவான். எனக்கு அவனை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனாலும் அவனை பிடிக்காது. நான் ஏ பி சி டி சரியாக எழுதி "குட்" வாங்குவேன்.
பாபு  கன்னம் குழி விழ சிரிப்பான். ஆனால்  ஏபிசிடி  சரியாக எழுத மாட்டான்.
அவன் திட்டு வாங்கும் போது எனக்குள் சிறு சந்தோஷம். ஒரு வேளை திமிரா?

** அடுத்த சில வருடங்களில் பாபு சரியாக படிக்க மாட்டேன் என்கிறான் என சியாமளா மிஸ் அம்மாவிடம் குறைபட்டுக் கொண்ட போது எனக்கு பாபு மேல் பாவமாக இருந்தது. அப்புறம் பாபு என்ன ஆனான் எனத் தெரியாது. நான் கேட்கவில்லை.

காதல் தோல்வி

** ஒன்றாம் வகுப்பு மறக்கவே முடியாது. ப்ரேமா மிஸ். அழகான முகம். நீள முடி. சிரித்தால் ஜெயலலிதா போல் இருபார்கள். என் பக்கத்தில் பையன்கள் உட்காருவதைத் தான் நான் அதிகம் விரும்பியிருக்கிறேன்.  பெண் பிள்ளைகள் சரியான போர். திரும்பத் திரும்ப, சாப்பாடு, சொப்பு விளையாடுதல் போன்ற பேச்சைத் தவிர ஒன்றும் தெரியாது. பாய்ஸ் என்றால் ஜோக்ஸ் சொல்வார்கள். சிரிக்க வைப்பார்கள். புது புது  விஷயங்கள் பேசுவார்கள்.

அப்படித் தான் ப்ரேமா மிஸ் பற்றியும் கேலி பேசித் திரிந்தோம்.    ஒருவர் ஜோக் சொல்ல, எல்லோரும் ரகசியமாக சிரிப்போம்.  ப்ரேமா மிஸ் ஒரு நாள் வரவில்லை. வேறு யாரைப் பற்றி கிண்டல் செய்து சிரித்து மகிழ்வது என்று தெரியவில்லை. ப்ரேமா மிஸ் ஒருவாரம் வரவில்லை. அப்புறம் தான் பள்ளியில் சொன்னார்கள்...

காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள். காதல் என்றால் என்ன?  தற்கொலை என்றால்? செத்து போவதுன்னா என்னம்மா? பல கேள்விகளுக்கு பள்ளியில் விடை கிடைக்கவில்லை.

என்னை விட அவள் அழகா....எப்படி!

 

** என் அம்மா எனக்கு வித்தியாசமான மாடர்ன் தலையலங்காரங்கள் செய்துவிடுவார்கள்.  அதனால் எனக்கு "லண்டன் லேடி" என்ற செல்லப் பெயர் எங்கள் ஆசிரியர்கள் மத்தியில் இருந்ததும், ஒரு சில ஆசிரியர்கள் என்னை முத்தமிட்டு கொஞ்சியதுமுண்டு.  பல பிஞ்சு உள்ளங்கள் இருக்கையில் ஒரு குழந்தையை கொஞ்சுவது தவறு என்றெல்லாம் ஆசிரியர்களுக்கு யாரும் சொல்லித் தருவதில்லை போலும்.  இதுவெல்லாம் இப்பொழுது யோசிப்பது.  அப்பொழுதோ என்னைக் கொஞ்சியது  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

பிரபாவதி என்ற பெண் எங்கள் தெருவழியே செல்பவள். அவள் கண்கள் விரிந்து அழகாய் குவளை மலர்கள் போல் இருக்கும். ஒரு முறை என் சித்தியோ பாட்டியோ அவள் கண்கள் அழகு. என்னுதை விட அழகு என்று சிலாகித்திருப்பதைப் கேட்டேன். எனக்கு அது பொறாமையைத் தூண்டியது.

"அம்மா பிரபாவதி கண்ணு என்னுதை விட அழகா?! அவ கண்ணை....நோண்டி எடுத்துடணும்" என்று என் அம்மாவிடம் சொன்னது எனக்கு காட்சி அமைப்புடன் நினைவில் இருக்கிறது.

அவமானம்

**இரண்டாம் வகுப்பு. எங்கள் ஆசிரியை, சக மாணவன் ஒருவன் அடிக்கடி தனது உள்ளாடையில் சிறுநீர் கழிப்பதை வெகு மோசமாக விமர்சனம் செய்து அவனை அழ வைத்தார்கள்....எனக்குப் பிடிக்கவில்லை. அந்த பையன் பெயர், சின்ன முகம், அவமானம், அழுகை எல்லாம்  இன்னும் நினைவில் இருக்கிறது. அடுத்த வருடம் அவன் பள்ளியை மாற்றிக் கொண்டான்.

செத்து போனா என்ன ஆகும்

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வாக்கிங் சென்ற பக்கத்து வீட்டு அங்கிள் செத்துப் பொனார். அப்புறம் சில மாதங்களில் அம்மாவை பெற்ற பாட்டி உடல் நலிந்து உயிர் இழந்தார். சாவு என்றால் என்ன... எதுக்கு பிறக்க வேண்டும்? பின் சாக வேண்டும்?... என் கேள்விகள் அதிகமாகியது.

சில நினைவுகள்

 

** பள்ளிக்கு மூடி போடு கொக்கி போட்ட ரிக்ஷா வண்டியில் போவேன். அப்படி வண்டிகள் தற்போது நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன். இரு பக்கமும் உட்கார சீட்டுகள் உண்டு. கூட்ஸ் வண்டியைப் போல் காட்சி அளிக்கும். எங்களுக்கு ரிக்ஷா ஓட்டுபவர் பெயர் நினைவில் இல்லை. அவரை ரிக்ஷா காரர் என்று அழைப்பதை தடுத்து "பெயிண்டர்" என்று அழைக்கச் சொல்வார். ரொம்ப நாள் வரை, ரிக்ஷா ஓட்டுபவர்களை பெயிண்டர்கள் என்று நினைத்திருக்கிறேன்.

** நான்காம் வகுப்பில் என்னை நடனத்திற்கு தேர்வு செய்து, வராத நடனத்தை கற்று கொடுத்தார்கள். எப்படியோ ஆடினேன். ஐந்தாம் வகுப்பில் என்னை தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆசை. ஆனால் எனக்கோ நடனம் வரவில்லை. கடைசியில் அஷ்ட லக்ஷ்மி நடனத்தில்  என்னை லக்ஷ்மி தேவியாக உட்கார வைத்தனர்......பசுமை.

பிரியா விடை

** ஐந்தாம் வகுப்பில் தான் ஜெமினி மிஸ் எங்கள் பள்ளியை விட்டு விலக நினைத்தார்கள். நாங்கள் ஆறு பெர் ஃப்ரெண்ட்ஸ். கௌஷிக், சத்யமூர்த்தி, அர்ச்சனா, தர்ஷனா, அரவிந்த், நான்.

ஜோக்ஸ், சிரிப்பு, கிண்டல், பேச்சு என பொழுது கழியும். எங்களுக்கு சமமாக
தோழி போல் பழகியவர்கள் ஜெமினி மிஸ். ஆங்கில ஆசிரியை. காதில் தொங்கும் நீண்ட ரிங்,  நெற்றியில் புரளும் கேசம்,  நீண்ட கண்கள்,  கவரும் சிரிப்பு, முதல்  முதல் ஹீரோயின் வர்ஷிப் செய்தது ஜெமினி மிஸ்ஸைத் தான்.  எங்கள் ஐந்து பேரை வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாய் சொன்னார்கள். ... பள்ளி நண்பர்களுடன் சென்ற முதல் அவுட்ங்! டீ, சமோசா இத்யாதி வாங்கிக் கொடுத்தார்கள்.  இனிமையான பொழுது...அப்புறம் பிரிந்த பொழுது, முதன் முறையாய் தொண்டை அடைத்தது. அந்த உணர்ச்சி அது நாள் வரை உணராதது.

நானே நானா

** கான்வென்ட் பள்ளிக்கு மாறியிருந்தேன். என்னைச் சுற்றி எங்கும் ஆங்கிலோ இந்தியர்கள். எனக்கும் ஒரளவு ஆங்கிலம் தெரியுமென்றாலும், சங்கோஜமாக உணர்ந்தேன். என்னை நானே அவர்களிடமிருந்து அன்னியப்படுத்தி கொள்ள துவங்கிய பொழுது,  அவர்களோ நெருங்கி வந்தனர். என்னைச் சுற்றி நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் தோழிகளாகிப் போயினர். என் பேச்சு, அபிப்ராயம்,  பாதை, எண்ணங்கள். பயணம்,  எல்லாமே மாற்றம் கொண்டது.

