February 02, 2012

ஆசையால் வரும் கேடு

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடுஎன்றார் திருவள்ளுவர். எனக்கு மிகவும் பிடித்த குறளில் இதுவும் ஒன்று. உதிர்த்த மலர்கள் மரம் சேராதது போல உதிர்த்த வார்த்தைகளை பெற முடியாது. அதன் இலக்குக்குறிய நபரை தாக்கவோ மகிழ்விக்கவோ செய்த பின் வெளி வந்த வார்த்தைக்குறிய பணி முற்றுபெறுகிறது. கோபத்தில் வெளி வந்த சொற்களை திரும்ப அள்ள முடிவதில்லை.


ஏன் கோபப்படுகிறோம்? முதல் காரணம் அஹங்காரம். அது தோன்றியதால் தோன்றுவது ஆசை. பொருளின் மேல், நபரின் மேல் உள்ள ஆசை, அது பரிபோய்விடக்கூடாதே என்ற ஆசை, அல்லது தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், அதனால் வரும் பொறாமை.மதியிழந்து, பொருட்களை விலைபேசி சூதாடியதைத் தாண்டி, உயிர்களையும் விலைபேசி அடிமைப்படுத்தி தன் ஆசையை தீர்த்துக் கொள்ள எண்ணுகிறான் துரியோதனன். சூதாட்ட மயக்கத்தில் இன்னது தான் செய்கிறோம் என்று அறிந்தும் அறியாமல் தவறிழைக்கிறான் தருமன். கோபமும் பொறாமையும் அஹங்காரமும் கொழுந்துவிட்டெரியும் துரியோதனன் மனது இப்போது பழி தீர்க்க எண்ணுகிறது.  தன்னை நகையாடியவளை, தனக்கு கிடைக்காதவளை, அசிங்கப்படுத்துவது நோக்கம். அறிவுடையவன் மற்றவனுக்கு துன்பம் தரும் சொற்களை பேசமாட்டான். அகத்தே இருள் சூழ்ந்து அறிவற்ற செயல் செய்கிறான் துரியோதனன்.

இழுத்து வரச் சொல்கிறான் திரௌபதியை. எப்படிப்பட்ட தீஞ்சொற்கள்!


"அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,

துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:-


‘செல்வாய்,விதுரா!நீ சக்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள்,மிக்க எழி லுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,

“மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய்’
-பாஞ்சாலி சப்தம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மேல் ஆசை. ஆசையில்லாத மனம் ஞானியின் மனம் மட்டுமே. இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்றோ அல்லது அவனுடன் ஒன்றற கலக்க வேண்டும் என்றோ பக்தனுக்கு ஆசை உண்டு. "மனிதன் ஆசைப்படக் கூடாது" என்று புத்தர் ஆசைப்பட்டாராம். ஆசை யாரையும் விடுவதில்லை. ஆசைகளின் தரம் மட்டுமே மனிதனின் வாழ்வு தாழ்வை நிர்ணயிக்கிறது.

தனக்கென உரிய ராஜ்ஜியத்தை திரும்ப வெல்வது தர்மத்துக்கு உட்பட்ட ஆசை. ஆனால் துரியோதனின் ஆசை, தர்மத்துக்கு புறம்பானது. இதை விளக்கி துரியோதனனை எச்சரிக்கிறார் விதுரர்.


நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?

மஞ்சனே,அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்;
பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாது
வெந்நரகு சேர்த்துவிடும்,வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே,நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
- பாஞ்சாலி சபதம்.

