March 05, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொ. ப)





பள்ளி நினைவுகளை பதிவிட ஷைலஜா அழைத்திருக்கிறார். சுயபுராணம் பாடுவதே தனி சுகம்.  கரும்புத் தின்ன கூலியா! நினைவுகளை அசைப்போடுவதில் ஒன்றும் சிரமமே இல்லை. ஒரே ஒரு பிரச்சனை தான்.  மீண்டும் பள்ளிக்கூடம் போனால், எளிதில் திரும்ப மாட்டென்.  சில மணி நேரம், அப்படியே தொலைந்து போய்விடும் அபாயம் உண்டு...


பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று ஷைலஜா என்னை விட அழகா சொல்லிட்டாங்க.

சின்ன வயது (நினைவு தெரிந்த நாள்) முதலே 'குருகுல வாசம்' என்றால் ரொம்ப பிடிக்கும். புராணப் படங்கள் பார்க்க நேர்ந்தால், பள்ளிக் கூடங்கள் ஏன் குருகுல வாசம்  போல் இல்லை என வருந்தியதுண்டு. சொர்கத்துக்கு இணையாக ஒலிக்கும் வார்த்தை "குருகுலம்". ஏன் தான் குருகுலம் வழக்கொழிந்த இந்நாளில்  பிறந்தோமோ என்று  நொந்து கொண்டிருக்கிறேன்.

நான் பிறந்த காலகட்டத்துல குருகுல வாசம் மறைந்து போய் விட்டதால் ஆரம்ப பள்ளிக்காக பக்கத்தில் இருக்கும் தனியார் மாண்டீஸ்வரி பள்ளிக்குடத்தில் சேர்த்தார்கள்.

சில பல நினைவில் நின்றவை நிகழ்ச்சிகளாக கோர்கிறேன்....

எல்.கே. ஜி தூக்கம்

** எல்.கே.ஜியின் நினைவு கிண்டிப் பார்த்தாலும் ஒன்றிரண்டு தான்.  கீதா மிஸ் ஸ்கேல் வைத்திருப்பார்கள்.  ஏபிசிடி சொல்லித் தந்ததும், நான் கற்றதும், அறவே நினைவு இல்லை. தினம் ஒரு பீரியட் ஸ்லீபிங்க் பீரியட். ஸ்கேல் வைத்து, எங்களையெல்லாம் தூங்கச் சொல்லி மிரட்டுவார்கள். நீட்டி நெடுக படுத்து, கண் மூடுவது போல் இடுக்கு வழியாக மிஸ் என்ன செய்கிறார்கள் என்று பார்த்த நினைவு இருக்கிறது...இடது புற செவுத்தை ஒட்டிப் படுத்திருப்பேன். நினைவிலிருக்கிறது. 

சுமாராய் படிக்கும் பாபு

** யூகேஜி யில் சியாமளா மிஸ்-ஸின் பையன் பாபு தான் என் பக்கத்தில் அமர்வான். அவன் நன்றாக படிக்க மாட்டான். அதனால் அதிகமாக திட்டு வாங்குவான். எனக்கு அவனை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனாலும் அவனை பிடிக்காது. நான் ஏ பி சி டி சரியாக எழுதி "குட்" வாங்குவேன்.
பாபு  கன்னம் குழி விழ சிரிப்பான். ஆனால்  ஏபிசிடி  சரியாக எழுத மாட்டான்.
அவன் திட்டு வாங்கும் போது எனக்குள் சிறு சந்தோஷம். ஒரு வேளை திமிரா?

** அடுத்த சில வருடங்களில் பாபு சரியாக படிக்க மாட்டேன் என்கிறான் என சியாமளா மிஸ் அம்மாவிடம் குறைபட்டுக் கொண்ட போது எனக்கு பாபு மேல் பாவமாக இருந்தது. அப்புறம் பாபு என்ன ஆனான் எனத் தெரியாது. நான் கேட்கவில்லை.

காதல் தோல்வி

** ஒன்றாம் வகுப்பு மறக்கவே முடியாது. ப்ரேமா மிஸ். அழகான முகம். நீள முடி. சிரித்தால் ஜெயலலிதா போல் இருபார்கள். என் பக்கத்தில் பையன்கள் உட்காருவதைத் தான் நான் அதிகம் விரும்பியிருக்கிறேன்.  பெண் பிள்ளைகள் சரியான போர். திரும்பத் திரும்ப, சாப்பாடு, சொப்பு விளையாடுதல் போன்ற பேச்சைத் தவிர ஒன்றும் தெரியாது. பாய்ஸ் என்றால் ஜோக்ஸ் சொல்வார்கள். சிரிக்க வைப்பார்கள். புது புது  விஷயங்கள் பேசுவார்கள்.

அப்படித் தான் ப்ரேமா மிஸ் பற்றியும் கேலி பேசித் திரிந்தோம்.    ஒருவர் ஜோக் சொல்ல, எல்லோரும் ரகசியமாக சிரிப்போம்.  ப்ரேமா மிஸ் ஒரு நாள் வரவில்லை. வேறு யாரைப் பற்றி கிண்டல் செய்து சிரித்து மகிழ்வது என்று தெரியவில்லை. ப்ரேமா மிஸ் ஒருவாரம் வரவில்லை. அப்புறம் தான் பள்ளியில் சொன்னார்கள்...

காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள். காதல் என்றால் என்ன?  தற்கொலை என்றால்? செத்து போவதுன்னா என்னம்மா? பல கேள்விகளுக்கு பள்ளியில் விடை கிடைக்கவில்லை.

என்னை விட அவள் அழகா....எப்படி!

