January 26, 2011

தெய்வ குணம் (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

செயலின் விளைவுகள் கர்மயோகியை கட்டுப்படுத்துவதில்லை என்று படித்தோம். கேட்டோம். உணர்ந்தோம். ஆயினும் அதன்படி நடக்க ஏறக்குறைய நம்மில் பலரால் இயலுவதில்லை. அஹம் கட்டுப்படுத்தபடாததால், அது கட்டுண்டு உடம்பினுள் உழலும் இந்த ஜீவன் மட்டுமே 'நான் என்ற நினைப்பில் செயல்களை செய்கிறது. செயலுக்குறிய விளைவும் இலக்குக்குறியவனை மட்டுமின்றி, செய்தவனையும் பாதிக்கிறது. இத்துடன் நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் தொடர் விளைவுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

வீட்டில் சண்டையிட்டு வந்த முதலாளி தன் இயலாமையின் வெளிப்பாடை கோபத்தின் மூலமாக வேலையாளிடம் காண்பிக்கிறான் என்பது நகைச்சுவை துணுக்காக மட்டுமின்றி மனோவியல் விதிப்படியும் சரியாகிறது. சிறு செயல் முதல் பெரிய மகத்தான செயல்கள் வரை அனைத்திற்கும் விளைவுகள் உண்டு. அடி முடி அறியமுடியாத படி விளைவுகள் நடைமுறை வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தனிப்பட்ட ஒரு மனிதனின் நிலைமைக்கு காரணம் இன்னார் அல்லது இன்ன செயல் என கூறிவிடுகிறோமே தவிர, அவனின் செயலுக்கோ நிலைமைக்கோ, புரிந்தும் புரியாததுமாய் பல பிரபஞ்ச தொடர் நிகழ்ச்சிகளும் காரணம் ஆகின்றன. அவரவர் வினைப்பயன் என்றும் இதை சொல்லக் கேட்கிறோம். நன்மை பயக்கும் ஒருவரின் செயல் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொழுது, சில நேரம் நன்றி நவில்கிறோம், பல நேரம் மறந்தும் விடுகிறோம். அதே நேரத்தில் நமக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் நடைபெறும் செயல்களை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. ஒவ்வாத செயல்களை செய்தவனை 'வினை-விதைத்தவன்' என்ற நோக்க்கத்துடனேயே அணுகுவதால், அவனிடம் பெரும்பாலும் அன்பு துளிர்ப்பதில்லை. செயல்கள் அனைத்துமே தொடர் நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பே, அதுவும் நம் விதிக்கு உட்பட்டே நடைபெறுகிறது என்ற தெள்வு பிறந்தால் எவ்வித மனக் கசப்பும் பிற ஒருவரிடம் ஏற்படுவதில்லை. அப்படியே ஒருவன் தீங்கு இழைத்தாலும் அதை மன்னிக்கும் பக்குவம் வந்துவிடும்.

தவறிழைப்பது மனித இயல்பாகவே இருந்தாலும், அதனை பெருந்தன்மையோடு மறப்பதும் மன்னிப்பதும் தெய்வ குணமாகவே கருதப்படுகிறது. மன்னிக்க முடியாத குற்றம் ஒருவன் புரிந்து விட்டால் அவன் கதி என்ன? அப்படிப் பட்ட கொடும் செயலும் மன்னிக்கப்பட்டு விட வேண்டுமா? எதைத் தான் மன்னிப்பது என்ற வரையறை வகுக்கப்பட வேண்டுமா? இவ்விஷயத்தை குறித்த சர்ச்சை மஹாபாரத்தத்தில் த்ரௌபதி-யுதிஷ்டிரர் இடையே எழுகிறது. "எப்படிப்பட்ட தவறை எவர் செய்திருப்பினும் மன்னிக்கும் குணம் க்ஷத்திரிய லக்ஷணமே அல்ல" என்று வாதிடுகிறான் பீமன். "எதையும் எப்பொழுதும் மன்னிக்கும் குணமுடைய ஒருவன் அரசாண்டால், மக்களும், மற்றவரும் அவனை எளிதாக மதிப்பிட்டு விடக் கூடுமாகிறது. பிரஹலாதன் தன் பேரன் மஹாபலியின் சந்தேகத்தை போக்கும் பொருட்டு, ராஜ குணம் பொருந்தி அரசாள்பவனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்குகிறான். எதையும் எப்பொழுதும் எளிதில் ஜீரணித்து மன்னித்து விடுபவனை மற்றோரும், உற்றோரும் ஏன் பணியாட்களும் கூட ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை என்று ப்ரஹ்லாதன் கூறுகிறான்" என்று எடுத்துக்காட்டுகிறாள் த்ரௌபதி. ஒருவன் தெரியாமல் தவறிழைத்தால் அவன் மன்னிக்கப்படவேண்டியவன். தவறினை சுட்டிக்காட்டி மன்னிக்கவேண்டியதே தர்மம். இரண்டாம் முறையும் அவன் தவறிழைத்தால் அவன் தண்டனைக்கு உரியவனே என்று வாதிடுகிறாள்.