சொல்பவன் சுடுசொல் பாய்ச்சுவதில் கிடைத்த திருப்தியோடு முடிந்ததாக எண்ணிவிடுகிறான். பலநாள் அகலாது நிற்கும் பட்டவனின் வலியோ சொன்னவனின் அழிவையே தர வல்லது. உன்னுடைய இந்த ஆசை ஆபத்தை விளைவிக்கும். பாண்டவர்களின் கோபத்துக்கும், சாபத்துக்கும், ஆளாக நேர்ந்து, அதனால் அழிவு ஏற்படும் என்று எடுத்துரைக்கிறார். மலைத்தேனின் ஆசையால், தேன் எடுக்கப்போகிறவன், கீழே விழுந்தால் துர்மரணம் ஏற்படுமே என அஞ்சுவதில்லை. தேனின் மேல் உள்ள ஆசையால் கீழுள்ள ஆபத்து தெரியாமல் செயலில் ஈடுபடுகிறான். இந்த ஆசை, பேராசையாக போகும் பொழுது, கீழே விழுந்து அழிகிறான் என புத்திபுகட்ட முயல்கிறார் விதுரர்.


"மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான்."

-பாஞ்சாலி சபதம்.

துரியோதனனின் பொறாமை, க்ரோதம், பின்னாளில் போரில் கொண்டர்ந்துவிட்டு, ஒட்டு மொத்த சாம்ராஜ்யத்தையே அழித்தது.

மலையிடைத் தேனின் மோகம் தான்  சாமன்யன் நிலைமையும்.  ஆசை அஞ்ஞானத்தால் உருவாகிறது. அதிருப்தியே அதனை வளர்க்கும் தீ. உண்மையான பிராமணனுக்கு பிரம்மத்தின் சிந்தனையில் லயித்திருப்பதே சுவபாவம். அவனுக்கு அதிருப்தி இருப்பதே சாத்தியமற்று போகிறது.  உண்மையான அந்தணனுக்கு அதிருப்தி இருக்காது. அவரவர்க்கு வெவ்வேறு நியாயங்கள்.  உடலின்பத்தை வழங்குபவளுக்கு லஜ்ஜை இருத்தல் சரியல்ல. குடும்ப ஸ்த்ரீ லஜ்ஜையில்லாவிட்டால் கேடு. ஒரு அரசனுக்கு நாட்டின் நலம், சுபீக்ஷத்தில் போதும் என்ற திருப்தி வரக் கூடாது. திருப்தியில்லாத அந்தணன் தன் அழிவை தேடிக் கொள்கிறான்.


நட்பைப் பாராட்டிய கர்ணன் அவன் வழியில் தர்மத்தை கடைபிடித்தான்.
அண்ணன் என்றும் பாராமல் தர்மத்துக்கு செயல்பட்டான் விபீஷணன். அண்ணன் தவறே ஆனாலும் அவனுடன் இருப்பதே தர்மமெனக் கருதினான் கும்பகர்ணன்.


ஆசை என்பதும் சரியா தவறா, தர்மத்துக்கு உட்பட்டதா என்பதெல்லாம் அவரவர் சந்தர்ப்ப சூழல், குணம், கர்மா இவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. ஆசைப்பட்டாலும் அதனால் வரும் க்ரோதம், பொறாமையை தவிர்த்து தர்மத்துக்கு புறம்பான செயல்களை ஆசையின் விளைவாக்காமல் இருப்பது நலம்.

(சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)

21 comments:

 1. உடையவளை பணயம் வைத்து சூதாடியதால்
  தருமா நெறி பிறழ்ந்தான் தருமன்...
  துர் ஆசை கொண்டவன் துரியோதனன் என்று
  தெரிந்தும்..
  நம் வாழ்க்கை முறையில் மதினியார் கிண்டல் செய்வதும்
  அதை கொழுந்தனார் விளையாட்டாக எடுத்துக்கொள்வதும்
  சாதாரணம்..ஆனால் அதை துரியோதனன் பழிவாங்கும்
  எண்ணத்தில் எடுத்துக் கொண்டது அவன் கர்மவினை..

  ஆசை ஆவரவர்கள் மனதை பொறுத்த விஷயம் என்பதும்..
  அவர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப விதைக்கப் படுவது
  என்பதும் நிதர்சனமான உண்மை சகோதரி.

  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் பதிவு.

  ReplyDelete
 2. பணி நிமித்தம் பயணமாக இருந்ததால்
  தங்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை
  பொறுத்துக் கொள்ளவும்.
  நன்றி.