 

** என் அம்மா எனக்கு வித்தியாசமான மாடர்ன் தலையலங்காரங்கள் செய்துவிடுவார்கள்.  அதனால் எனக்கு "லண்டன் லேடி" என்ற செல்லப் பெயர் எங்கள் ஆசிரியர்கள் மத்தியில் இருந்ததும், ஒரு சில ஆசிரியர்கள் என்னை முத்தமிட்டு கொஞ்சியதுமுண்டு.  பல பிஞ்சு உள்ளங்கள் இருக்கையில் ஒரு குழந்தையை கொஞ்சுவது தவறு என்றெல்லாம் ஆசிரியர்களுக்கு யாரும் சொல்லித் தருவதில்லை போலும்.  இதுவெல்லாம் இப்பொழுது யோசிப்பது.  அப்பொழுதோ என்னைக் கொஞ்சியது  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

பிரபாவதி என்ற பெண் எங்கள் தெருவழியே செல்பவள். அவள் கண்கள் விரிந்து அழகாய் குவளை மலர்கள் போல் இருக்கும். ஒரு முறை என் சித்தியோ பாட்டியோ அவள் கண்கள் அழகு. என்னுதை விட அழகு என்று சிலாகித்திருப்பதைப் கேட்டேன். எனக்கு அது பொறாமையைத் தூண்டியது.

"அம்மா பிரபாவதி கண்ணு என்னுதை விட அழகா?! அவ கண்ணை....நோண்டி எடுத்துடணும்" என்று என் அம்மாவிடம் சொன்னது எனக்கு காட்சி அமைப்புடன் நினைவில் இருக்கிறது.

அவமானம்

**இரண்டாம் வகுப்பு. எங்கள் ஆசிரியை, சக மாணவன் ஒருவன் அடிக்கடி தனது உள்ளாடையில் சிறுநீர் கழிப்பதை வெகு மோசமாக விமர்சனம் செய்து அவனை அழ வைத்தார்கள்....எனக்குப் பிடிக்கவில்லை. அந்த பையன் பெயர், சின்ன முகம், அவமானம், அழுகை எல்லாம்  இன்னும் நினைவில் இருக்கிறது. அடுத்த வருடம் அவன் பள்ளியை மாற்றிக் கொண்டான்.

செத்து போனா என்ன ஆகும்

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வாக்கிங் சென்ற பக்கத்து வீட்டு அங்கிள் செத்துப் பொனார். அப்புறம் சில மாதங்களில் அம்மாவை பெற்ற பாட்டி உடல் நலிந்து உயிர் இழந்தார். சாவு என்றால் என்ன... எதுக்கு பிறக்க வேண்டும்? பின் சாக வேண்டும்?... என் கேள்விகள் அதிகமாகியது.

சில நினைவுகள்

 

** பள்ளிக்கு மூடி போடு கொக்கி போட்ட ரிக்ஷா வண்டியில் போவேன். அப்படி வண்டிகள் தற்போது நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன். இரு பக்கமும் உட்கார சீட்டுகள் உண்டு. கூட்ஸ் வண்டியைப் போல் காட்சி அளிக்கும். எங்களுக்கு ரிக்ஷா ஓட்டுபவர் பெயர் நினைவில் இல்லை. அவரை ரிக்ஷா காரர் என்று அழைப்பதை தடுத்து "பெயிண்டர்" என்று அழைக்கச் சொல்வார். ரொம்ப நாள் வரை, ரிக்ஷா ஓட்டுபவர்களை பெயிண்டர்கள் என்று நினைத்திருக்கிறேன்.

** நான்காம் வகுப்பில் என்னை நடனத்திற்கு தேர்வு செய்து, வராத நடனத்தை கற்று கொடுத்தார்கள். எப்படியோ ஆடினேன். ஐந்தாம் வகுப்பில் என்னை தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆசை. ஆனால் எனக்கோ நடனம் வரவில்லை. கடைசியில் அஷ்ட லக்ஷ்மி நடனத்தில்  என்னை லக்ஷ்மி தேவியாக உட்கார வைத்தனர்......பசுமை.

பிரியா விடை

** ஐந்தாம் வகுப்பில் தான் ஜெமினி மிஸ் எங்கள் பள்ளியை விட்டு விலக நினைத்தார்கள். நாங்கள் ஆறு பெர் ஃப்ரெண்ட்ஸ். கௌஷிக், சத்யமூர்த்தி, அர்ச்சனா, தர்ஷனா, அரவிந்த், நான்.

ஜோக்ஸ், சிரிப்பு, கிண்டல், பேச்சு என பொழுது கழியும். எங்களுக்கு சமமாக
தோழி போல் பழகியவர்கள் ஜெமினி மிஸ். ஆங்கில ஆசிரியை. காதில் தொங்கும் நீண்ட ரிங்,  நெற்றியில் புரளும் கேசம்,  நீண்ட கண்கள்,  கவரும் சிரிப்பு, முதல்  முதல் ஹீரோயின் வர்ஷிப் செய்தது ஜெமினி மிஸ்ஸைத் தான்.  எங்கள் ஐந்து பேரை வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாய் சொன்னார்கள். ... பள்ளி நண்பர்களுடன் சென்ற முதல் அவுட்ங்! டீ, சமோசா இத்யாதி வாங்கிக் கொடுத்தார்கள்.  இனிமையான பொழுது...அப்புறம் பிரிந்த பொழுது, முதன் முறையாய் தொண்டை அடைத்தது. அந்த உணர்ச்சி அது நாள் வரை உணராதது.

