February 21, 2011

சில பழக்கங்கள் வழக்கங்கள் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியை ஒட்டி அமைந்தது)


ஏன் என்று தெரியாமலே சில பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் முந்தைய தலைமுறையோடு போயிற்று. இப்பொழுதெல்லாம் பகுத்து அறிவதனால் சில மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். அதே நேரத்தில் தேவையான, அறிய, நல்ல விஷயங்களை கோட்டையும் விட்டு விடுகிறோம். அதைப் பற்றி அறிந்து கொள்ளவும் எத்தனிக்காமல், எல்லாவற்றையும் "பத்தாம்பசலித் தனம் அல்லது மூட நம்பிக்கை" என்று ஒதுக்குகிறோம். எந்த விஷயத்தையும் சொல்லப்பட்ட நோக்கம் தெரிந்து கடைபிடித்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

'வீட்டில் மஹாபாரதம் ஓதினால் அல்லது படித்தால் வீட்டிற்கு ஆகாது' என்ற கூறுவதுண்டு. ஆனால் மாஹாபாரத்திலேயே அதனை படித்தல் புண்ய காரியம் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதையை சிரத்தையுடன் கேட்பவன், படிப்பவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் உட்பட பலகோடி தோஷங்களும் இல்லாதொழியும் என்று குறிப்பிடுகிறார். அறம் வளர்க்கும் நல்ல பிராமணனுக்கு பசு தானம் செய்வதை விட, மஹாபாரதம் படித்தல் புண்ய காரியம் என்கிறது பாரதம். இத்தனை விளக்கங்கள் வியாக்கியானங்கள் தாண்டியும் பலரும் பாரதத்தை வீட்டில் படிப்பதில்லை.

ராமாயணம் புனித நூல் என்றால் மஹாபாராதம் ஏன் வீட்டிற்கு ஆகாது? கிருஷ்ணின் கீதோபதேசம் படம் மனையில் இருத்தல் சுபீக்ஷம் என்றால், ஏன் மஹாபாரதம் படித்தல் உகந்ததாக கருதப்படவில்லை? எந்த ஒரு செயலுக்கும் சம்பிரதாயத்திற்கும் மனையிலும், சுற்றுப்புறத்திலும், நல்லிணக்கமும், நல்லெண்ணம், பரிவு, தயை, நன்னடத்தை முதலியன புகட்டுவதே நோக்கமாக இருக்கும். மஹாபாரதக் கதைகள் த்ரேதாயுகத்தின் முடிவில் நடை பெற்றதால், தர்மத்திற்கு புறம்பான கதைகள் நிறையவே நடைபெற்றுள்ளன. சூதாட்டமும், மனையாளை பணயமாக வைத்து சூதாடுவதும், பல கதாபாத்திரங்களின் குணங்களும், நடத்தையும், பொதுவாக மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்படியாய் அமையவில்லை. வஸ்த்ரபரணமும், ஜெயிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டதால் சில நேரங்களில் யுத்த நீதிகளும் கூட மீறப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் படிக்கும் சாமான்யன் மனதில் குழப்பமும், நேர்மைக்கு புறம்பான கதைகளும் மனதில் பதியுமே அல்லாது தர்ம நியாயங்கள் முரண்பட்டு நிற்பதால் அவனுக்கு நன்மை அதிகம் விளையும் வாய்ப்பில்லை. இராமாயணத்தில் பக்தி, பொறுமை, தயை, ஒழுக்கம் முதலியன அதிகம் காணப்படுவதால் அதனைப் மிகப் புனித நூலாக போற்றுகிறோம்.

இதனைப் போலவே வைஷ்ணவ தர்மத்தை கடை பிடிப்பவர்கள் சிவன் கோவிலுக்கு செல்வதோ அல்லது சிவனைத் துதிப்பதோ கூடாது என்னும் கருத்தும் சம்பிரதாயங்கள் விதிமுறைப்படியே நடக்கிறது என்கின்றனர். ஒரே ரூபம் அல்லது தத்துவத்தின் பால் முழுமையான தீவிரமான பக்தி செலுத்துவது பக்தியின் மேன்மைக்கு வழி வகுக்கும். இறைவன் ஒருவன் என்ற எண்ணத்தை வலியுறுத்தவே, எந்த வடிவத்தை துதித்து போற்றுகிறோமோ அதனின் பால் பக்தியும் அன்பும் செலுத்தி அதனைத் தவிர வேறொன்றை வேறொரு தத்துவத்தை நினையாத பக்தி முக்திக்கு வழி என்பது நம்பிக்கை. இதனாலேயே ஆகமவிதிப்படி கட்டப்பட்ட சிவன் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுதல் அதே போல் விஷ்ணு கோவில்களில் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இல்லை.

அதே போல் பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடிபொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை. நம்மாழ்வாருக்கும் சடகோபன் என்று பெயர். சடாரிக்கும் சடகோபம் என்று வழங்குகிறார்கள். 'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்றும் சொல்வார்கள்.

பொய்கையாழ்வார் பாசுரத்தில்

"சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள்-என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு"

நடந்தால் குடையாகி, இருக்கும் பொழுது சிங்காசனமாகவும், நின்றால் பாதரக்ஷையாகவும், சமுத்திரத்தில் படுத்து மணிவிளக்காக பட்டாகவெல்லாம் அரவு(ஆதிசேஷன்) அலங்கரிப்பதாக கூறுகிறார்.

திருமால் கோவிலில் இராமாஜருக்கென்று சன்நிதி உண்டு, அதை உடையவர் சன்னிதி என்கின்றனர். அங்கு வழங்கப்படும் சடாஅரி 'முதலியாண்டான்' சடாரி என்று குறிப்பாகிறது.

சடாரியைப் பற்றி குறிப்பெடுக்கும் பொழுது கீழ்கண்ட சுட்டியில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன.

http://verygoodmorning.blogspot.com/2007_11_01_archive.html

சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்! இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற! கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்! அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது! அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி! நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்! அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்! சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு?

நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-) "தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்! என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன! இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்! அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!

அருமை! மிக்க நன்றி:

2 comments:

  1. நான் எனும் மமதை அல்லது அகங்காரம் இதை அகற்ற கூறும் வழிகள் எப்போதும் சம்மதமே. தேடிப்பிடித்து நல்ல விஷயங்களை சொல்கிறீர்ர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி ஜி.எம்.பி சார் :)

    ReplyDelete