  ReplyDelete
 3. கோபம் இயலாமையினாலும் வரும்ங்க ஷக்தி! நம்மால செய்ய முடியலையேங்கற வயிற்றெரிச்சலின் அடுத்த பரிமாணம் கோபம்தானே! எனக்கென்னமோ... விபீஷணனை விட அண்ணனுக்கு நியாயத்தை உபதேசித்தாலும் சகோதர பாசத்துக்காக உடனிருந்த கும்பகர்ணனை மிகவும் பிடிக்கும். மலையிடைத் தேனின் மோகம் தான் சாமான்யனின் நிலைமையும். அருமையான வரிகள். இன்னும் சிந்தித்தபடி இருக்கிறேன். மறுபடி கருத்திட வருகிறேன். நற்சிந்தனைக்கு வித்திட்ட உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் தோழி!

  ReplyDelete
 4. ஆசையே அழிவுக்கு காரணம்.இதை அழகான கட்டுரையில் விளக்கி இருக்கீங்க, ஷக்தி. சிறப்பாக இருக்கு.

  ReplyDelete
 5. அத்தனைக்கும் ஆசைப்படு.என்றொருவர் நாளும் முழங்கி வருகிறார். அதையும் கேட்டுப் பாருங்கள். ஆசை என்பது சரியா தவறா என்னும் ஆராய்ச்சி வேண்டாம். எந்த ஒரு கருத்தையும் எண்ணுபவர் அவரவர் நிலையிலிருந்து நியாயப் படுத்துவதை நாம் காணலாம். போதாததற்கு அவர்கள் மனசாட்ச்சிப்படி நடப்பதாகவும் செய்வதாகவும் கூறுவார்கள். ஆசை அடங்கினால் முன்னேற்றம் தடைபடும் என்றொரு எண்ணத்துக்கு நடுவே போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றும் சொல்லப் படுகிறது. I ONLY FEEL THE BASIC VALUES MUST BE UNDERSTOOD AND DEFINED. பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்து ரசியுங்கள். எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 6. அருமையான சிந்தனை ஷக்தி

  ReplyDelete
 7. //ஆசை என்பதும் சரியா தவறா, தர்மத்துக்கு உட்பட்டதா என்பதெல்லாம் அவரவர் சந்தர்ப்ப சூழல், குணம், கர்மா இவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. //

  மிகச்சரியான வார்த்தைகள் இவை.

  ஆசையை அடக்குவது என்பது பெரும்பாலானவர்களால் முடியவே முடியாத ஒன்று என்பதே உண்மை நிலை.

  நாம் செய்யும் இந்தச்செயல் சரியா தவறா தர்மத்துக்கு உட்பட்டதா என்ற ஆராய்ச்சிகளுக் கெல்லாம், கொஞ்சமும் நேரம் கொடுக்காமல், நம்மைத் தவறு செய்ய வைத்துவிட வேண்டும் என்பதே இந்த ’ஆசை’ என்பதன் ஆசையாகும்.

  சந்தர்ப்ப சூழல் சரிவர அமையாதவர்கள், தங்கள் மனம் பூராவும் ஆசைகளை சுமந்து கொண்டிருந்தாலும், தவறு செய்ய வாய்ப்பு இல்லாதவர்களாகத் தப்பிக்க முடிகிறது.

  அதனால் அவர்களை ஒரேயடியாக குணவான்கள் என்றும் சொல்வதற்கில்லை. கர்மவினை அவர்களைத் தவறிழைக்க விடாமல் செய்திருக்கலாம் என வேண்டுமானால் சமாதானம் செய்து கொள்ளலாம்.

  சந்தர்ப்ப சூழல் சரிவர அமைந்தவர்களுக்கு, தான் செய்வது தப்பு என்றே சுத்தமாகத் தோன்றுவது இல்லை. ஏதோ முயற்சி செய்து பார்போமே என்ற குருட்டு தைர்யத்தை அளித்து விடுகிறது இந்த ஆசை என்பது.

