February 02, 2011

யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

கால நேரத்திற்கு அப்பாற்பட்டு ஊழல்கிறது பொய்மையும் கபடமும். இரட்டைகளான துக்கம் சுகம், புகழ்ச்சி, இகழ்வு என்பதைப் போல், சத்தியத்தின் இரட்டையான பொய்மையும் தன் பணியைத் தொடர்ந்தவண்ணமிருக்கிறது. பிறரை ஏமாற்றி தன் ஜீவனத்தை நடத்தும் இழி நிலைக்கு பாபச் சுமை அதிகம். அதிலும் புனிதனைப் போல் வேடமிட்டு ஏய்ப்பது மிகப் பெரிய பாபம். ஜடை முடி தரித்தலும், காவியுடையும் பெரும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவை. அவற்றை தவறாக பயன்படுத்துபவன் மூடன். அந்த பாபத்தின் வீர்யம் அறியாதவன். இவர்களைப் பற்றி ஆதிஷங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


" ஜடிலோ முண்டி லுஞ்சித கெஷ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹூதர நிமிதம் பஹுக்ருத வேஷ: "
-பஜகோவிந்தம்

சடை முடி வளர்ப்பதும், மொட்டையடிப்பதும், காவியுடை அணிவதுமாய் பல வித வேடம் அணிந்து மூடர்கள் வயிற்றை வளர்க்கிறார்கள். அவர்கள் கண் இருந்தும் குருடர்கள்.

வேடமணிந்த சிலரோ சித்து வேலைகள் செய்தும் பெருவாரியான மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்கின்றனர். சாமான்யர்களால் எப்படி சித்து வேலை செய்ய முடியும்? அப்படியெனில் அவர்கள் சித்தர்களின் பாதையில் பயணிப்பவர்களாகத் தான் இருக்க வேண்டும். "சித்தி" அடைந்தவுடன் மோக்ஷமோ, முக்தியோ கிடைப்பதில்லை. அவர்கள் முற்றும் துறந்த சன்யாசி, ஞானி ஆகிவிடுவது இல்லை. உண்மையான சித்தர்களும் யோகிகளும் சித்தி அடைவதை தன் இலக்காக கொள்ளுவதில்லை. அது ஒரு நிலை மட்டுமே. அதைத் தாண்டி தம் பயணத்தை தொடர்ந்த வண்ணமிருப்பர். அவர்கள் ஒழுக்கம் தவம் மூலம் பல ஷக்திகளைப் பெறுகின்றனர்.

சித்தி பெற்றதும் கூட அஹம் மட்டுப்படாமல் அந்த ஷக்திகளைக் கொண்டு ஏய்க்கும் வேலையில் ஈடுபட்டால் அவர்கள் தம் பாதையினின்று வழுவி விழுந்து விடுகின்றனர். அதைத் தாண்டி செல்பவனே உண்மையான யோகி. பெயர் பெற்ற பதிணென் சித்தர்களைத் தவிரவும் நிறைய சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அஷ்ட மஹா சித்திகள் எனும் எட்டு சித்திகள் கை வரப் பெறுபவன் சித்த நிலையில் இருப்பவனாக கருதப்படுகிறான். அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ரபத்தி, ப்ரகாமீயம், ஈசாத்வம், வசித்வம் என்பன அவை.

அணிமா: அணுவை விட சிறிய உருவம் எடுப்பது / ஆக்குவது
மஹிமா: மலையைக் காட்டிலும் பெரிய உருவம் கொள்வது / ஆக்குவது
லஹிமா: காற்றை விட மென்மை ஆகுவது / ஆக்குவது
கரிமா: மெல்லிய ஆனால் சுமக்க முடியாத கனமான உருவம் கொள்வது /ஆக்குவது
ப்ராப்தி: எண்ணிய பொருள் கையில் வரவழைப்பது
ப்ராகாமீயம்: எந்த வடிவமும் எடுப்பது
ஈசாத்வம்: தேவர்களும் வணங்கக் கூடிய தன்மையை பெறுவது.
வசித்வம்: கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவற்றை அடக்கும் ஷக்தி கைவரப் பெறுவது.

இவற்றையெல்லாம் அடைந்த ஒருவன் அகங்காரத்தை கட்டுப்படுத்தாமல், ஆசைகள் கொண்டு திரிந்தால் அவன் முயற்சி அனைத்தும் வீண். ஆசைகளை அடக்குவதே யோகத்தின் உயரிய நிலை. அஹத்தை மட்டுப்படுத்துதலே ஞானத்தின் முதல் கட்ட நிலை.
"அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆஷா பிண்டம்"
-பஜகோவிந்தம்

உடல் தளர்ந்து விட்டது, பல் விழுந்து, முடி நரைத்து, கையில் கோலின் துணையின்றி இருக்கும் ஒருவனுக்கும் ஆசை விட்டபாடில்லை.