சிகரெட் புடிக்க தெரியுமா

** ஆறாம் வகுப்பில் என்னுடன் ஆட்டோவில் வருபவள் 'ஷாரன்'. ஒரு நாள் சிகரெட் பிடிப்பதைப் பற்றி பேசி, நீ பிடித்திருக்கிறாயா என்று கேட்டாள். இல்லை என்று சொன்னேன்.  அடுத்த நாள் இரண்டு சிகரெட் கொண்டு வந்திருந்தாள். ஆட்டோவில் மற்ற சிறுமிகள் இறங்கிவிட நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஒரு சிகரெட்டை தன் உதடுகளில் வைத்துக் கொண்டாள். ஒன்றை எனக்கு நீட்டினாள்.  குருகுலவாசமென்ன, புராணப்  படமென்ன எல்லாம் காணாமல் போக, ஒரே ஒரு கணம் அந்த சிகரெட்டை வாங்கினேன்.  தீப்பெட்டியை வாங்கிப் பத்தவைக்கும் முன்  உடல் எல்லாம் படபடக்க, தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தலையெடுக்க,  வேண்டாமென திரும்ப கொடுத்து விட்டேன். இதற்குள் ஆட்டோ ட்ரைவர் வேறு எங்களைப் பார்த்து திட்டி விட்டு, சிகரெட்டை வாங்கி தூர போட்டுவிட்டான். ஷாரன் அடுத்த வகுப்புக்கு எங்கள் பள்ளியில் தொடரவில்லை.

ஆங்கிலம் தெரிந்து கொண்டு வா

** ஆங்கிலத்தில் பேசுவதாலும், ஆங்கில தோழிகளின் நட்பு இருப்பதாலும், ஆங்கிலம்  மட்டுமே பெரிதும் பேச வாய்ப்பு இருந்தது. அதுவே சௌகரியமாகவும் உணர்ந்தேன். அதுவரை தவறில்லை. ஆங்கிலம் சரியாக தெரியாத என் பக்கத்து வீட்டு தோழிகளை, கிண்டல் செய்து, உனக்கு உச்சரிப்பே வரவில்லை, நீ என் தோழியாய் இருக்க லாயக்கு இல்லை என்று சண்டையிட்டு அனுப்பிவிட்டேன். என் திமிருக்கு அளவே இருந்ததில்லை போலும்! அப்புறம் அப்பா எனக்கு புத்திமதி கூறி எங்கள் நட்பை வளர உதவியது மறக்க முடியாதது. இன்றும் என் ஆருயிர் தோழியாய் தொடர்பில் இருக்கும் இனியவள்.

ஏழை என்றால் கிள்ளுக்கீரையா

 

** எங்கள் வீட்டுக்கு அப்பாவின் கீழ் வேலை செய்பவர் வந்திருந்தார். கிழிந்த ஆடை. கரிய உடல். "அப்பா யாரோ பிச்சைக் காரன் வந்திருகான்" என்று சொல்லி, முதல் முதலில் அப்பாவிடம் சரமாரியாக அடி வாங்கினேன். அந்த மனிதர் அரண்டு போய்விட்டார். அன்று முதல் இன்று வரை அப்பாவிடம் வாங்கிய ஒரே அடி அது தான்.  அப்புறம் அவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்தார்.  பல புத்திமதிகள் சொன்னார். அப்பாவின் நண்பரும் எனக்கு மிகவும் பிரியமானவராகிப் போனார். என் திமிர் மாறியதா? நான் மாறினானா?  ....மாறினேன்....ஆனால் கொஞ்சம் தான்...

கெமிஸ்ட்ரி என்னும் அரக்கன்


** வகுப்புக்கு வரும் டீச்சர்களை கிண்டல் செய்வது,  பேப்பர் ராக்கெட் விடுவது, போன்ற விஷயங்களில் பெரும் பங்கு  வகிக்காவிட்டாலும், சிறு பங்கு வகித்திருக்கிறேன். நிறைய நேரம் கூட இருந்து கும்மி அடித்திருக்கிறேன்.  பத்தாம் வகுப்பு  கணித ஆசிரியை, ஆங்கில ஆசிரியை இருவரும் மிகவும் பிடிக்கும். பிடித்த வகுப்புகள், கணிதம், ஆங்கிலம், வரலாறு, புவியியல்.

சயின்ஸ் பிடிக்கும் என்றாலும் கெமிஸ்ட்ரி பிரிவு எனக்குப் பிடிக்காது. balancing of equations எனக்கு வரவே வராது. 'எமிலி' என்ற க்யூட் ஆசிரியை கெமிஸ்ட்ரி எடுத்தார்கள். சின்னவயதுக் காரர்.  அவருக்கு எங்கள் வகுப்பைக் கண்டால் பயம். நான் முதல் பெஞ்சில் தான் உட்காருவேன். 'கெமிஸ்ட்ரி என்றால் அத்துப்படி' என்பதை போல் முகம் வைத்து தப்பித்து விடுவேன். அப்படியும் ஒரு முறை,  equation balance செய்ய என்னைக் கூப்பிட்டு விட்டார்கள்.  இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாய் சில பல எண்கள் போட்டுப் பார்த்தும் balance ஆகவில்லை.


 "யார் சரியான நம்பர் சொல்றீங்க பார்கலாம்"  என்று நான் வகுப்பைப் பார்த்துக் கேட்டேன்.  "குலுக்கிப் போட்டு என்ன  நம்பர் வருதோ போடு" என்று வகுப்பு மொத்தம் கிண்டல் செய்ய,   ஒரே சிரிப்பும் கும்மாளமும்  கூச்சலும் சத்தமுமாய் போய்விட்டது. இந்த தொல்லை தாங்காமல், என்னை இடத்துக்கு அனுப்பிவிட்டு வகுப்பைத் தொடர்ந்தார். அதன் பிறகு யாரையும் அவர் கேள்வியே கேட்டதாய் நினைவில்லை. பயிற்சிக்கு வந்த ஆசிரியை. சில மாதங்களில் வேறு பள்ளிக்குப் போய்விட்டார்.

சயின்ஸ் mid-term தேர்வுக்கு முன், Interval  நேரத்தில் சமோசா சாப்பிட தோழிகளுடன் காண்டீன் சென்று, நேரம் போவது கவனிக்காமல்,  லேட்டானதால், வேகமாக ஓடி சறுக்கு மரம் அருகே  விழுந்து கையில் ஃப்ராக்சர்.  வலியின் நடுவிலும்,  அப்பாடா சயின்ஸ் பரிட்சை எழுத வேண்டாம் என்று ஒரே குஷி எனக்கு. என்னைப் பார்த்து வகுப்பு மொத்தமும் பொறாமை வேறு பட்டார்கள்.


சும்மா பார்த்தாலே மதம் மாறணுமா?


** பத்தாம் வகுப்பில், படிக்கிறேன் பேர்வழி என்று வராண்டாவில் பொழுதைக் கழிப்பேன். என் வீட்டை இரண்டு க்ருத்துவ வாலிபர்கள் சுத்தி வந்த காலம் அது. ஒரு முறை அதில் ஒருவன் "ஐ லவ் யூ" என்று கத்த, அவனை நீ கல்யாணம் செஞ்சுக்க போறியா என்று வெடிகுண்டை தூக்கிப் போட்டாள் என் தோழி. "கல்யாணம் செஞ்சுக்க மதம் மாரணம்டி". - அடுத்த ஷாக். 

என்ன அநியாயக் கொடுமை! சும்மா இடுக்கு வழியே அப்பாவியாய்(!) எட்டிப் பார்த்ததற்கு இவ்வளவு விளைவா !! என்று கதிகலங்கிப் போய் வராண்டாவில் படிப்பதை அடியோடு நிறுத்தினேன். சைக்கிள் வாலிபர்களும் ஒரு சுபமுகூர்த்தத்தில் காணாமல் போனார்கள்.

ஆவிகள் உலகம்

** பதினோராம் வகுப்பில், ஆசிரியர்கள் இல்லாத பொழுதுகளில்  ஆவியை அழைத்து, கும்பல் கும்பலாய் கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  நான் தள்ளி  நின்று பார்த்திருக்கிறேன். காசு, மெழுகுவர்த்தி வைத்து அழைப்பார்கள். பாஸா ஃபெயிலா, எப்போ கல்யாணம், புருஷன் பெயர் என்ன, போன்ற அத்தியாவசிய கேள்விகள் கேட்கப்படும்.

இதெல்லாம் நிஜமா பொய்யா என்ற எண்ணம் எழும். "காசு தானாக நகர்கிறது நான் நகர்த்தவில்லை"  என சம்பந்தப்பட்ட இரு தோழியரும் சொன்னதுண்டு.

ஆவி, இவர்களில் ஒருவரை பிடித்துக் கொண்டு போக மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது  என்ற பயம் கூட எழும். இரண்டு மூன்று முறைகளுக்குப் பிறகு, ஆவியை அழைக்க நேர்ந்தால் நானும் இன்னும் சிலரும், அந்த இடத்தை விட்டு அகன்று விடுவோம்.