  இவர்களின் நல்ல குணத்தை மறைப்பதும் அதே கர்மவினை என்று அதன் மேல் பழியைப்போட்டு விடலாம்.

  மொத்தத்தில் சந்தர்ப்ப சூழல் சரிவர சாதகமாக அமைந்துவிட்டால், இதிகாசகாலம் முதல் இந்த நவீன காலம் வரை அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

  இதுவரை தவறேதும் செய்யாதவர்களுக்கு சந்தர்ப்ப சூழல் சரிவர சாதகமாக அமையவில்லை என்று வைத்துக்கொள்ளலாம்.

  மஹாபாரதத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களின் குணங்களையும் தான் இன்று நம்மிடையே பழகும் பலரிடமும் காண முடிகிறதே! போதாக்குறைக்கு செய்தித் தாள்களிலும் அன்றாடம் அடிக்கடி அங்குமிங்கும் பார்க்க முடிகிறதே!!

  ஆசையை முற்றிலும் துறந்தவர்களுக்கு இந்த உலகத்தில் என்றும் இடம் கிடையாது.

  இந்த உலகில் ஒருவர் உயிருடன் வாழ்கிறார் என்றால் அவர் ஏதோவொரு ஆசையுடன் தான் வாழ்கிறார் என்பது என் அபிப்ராயம்.

  ReplyDelete
 8. //ஆசைப்பட்டாலும் அதனால் வரும் க்ரோதம், பொறாமையை தவிர்த்து தர்மத்துக்கு புறம்பான செயல்களை ஆசையின் விளைவாக்காமல் இருப்பது நலம்.//

  இது தான் விஷயம். இந்த ஞானம் வந்தால் இந்த சட்டத்துள் உட்படுத்திய ஆசை எவ்வெளவு வேண்டுமானால் கொள்ளலாம். யான் பெற்ற செல்வத்தை இன்னொருவருக்கு ஈவதே எனக்கான ஆசை என்றார் ஒரு வள்ளல் பெருமான்.
  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. பாவம் சம்பந்தப்படாதவை எவ்வளவோ;
  சின்னச் சின்ன ஆசைகள்.

  //ஆசை என்பதும் சரியா தவறா, தர்மத்துக்கு உட்பட்டதா என்பதெல்லாம் அவரவர் சந்தர்ப்ப சூழல், குணம், கர்மா இவற்றைப் பொருத்து மாறுபடுகிறது.//

  கர்ணன்,விபீஷணன்,கும்பகர்ணன் இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டது இதில் மூன்றாவதாகச் சொன்ன கர்மா. எதனால் எது நடக்கிறது என்ற ஞானம் கிட்டாத பொழுது கர்மபலங்களுக்கேற்பவே குணம், சூழல் போன்ற மற்றவைகளும் அமைகின்றன என்று கொள்ளலே தகும். செய்யும் கர்மங்களுக்கேற்பவே உடல், உள்ளம் எல்லாம் அமையும் என்பது சயின்ஸ்.

  கர்ணனும், விபீஷணனும் கொண்ட நியாயங்களை விட கும்பகர்ணன் கொண்ட நியாயம் விசித்திரமானது. கம்பன் தான் அதை வெகு சிறப்பாகக் கோடிட்டுக் காட்டுவான். விபீஷணன், கும்பகர்ணனை 'என்னுடன் வந்து விடு' என்று கூப்பிடும் பொழுது, 'நீங்கள் எல்லோரும் சென்று விட்டால், இராவணனுக்கு எள் நீர் இறைத்து கடன் கழிப்பார் யார் உளர்?.. அதற்காகவாவது இராவணனை விட்டு நான் நீங்கேன்" என்பான்.

  ReplyDelete
 9. நல்ல பதிவு...
  கடுஞ்சொல் கொடுமைக் காரனின் இயல்பு
  எனினும் அதுவே அவனை அழிக்கும் என
  புராண இதிகாசங்களின் துணிபு...