அதற்கு பொறுமையின் இருப்பிடமாம் தர்ம புத்திரரின் விடை அவரின் முதிர்ச்சி நிலைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. "மன்னிப்பே உலகத்தில் சிறந்ததும், மேன்மையானதும், கீர்த்தியளிக்க வல்லதும் ஆகும். அதை விட சிறந்த மேன்மையான விஷயம் இன்னொன்றில்லை. ஒவ்வொருவரும் பதிலுக்கு பதில் விரோதமும் பேச்சும் வளர்த்து விட்டுக்கொண்டிருந்தால், அது முடிவற்று நீண்டு கொண்டே இருக்கும். எந்த ஒரு விரோதமும் முடிவுக்கு வர மன்னிப்பும் பொறுமையும் அவசியம். மன்னிக்கும் செயல் பிரம்மத்துக்கு ஈடானது. அதுவே சத்தியம்."
இப்படி ஒரு பதில் அளிக்க எப்பேர்பட்ட பரந்த மனம் படைத்திருக்க வேண்டும்!

'தவறிழைப்பது மனித குணம். அதை மன்னிப்பது தெய்வ குணம்!'

6 comments:

 1. மறந்து விடுதல் மன்னிப்பதற்கு ஒப்பாகுமா, பிரபா.? என் பதிவுப்பக்கம் காண்பதேயில்லையே..

  ReplyDelete
 2. // அஹம் கட்டுப்படுத்தபடாததால், அது கட்டுண்டு உடம்பினுள் உழலும் இந்த ஜீவன் மட்டுமே 'நான் என்ற நினைப்பில் செயல்களை செய்கிறது. செயலுக்குறிய விளைவும் இலக்குக்குறியவனை மட்டுமின்றி, செய்தவனையும் பாதிக்கிறது. இத்துடன் நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் தொடர் விளைவுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.//

  இதையே வேறு மாதிரிப் பார்க்கலாம். கட்டுப்பட்ட அஹம் என்பது என்ன என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
  அடுத்து அப்படிப்பட்ட அஹத்திற்கும் ஜீவனுக்குமான தொடர்ப்பு. சரியா?..

  கட்டுப்பட்ட அஹத்தின் ஆளுகையில் உள்ள ஜீவனின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதான பார்வை.
  கட்டுப்பட்ட அஹத்தைப் பெறின், ஜீவன் ;நான்' என்னும் பந்தத்தைக் களைந்து விடுமா என்பது அடுத்த கேள்வியாக எழுகையில் ஜீவனின் செயல்பாடைக் கட்டுப்பட்ட அஹம் எடுத்துக் கொள்ளுமா என்கிற கேள்வி இயல்பாகவே எழும்.

  இதற்கான அனுபவ பூர்வமான பதில்கள் கிடைக்கும் நேரத்தில் தான் இப்படியான இந்த கட்டுப்பட்ட அஹத்தைப் பெறும் ஆவல் சிந்தையில் பீறிடும்.

  கட்டுப்பட்ட அஹத்தைப் பெறுவதற்கான தொடக்கம்-- அந்த ஆரம்ப காரியம்-- என்ன அதற்கான பயிற்சி பெறுவது எப்படி என்கிற சிந்தையில் மனம் திளைக்கும்.

  நல்லதொரு ஆரம்பத்தைத் தொடங்கி வைத்தப் பதிவுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. GMB sir,

  மறந்தே விட்டால் மன்னிக்க என்ன இருக்கிறது :) மன்னிக்க முடிந்தால் மறந்து விடும். மன்னித்தும் மறக்க முடியாதிருந்தால், மன்னிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

  ReplyDelete
 4. ஜீவி,

  ரொம்ப அழகாக சொல்லிவிட்டீர்கள். :bow: உண்மை தான்.