நன்றாக படித்து, வகுப்பில் இரண்டாவதாக நின்றது, பதினோரம் வகுப்பில் தான். முதல் ஐந்து ராங்க் அதுவரை வாங்கியதில்லை. அந்த அனுபவம். ரொம்ப பெருமையாக இருந்தது.

முதல் முதல் சேலை

பதினோராம் வகுப்பு தான் முதன் முதலில் ஃபேர்வெல் பார்டிக்கு சேலை கட்டினேன். சேலை கட்டிக்கொண்டு பி.டி.ஸி பஸ்ஸில் பள்ளி செல்லும் வரை திக் திக் என்றிருந்தது. எங்கே அவிழ்ந்து விடுமோ என்ற பயம். பயத்திற்கு ஏற்ப பாதி வழியில் கொஞ்சம் அவிழ்ந்தது போல் பிரமை வேறு.  ஒரு மாதிரி கைப்பையின் உதவியுடன் இறுக்கப் பிடித்து கொண்டு பள்ளி சென்றேன்.  என் தோழி மறுபடி எனக்கு சேலை உடுத்தி விட்டாள்.

பள்ளியைத் தவிர நான் மதிக்கும் ஆசிரியர்


சிறு வயதில் ராஜாஜியின் ராமாயணம், மஹாபாரதம் படித்ததுண்டு. புராணக் கதைகள் பிடிக்கும். அதில் வரும் இறைவியாக, என்னை கற்பனை செய்து கொண்டு, ஏதோ சாபத்திற்காக மானுடப் பிறவி எடுத்ததாக நினைத்துக் கொள்வேன். சிவபெருமான் என்னை அழைத்துப் போக வருவார் என்று எண்ணுவேன்.  (ரொம்ப கதைகள் படித்ததன் விளைவு)


பி.ஆர் சோப்ராவின்  "மஹாபாரதம்" வழியாகத் தான் கீதையை முதன் முதலில் கேட்டேன்.  அந்த தாகம் தொடர்ந்து பரவியது. வீட்டிலுள்ள புத்தங்களில் கீதையைத் தேடினேன். ஸ்லோகம் சாரம்சம் கூடிய ஒரு புத்தகம் கையில் கிட்டியதும், மூன்று நாள் இடைவிடாது திரும்பதிரும்ப  கீதை படித்தேன். நிறைய புரிந்தது போல் இருந்தது.

ஏறக்குறைய கீதையை கரைத்து குடித்துவிட்டதாய் நானே என்னை மெச்சிக் கொண்டேன். ஒரு ஞானியைப் போல் என்னை நானே நினைத்துக் கொண்டு ஒரு வாரம், பத்து நாட்கள்,  அதிகம் பேசாமல், இதே சிந்தனையில் இருந்தேன். கண்ணனையே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இறைவன் சேவையில் ஈடு பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவது தான் சிறந்த பாதை என்று நினைத்தேன்.

a. பக்தி

பள்ளி நாட்களில்,  பாட்டு வகுப்பு டீச்சர் எனக்கு மிகவும் மரியாதைக்கு உரியவர். பஞ்சரத்ன கீர்த்தனைகளை அர்த்தம் புகுத்தி படிப்பிப்பார். "துடுகு கல நன்னே தொர" என்று தியாகராஜர் போல் நானும் கற்பனை செய்து கொண்டு இத்தனை துஷ்டத் தனங்கள் செய்த என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று உருகி பாடியிருக்கிறேன்.

"சிறுத ப்ராயமுல நாடே பஜனாம்ருத ரஸ விஹீன குதர் குடைன" என்ற வரிகள் குறிப்பாக பிடிக்கும் (சிறுவயது முதலே, பஜனையும் உன் நாமரஸத்தையும் ருசிக்காமல், குதர்க்கம் பேசித் திரிந்தேன் என்பது தொராயமான அர்த்தம்)

பக்தி புகட்டிய குரு என்று என் பாட்டு டீச்சரை நினைக்க கடமைப்பட்டுள்ளேன்.  "அலைபாயுதே கண்ணா" என்ற பாடல் இறைவன் கண்ணனுக்காக நான் காதலுடன்  பாடுவதாய் நினைத்துத்தான் அதிகம் பாடியிருக்கிறேன்.

b. அன்பே கருஷ்ணன்  ( I will never forget u)

வீணா என் வகுப்பில் பாட்டு படிக்க வருபவள். என்னுடன் ஒன்றாக சிறுவயதில் படித்தவள்.  மிகவும் எளிமையாய் உடை உடுத்துவாள். அன்பானவள்.  நான் வீணாவிடம் அதிகம் பழக மாட்டேன். மரியாதைக்கு தலை அசைத்து ஹாய் சொல்வதோடு நிறுத்திக்கொள்வேன். ஒரு வருடம் கழித்து, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்.

உங்கள் பள்ளியில் ஃபேர்வெல் உண்டா என்று அவள் கேட்க, நான் சுருக்கமாக ஏதோ இரண்டு வார்த்தைகள் பதில் சொல்லி நகர முற்பட்டேன்.

"கொஞ்சம் இரு"  என்று நிறுத்திய வீணா, தொடர்ந்து,  "நீ கூப்படற கண்ணன் என்னுள்ளையும் தானே இருக்கான். ஏன் என்னோட பேசாம இருக்க? நானும் உன்ன மாதிரி பொண்ணு தானே.... எனக்கு உன் அன்பு தானே வேணும், ஏன்  இவ்ளோ திமிர் உனக்கு....இப்டி திமிரோட இருந்தா க்ருஷ்ணன் வர மாட்டான்." ...

சரமாரியாக அட்வைஸ். அரை மணி நேரம்...மூச்சே விடாமல்,.....நிறுத்தாமல்....பொழிந்தாள்.   நான் கேட்டுக்கொண்டிருந்தேன். வாயே திறக்கவில்லை :))

விஷயம் இவ்வளவு தான். அவளுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் நான் கண்டு கொள்ளாமல் இருந்தது, அவளை வருத்தியிருக்கிறது. எனக்கு நிஜமாகவே சாட்டையில் அடித்தது போல் இருந்தது............. அவள்....வீணா....என் ஆருயிர் தோழியாகிப் போனாள்.............நான் மாறினேன்........ நிறையவே....முழுமையாக...என்னை மாற்றியவள் அவள். என் தோழியுமாகி, என் குருவும் ஆகிப் போன வீணா. இன்று அவள் முகவரி தெரியாது போனாலும் என் இதயத்தில் அழுத்தமான முகவரி, நிரந்தரமான முகவரி பதித்துச் சென்றிருக்கிறாள்.

இன்னும் என்னென்னவோ  நினைவுகள்....எத்தனைப் பாடங்கள்! எத்தனை மனிதர்கள்! எப்படியெல்லாமோ பாதைகளில்  பிரயாணம்.. நம்மை மெருகேற்றியவர்கள்...பெற்றோர்...ஆசிரியர்கள்...பள்ளிகள்...நண்பர்கள்......என்னை அருமை பள்ளி நினைவின் மகிழுலகுக்கு அழைத்த ஷைலஜாவுக்கு மிக்க நன்றி....

நீங்களும் உங்கள் பள்ளி நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கிறேன்...

1. இராஜேஸ்வரி
2. வை.கோ சார்
3. கீதமஞ்சரி
4. ராம்வி


March 02, 2012

மரணத்திற்கு முன் சரணம்



இரு தினங்களுக்கு முன் பொதிகைத் தொலைகாட்சியில் வரும் "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.

கீதையில் கண்ணன்

"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்
"  என்கிறார்.


மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. முன்னமே இக்கருத்தினையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.

எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.

நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினர். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"

அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே." 

 என்றார் பெரியாழ்வார்.

மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன். 

 அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் என்னை பெரிதும் நெகிழச்செய்தது.

பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.

பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.

திரையிசைப் பயணங்கள் (4) (சும்மா பொழுது போகாம)

படம்: காற்றுக்கென்ன வேலி
பாடல்: ரேகா ரேகா காதலென்னும் வானவில்லை
பாடியவர்கள்: ஜாலி ஆப்ரஹாம், பி.சுசீலா
இசை: சிவாஜி ராஜா
நடிப்பு: ராதா, மோகன்

விவிதபாரதியில் பள்ளி செல்லும் முன் கேட்ட எண்ணில் அடங்கா அருமைப் பாடல்களில் இதுவும் ஒன்று....





ரேகா ரேகா ரேகா ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்  நீ பார்த்த பார்வையில்
ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்

பூ போல உன் மெனியின் புதுவாசம் மயக்கம் தரும்
பனி போல் நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே

இளங்காலைப் பொழுதாக வா புதுராகச்சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனியாடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது
......
***********

//
காதலென்னும் வானவில்லை கண்டேன்  நீ பார்த்த பார்வையில்
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்
//

சுவை அல்லது ரசம் அத்தனையும் காதல் கற்பிக்க வல்லது. என்னென்ன ரசங்கள்? கருணை, காதல், காமம், கோபம், வெட்கம்...என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் காதல் மட்டுமே கற்பிக்க வல்லது.