  "தம்பீ!... எரிதழல் கொண்டுவா கதிரை
  வைத்திழந்தான் அண்ணன்
  கைதனை எரித்திடவே"
  என்பான் வீமன்....
  அவனின் கோபம் நியாய மானது என்றாலும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்விய பின் நியாயம் தான் என்ன செய்ய முடிந்தது... இருந்தும் ஹரி..ஹரி...ஹரி... என்னும் சரணாகதி அவளைக்காத்தது.... அவள் தனது சேலையை பிடிக்கவில்லை... கண்ணனின் பாதத்தை யல்லவா பற்றி நின்றாள்... நம்பினார் கெடுவதில்லை நான்குமறைத் தீர்வு என்பர்...

  நியாயம் வேறு தர்மம் வேறு என்பதை ஆராய (உங்களின் அடுத்தப் பதிவு அதுவாகலாம்) முத்தாய்ப்பாக கர்ணனோடு, கும்பகர்ணனையும், விபீஷ்ணனையும் கொணர்ந்து நிறுத்தி இருக்கிறீர்கள்....

  கும்பகர்ணனே மூவரில் சற்று முன் நிற்பதாகவே நான் கருதுவேன்... அவனின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு வர கம்பர் அழகாக காண்பிப்பார் அவனை...
  எனினும் தங்களின் அடுத்த பதிவை எதிர்பார்த்து முடிக்கிறேன்...

  நன்றிகள் சகோதிரி...

  ReplyDelete
 10. ஆஹா! எனது சிந்தனையே.... இல்லை, தவறு நண்பர் ஜீவியின் சிந்தனயே என்னிலும் இங்கே உதித்திருக்கிறது.... இருந்தும் கும்பகர்ணன் எள் நீர் இறைக்க என்பதை விட இராவணனுக்கு முன்பே இறக்கவே விரும்பினான் என்பதை தான் சற்று தீர்க்கமாகக் கூற வேண்டும்... எனினும் வாய்ப்பு வரும் போது பேசலாம்..

  ReplyDelete
 11. ஆசையே அழிவிற்குக் காரணம் அந்த ஆசையை அடக்க அற நெறியில் நடக்க வேண்டும் என்றார் புத்தர்...
  ஆசை என்பது மனித இயல்பு அது நியாயமான ஆசையாக இருந்தால் கர்ம வினைப் படி அது முடியும்...
  எது நியாயமானது அல்லது அநியாயமானது என்பதை அறிவு.. அறியும் இருந்தும் மனத்தின் சொல்படி
  கேட்பதால் அறிவது செயலற்று போகிறது...

  இருந்தும் நடந்த எல்லாவற்றிற்கும், அதனால் விளைந்த எல்லா நற்பலனுக்கும்; ஆசையால் செய்த அந்தக் கெட்டதுமே ஒருக் காரணமும் ஆகிறது என்பதையும் ஏற்போம்...

  அதனாலே "ஆசையை கைவிடவேண்டும் என்பது அல்ல" அதை கடந்துவர வேண்டும்" என்பர்... அதாவது அங்கேயே குடி கொண்டால் என்ன செய்வது... ஆசையால் விளையும் கொடுமையை அறிந்தவர்கள் எதிர்த்துப் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.... அதே நேரம் ஆசையை அடக்க முடியாமல் அவர்களும் கொடுமையை செய்து கொண்டே தான் இருக்கவும் வேண்டும்....

  இயக்கம் இருக்க வேண்டுமானால் இந்த ஏற்றத் தாழ்வு வேண்டும்..... சம நிலை என்பது இயக்கமற்ற நிலை... அழிவின் / படைப்பின் தருணம்... தவிர்க்க முடியாதது.... அதை உணர்ந்த மனம் மட்டுமே தடமாறாதது....

  ஆசையைப் பற்றிய பதிவு.... படித்துவிட்டு அடுத்தப் பதிவைப் பற்றிய ஆசையோடு மீண்டும் வருகிறேன்....