நானே நானா

** கான்வென்ட் பள்ளிக்கு மாறியிருந்தேன். என்னைச் சுற்றி எங்கும் ஆங்கிலோ இந்தியர்கள். எனக்கும் ஒரளவு ஆங்கிலம் தெரியுமென்றாலும், சங்கோஜமாக உணர்ந்தேன். என்னை நானே அவர்களிடமிருந்து அன்னியப்படுத்தி கொள்ள துவங்கிய பொழுது,  அவர்களோ நெருங்கி வந்தனர். என்னைச் சுற்றி நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் தோழிகளாகிப் போயினர். என் பேச்சு, அபிப்ராயம்,  பாதை, எண்ணங்கள். பயணம்,  எல்லாமே மாற்றம் கொண்டது.

சிகரெட் புடிக்க தெரியுமா

** ஆறாம் வகுப்பில் என்னுடன் ஆட்டோவில் வருபவள் 'ஷாரன்'. ஒரு நாள் சிகரெட் பிடிப்பதைப் பற்றி பேசி, நீ பிடித்திருக்கிறாயா என்று கேட்டாள். இல்லை என்று சொன்னேன்.  அடுத்த நாள் இரண்டு சிகரெட் கொண்டு வந்திருந்தாள். ஆட்டோவில் மற்ற சிறுமிகள் இறங்கிவிட நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஒரு சிகரெட்டை தன் உதடுகளில் வைத்துக் கொண்டாள். ஒன்றை எனக்கு நீட்டினாள்.  குருகுலவாசமென்ன, புராணப்  படமென்ன எல்லாம் காணாமல் போக, ஒரே ஒரு கணம் அந்த சிகரெட்டை வாங்கினேன்.  தீப்பெட்டியை வாங்கிப் பத்தவைக்கும் முன்  உடல் எல்லாம் படபடக்க, தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தலையெடுக்க,  வேண்டாமென திரும்ப கொடுத்து விட்டேன். இதற்குள் ஆட்டோ ட்ரைவர் வேறு எங்களைப் பார்த்து திட்டி விட்டு, சிகரெட்டை வாங்கி தூர போட்டுவிட்டான். ஷாரன் அடுத்த வகுப்புக்கு எங்கள் பள்ளியில் தொடரவில்லை.

ஆங்கிலம் தெரிந்து கொண்டு வா

** ஆங்கிலத்தில் பேசுவதாலும், ஆங்கில தோழிகளின் நட்பு இருப்பதாலும், ஆங்கிலம்  மட்டுமே பெரிதும் பேச வாய்ப்பு இருந்தது. அதுவே சௌகரியமாகவும் உணர்ந்தேன். அதுவரை தவறில்லை. ஆங்கிலம் சரியாக தெரியாத என் பக்கத்து வீட்டு தோழிகளை, கிண்டல் செய்து, உனக்கு உச்சரிப்பே வரவில்லை, நீ என் தோழியாய் இருக்க லாயக்கு இல்லை என்று சண்டையிட்டு அனுப்பிவிட்டேன். என் திமிருக்கு அளவே இருந்ததில்லை போலும்! அப்புறம் அப்பா எனக்கு புத்திமதி கூறி எங்கள் நட்பை வளர உதவியது மறக்க முடியாதது. இன்றும் என் ஆருயிர் தோழியாய் தொடர்பில் இருக்கும் இனியவள்.

ஏழை என்றால் கிள்ளுக்கீரையா

 

** எங்கள் வீட்டுக்கு அப்பாவின் கீழ் வேலை செய்பவர் வந்திருந்தார். கிழிந்த ஆடை. கரிய உடல். "அப்பா யாரோ பிச்சைக் காரன் வந்திருகான்" என்று சொல்லி, முதல் முதலில் அப்பாவிடம் சரமாரியாக அடி வாங்கினேன். அந்த மனிதர் அரண்டு போய்விட்டார். அன்று முதல் இன்று வரை அப்பாவிடம் வாங்கிய ஒரே அடி அது தான்.  அப்புறம் அவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்தார்.  பல புத்திமதிகள் சொன்னார். அப்பாவின் நண்பரும் எனக்கு மிகவும் பிரியமானவராகிப் போனார். என் திமிர் மாறியதா? நான் மாறினானா?  ....மாறினேன்....ஆனால் கொஞ்சம் தான்...

கெமிஸ்ட்ரி என்னும் அரக்கன்


** வகுப்புக்கு வரும் டீச்சர்களை கிண்டல் செய்வது,  பேப்பர் ராக்கெட் விடுவது, போன்ற விஷயங்களில் பெரும் பங்கு  வகிக்காவிட்டாலும், சிறு பங்கு வகித்திருக்கிறேன். நிறைய நேரம் கூட இருந்து கும்மி அடித்திருக்கிறேன்.  பத்தாம் வகுப்பு  கணித ஆசிரியை, ஆங்கில ஆசிரியை இருவரும் மிகவும் பிடிக்கும். பிடித்த வகுப்புகள், கணிதம், ஆங்கிலம், வரலாறு, புவியியல்.

சயின்ஸ் பிடிக்கும் என்றாலும் கெமிஸ்ட்ரி பிரிவு எனக்குப் பிடிக்காது. balancing of equations எனக்கு வரவே வராது. 'எமிலி' என்ற க்யூட் ஆசிரியை கெமிஸ்ட்ரி எடுத்தார்கள். சின்னவயதுக் காரர்.  அவருக்கு எங்கள் வகுப்பைக் கண்டால் பயம். நான் முதல் பெஞ்சில் தான் உட்காருவேன். 'கெமிஸ்ட்ரி என்றால் அத்துப்படி' என்பதை போல் முகம் வைத்து தப்பித்து விடுவேன். அப்படியும் ஒரு முறை,  equation balance செய்ய என்னைக் கூப்பிட்டு விட்டார்கள்.  இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாய் சில பல எண்கள் போட்டுப் பார்த்தும் balance ஆகவில்லை.