அந்த சுவைகளை உணர்ந்த காதலனோ காதலியோ சுவைக்கேற்ற வண்ணம் கொள்கின்றனர். அப்படி வண்ணத்தை எழுப்ப வல்ல காதலும் வானவில் தானே? காதல் என்ற வானவில் தொடுத்து நீ பார்த்த பார்வையில் என்னுள் பல சுவைகளை எழுப்பியது, அதனால் நானும் பலவண்ணம் கொண்டேன்.

இன்னும் சில மறைபொருள் இருக்குமாறும் எழுதியிருக்கிறார் கவிஞர்...
அதாவது, காதலிக்கும் வரை black and white ஆக சுமாராக தெரிந்த சுற்றம்,
சொந்தம், தெரு, மாடு, கன்னுகுட்டி, கல்லூரி, வாத்தியார் எல்லாமே
மனதில் தோன்றும் பற்பல வண்ணத்தில் கலர்ஃபுல் ஆகி விடும்....


வானவில் போல் எப்படி என்னுள் பல வண்ணம் எழுந்தது தெரியுமா? எல்லாம் நீ செய்த ஜாலம், அதனால் என்னுள் விளைந்த ஆசைகளல்லவா அத்தனை வண்ணம் கொண்டது!!

//இளங்காலைப் பொழுதாக வா,  புதுராகச்சுவையாக வா//

அதெல்லாம் சரி...ஏன் மத்தியானம், மாலை எல்லாம் சொல்லலை? மயக்கும் மாலையும் இனிக்கும் இரவாக அல்லவா காதலன் வரவேண்டும்!?!?....இங்க ஏன் இளம் காலைப் பொழுதாக வரவேண்டுமாம்?

இளங்காலை பொழுதில் நம்பிக்கை, நிறைவு, திருப்தி, புத்துணர்ச்சி, பொலிவு எல்லாம் நிறைந்திருக்கும். என் வாழ்வின் அங்கமான நீயும் என்னுடைய வாழ்வில் இளங்காலைப் பொழுதாக வரவேண்டும். அது மட்டும் போதாது. இதுவரை நான் பாடிய சுவை, ராகம் வேறு. இன்று முதல் உன்னுடன் பாடவிருக்கும் புதுராக மோஹனம், இதுவரை பாடாதது.


//
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது
//

இப்படி காதலும் ஆசையும் பொங்க காதலன் கூறும் விண்ணப்பத்தில் இவள் தேவை அதிகரித்து விட்டதாம். தேமே என்று சும்மா இருந்த மனசை கெடுப்பது என்பது இது தான் போலும், தேவை ஒன்று இரண்டு என இருந்தது, நூறாகி, அவனது தேவை இவளது தேவையாக மாறிவிட்டதால் மலர் போன்ற மென்மையான குளுமையான மெனி, சென்னை வெய்யிலாக கொதிக்க ஆரம்பித்து விட்டதாம்.

(ரொம்ப முக்கியம்.... இலக்கிய சந்தப் பாடலுக்கு பதவுரை பொழிப்புரையா வேறையா என்று தக்காளி முட்டை எரிவதற்குள் ஓடிவிடுகிறேன்)

February 08, 2012

முதல் முதலில் படித்த இந்துமதி சுஜாதா

கடைசியாய் நானும் ஒரு கதை படித்து விட்டேன். பார்டியோ பார்டி என்று சென்ற மாதம் பார்டி கொண்டாடி விட்டு, என் சொந்த ஊரான சேலத்தில், சொந்த வேலை விஷயமாய் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன்.

அவர் ஒரு சுஜாதா வெறியர் என்று முன்பே தெரிந்திருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு தமிழில் கிறுக்கும் ஆர்வம் இல்லை. வெறும் வாரப் பத்திரிகைகளை மேய்ந்து விட்டு அவசரமாய் அடுத்த வேலையில் என்னை அமிழ்த்திக் கொள்வேன்.

இம்முறை, இலக்கிய கூட்டத்தில் அலசு அலசு என்று பலர் அலசி காய வைத்து, புது சாயம் பூசி, ஒரு வழி பண்ணிவிட்டனர். நான் மட்டும் பாவப்பட்ட ஜந்துவைப் போல் இலக்கியம் பேசும் இலக்கியவாதிகளின் நடுவே, சுருதி சேராது கூடக் கூவும் கோரஸ் பாடகியைப் போல், சம்மந்தமில்லாது அவ்வப்பொழுது எதையோ உளறிக்கொண்டிருந்தேன். இல்லாவிடில், இறுக்கி வாயை மூடிக்கொண்டிருந்தேன். ஏன்? ஒரு அரையணாப் பெறக்கூடிய ஒரு நாவலைக் கூட இது வரை படித்தறியாத பாமரத்தனத்தினால். இந்த உண்மை என்னை மிகவும் சுடவே, என் மாமா வீட்டின் புத்தக அலமாரியை  குடைந்து சுஜாதாவின் குட்டிக் குட்டிக் கதைகள் இரண்டைப் படித்தேன்.

1. குருப்ப்ரசாதின் கடைசி தினம்
2. தேடாதே
3. இறுதிப் புன்னகை


இவையெல்லாம் ஒரே புத்தகத்தில் இருந்ததால் என் கண்களிடமிருந்து தப்ப முடியவில்லை. எல்லாக் கதையும் வெகுவாய் ரசித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நன்றாய் இருந்தது.

குருப்ப்ரசாத் இறப்பு தெரிந்தே அவனுடன் பயணிக்கிறோம். நடுநடுவே தெரிந்தோ தெரியாமலோ, கிளுகிளுப்பு என்ற பெயரில், அரைகுறை மார்புடன் உலாவரும் பெண்கள் வர்ணிக்கப் படுகின்றனர். தேவையா என்பதெல்லாம் யோசிக்க அவகாசம் இல்லை. ஏனெனில் குருபிரசாத் பாவம் இறக்கப் போகிறான், இன்னும் சிறிதே நேர அவகாசம் தான். மார்பகத்தை ரசித்து விட்டுப் போகட்டுமே என்ற பச்சாதாபமாய் இருக்கலாம். அவன் மனைவியுடன் புணர்ந்ததை இன்னும் அழகாய் கூறவே முடியாது. கல்யாணம் ஆகாத எந்தப் பெண்ணும் அதைப் படித்தால் இனி திருமணம் வேண்டாம் என்று கூறும் அளவு இருந்தது அந்த விவரிப்பு. புசுபுசுவென்று புகைவிடும் எஞ்சின்களை இனி யாரும் ரசிக்க முடியாது. குருபிரசாத் இறந்ததும் கதையில் பிடிப்பு வருகிறது. அதற்குள் கதையும் முடிந்து போகிறது.

'இறுதிப் புன்னகை' நெஞ்சில் ரொம்ப பதிந்தது என்று சொல்ல முடியாது.

'தேடாதே' ரசிக்கும்படி இருந்தது. கடைசிவரை யார் என்று சொல்லாமல் நாளை பேப்பரை பார்த்து தெரிந்துக் கொள்ள சொல்கிறார். நானும் மூன்று நாளாய் பேப்பர் பார்க்கிறேன். இன்னும் புரியவில்லை. 

எல்லாக் கதைகளிலும் ஒரு குட்டி சம்பவத்தை வைத்து, எத்தனை அழகாய் கதை வளர்க்கலாம் என்று ஆரம்ப கால எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. கதை முழுதும் பேச்சுகளால் நிரப்பப்பட்டிருந்தாலும்,  ஒரு தேர்ந்த எழுத்து என்பது என்ன என்று கற்றுக்கொள்ள முடிகிறது. கதை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்ல இயலாது. ரசிக்கலாம். ரசித்தேன்.
_____

சுஜாதா கதைகள் படிப்பதற்கு முந்தைய நாள், மூன்றே மணி நேரத்தில் புத்தகத்தை கீழே வைக்க முடியாமல்,  கதையில் மூழ்கி, பாத்திரத்தோடு ஒன்றி, அழுது, சிரித்து மாய்ந்து போய் படித்து முடித்த பிறகும், முதன் முறையாய் நான் படித்த சில ஆங்கிலக் கதைகளுக்கு ஈடாய் என்னை வெகு நேரம் பாதித்தது என்று இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" கதையைச் சொல்வேன். நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் விச்வம், பரசு சிரிக்கின்றனர். அழுகின்றனர். கனவுகள் தொலைக்கின்றனர், பின் அதுவே வாழ்க்கையாகிப் பழகிப் போய், இருக்கும் வாழ்வில் இன்பம் தேடும் வழியில் திணிக்கப்  படுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் விச்வம் பரசுவாகும் வரையில் நடக்கும் கதைகள். இம்மி பிசகாமல்  எடுத்துக்கூறுகிறார்.  ஒரு வரியில் கூட சலிப்பு தட்டவில்லை. வரிக்கு வரி, உங்கள் வாழ்க்கையை, என் வாழ்க்கையை படம் பிடித்துள்ள இந்துமதிக்கு மனம்கனிந்த பாராட்டுகள்.