  ReplyDelete
 12. மகேந்திரன், கணேஷ், ராம்வி, ஷைலஜா, ஜி.எம்.பி சார், வைகோ சார், ஜீவி, தமிழ்விரும்பி,

  அனைவருக்கும் மிக்க நன்றி..... என் பதிவை விட உங்கள் பதில்கள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும் நிரம்பிய செய்தியுடனும் இருக்கிறது.

  ReplyDelete
 13. //நம் வாழ்க்கை முறையில் மதினியார் கிண்டல் செய்வதும்
  அதை கொழுந்தனார் விளையாட்டாக எடுத்துக்கொள்வதும்
  சாதாரணம்..ஆனால் அதை துரியோதனன் பழிவாங்கும்
  எண்ணத்தில் எடுத்துக் கொண்டது அவன் கர்மவினை//

  புதிய கோணமாக இருக்கிறது....wow...அழகாக சொன்னீர்கள் . மிக்க நன்றி!!

  //கோபம் இயலாமையினாலும் வரும்ங்க ஷக்தி!//

  ரொம்ப சரி கணேஷ். சரியான பாய்ண்ட் சொல்லியிருக்கிறீர்கள். இதைப் பற்றி எழுத வேண்டும். நன்றி. :)

  //எந்த ஒரு கருத்தையும் எண்ணுபவர் அவரவர் நிலையிலிருந்து நியாயப் படுத்துவதை நாம் காணலாம். போதாததற்கு அவர்கள் மனசாட்ச்சிப்படி நடப்பதாகவும் செய்வதாகவும் கூறுவார்கள்.//

  நல்லா சொன்னீங்க. basic values determine our route of desires infact. நன்றி சார்.

  ReplyDelete
 14. //அதனால் அவர்களை ஒரேயடியாக குணவான்கள் என்றும் சொல்வதற்கில்லை. கர்மவினை அவர்களைத் தவறிழைக்க விடாமல் செய்திருக்கலாம் என வேண்டுமானால் சமாதானம் செய்து கொள்ளலாம்//

  வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க. நன்றி சார். கடைசியில் சொன்னது போல், ஆசை தான் நம் பிறப்புக்கே காரணம். அதனால் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசை இருந்தே தீரும்.

  //இது தான் விஷயம். இந்த ஞானம் வந்தால் இந்த சட்டத்துள் உட்படுத்திய ஆசை எவ்வெளவு வேண்டுமானால் கொள்ளலாம். யான் பெற்ற செல்வத்தை இன்னொருவருக்கு ஈவதே எனக்கான ஆசை என்றார் ஒரு வள்ளல் பெருமான்//

  ஜீவி, ரசித்தேன். நன்றி.

  ஜீவி, தமிழ்விரும்பி,

  கும்பகர்ணன் எள் நீர் கழிக்கும் கடன் விளக்கம் அருமை. மிக்க நன்றி.

  தமிழ்விரும்பி,

  //ஆசையைப் பற்றிய பதிவு.... படித்துவிட்டு அடுத்தப் பதிவைப் பற்றிய ஆசையோடு மீண்டும் வருகிறேன்....
  //

  நன்றி :)

  ReplyDelete
 15. பிரமாதம் சகோதரி. இந்த தொடர்கள் முடிந்தவுடன் புத்தகமாக போட இருக்கிறீர்களா என்பதை அறியத் தரவும். பாஞ்சாலி சபதம் குறித்தும், பல விசயங்கள் குறித்தும் அலசிய கட்டுரைக்கு கிரீடத்தில் வைரக்கற்கள் வைத்தது போல அற்புதமான பின்னூட்டங்கள். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

  ஆசைப்பட்டேன் என சில பகுதிகள் எழுதி பேராசை என எல்லாம் எழுதி கடவுள் ஆசைப்படுவாரா? என முடித்து இருந்தது நினைவுக்கு வந்தது.