  /// ஜீவனின் செயல்பாடைக் கட்டுப்பட்ட அஹம் எடுத்துக் கொள்ளுமா என்கிற கேள்வி இயல்பாகவே எழும்//

  இந்த இடத்தை சற்று விளக்குங்களேன்...

  ReplyDelete
 5. ஒவ்வொரு காரியமும் நம் முயற்சியில் நடந்து முடியும் பொழுது அது நம்மால் தான் நடந்து முடிந்திருக்கிறது என்கிற நினைப்பு நம் எல்லோருக்குமே உண்டு.
  இப்படி நினைப்பதில் தவறில்லை. எந்தக் காரியத்திற்கும் ஒரு விளைவு உண்டு என்பது இயற்கையின் விதியாகையால் இப்படி நினைப்பது சரியானதே. இது நாம் நினைக்கிறபடி நடந்து முடிந்த செயலுக்கு. இது நடந்து முடிந்ததின் வெற்றிக்கு நான் தான் முழுதும் காரணம் என்று நிச்சயமாக நினைப்போம்.

  அடுத்தது நமது முழு முயற்சிக்கு அப்புறமும் நினைத்தபடி நடக்காத ஒன்றுக்கு என்ன சொல்வோம் என்பது. எங்கேயாவது தவறு நடந்து விட்டதா என்று சரிப்பார்ப்பு.. ஒரு தவறும் இல்லாத பொழுதும் ஏன் நடக்கவில்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழும். எந்தத் தவறும் புலனாகாத போதும், இன்று இந்தக் காரியம் நடக்காததற்கு நாம் தான் காரணம் என்று நிச்சயம் நினைக்க மாட்டோம். அப்படி நினைப்பதற்கு
  ஏதாவது சாக்கு போக்கு கிடைக்கும்.
  வெளிக்கு ஏதாவது காரணம் சொல்லி சமாளித்தாலும் உள்மனம் 'ஏன் நடக்கவில்லை' என்று சிலருக்கு மட்டும் திகைக்கும். சிலருக்கு உறுத்தும். அப்பொழுது ஒரு காரியம் வெற்றிகரமாக நடந்து முடிவதற்கு நம்மைத் தவிர வேறு சில காரணிகள் இருப்பது லேசாக உறைக்கும். இது ஒரு வகைப்பட்ட லேசான புரிதல்.

  இந்தப் புரிதல் அனுபவத்தில் பலப்பட பலப்பட அந்த வேறு சில காரணிகளும் காரியம் பங்கமில்லாமல் நடந்து முடிவதற்க்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மனசார விரும்புவோம். சில காரணிகள் நன்றாகவே நமக்குப் புரியவும் செய்யும். (உ-ம்) ஒரு நேரத்தில் 'மழை வராமல் இருக்க வேண்டுமே' என்கிற நினைப்பு. இன்னொரு சமயத்தில் 'மழை வர வேண்டுமே' என்கிற நினைப்பு. இப்படிப் பலப் பல) தான் சம்பந்தப்படாத ஏதோ ஒன்று.

  முற்றும் தன்னால் கிடைத்த வெற்றி என்று நினைப்பதை தன்னால், தான் உயிர் சுமந்து செய்ததாய், தன் ஜீவன் செய்ததாய் எண்ணுகிறோம்.

  கட்டுப்பட்ட அஹத்தைப் பெறும் சாத்தியப்பாடு கிடைத்தவுடன், இந்த 'நான்' கழண்டு கொள்வதால், நான் அற்ற இந்தக் கட்டுப்பட்ட அஹம் தான் இந்த வெற்றிக்குக் காரணமானதோ, இதுகாறும் இருந்த ஜீவனின் செயல்பாட்டை கட்டுப்பட்ட அஹம் எடுத்துக் கொண்டு விட்டதோ என்கிற எண்ணத்தின் அடிப்படையிலான நிலைபாடு உறுதிப்படும்.

  இதெல்லாமே உணர்வின் அடிப்படையிலான தெளிவுகள் ஆதலின் இவை எதற்குமே இதுதான் என்று வரையறை எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரித் தோன்றும்.

  ReplyDelete
 6. புரிந்தது ஜீவி. விளக்கம் அருமை.

  ReplyDelete