விச்வம், ருக்மணி உறவு அழகான நட்புறவு. ஒருவேளை ருக்மணி பரசுவுக்கு மனைவியாய் வந்திராவிட்டால்,  இவனுக்கே நல்ல தோழியாய், பின் வாய்ப்பிருந்தால் காதலியாய் மனைவியாய் வாய்த்திருக்கக் கூடும் என்று பல இடங்களில் தோன்றுகிறது. கொச்சைப் படுத்தப் படாத நட்புறவு. யாரேனும் இக்கதை படிக்கவில்லையெனில் ஒரு முறையேனும் வாசித்துப் பாருங்கள். நம்முள் இருக்கும்  விசுவம் இங்கு பாத்திரமாய் பேசுவது புரியும்.

______

நிற்க. ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன் மரத்தடியில் பதிவிட்ட மீள் பதிவு. 

February 07, 2012

liebster விருது - நன்றி ராஜி.


சென்ற மாத காலம் முழுவதும், இமயமலைச்சாரலில் வாழ்ந்த துறவியாக என்னை நானே எண்ணிக்கொண்டு (கொஞ்சம் ஓவர் தான்) அதிகம் எழுதுவதில் ஈடுபடாத மனநிலையில் இருந்துவந்தேன். என்னடாவென்றால் இரண்டு விருதுகள். சில வருடங்களுக்கு முன் குதூகலித்து மகிழ்ந்திருப்பேன். தற்போது பண்பட்டுவிட்டதாக நானே என்னை நினைத்துக்கொள்கிறேன் (இதுவும் ஓவர்...பொறுத்துக்கோங்க) அதனால் மனம் தெளிந்து அமைதி கலந்த மகிழ்ச்சியிலும் நிதானத்திலும் திளைத்தது.

அடிக்கடி கோபித்துக் கொண்டு பிறந்தகம் செல்லும் பெண்டாட்டி போல், துறவுநிலைக்கு மனம் சென்றுவிடக் கூடிய அபாயம் வரும் போது இப்படி நண்பர்கள் விருதுகள் வழங்கியிருப்பதால், அடடா இதற்காகவானும் இரண்டு நல்ல எழுத்து எழுதவேண்டுமே என்ற கடமை என்னுள் நிறைகிறது. முடிந்த போதெல்லாம் நிச்சயம் எழுதுவேன்.





வி.கோபாலக்ருஷ்ணன் விருது வழங்கி முடித்த தருணத்தில், தோழி  ராஜி அவர்கள் என் பதிவுகளுக்காக "liebster blog award" வழங்கியுள்ளார். மிக்க மகிழ்ச்சி தோழி. பிடித்த ப்ளாக் என்ற பதவி எனக்கு எவ்வகையில் பொருந்துமோ தெரியவில்லை. ஜனரஞ்சகமாக எழுதும் மனநிலை குறைந்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. அடிக்கடி ஆன்மீகம், வேதாந்த விஷயங்களை மட்டுமே பதிவில் எழுதாமல் வேறு சில பதிவுகளும் பதிவிட எத்தனிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி ராஜி.


நானும் படிக்கும் சில வலைப்புக்களில் யாருக்கு வழங்குவேன். ஏறக்குறைய முன்பு குறிப்பிட்டது போல் சிலர் பிரபலங்கள். சிலர் எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டனர். நான் படிக்கும் ஏறக்குறைய எல்லா வலைப்பூக்களும் மிகவும் பிடிக்கும். அதில் ஐந்து குறிப்பிட்டு சொல்ல கடினமாக இருக்கிறது.


liebster விருதினை நான் ரசிக்கும் கீழிருக்கும் தோழர்களுக்கு வழங்க பிரியப்படுகிறேன்.



D.R.Ashok: அற்புதமான புதுக்கவிதைகள். தற்பொழுது எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டதே :(



ஷைலஜா:  இவரின் நகைச்சுவை, பல்சுவை...சகலகலா பதிவுகளுக்கும் நான் விசிறி.



R. gopi: சுவாரஸ்யமான பதிவுகள் பிடிக்கும். இப்பொழுது ஒரு தொடர்கதை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அடுத்த பகுதி வெளியிடக் காத்திருக்கிறோம்.



தமிழ்விரும்பி: பதிவுகள் தான் என்றில்லை, அவர் எழுதும் ஒவ்வொரு மறுமொழியும், வாக்கியமும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்தவை. சிரத்தையுடன் கூடிய நல்லெழுத்து.



Analyst: இவரது பதிவுகளில் அறிவியல் சார்ந்த விஷயங்களை  ஆர்வமாக படிப்பேன். பொதுவான இவர் எழுத்தின் அணுகுமுறையும் அறிவுபூர்வமாக இருக்கும்.



ஆர். கோபி. அஷோக், இவ்விருது, மிகுந்த நேரநெருக்கடியிலும் வலைப்பூவில் எங்களைப் போன்ற ரசிகர்களுக்காக நீங்கள் மேலும் எழுத சிறு ஊந்துகோலாக இருக்குமென மிகவும் ஆசைப்படுகிறேன்.

liebster விருது பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த ஐந்து பதிவாளர்களுக்கு வழங்கித் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.







February 06, 2012

விருதுகள்... அன்பின் அங்கீகாரம்.

நேற்றைய தினம் "Versatile blogger award" என் பதிவுகளுக்கு திரு.வி.கோபாலக்ருஷ்ணன் அவர்களால் கொடுக்கப்பட்டது.




என் எழுத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள பிரியத்துக்கு மிகுந்த நன்றி சார்.



வெர்ஸடைல் என்பதன் விளக்கத்தை ரத்தின சுருக்கமாகக் தம் பதிவில் கூறியிருந்தார். நானும் விருதை பகிர்ந்து ஐந்து பேருக்கு என்ன ஐநூறு பேருக்கு கொடுத்து மகிழ விரும்புகிறேன்.

ஆனால், நான் வாசிக்கும் வலைதளங்கள் மிகவும் குறைவு.  என் மனதில் நிற்கும் சில தளங்களுக்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. அவர்களில் ஏறக்குறைய பலரும் பிரபல பதிவர்கள். விருதுகளை  முன்னமே வாங்கியிருக்கக்கூடும்.

இருப்பினும் எனது பார்வையில் "versatile" என்று கருதும் ஐவருக்கு, இவ்விருதினை அளிப்பதில் நான் பெருமையடைகிறேன். முன்னமே வாங்கியிருந்தாலும், என் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டு என்னை மகிழ்விக்கக் கோருகிறேன்.


கீழ்கண்ட எழுத்தாளர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.  உங்கள் எழுத்தின் மேல் நான் கொண்ட பிரியத்தின் சிறு அடையாளமாக இதைக் கருதுமாறு அன்புடன் விண்ணப்பிக்கிறேன்.



1. ஜீவி அவர்களின் விசிறி நான் என்றால் மிகையாகாது. பார்வை என்ற ஒரு கதையிலேயே, பல கருவை உள்ளடக்கி, பல்வேறு விஷயங்களைப் பற்றி பகிரும் அவர் திறமைக்கும், ' சுயத்தேடலில்'  நான் கண்டெடுத்த முத்துக்களின் நினைவாகவும் என்னால் முடிந்த சிறு அங்கீகாரமாக பணிவான வணக்கங்களுடன் இவ்விருதை வழங்குகிறேன்.



2. ஜி.எம்.பி அவர்கள், பல விஷயங்களைப் பற்றி குட்டி குட்டி பதிவு சுவையாய் கூறுவதில் வல்லவர். கவிதை,  கதைகள், நாடகம், சின்ன சின்ன விஷயங்களை பகிர்தல்,  சிறுவயது நினைவலைகள், சிந்தனை தூண்டும் பதிவுகள்   என எதையும் விட்டுவைப்பதில்லை.  பல் திறமை பொதிந்திள்ள அவருக்கு  விருது வழங்குவதில் மிகுந்த பெருமையடைகிறேன்.


3. சகோதரர் வி.ராதாக்ருஷ்ணன் அணு முதல், ரஜினி வரை கோபம் முதல் கோள்கள் வரை சுவாரஸ்யமாகப் பேசுபவர். இவ்விருது இவருக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்கிறேன்.


4. தோழர் மின்னல் வரிகள் கணேஷ் பற்றி நான் சொல்லவே வேண்டாம். மிக்ஸர் என்ற தலைப்பில் அவர் வழங்கும்  காரசாரமான அருமை கலவையே அவரின் பன்முக எழுத்துத் திறமையை பறைசாற்றுகிறது. இவருக்கு விருது வழங்குவது எனக்கு பெருமையாய் இருக்கிறது.