 "யார் சரியான நம்பர் சொல்றீங்க பார்கலாம்"  என்று நான் வகுப்பைப் பார்த்துக் கேட்டேன்.  "குலுக்கிப் போட்டு என்ன  நம்பர் வருதோ போடு" என்று வகுப்பு மொத்தம் கிண்டல் செய்ய,   ஒரே சிரிப்பும் கும்மாளமும்  கூச்சலும் சத்தமுமாய் போய்விட்டது. இந்த தொல்லை தாங்காமல், என்னை இடத்துக்கு அனுப்பிவிட்டு வகுப்பைத் தொடர்ந்தார். அதன் பிறகு யாரையும் அவர் கேள்வியே கேட்டதாய் நினைவில்லை. பயிற்சிக்கு வந்த ஆசிரியை. சில மாதங்களில் வேறு பள்ளிக்குப் போய்விட்டார்.

சயின்ஸ் mid-term தேர்வுக்கு முன், Interval  நேரத்தில் சமோசா சாப்பிட தோழிகளுடன் காண்டீன் சென்று, நேரம் போவது கவனிக்காமல்,  லேட்டானதால், வேகமாக ஓடி சறுக்கு மரம் அருகே  விழுந்து கையில் ஃப்ராக்சர்.  வலியின் நடுவிலும்,  அப்பாடா சயின்ஸ் பரிட்சை எழுத வேண்டாம் என்று ஒரே குஷி எனக்கு. என்னைப் பார்த்து வகுப்பு மொத்தமும் பொறாமை வேறு பட்டார்கள்.


சும்மா பார்த்தாலே மதம் மாறணுமா?


** பத்தாம் வகுப்பில், படிக்கிறேன் பேர்வழி என்று வராண்டாவில் பொழுதைக் கழிப்பேன். என் வீட்டை இரண்டு க்ருத்துவ வாலிபர்கள் சுத்தி வந்த காலம் அது. ஒரு முறை அதில் ஒருவன் "ஐ லவ் யூ" என்று கத்த, அவனை நீ கல்யாணம் செஞ்சுக்க போறியா என்று வெடிகுண்டை தூக்கிப் போட்டாள் என் தோழி. "கல்யாணம் செஞ்சுக்க மதம் மாரணம்டி". - அடுத்த ஷாக். 

என்ன அநியாயக் கொடுமை! சும்மா இடுக்கு வழியே அப்பாவியாய்(!) எட்டிப் பார்த்ததற்கு இவ்வளவு விளைவா !! என்று கதிகலங்கிப் போய் வராண்டாவில் படிப்பதை அடியோடு நிறுத்தினேன். சைக்கிள் வாலிபர்களும் ஒரு சுபமுகூர்த்தத்தில் காணாமல் போனார்கள்.

ஆவிகள் உலகம்

** பதினோராம் வகுப்பில், ஆசிரியர்கள் இல்லாத பொழுதுகளில்  ஆவியை அழைத்து, கும்பல் கும்பலாய் கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  நான் தள்ளி  நின்று பார்த்திருக்கிறேன். காசு, மெழுகுவர்த்தி வைத்து அழைப்பார்கள். பாஸா ஃபெயிலா, எப்போ கல்யாணம், புருஷன் பெயர் என்ன, போன்ற அத்தியாவசிய கேள்விகள் கேட்கப்படும்.

இதெல்லாம் நிஜமா பொய்யா என்ற எண்ணம் எழும். "காசு தானாக நகர்கிறது நான் நகர்த்தவில்லை"  என சம்பந்தப்பட்ட இரு தோழியரும் சொன்னதுண்டு.

ஆவி, இவர்களில் ஒருவரை பிடித்துக் கொண்டு போக மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது  என்ற பயம் கூட எழும். இரண்டு மூன்று முறைகளுக்குப் பிறகு, ஆவியை அழைக்க நேர்ந்தால் நானும் இன்னும் சிலரும், அந்த இடத்தை விட்டு அகன்று விடுவோம்.


நன்றாக படித்து, வகுப்பில் இரண்டாவதாக நின்றது, பதினோரம் வகுப்பில் தான். முதல் ஐந்து ராங்க் அதுவரை வாங்கியதில்லை. அந்த அனுபவம். ரொம்ப பெருமையாக இருந்தது.

முதல் முதல் சேலை

பதினோராம் வகுப்பு தான் முதன் முதலில் ஃபேர்வெல் பார்டிக்கு சேலை கட்டினேன். சேலை கட்டிக்கொண்டு பி.டி.ஸி பஸ்ஸில் பள்ளி செல்லும் வரை திக் திக் என்றிருந்தது. எங்கே அவிழ்ந்து விடுமோ என்ற பயம். பயத்திற்கு ஏற்ப பாதி வழியில் கொஞ்சம் அவிழ்ந்தது போல் பிரமை வேறு.  ஒரு மாதிரி கைப்பையின் உதவியுடன் இறுக்கப் பிடித்து கொண்டு பள்ளி சென்றேன்.  என் தோழி மறுபடி எனக்கு சேலை உடுத்தி விட்டாள்.

பள்ளியைத் தவிர நான் மதிக்கும் ஆசிரியர்


சிறு வயதில் ராஜாஜியின் ராமாயணம், மஹாபாரதம் படித்ததுண்டு. புராணக் கதைகள் பிடிக்கும். அதில் வரும் இறைவியாக, என்னை கற்பனை செய்து கொண்டு, ஏதோ சாபத்திற்காக மானுடப் பிறவி எடுத்ததாக நினைத்துக் கொள்வேன். சிவபெருமான் என்னை அழைத்துப் போக வருவார் என்று எண்ணுவேன்.  (ரொம்ப கதைகள் படித்ததன் விளைவு)


பி.ஆர் சோப்ராவின்  "மஹாபாரதம்" வழியாகத் தான் கீதையை முதன் முதலில் கேட்டேன்.  அந்த தாகம் தொடர்ந்து பரவியது. வீட்டிலுள்ள புத்தங்களில் கீதையைத் தேடினேன். ஸ்லோகம் சாரம்சம் கூடிய ஒரு புத்தகம் கையில் கிட்டியதும், மூன்று நாள் இடைவிடாது திரும்பதிரும்ப  கீதை படித்தேன். நிறைய புரிந்தது போல் இருந்தது.