ஆண் / பெண், முதியவன் / இளையவன், சில சித்தர்கள் / சாமான்யர்கள் என பலரையும் ஆட்டுவிக்கிறது ஆசை!
ஆசைகளால் கட்டுப்படுத்தப் படாதவன் துறவி.

5 comments:

  1. சோவின் புத்தகத் தொகுப்பிலிருந்து பகுதிகளை அப்படியே எழுதுகிறீர்களா இல்லை நீங்கள் தெளிந்ததை எழுதுகிறீர்களா.? எது எப்படியாயினும் சிலர் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர் ஆசையை அடக்கு அல்லது ஒழி என்கிறார்கள். அன்னம் பால் பருகுவது போல் நாமும் பகுத்து உணர வேண்டும்.

    ReplyDelete
  2. எல்லாம் துறந்தவரைத் துறவி என்கிறோம். சரிதான். ஆனால் துறவி என்கிறதை விட சாது என்கிற வார்த்தை சாத்வீகமாகப் படுகிறது.
    வார்த்தை மட்டுமில்லை, அப்படியானவர்களின் தோற்றமே அவர்கள் ஆசை அறுத்து ஈசனுடன் நேசமாய் இருக்கும் சேதியைச் சொல்லிவிடும்.

    ஆசை அறுத்தல் செயற்கரிய செயல்; அதனாலேயே நம்மால் முடியாத ஒரு செயல் இவரால் முடிகிறதே என்று இயல்பாய் நெஞ்சில் துளிர்க்கிற ஒரு
    பட்சாதாபத்திலும் பரிவிலுமே சாதுக்கள் இங்கு புனிதர்களாய் வணங்கப்பட்டு இருக்கிறார்கள். இறைவனுடன் நேசம் கொள்வது நம்மாலும் முடிகிற காரியமாதலால் அது கூட இரண்டாம் பட்சம்தான்.

    ReplyDelete
  3. gmb sir,

    அவர் தொகுத்துப் பேசிய கதைகளை கருத்துக்களைக் கொண்டு சொல்ல வரும் செய்திகளை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கிறேன். என்னுடைய பார்வையும் கோணமும் இணைத்து எழுதியிருக்கிறேன்.

    //அன்னம் பால் பருகுவது போல் நாமும் பகுத்து உணர வேண்டும்.
    //

    ஆம். மிகச் சரியான வார்த்தை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ///ஆசை அறுத்தல் செயற்கரிய செயல்; அதனாலேயே நம்மால் முடியாத ஒரு செயல் இவரால் முடிகிறதே என்று இயல்பாய் நெஞ்சில் துளிர்க்கிற ஒரு
    பட்சாதாபத்திலும் பரிவிலுமே சாதுக்கள் இங்கு புனிதர்களாய் வணங்கப்பட்டு இருக்கிறார்கள். இறைவனுடன் நேசம் கொள்வது நம்மாலும் முடிகிற காரியமாதலால் அது கூட இரண்டாம் பட்சம்தான்.///

    ஜீவி,

    :) பக்தி ஞானத்தில் கொண்டு போய் சேர்ப்பதாக சொல்கிறார்கள். பக்தன் ஞானியாகும் பொது ஆசை அறுபடுகிறது பொலும். எங்கும் நீக்கமற நாமே உரைந்திருக்கிறோம் என்ற பிறகு எதன் மேல் ஆசை? எனக்கூறுவர். அத்வைதம் ஆசை அறுக்கும். த்வைதம் பக்தி வளர்க்கும். என நான் கண்டது.

    ReplyDelete
  4. இறைவனிடத்து கொள்ளும் பக்தியின்
    பலன் ஞானமே. இந்த ஞானத்திற்காகத் தான் அந்த பக்தியே. ஞானத்திற்கு இட்டுச் செல்லாத பக்தி சுயநலமிக்கதாய் தேக்கம் கொண்டு விடும். அந்த தேக்கத்தைத் தாண்டி வரும் சக்தி பெறுமிடத்து பக்தி அன்பாக எல்லா உயிர்களிடத்தும் கசியும். இது வாடிய பயிரைக் கணடபோதெல்லாம் வாடினேன் என்கிற நிலை; அந்த வாட்டத்தைப் போக்க நம்மால் என்ன செய்ய இயலும் என்று செயல்படுகிற நிலை.

    ReplyDelete