5. அன்புத் தோழி கீதாவுக்கு குழந்தைகள் பக்கங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் அனைத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். அவர் எழுத்து ஆத்மார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகுந்த பிரியமானது. அவருக்கு இவ்விருது வழங்கி நான் பெருமையடைகிறேன்.



வாழ்த்துக்கள் நண்பர்களே!



வை.கோ அவர்கள் எழுதிய பதிவின் சிறு பகுதியை இங்கு இடுகிறேன்.



VERSATILE என்றால்






(1)ஒரு விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்கு சுலபமாக மாறுகிற [கவனிக்கிற] [Capable of turning easily from one thing or subject to another]
(2) எந்த வேலையையும் செய்யும் திறமை வாய்ந்த
[Applying oneself readily to any task.]
(3) பலவிதத் திறமைகளுள்ள [many-sided]
(4) பல கலைகளில் வல்லமையுள்ள [Example: Versatile Author]



என்று தெரிய வருகிறது.



இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். தொடர்பதிவுகள் போல இது ஒரு தொடர் விருதாக அமையப்போவது நிச்சயம்


===========================================


 பிடித்த எழு விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டு மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர்ந்து வலைப்பதிவாளர்கள் மத்தியில் நல்லூக்கம் வளர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஹ்ம்ம்...அப்புறம் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்  கீழே பகிர்ந்துள்ளேன்.

1. என் கண்ணன் (கீதை உபதேசித்தவன்) ...அவனை நினைப்பது, சிந்திப்பது,  என்றேனும் அவனையே என் மணவாளனாக ஏற்பதே என் இலக்கு. அதற்கான தவமே என் பிறப்பு என நினைத்துள்ளேன்.

2. வானவியல். (astrnomy), அறிவியல் சார்ந்த விஷயங்கள் படித்தல்,  ஆராய்தல்.

3. பாடுவது, பாடல்கள்  கேட்பது

4. ஆங்கிலம்/தமிழ் நாவல்கள், புத்தகங்கள் படிப்பது

5.  எழுதுவது,

6. கணினி விளையாட்டுக்கள்,  நெருங்கிய நண்பர்கள்

7.   என் கணவர் மற்றும் மகளுடன் தனியே இருக்கும் பொழுதுகள்,
என் அம்மா அப்பாவுடன் தனியே இருக்கும் பொழுதுகள்.

February 02, 2012

ஆசையால் வரும் கேடு





தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு



என்றார் திருவள்ளுவர். எனக்கு மிகவும் பிடித்த குறளில் இதுவும் ஒன்று. உதிர்த்த மலர்கள் மரம் சேராதது போல உதிர்த்த வார்த்தைகளை பெற முடியாது. அதன் இலக்குக்குறிய நபரை தாக்கவோ மகிழ்விக்கவோ செய்த பின் வெளி வந்த வார்த்தைக்குறிய பணி முற்றுபெறுகிறது. கோபத்தில் வெளி வந்த சொற்களை திரும்ப அள்ள முடிவதில்லை.


ஏன் கோபப்படுகிறோம்? முதல் காரணம் அஹங்காரம். அது தோன்றியதால் தோன்றுவது ஆசை. பொருளின் மேல், நபரின் மேல் உள்ள ஆசை, அது பரிபோய்விடக்கூடாதே என்ற ஆசை, அல்லது தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், அதனால் வரும் பொறாமை.



மதியிழந்து, பொருட்களை விலைபேசி சூதாடியதைத் தாண்டி, உயிர்களையும் விலைபேசி அடிமைப்படுத்தி தன் ஆசையை தீர்த்துக் கொள்ள எண்ணுகிறான் துரியோதனன். சூதாட்ட மயக்கத்தில் இன்னது தான் செய்கிறோம் என்று அறிந்தும் அறியாமல் தவறிழைக்கிறான் தருமன். கோபமும் பொறாமையும் அஹங்காரமும் கொழுந்துவிட்டெரியும் துரியோதனன் மனது இப்போது பழி தீர்க்க எண்ணுகிறது.  தன்னை நகையாடியவளை, தனக்கு கிடைக்காதவளை, அசிங்கப்படுத்துவது நோக்கம். அறிவுடையவன் மற்றவனுக்கு துன்பம் தரும் சொற்களை பேசமாட்டான். அகத்தே இருள் சூழ்ந்து அறிவற்ற செயல் செய்கிறான் துரியோதனன்.

இழுத்து வரச் சொல்கிறான் திரௌபதியை. எப்படிப்பட்ட தீஞ்சொற்கள்!


"அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,

துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:-


‘செல்வாய்,விதுரா!நீ சக்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள்,மிக்க எழி லுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,

“மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய்’
-பாஞ்சாலி சப்தம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மேல் ஆசை. ஆசையில்லாத மனம் ஞானியின் மனம் மட்டுமே. இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்றோ அல்லது அவனுடன் ஒன்றற கலக்க வேண்டும் என்றோ பக்தனுக்கு ஆசை உண்டு. "மனிதன் ஆசைப்படக் கூடாது" என்று புத்தர் ஆசைப்பட்டாராம். ஆசை யாரையும் விடுவதில்லை. ஆசைகளின் தரம் மட்டுமே மனிதனின் வாழ்வு தாழ்வை நிர்ணயிக்கிறது.

தனக்கென உரிய ராஜ்ஜியத்தை திரும்ப வெல்வது தர்மத்துக்கு உட்பட்ட ஆசை. ஆனால் துரியோதனின் ஆசை, தர்மத்துக்கு புறம்பானது. இதை விளக்கி துரியோதனனை எச்சரிக்கிறார் விதுரர்.


நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?

மஞ்சனே,அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்;
பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாது
வெந்நரகு சேர்த்துவிடும்,வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே,நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
- பாஞ்சாலி சபதம்.

சொல்பவன் சுடுசொல் பாய்ச்சுவதில் கிடைத்த திருப்தியோடு முடிந்ததாக எண்ணிவிடுகிறான். பலநாள் அகலாது நிற்கும் பட்டவனின் வலியோ சொன்னவனின் அழிவையே தர வல்லது. உன்னுடைய இந்த ஆசை ஆபத்தை விளைவிக்கும். பாண்டவர்களின் கோபத்துக்கும், சாபத்துக்கும், ஆளாக நேர்ந்து, அதனால் அழிவு ஏற்படும் என்று எடுத்துரைக்கிறார். மலைத்தேனின் ஆசையால், தேன் எடுக்கப்போகிறவன், கீழே விழுந்தால் துர்மரணம் ஏற்படுமே என அஞ்சுவதில்லை. தேனின் மேல் உள்ள ஆசையால் கீழுள்ள ஆபத்து தெரியாமல் செயலில் ஈடுபடுகிறான். இந்த ஆசை, பேராசையாக போகும் பொழுது, கீழே விழுந்து அழிகிறான் என புத்திபுகட்ட முயல்கிறார் விதுரர்.


"மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான்."

-பாஞ்சாலி சபதம்.

துரியோதனனின் பொறாமை, க்ரோதம், பின்னாளில் போரில் கொண்டர்ந்துவிட்டு, ஒட்டு மொத்த சாம்ராஜ்யத்தையே அழித்தது.

மலையிடைத் தேனின் மோகம் தான்  சாமன்யன் நிலைமையும்.  ஆசை அஞ்ஞானத்தால் உருவாகிறது. அதிருப்தியே அதனை வளர்க்கும் தீ. உண்மையான பிராமணனுக்கு பிரம்மத்தின் சிந்தனையில் லயித்திருப்பதே சுவபாவம். அவனுக்கு அதிருப்தி இருப்பதே சாத்தியமற்று போகிறது.  உண்மையான அந்தணனுக்கு அதிருப்தி இருக்காது. அவரவர்க்கு வெவ்வேறு நியாயங்கள்.  உடலின்பத்தை வழங்குபவளுக்கு லஜ்ஜை இருத்தல் சரியல்ல. குடும்ப ஸ்த்ரீ லஜ்ஜையில்லாவிட்டால் கேடு. ஒரு அரசனுக்கு நாட்டின் நலம், சுபீக்ஷத்தில் போதும் என்ற திருப்தி வரக் கூடாது. திருப்தியில்லாத அந்தணன் தன் அழிவை தேடிக் கொள்கிறான்.


நட்பைப் பாராட்டிய கர்ணன் அவன் வழியில் தர்மத்தை கடைபிடித்தான்.
அண்ணன் என்றும் பாராமல் தர்மத்துக்கு செயல்பட்டான் விபீஷணன். அண்ணன் தவறே ஆனாலும் அவனுடன் இருப்பதே தர்மமெனக் கருதினான் கும்பகர்ணன்.


ஆசை என்பதும் சரியா தவறா, தர்மத்துக்கு உட்பட்டதா என்பதெல்லாம் அவரவர் சந்தர்ப்ப சூழல், குணம், கர்மா இவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. ஆசைப்பட்டாலும் அதனால் வரும் க்ரோதம், பொறாமையை தவிர்த்து தர்மத்துக்கு புறம்பான செயல்களை ஆசையின் விளைவாக்காமல் இருப்பது நலம்.

(சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)

January 24, 2012

சும்மா தோணிய சில உளறல்

இது பதிவு இல்லைங்க...

சும்மா எல்லார்கிட்டையும் ஹல்லோ சொல்லத் தான் வந்தேன்.

சில நாட்கள் தொடர்ந்து எனக்கு எழுத முடியாமல் போய்விடுகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும், பகிர்வதற்கும் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அதற்கு என்ன காரணம் என்று என்னால்  ஆராய முடியவில்லை. முழு ஆத்திகவாதி என்று சொல்லிக்கொள்ளும் காலம் வரவில்லை. நிறையவே ஆராய்கிறேன். பகுத்தறிவின் துணையோடு கீறிப்பார்த்து சிலதை ஒதுக்கிவிடுகிறேன். சிலதை சந்தேகக் கண் கொண்டு தோண்டிப் பார்த்து சேர்த்துக் கொள்கிறேன்.

ஆனாலும்...

தொடர்ந்து என் கண்ணனின் (கீதையை உபதேசித்தானே அவன் தான்) பெயரை ஸ்மரித்துக் கொண்டும், ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின்  மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது. என்ன எழுதுவது, பேசுவது என்று புரியவில்லை. பேசும் எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது... இது ஒரு சில நாட்களுக்குத் தான்....தாற்காலிகமாகத் தான்.... அதன் பின்  இயல்பு நிலைக்கு வந்து(வீழ்ந்து?)விடுகிறேன்...

இரு தினங்களுக்கு முன் "கைலாஷ் மானசரோவர் யாத்ரா"வைப் பற்றி  படித்துக்கொண்டிருந்தேன். கைலாஷ்நாத் புகைப்படங்கள் என் நெஞ்சித்தை
விட்டகலாமல் நின்றுவிட்டது.





பொனார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றையணிந்தவனே...
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே நின்னையலால்
இனி யாரை நினைக்கேனே...


என் தந்தையுமாகிய ஈஸ்வரனின் பொற்பாதம் பணிகிறேன்.

...மீண்டும் பதிவிடுவேன்....


January 04, 2012

"பாஞ்சாலி மணந்த கதை"....அல்லது..... "ஏன்? எதனால்?"


என்ன ஏதென்று பாராமலே, "ஐவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" கூறியதால்  தாய் சொல் மீறாமல் பாண்டவர்கள் பாஞ்சாலியை மணந்தனர், என்ற  காரணம் ஒப்புக்கொள்ளும் படியாக இல்லை. "இங்கே பாருங்கள் அம்மா, இவள் பெண், வஸ்து அல்ல, அதனால் அவளுக்கு  பிடித்த ஒருவனுக்கே மணம் புரிய சம்மதியுங்கள்" என்று கூறியிருந்தால் விவகாரமே இல்லை. எத்தனையோ பேசியவர்கள் இதையேன் பேச/விளக்க மறந்தார்கள்?

மின்மடல் செய்தியொன்று குறிப்பிடத் தோன்றுகிறது. அனைவரும் படித்திருக்கலாம்.

"பெண்களுக்கு தோதான/பிடித்தமான/ மணப்பதற்கு ஏற்ற ஆண்கள் இங்கு கிடைபார்கள்" என்ற விளம்பரத்தைப் படித்து, பல பெண்கள் உள்ளே நுழைந்தார்களாம். கடைக்குள் நுழைந்த பெண் தேவையான ஆண்மகனை தேர்ந்தெடுக்க முதல்தளம் நோக்கி பயணிக்கிறாள்.  முதல் தளம் இறங்கும் வாயிலில் "இங்கே-அழகான ஆண்கள் உள்ளனர். மேற்கொண்டு தேவைக்கு அடுத்த தளம் செல்லவும்" என்று எழுதியிருந்தது. உடனே அவளும் சரி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று இரண்டாம் தளம் ஏறுகிறாள். "இங்கே-அழகும் அறிவும் நிரம்பியவர்கள்" என்று எழுதியிருந்தது. அவளுக்கு மேலும் ஆவல் மேலிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அழவும், அறிவும், பண்பும் செல்வமும், உயர்ந்து கொண்டே போக, ஐந்து தளங்களைத் தாண்டி ஆறாம் தளத்தின் பொத்தானை அமுக்கிறாள்.

"மன்னிக்கவும்! நபர் எண்ணிக்கை:1001900 . உங்கள் தேவைக்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. நீங்கள் திரும்பிச் செல்லலாம். நன்றி!" என்றிருந்ததாம்.  பெண்ணின் (மனிதனின்?) திருப்தியற்ற குணத்தை விளக்குவதாக இருக்கிறது இப்புனைவு.

இதே போல் ஆண்களுக்கும் கூட, தனக்கு ப்ரியமானவள் அழகும், குணமும், பண்பும்,  வேலைக்கு செல்பவளாகவும், சமையல் கலையில் நளன் போலும், வீட்டுவேலை தெரிந்தவளும், பெரியோரை மதிப்பவளும், பெற்றோரிடம் விட்டுக் கொடுத்து போகும் குணமுடையாளும், பிறன் மனை நோக்காமல் இருப்பவளும்,  இன்னும் அடுக்கிக்கொண்டே போனால் கை வலிக்கும். தேவைகள் முடிவதில்லை... ....சரி நாம் பாஞ்சாலி கதைக்கு வருவோம்.

'இன்னார்க்கு இன்னார்' என்று எழுதி வைத்த தேவன் எழுத்தின் பேரில்(அல்லது விதி, சான்ஸ், freewill), எடுக்கும் முடிவுகள் வேறுபடுகிறது. குந்தியின் பேச்சைக்கேட்டு ஐவரும் சம்மதித்தனர் என்பது சரியான விளக்கமாக அமையவில்லை. வேறு விளக்கம் உண்டா எனில், திரௌபதியின் பூர்வ கதை விளக்கங்கள் இதற்கு துணை போகின்றன. ஐவரை ஒருத்தி மணப்பதா என கர்ணன் உட்பட பலரும் பழிச்சொல் பேசுகின்றனர். அப்போழுது அங்கு வரும் வியாசர் பாண்டவ்ர்களில் பூர்வ சரித்திரத்தை விளக்குகிறார். ஐந்து தேவர்களாக இருந்தவர்கள், சாபத்தினால் பூலோகம் வந்துள்ளனர். தர்மதேவன், வாயு  இந்திரன், அஸ்வினி தேவர்களுக்கு மகன்களாகப் பிறந்து, நற்செயல் புரிந்து இறைவனை வந்தடைவதாக சிவபெருமான் திருவாய் மலர்ந்திருப்பதாகக் பூர்வக்கதை.

நளனுக்கும் தமயந்திக்கும் மகளாகப் பிறந்த நளாயினி நல்ல கணவனை வேண்டி தவம் புரிகிறாள். பெண்ணுக்கே உரிய ஆவலுடன், தன் கணவனாக தகுதிபெற்றவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விவரிக்க, 'ஒருவனுக்கே இத்தனை குணங்களும் இருப்பது அரிது, ஆகவே நீ ஐவரை மணப்பாய்' என்று சிவன் வரமளிக்கிறார். நல்ல கணவன் அமையப் பெற வேண்டும் என்று ஐமுறை கேட்டு, ஐந்து முறையும் சிவனும் வரமளித்ததால் ஐவரை மணந்தாள் என்றும் புராணம் கூறுகிறது. வருடம் ஒருவருக்கு மனைவியாக இருந்து, மீண்டும் கன்னியாகி இன்னொருத்தருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் குறிப்பு இருக்கிறது. அதனால்  இவள் "நித்திய கன்னி" என்ற பெருமைக்கும் உடையள்.

ஐவருக்கும் உண்மையாக விளங்கியவள், அவர்களை சமமாக பாவித்தாளா? இறுதியாத்திரையாக ஹிமாலயம் செல்லும் வழியில் ஐவருடனும் புறப்படும் பாஞ்சாலியே முதலாவதாகத் துவண்டு இறந்து போகிறாள். ஐவருக்கும் மனைவியானவள், தன்னை முறையாய் வென்ற அர்ஜுனன் பால் அதிக அன்பு கொண்ட பாபத்தின் சுமையால், அவள் பயணம் தடைபட்டது என்று யுதிஷ்டிரர் விளக்குகிறார்.

எந்தக் கதை எப்படியானாலும், வாழ்கையில் பல விஷயங்கள் நம்மை மீறியும், நமக்கு உடன்பட்டும் நடக்கிறது, எதனால் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன  ஏன் சில சம்பவங்கள் நிகழ்கின்றன என்று விளக்கம் தேட முற்பட்டால், கேள்விகள்  தேங்கியிருக்க, விடை தேடும் படலத்தில் தொலைந்தே போய்விடுகிறோம்.