ஏறக்குறைய கீதையை கரைத்து குடித்துவிட்டதாய் நானே என்னை மெச்சிக் கொண்டேன். ஒரு ஞானியைப் போல் என்னை நானே நினைத்துக் கொண்டு ஒரு வாரம், பத்து நாட்கள்,  அதிகம் பேசாமல், இதே சிந்தனையில் இருந்தேன். கண்ணனையே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இறைவன் சேவையில் ஈடு பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவது தான் சிறந்த பாதை என்று நினைத்தேன்.

a. பக்தி

பள்ளி நாட்களில்,  பாட்டு வகுப்பு டீச்சர் எனக்கு மிகவும் மரியாதைக்கு உரியவர். பஞ்சரத்ன கீர்த்தனைகளை அர்த்தம் புகுத்தி படிப்பிப்பார். "துடுகு கல நன்னே தொர" என்று தியாகராஜர் போல் நானும் கற்பனை செய்து கொண்டு இத்தனை துஷ்டத் தனங்கள் செய்த என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று உருகி பாடியிருக்கிறேன்.

"சிறுத ப்ராயமுல நாடே பஜனாம்ருத ரஸ விஹீன குதர் குடைன" என்ற வரிகள் குறிப்பாக பிடிக்கும் (சிறுவயது முதலே, பஜனையும் உன் நாமரஸத்தையும் ருசிக்காமல், குதர்க்கம் பேசித் திரிந்தேன் என்பது தொராயமான அர்த்தம்)

பக்தி புகட்டிய குரு என்று என் பாட்டு டீச்சரை நினைக்க கடமைப்பட்டுள்ளேன்.  "அலைபாயுதே கண்ணா" என்ற பாடல் இறைவன் கண்ணனுக்காக நான் காதலுடன்  பாடுவதாய் நினைத்துத்தான் அதிகம் பாடியிருக்கிறேன்.

b. அன்பே கருஷ்ணன்  ( I will never forget u)

வீணா என் வகுப்பில் பாட்டு படிக்க வருபவள். என்னுடன் ஒன்றாக சிறுவயதில் படித்தவள்.  மிகவும் எளிமையாய் உடை உடுத்துவாள். அன்பானவள்.  நான் வீணாவிடம் அதிகம் பழக மாட்டேன். மரியாதைக்கு தலை அசைத்து ஹாய் சொல்வதோடு நிறுத்திக்கொள்வேன். ஒரு வருடம் கழித்து, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்.

உங்கள் பள்ளியில் ஃபேர்வெல் உண்டா என்று அவள் கேட்க, நான் சுருக்கமாக ஏதோ இரண்டு வார்த்தைகள் பதில் சொல்லி நகர முற்பட்டேன்.

"கொஞ்சம் இரு"  என்று நிறுத்திய வீணா, தொடர்ந்து,  "நீ கூப்படற கண்ணன் என்னுள்ளையும் தானே இருக்கான். ஏன் என்னோட பேசாம இருக்க? நானும் உன்ன மாதிரி பொண்ணு தானே.... எனக்கு உன் அன்பு தானே வேணும், ஏன்  இவ்ளோ திமிர் உனக்கு....இப்டி திமிரோட இருந்தா க்ருஷ்ணன் வர மாட்டான்." ...

சரமாரியாக அட்வைஸ். அரை மணி நேரம்...மூச்சே விடாமல்,.....நிறுத்தாமல்....பொழிந்தாள்.   நான் கேட்டுக்கொண்டிருந்தேன். வாயே திறக்கவில்லை :))

விஷயம் இவ்வளவு தான். அவளுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் நான் கண்டு கொள்ளாமல் இருந்தது, அவளை வருத்தியிருக்கிறது. எனக்கு நிஜமாகவே சாட்டையில் அடித்தது போல் இருந்தது............. அவள்....வீணா....என் ஆருயிர் தோழியாகிப் போனாள்.............நான் மாறினேன்........ நிறையவே....முழுமையாக...என்னை மாற்றியவள் அவள். என் தோழியுமாகி, என் குருவும் ஆகிப் போன வீணா. இன்று அவள் முகவரி தெரியாது போனாலும் என் இதயத்தில் அழுத்தமான முகவரி, நிரந்தரமான முகவரி பதித்துச் சென்றிருக்கிறாள்.

இன்னும் என்னென்னவோ  நினைவுகள்....எத்தனைப் பாடங்கள்! எத்தனை மனிதர்கள்! எப்படியெல்லாமோ பாதைகளில்  பிரயாணம்.. நம்மை மெருகேற்றியவர்கள்...பெற்றோர்...ஆசிரியர்கள்...பள்ளிகள்...நண்பர்கள்......என்னை அருமை பள்ளி நினைவின் மகிழுலகுக்கு அழைத்த ஷைலஜாவுக்கு மிக்க நன்றி....

நீங்களும் உங்கள் பள்ளி நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கிறேன்...

1. இராஜேஸ்வரி
2. வை.கோ சார்
3. கீதமஞ்சரி
4. ராம்வி


49 comments:

  1. உங்களுடைய பள்ளி நாட்களைப்பற்றி மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    என்னையும் பதிவிட அழைத்து விட்டீர்கள். நன்றி.

