February 27, 2011

நீதிக் கதைகள் (எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

அவரவர் வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களும் சூழ்நிலைகளும் ஏராளும். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் திடமாகவும் புத்திசாலித்தனமாகவும் அணுகுவதையொட்டியே தனி மனிதனின் வெற்றி தோல்வி அமைகிறது. நீதிக் கதைகளை போதிப்பதன் மூலமாக மனிதனுக்கு உணர்த்தப்பட்ட படிப்பினை அனேகம். இன்றும் "moral stories" உணர்த்தும் ஏராளமான கதைகளை, புத்தகங்களை சிறுவர் சிறுமியர்கள் படித்து பயன் பெறுகிறார்கள். புத்தகங்கள் இல்லாத காலங்களிலும் வழிவழியாக இக்கதைகள் பறிமாறப்பட்டு வந்திருக்கின்றன.

பஞ்சதந்திர கதைகள் விஷ்ணு ஷர்மா என்பவரால், அமரஷக்தி என்ற அரசனின் புதல்வர்களுக்கு புகட்டப்பட்ட நீதிக் கதைகள். இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் மிருகங்களும் பக்ஷிகளுமே என்றாலும் ஊடே போதிக்கப்பட்ட நீதி மனிதனின் தனி வாழ்வுக்கு உகந்தது. விக்ரமாதித்தனின் வேதாளக் கதைகளைப் போலவே கதைக்குள் கிளைக்கதைகள் பலவற்றை புகுத்தி, கையாளப் பட்டிருக்கிறது. அதே போல் ஹிதோபதேசத்தில் சொல்லப்பட்டுள்ள கதைகளும் நீதி போதிப்பவையாக இருந்தாலும், இது பெரும்பாலும் ராஜ நீதியை வலியுறுத்தும் கதைகளாக அமைகிறது. இவை நாராயணர் என்பவர் தவள(dhavala)சந்திரன் என்ற அரசனுக்கு கூறப்பட்ட கதைகள். ஹிதம் என்றால் இதமானது (ஹிதமானது) என்று பொருள் கொள்ளலாம். இக்கதைகள் இருநூறுக்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கி வருகிறது. மேலும் மஹாபாரதத்தில், பீஷ்மர் தருமருக்கு கதைகள் மூலமாகவே ராஜநீதி போதித்துள்ளார்.

இப்படிப்பட்ட கதைகள் கேட்கத் திகட்டாதவை. ராஜநீதி என்றில்லாமல், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களையொட்டி அமைகின்ற படியால் இதன் படிப்பினை பண்டிதனுக்கும் பாமரனுக்கும் பொருந்தக்கூடியவை.

விசுவாசிக்கு உதாரணமாகக் கொண்ட ஹிதோபதேசக் கதையில், சூத்ரகன் என்ற அரசனின் கீழ் வீரவான் என்ற வேலையாள் மிகுந்த விசுவாசியாக உழைத்து வருகிறான். தர்ம சிந்தனையுடையவனாகவும் திகழும் அவன் தனக்கென கால் பங்கு தனத்தை வைத்துக் கொண்டு மீதத்தை தானம் செய்து மேன்மையான வாழ்வு வாழ்ந்து வருகிறான். அரசனுக்கு விதி முடிந்து மரணம் நேரப்போகிறதை அறிந்ததும் தன் மகனையே பலி கொடுக்க தயாராகிறான். இதனை விசுவாசத்தின் எடுத்துக்கட்டாக மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ராஜ-விசுவாசிகள் அதிகம் இருப்பது ராஜ்ஜியத்தின் பலத்தை கூட்டுகிறது. இவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதே அரசனின் சிறப்பும் புத்திகூர்மையும்.

4 comments:

  1. இப்போதிக்கும் அரசியல் விசுவாசிகளும் தலைவர்களுக்காக தீக்குளிக்கிறார்களே.!நீதிககதைகள் இனி வருமோ.?

    ReplyDelete
  2. நல்ல ஆட்சியை நடத்தும் சிறந்த மன்னனுக்கு அன்று விசுவாசிகள் இருந்தனர்.

    இன்று... நல்ல ஆட்சி எது? விசுவாசம் எது? என்ற அடிப்படைக் கேள்விகளே அடிபட்டு விட்டது.

    ReplyDelete
  3. நல்ல இடுகை சக்தி....நல்ல சிந்தனை உனக்கு.

    ReplyDelete
  4. thanks shy :) ... I am honoured u are following my blog.

    ReplyDelete