January 02, 2012

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனும் ஆண்டாளும்


இன்னிக்கு எப்படியானும் அவனை புடிச்சே ஆகணும். மனதில் கருவிக்கொண்டாள் ஆண்டாள்.  தினம் தினம் தோழிகளை வேறு எழுப்பி, அலைக்கழித்து, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஆனாலும் கண்ணுக்கு சிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறானே.. என்ற வருதம் மேலிடுகிறது.

ஆண்டாள்:  இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு  பாத்துடுவோம் வாங்க ஃப்ரெண்ட்ஸ்.

(ஆயர்பாடியில் யசோதா வீட்டில் கண்ணன்- நப்பின்னை ருக்மிணியுடன்)

கண்ணன்:  அம்மா, நாளை காலையில் அவள் வந்தால் நான் தூங்குவதாக சொல்லிவிடுங்கள். (கண்ணன் புன்னகைக்கிறான்)

யசோதா:  யாரைச் சொல்கிறாய்?

க: வேறு யார்!  ஊருக்கு முன் எழுந்து, என்னையும் எழுப்பி பாடாய் படுத்தும் ஆண்டாள் தான்.

ய: நீ தினம் வெண்ணையை சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் இப்படி  தூங்கினால் என்ன செய்வதாம்?

க: அவள் தரும் ப்ரேமையின் தகிப்பை தாங்க முடியாமல் தானே, நான் பாலும் தயிரும் வெண்ணையுமாக குடிக்கிறேன்... அவள்  பூமாதேவியின் வார்ப்பாம் எனக்காகவே பிறந்ததாகச் சொல்கிறாள்..யாராக இருந்தால் என்ன! ... எனக்கு எல்லாரும் ஒன்று தானே...

ருக்மிணி சாந்தமாக இருந்தாலும் நப்பின்னை கோபத்துடன்: இன்னும் எத்தனை பேருண்டு இப்படி...

க: பல பேர்...உண்டு!  எங்கெல்லாம் என் மேல பரிபூரண அன்பு உண்டொ அத்தனை பேரும் எனக்கு ப்ரியமானவர்கள்.

ந: அவர்களையெல்லாம் பக்தர்களாக மட்டுமே பார்த்தால் போதுமே, உடனே  ப்ரேம  சம்பந்தம்  வரவேண்டுமா..உங்க அண்ணா ராமிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடாதா

க: பக்தியில் பல வகை. பிரேம பக்தியும் ஒருவகை. எத்தனை பேர் இருந்தாலும் நான் நித்ய ப்ரம்மச்சாரி என்று உனக்கு தெரியாதா நப்பின்னை? ராம் அண்ணா வேறு நான் வேறு...ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்று...

ந:  போதும் போதும் நிறுத்துங்கள்.

க: பேசிக்கொண்டே இருந்தால், ஆண்டாள் வரும் நேரம் ஆகிடும். நான் யோக நித்திரையில மூழ்க வேண்டும்.


ஆண்டாள் பாடிய படி வருகிறாள்:

உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)

பாடி பாடி எழுப்புகிறாள்...

கண்ணனின் புகழும், பராக்கிரமும், கேட்க கேட்க யசோதை நப்பின்னை, ருக்குமணி, ஏனையோரும் மெய் மறக்கின்றனர்.

ருக்மிணி: "ஆஹா...எல்லோருக்கும் தெரிந்த பராக்கிரமங்களை  நீ இசைக்கும் பொழுது  இன்னமும் இனிமையாகிப் போகிறதே...ஆண்டாள்! எங்கள் கண்ணனையே  ஆளும்  உன்னை ஆண்டாள் என்று சரியாகச் சொன்னார்கள்! இப்பொழுது எங்களையும் உன் இசையால ஆண்டுவிட்டாயடி"

ஆ: ருக்மணி அக்கா, நப்பின்னை அக்கா, யசோதா ஆண்டி...நாலு பஸ் மாறி, விடியக்காலைல உங்க பையனோட ஹிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் பண்ணி, அதை மெனகெட்டு கவிதையாக்கி,  புகழ்ந்து ஐஸ் வெச்சா கூட என்னை கண்டுக்க மாட்டேங்கறானே...


ய: நானே இம்மாத இறுதிக்கு பிறகு பெரியாழ்வரிடம் வந்து உன்னை பெண் கேட்கிறேன்...மார்கழி இறுதி வரை நீ பாடும் பாடலை கேட்க ஆவல் மேலிடுகிறது. அதன் பின்னே தான் திருமணம்.

ஆ: அதுக்கு அப்புறம் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்...யசோதா ஆண்டி நீங்க தான் சாட்சி...இன்னும் இந்தக் கண்ணன் எழுந்துக்காம என்ன பண்ணிட்டு இருக்கான்..எழுப்புங்க அவனை..ஆண்டாள் கண்ணனின் அருகமர்ந்து அவனை எழுப்ப முயற்சிக்கிறாள்....

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!


(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)

 ருக்மிணி,   குடிக்க ஜில் என்று ஜூஸ் கொண்டுவருகிறார்கள். மார்கழி குளிரில் பாடின வாய்க்கு சூடான பால் போதும் என்று பால் மட்டும் அருந்துகிறாள் ஆண்டாள். உலுக்கி உலுக்கி எழுப்பினாலும்...ம்ஹ்ம்... கண்ணன் எழக் காணோம்.

பாடிக்கொண்டிருக்கும் பொழுதே  அவன் அழகில் மயக்கம் ஏற்பட...வந்த நோக்கம் மறந்து கண்ணனின் யோக அழகில் மூழ்கிப்போகிறாள். எத்தனை நேரம் மூழ்கியிருக்கிறாள் என்ற  நினைப்பும் அற்றுப் போகிறது. அதன் பின் விழிப்பு வந்தவளாய் பார்வையை செலுத்துகிறாள்.

தூரத்தே கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிகிறான்...இன்னும் சற்றுத் தொலைவில் மஹாபாரதக்களத்தில் கீதோபதேசம், இடப்பக்கம் குட்டிச் சிறுமியை ரக்ஷிக்கும் ரோபோவாகிப் போகிறான். வலப்பக்கம், மேற்பக்கம் எங்கு திரும்பினும் கண்ணன். ஆகாயமாய் அளந்து நிற்கும் கண்ணன், துரும்பிலும் ஒளியும் கண்ணன், சின்ன சிறுவனாய் குதூகலிக்கும் கண்ணன், அரக்கனை அழிக்கும் ஆக்ரோஷக் கண்ணன், விஞ்ஞான வளர்ச்சியின் தேடலாய்க் கண்ணன், தினமும் வழங்கும் வாழ்த்தொலியில் கண்ணன், ரூபமாய் அரூபமாய், இருப்பவனாய் இல்லாதவனாய் எங்கும் கண்ணன்....காணக் காண முடிவற்றவனாய்... ஒரு கணம் தடுமாறி திரும்பிப்பார்க்கிறாள்...

பட்டுமெத்தை விரிப்பில் களித்தபடி கண்ணன். இவன் தூங்குகிறான் என்று தானே நினைத்தோம்.  ஆண்டாளுக்கு தான் கண்டதெல்லாம் கனவா என்ற குழப்பம்.

ய: இப்படித் தான்.....அன்றொருநாள் எனக்கு உலகத்தை காட்டி.....ஹ்ம்ம் மாயக்காரன்.

(கண்ணன் விழிக்கிறான், அல்லது விழிப்பது போல் நடிக்கிறான்.)

ஆ: நீ தூங்கினியா இல்ல தூங்கினது போல நடிச்சியா? உன்னை எங்கெல்லாமும் பார்த்தேனே...... இதோ இப்போ கூட, இங்கையும் அங்கையும், எங்கையுமா...

க: நான் தூங்கினால் இயக்கம் என்னாவது .. கண்ணன் சிரித்தான்... அவன் குரல் வந்த திக்கை கண்டுணர முடியவில்லை. திக்கெட்டும் ஒலித்த அந்த குரல், இருந்தது போலும், இல்லாது போலும் எங்கும் நிறைகிறது.

க: நீ போய் மார்கழி முடிந்து வா...நான் உன்னை, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத திருமணம் செய்கிறேன். 

சொன்னபடியே கண்ணனை வாரணம் ஆயிரம் சூழவலம் வந்து கைப்பிடிக்கிறாள்.

~~~~~

"அவன் போக நிலை கூட
ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" ...

என்ற பாடல் சிடியில் ஒலித்த வண்ணாமிருக்கிறது. தூரத்தில் பெரியாழ்வார் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்.

மெல்ல எழுகிறாள் ஆண்டாள்...அத்தனையும் கனவா?!   அடுத்த பாடலாய் உதிக்கிறது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் தூங்கிய கனவிலும் அவனே வந்தான். ஆனால் அவனோ தூங்கவே இல்லை.  கண்ணனுக்கேது தூக்கம்!!! அடுத்த பிறப்பில் பாட்டை சிறிதே மாற்றியமைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.