    ஏற்கனவே ஒருவர் “அவர்கள் உண்மைகள்” என்றொருவர் இதைப்பற்றி எழுத அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

    இன்னும் யார் யார் அழைக்கிறார்கள் என்று ஒருவழியாகப் பார்த்துவிட்டு, பிறகு எழுத ஆரம்பிக்கிறேன், ஷக்தி.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  2. ஷைலஜாக்கா உங்களை பள்ளிக்கு அழைத்ததால் ரசமான அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தது. ஷக்தி... ஷக்தி... உங்களுக்கு எந்த நாள்ல நினைவு தெரிஞ்சிச்சு? எனக்கு மட்டும் சொல்லுங்க, ப்ளீஸ்! சிகரெட் புகைப்பது...? அந்த நாள்ல அதை சாகசம்னு மனசுல நினைச்சுப்போம் நாங்க! அந்த ஆவி சமாச்சாரமும் உங்க நிலைதான் எனக்கும். பள்ளி நாட்கள்லயே ‘கிருஷ்ண ப்ரேமி’யாத்தான் இருந்திருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. குருகுல வாசத்தின் நேசத்திற்காக நினைவு தெரிந்து என்றால் எட்டு வயது இருக்கும்....

      அதற்கு முன் எல்.கே.ஜி, யூ.கே. ஜி நினைவுகள் ரொம்ப கம்மி...

      வருகைக்கு நன்றி கணேஷ் :)

      Delete
  3. //"அம்மா பிரபாவதி கண்ணு என்னுதை விட அழகா?! அவ கண்ணை....நோண்டி எடுத்துடணும்"//

    ஹா ஹா ஹா ஹா

    உங்களின் தற்போதைய கண்களைப் பார்த்தாலே, சிலருக்கு அதுபோல நினைக்கத் தோன்றலாம் என்று எனக்குத் தோன்றுகிறதே!

    உங்களுடையது ஒரிஜினலா அல்லது அந்தப் பிரபாவதியோடதா?

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய display pic படம்...என்னுடையதும் அல்ல, பிரபாவதியுடையதும் அல்ல, அது dimple kapadia படம் :))))) வருகைக்கு நன்றி சார்...விரைவில் உங்கள் பதிவை படிக்கும் ஆவலுடன்...

      Delete
  4. //ஒரு சிகரெட்டை தன் உதடுகளில் வைத்துக் கொண்டாள். ஒன்றை எனக்கு நீட்டினாள். குருகுலவாசமென்ன, புராணப் படமென்ன எல்லாம் காணாமல் போக, ஒரே ஒரு கணம் அந்த சிகரெட்டை வாங்கினேன். தீப்பெட்டியை வாங்கிப் பத்தவைக்கும் முன் உடல் எல்லாம் படபடக்க, தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தலையெடுக்க, வேண்டாமென திரும்ப கொடுத்து விட்டேன்.//

    நம்புகிறோம். ஷக்திமிக்க வரிகள்.

    ReplyDelete
  5. வலியின் நடுவிலும், அப்பாடா சயின்ஸ் பரிட்சை எழுத வேண்டாம் என்று ஒரே குஷி எனக்கு. என்னைப் பார்த்து வகுப்பு மொத்தமும் பொறாமை வேறு பட்டார்கள்.

    ரொம்ப டெரராக இருக்கிறதே !

    மலரும் நினைவுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஸ்வரி...ரொம்ப டெர்ரர் தான் :))
      உங்கள் பதிவையும் எதிர்ப்பார்க்கிறேன்..

      Delete
  6. //சேலை கட்டிக்கொண்டு பி.டி.ஸி பஸ்ஸில் பள்ளி செல்லும் வரை திக் திக் என்றிருந்தது. எங்கே அவிழ்ந்து விடுமோ என்ற பயம். பயத்திற்கு ஏற்ப பாதி வழியில் கொஞ்சம் அவிழ்ந்தது போல் பிரமை வேறு. //

    ;))))) உண்மை உணர்வுகளை அப்படியே நகைச்சுவையாகச் சொல்வதில் நீங்கள் வெகு சமத்து ! ;)))))

    ReplyDelete
  7. அழகான நினைவு பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. பள்ளிச் சம்பவங்களை
    மிக அழகாக தொகுத்துத் தந்தமை ..
    மனதை ஈர்த்தது..
    என்னால் இவ்வளவு தூரம் எழுத முடியுமா
    என்று தெரியவில்லை...
    ஆனாலும் ஷைலஜா அக்கா அழைப்பை ஏற்று
    விரைவில் எழுதுகிறேன்.

    கடைசியிலே எனக்கு பிடிச்ச இரசாயனம் உங்களுக்கு
    பிடிக்கலைன்னு சொல்லிடீங்களே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ...என்னத்த சொல்ல....
      இரசாயனம் எனக்கு புடிச்சாலும், அதுக்கு என்ன புடிக்கல :((((

      விஞ்ஞானப்பிரிவுகளில் என் மண்டைக்கு ஏறவே ஏறாத ஒரு பாடம் அது தான். biology, botony, physics எல்லாம் பிடிக்கும். இதற்கு பயந்தே பதினோராம் வகுப்பில் நான் சயின்ஸ் எடுக்கவில்லை.

      Delete
  9. நன்றாக சுவைபட எழுதியிருக்கிறீர்கள். நினைவுகள் அழியாதவை. அதுவும் அவற்றை மீட்டிப் பார்ப்பதில்.. தனி சுகம் தான்! எல்.கே.ஜி.யிலிருந்து என்றால் ஆச்சரியம் தான்.

    ReplyDelete
    Replies
    1. எல்.கே. ஜி நினைவுகள் ரொம்ப கம்மி ஜீவீ. ஒன்றிரெண்டு தான்... :)
      ஆம் திரும்பிப் பார்ப்பதே சுகம்...அழியாத சுகம்..