  எனக்கு ஆசையே வரக்கூடாது என ஆசைப்பட்டேன். இதுதான் வாழ்வின் ஆதாரம். வாய்மை எனப்படுவது யாதெனின் என்பார் வள்ளுவர். அதைப்போல ஆசை எனப்படுவது யாதெனின் என ஆசையை அழகாக வர்ணிக்கலாம். ஆசையால் மட்டுமே கேடு ஒரு போதும் வருவதில்லை. மனிதர்களின் செயல்பாடுகளால் தான் கேடு வருகிறது. அதற்கு ஆசை ஒரு காரணி அவ்வளவுதான். ஆசை போன்று நீங்கள் குறிப்பிட்ட குணம், சந்தர்ப்ப சூழல், கர்மா என பல காரணிகள் உண்டு.

  ஆசை தோசை என சிறு வயதில் விளையாடுவது போல ஆசை ஒரு விளையாட்டு பொருள். நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதை பொறுத்து அதன் அளவு மாறுகிறது. அது சரியா, தவறா என்பது செய்பவரை பொறுத்து மட்டும் அல்ல, பார்ப்பவர்களை பொருத்தும் அமைகிறது.

  அதென்ன லஜ்ஜை? அதன் அர்த்தம் சலித்து கொள்தலா?

  நீங்கள் அதிகம் வாசிப்பதால் குறைவாகவே ஆனால் நிறைவாகவே எழுதுகிறீர்கள். :)

  ReplyDelete
 16. இன்றைக்கு நெருங்கிய ஒருவருக்கு மிகவும் துன்பம் தருமளவு பேசினேன். எத்தனை முயன்றும் என்னால் என்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரது கண்மூடித்தனத்தின் மேலிருந்த அருவருப்பு என் கண்களையும் அறிவையும் மூட அனுமதித்தேன்.... அவரது எண்ணங்களும் செயல்களும் அவரது உரிமை என்பதை எந்தக் கணத்தில் மறந்தேன் என்று யோசித்து மாய்கிறேன்... ஹ்ம்ம்ம். உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது தோன்றியவை.

  ReplyDelete
 17. //பிரமத்தின் லயித்திருப்பதே சுவபாவம்.
  இங்கே ஏதாவது விடுபட்டிருக்கிறதோ?

  ReplyDelete
 18. வாங்க and நன்றி வி.ஆர். புத்தகத்தைப் பற்றியெல்லாம் யொசித்ததில்லை. என் எழுத்து ஒரு சில நபருக்கேனும் ஆறுதலோ பயனோ அளிக்குமாயின் அதுவே கிடைத்த வெற்றி என எண்ணிக்கொண்டு தான் இங்கு எழுதிவருகிறேன். ஆசை குறித்து உங்கள் அலசலும் நன்று.

  லஜ்ஜை என்றால் வெட்கம்.

  ReplyDelete
 19. நன்றி அப்பாதுரை...சரியாகத் தான் சிந்தித்திருக்கிறீர்கள். பொறுமயாக சொல்வது நம் கடமை...மற்றபடி கோபம் கொண்டு என்ன பயன். நானும் எளிதில் சொல்லி அல்லது எழுதிவிட முடியும். ஏறக்குறைய எல்லோரும் சில நேரங்களில் பொறுமை இழந்துவிடுகிறோம்.

  //பிரமத்தின் லயித்திருப்பதே சுவபாவம்.
  இங்கே ஏதாவது விடுபட்டிருக்கிறதோ//

  எழுத்துப்பிழையை சரி செய்துவிடுகிறேன்.

  ReplyDelete
 20. இன்று வைகோ ஸார் தங்களுக்கு ஒரு மதிப்பான விருது கொடுத்திருப்பதைப் பார்த்தேன். தங்களுக்கு மகிழ்வுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 21. ஒரு குருடனின் பார்வையிலிருந்து தான் மகாபாரதமே தொடங்குகிறது என் ஓசோ அழகாக சொல்லுவார்.தங்கள் பார்வைக்கோணமும் மிக மிக அருமை வாழ்த்துகள்

  ReplyDelete