      Delete
  10. ஷக்தி, உங்களுடைய மனந்திறந்த பள்ளிநினைவுகள் மிகவும் ரசிக்கவைத்தன. உள்ளதை உள்ளபடியே எழுதிய பாங்கும் சுவாரசியமான நிகழ்வுகளும் உங்கள் எழுத்தால் இன்னும் மெருகேறிவிட்டன. உங்க அளவுக்கெல்லாம் என் பள்ளி வாழ்க்கை சுவைக்காது. இருந்தாலும் உங்க அழைப்பையும் இதற்கு முன் அழைப்பு விடுத்த ராஜி அவர்களின் அழைப்பையும் ஏற்று விரைவில் என் பள்ளி அனுபவங்களைத் தொடர்கிறேன். அழைப்புக்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி :) .... உள்ளதை உள்ளபடியே ஒப்புக்கொள்ளும் குணம் வாழ்விலும் தொடர்கிறது.....

      உங்கள் சுவாரஸ்யமான பதிவை எதிர்பார்க்கிறேன்...

      Delete
  11. பிரம்மாதமா எழுதிட்டே ஷக்தி இன்னும் நல்லா வாசிச்சிட்டு பெரிய பின்னூட்டமிடறேன் வெயிட்டீஸ்!

    ReplyDelete
  12. ஒவ்வொரு பருவத்திலும் சந்திக்க நேர்ந்த அனுபவங்களையும் அது சார்ந்த உணர்வுகளையும் மிக அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள் ஷக்தி. மிக நன்று.

    ReplyDelete
  13. தங்களின் பள்ளிகூட நினைவலைகள் அருமையாக புறப்பட்டு வித விதமான தலைப்புகளுடன் தங்களின் பாதையில் எதார்த்தமான உங்களின் இயல்பை எல்லாம் கூறி வந்ததும் அருமை...

    அதுனூடே கண்ணன் மீது தங்களுக்கு இருக்கும் தாக்கம் பிறவியிலேயே இருந்து வந்தது என்பதையும் அறிய முடிகிறது.....
    முத்தாய்ப்பாக கடைசியாக மிகவும் அமைதியாக தங்களின் தோழி பிரியாவைப் பற்றிய பிரிவாற்றாமையைச் சொன்னது தான் என்னையும் நிசப்தம் அடையச் செய்தது...

    மலரும் நினைவுகள் மனதின் உள்ளே இருக்கும் பல அறைகளின் கதவுகளை திறந்து கண்காட்சியாக காணச் செய்தது...
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

    நேரம் இருந்தால் எனது வலைப் பதிவிற்கு வந்துவிட்டுப் போங்களேன். மறக்காமல் தங்களின் கருத்தையும் கூறிவிட்டு செல்லுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...கட்டாயம் வருகிறேன். :)

      Delete
  14. ரசிக்க வைத்த பள்ளி நினைவுகள். அந்தக் காலத்தில் நினைத்ததும் நடந்ததும் வாழ்க்கைப் பாடங்கள். நீங்கள் நன்கு கற்றுக் கொண்டது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி.எம்.பி சார். :)

      Delete
  15. ஷக்தி ரொம்ப அருமையா எழுதி விட்டாய்! நிதான்மாய் இப்போதான வாசிச்சேன்.உன் ஆங்கிலப்புலமை எனக்குத்தெரியுமே! ஆனால் இவ்வளோ அழகாய் தமிழிலும் நீ எழுதுவது ரொம்ப மகிழ்ச்சி ஒருவழியாய் உன்னை வலைப்பூவுக்கு இழுத்து வந்த பெருமையை இப்போ அனுபவிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஷை... என்னை இப்பருவத்திற்கு கொண்டு சென்று எழுதத் தூண்டிய உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். I thoroughly enjoyed reliving the post i.e. past...

      Delete
  16. ரெம்ப அழகா தொகுத்து இருக்கீங்க. நானும் தொடர இருக்கிறேன்.

    ReplyDelete
  17. முதல்முறை உங்கள் பதிவு பக்கம் வருகிறேன். அந்த வயதிற்கே உண்டான பொறாமை போட்டி உணர்வுகளை அழகாகப் பதிந்துள்ளீர்கள். ..

    ReplyDelete
  18. பெங்களூரு ஷைலஜாவின் தோழியா நீங்கள் ??

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் எல்.கே...
      ஆம் பெங்களூர் ஷைலஜாவின் தோழியே தான்....
      நன்றி...

      Delete
  19. டிம்பில் காத்தாடியா? நீங்கனு இல்லே நினைச்சேன் :)))

    ஆக மொத்தம் படிப்பைத் தவிர மிச்சதெல்லாம் செஞ்சிருக்கீங்கனு நினைக்கறப்ப ரெண்டாம் ரேங்குனு சொல்லி பேர் வாங்கி ஏமாத்திட்டீங்களே நியாயமா... 'பிச்சைக்காரர் வந்திருக்கார்' ரொம்ப டச்சிங்.. அப்பாக்கள் எதுக்கு அடிக்கிறாங்கனு தெரியலை. 'ராஜாஜி செத்துட்டார்' என்று வரப்போகும் பள்ளிக்கூட விடுமுறையை எண்ணி உற்சாகமாகக் கூவிக்கொண்டே சென்ற என்னைப் புடைத்தெடுத்தார் என் அப்பா.

    நான் இதுவரை படித்த பள்ளிக்கூட நினைவுப் பதிவுகளில் உங்கள் பதிவு டாப் 3.

    ReplyDelete
    Replies
    1. :))) வாங்க அப்பாதுரை.... நான் விரும்பி படிச்சதும், அதிகம் ஈடுபாட்டுடன் கற்றாதெல்லாம் பத்தாம் வகுப்புக்கு அப்புறம் தான்.... அப்புறம் நிறைய படித்தேன்...என்னவெல்லாமோ படித்தேன்...அதெல்லாம் பள்ளிப் பருவத்தில் அடங்காது...

      ராஜாஜி பொருட்டு விடுமுறைக் கூவலும் அப்பா அடித்தலும் முதலில் சிரிப்பு வந்தது....அப்புறம் நியாயம் புரிந்தாலும் மீண்டும் சிரிப்பு வந்தது... :D மன்னிக்கவும்.

      நன்றிங்க...டாப் 3 ஆக பதிந்தது மெத்த மகிழ்ச்சி

      Delete
  20. ஆஹா, மிகவும் சுட்டிப்பிள்ளையாக இருந்து இருக்கீங்க சகோதரி. :)

    அடேங்கப்பா... குருகுல வாசம். நானும் இப்போது நினைத்து ஏங்குவது உண்டு. நான்காயிரம் வருடங்கள் முன்னர் பிறந்து இருக்கலாமோ என! அதற்காக இப்போது பிறந்தது தவறு என தள்ளிவிடவும் முடியாது அல்லவா!

    வாழ்க்கையின் பல பரிமாணங்களை காட்டிய அற்புத பதிவு. மிகவும் தெளிவாக அப்படி அப்படியே உள்ளதை உள்ளவாறே எழுதியமைக்கு பாராட்டுகள். சிறு வயதிலேயே புராணங்கள் படித்து கொள்ள எத்தனை ஆர்வம். சிவபெருமான், கிருஷ்ணர் என இறைவனின் சேவகியாக வாழும் வாழ்க்கை கிடைப்பதற்கரிய பொக்கிஷம். திருவெம்பாவையும், திருப்பாவையும் உங்களுக்கு மிகவும் பிடித்து போய் இருக்க வேண்டும்.

    கோபம், திமிர் பிடித்தவர் என்றெல்லாம் ஒரு சில பரிமாணங்கள் உங்களை பற்றி ஆங்காங்கே தென்பட்டாலும் பக்தி, அன்பு, நட்பு என்பதில் மிகவும் நெகிழ்வடைய செய்துவிட்டீர்கள். அதற்காக கோபம், திமிர் எல்லாம் தவறான ஒன்று என்றாகிவிடாது. பிரியாவை கண்டுபிடிக்க இந்த வலைப்பூ உதவினாலும் உதவும். :)

    ஏழை, சேலை உடுத்திய நினைவு, காதல் தோல்வி என பல விசயங்களில் பள்ளிக்கூட அனுபவங்கள் சிறுவயதிலேயே அதிகம் கிடைத்து இருக்கிறது. மிகவும் அற்புதமான பதிவு. வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சுட்டியெல்லாம் இல்லைங்க....நார்மல்...ரொம்ப சாதுவும் இல்ல....

      //திருவெம்பாவையும், திருப்பாவையும் உங்களுக்கு மிகவும் பிடித்து போய் இருக்க வேண்டும்.//

      அதெல்லாம் தெரியவே தெரியாது.... சும்மா நண்பனிடத்தே, தந்தையிடத்தே பேசுவது போல் பெசுவதே பிடிக்கும்.

      Delete
    2. ரெண்டு பாவையும் அவசியம் முழுக்க முழுக்கப் படியுங்கனு சொல்லலாமா? இறையுடன் ஒன்றாக விழையும் மோக போதையோ பக்தியோ எப்படிப் பாத்தாலும்.. ரெண்டும் தமிழ் இறையிலக்கியங்களின் உச்சம் என்று நினைக்கிறேன். you might savor every line, every word, every nuance.

      Delete
    3. நன்றி அப்பாதுரை....வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு படிக்கிறேன். :)

      Delete
  21. பள்ளிப்பருவத்தை பகிர்ந்துகொண்ட விதம் அருமை. நிறைய விஷயங்கள் உங்களோடு ஒத்து போகிறது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ராஜி.... :) ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....
      நம்மைப் போல் ஒருத்தி ...lol... வருகைக்கு நன்றி...

      Delete
  22. நன்றி கீதமஞ்சரி....எனக்குப் பிடித்த பதிவும் கூட....ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  23. மிக அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள் !
    I enjoyed your style of writing.

    ReplyDelete
  24. நிறைய விஷயங்களை ஞாபகம் வைத்து நடுநிலையுடன் சொல்லிஇருக்கிறீர்கள்.

    ReplyDelete
  25. ஏன் இந்த நீண்ட அஞ்ஞாத வாசம்? எப்பத் திரும்பி வரப் போறீங்க ப்ரெண்ட்?

    ReplyDelete
  26. ஜூலை மாதம் வந்தால்....
    வந்துவிடுவேன் :P

    கொஞ்சம் உடம்பு சரியில்லை. வீட்டிலும் பிஸி. வந்துவிடுவேன்.
    நன்றி கணேஷ்....for having recollected :)

    ReplyDelete
  27. http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

    அன்புள்ள ஷக்தி,.

    I WOULD LIKE TO SHARE ANOTHER AWARD WITH YOU.

    PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

    THANKING YOU,
    VGK

    ReplyDelete
  28. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  29. மிக்க நன்றி நண்பர்களே....வலைப்பூவிற்கு வருகை தந்தே பல மாதமாகிவிட்டது ..

    என்னையும் நினைவில் வைத்து... I am moved. thanks :)

    ReplyDelete
  30. நல்லா இருக்கின்றது.
    எனது பள்ளி பருவத்தை அசைபோட வைத்தது
    நானும் புதிதாக ப்ளாக் எழுதுறன் நேரம் இருந்தால்
    இங்க வாங்க‌
    http://alakinalaku.blogspot.com/

    ReplyDelete