January 21, 2011

நாம ஸ்மரணம் (சோ-வின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)


கர்ம சன்யாசம் யோகம் பற்றி தனி அத்தியாயமே கீதையில் இருக்கிறது. செயல்களின் பலனை துறந்தவனே உண்மையான கர்ம யோகி. அப்படிப்பட்டவன் பரிபூர்ண உள்ளார்ந்த பக்தியில் திளைக்கிறான். இன்ப துன்பங்கள் அற்று விடுவதில்லை, அவற்றை சமமாக பாவிக்கும் மன நிலையை பெறுகிறான். 'ஸ்தித ப்ரக்ஞன்' நிலையில் இருந்து கொண்டு செயல்களை செய்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச

"எல்லா தர்மங்களையும் அதன் பலங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே ஷரணம் என்று பற்று வைத்தவனை நான் எல்லா பாபங்களிலினின்றும் விடுவிக்கிறேன். வருந்தாதே" என்று ஆறுதல் அளிக்கிறான் பகவான். எல்லா தர்மங்களை என்றால் செயல் செய்வதை விட்டுவிடுவது என்று பொருள் கொள்வதல்ல. செயலின் பலன்களை விட்டு விடுவதே வலியுறுத்தப்படுகிறது. தர்மமோ, சாஸ்திரமோ சம்பிரதாயமோ விதியோ அப்படிபட்ட கர்ம யோகியை ஒன்றும் செய்வதில்லை. சட்டையைப் போன்ற இந்த உடம்பின் பால் உள்ள பற்றும் அதன் பொருட்டு வரும் பிணைப்புகளையும் பிரித்துணர்ந்து, கர்மயோகியாய் வாழ்பவனை கர்மங்கள் பற்றுவதில்லை. கண்ணபரின் பக்தி சாதாரணன் பார்வைக்கு தர்மங்களை விட்டு விலகியே இருந்தது. தர்மத்தின் வழியைத் தாண்டி ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய அவர் பக்தி, கர்மங்களினின்று அப்பாற்பட்டு நின்றது. இறைவனுக்கு மாமிசத்தை உணவாக படைத்து, தன் உமிழ் நீரால் அபிஷேகம் செய்து, தன் தலை பூவையே அர்சித்த பக்தர். இறைவனின் கண்ணில் இரத்தம் வழிவதைக் கண்டு, சாமான்ய பக்தனைப் போல் பரிதவிக்காமல், பதற்றம் கொள்ளாமல், தர்மம் அதர்மம் என யோசிக்காமல், தாமதிக்காது தன் கண்ணையே பெயர்த்து கொடுத்து கண்ணப்பன் ஆனார். க்ரமமாகவும் சாஸ்திர சம்பிரதாயதுடனும் செய்யும் பக்தனைக் காட்டிலும் உயர்ந்து நின்றார். வேட்டையாடி திரிந்த அவருக்கு சிவபக்தி ஆட்கொண்டதும், பக்தியின் உச்சத்தை எட்டி பிடித்தது எல்லாமும் மொத்தமுமாக ஆறே நாட்களில் நிகழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. இறைவனை விட்டு க்ஷண நேரம் அகல மனமில்லாத உயர்ந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களை கர்மங்கள் பீடிப்பதில்லை. ஏனெனில் பலன் பற்றி எண்ணமே அற்று இருக்கிறது இப்படிப்பட்டவ்ர்களின் செயல்கள்.


"உன்னால் யோகியாக கர்மங்களை செய்ய முடியாவிட்டாலும், ஞானியின் நிலையில், இரட்டைகள் அற்று தன்னையே எங்கும் எதிலும் காண்பவனாக உயர முடியாவிட்டாலும், மாறாத பக்தி செலுத்தும் பக்தனாக இல்லாவிட்டலும் கூட இறைவனை அடைய ஒரு வழி இருக்கிறது" என்கிறது கீதை. "மேலும் கடைசி தருணத்தில் ஒருவன் இறக்கும் தருவாயிலேனும் என் நாமத்தை ஸ்மரித்தால் அவன் என்னையே வந்தடைகிறான்" என சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை தெள்விக்கிறான் கண்ணன்.

அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய:
- பகவத்கீதை

இறக்கும் தருவாயிலாவது இறைவனைப் பற்றிய ஒரு நொடி நினைப்பே போதுமானது. இறுதியில் அவன் இறைவன் அடி சேர்கிறான். பாபங்கள் செய்த ஒருவன் இறக்கும் தருவாயில் இறைவன் நாமத்தை சொன்னால் அவன் நற்கதி அடைவது எவ்வாறு சாத்தியம்? என்று ஐயம் தோன்ற சாத்தியம் உண்டு. பாகவதம் விளக்கும் கதையின் சாரம் இறைவனின் திருநாமத்தின் பெருமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

அஜாமலன் எனும் பக்தன் தான தர்மங்கள் புரிந்து நல்வாழ்கை நடத்தி வந்தான். நங்கையின் பால் காதல் கொண்டு இல்லறம் புகுந்த பின், இல்லற சுகத்தில் தன்னையே மறந்து, நற்காரியங்கள் செய்வதும், பக்தி செய்வதும் கூட குறைந்து விடுகிறது. இப்படியே வாழ்நாள் முழுவதும் கழித்த அவன், இறக்கும் தருவாயில் "நாராயணா" என்று தன் மகனை கூப்பிடும் தருணத்தில் உயிர் பிரிகிறது. அப்பொழுதும் அவன் பகவானை நினைத்தவன் இல்லை. அவனை இட்டுச் செல்ல யமனின் கிங்கரர்கள் வருகிறார்கள், அவர்களை அப்புறம் போகச் சொல்லி, விஷ்ணு தூதர்கள் அவனை விஷ்ணு லோகம் இட்டு செல்கிறார்கள். இறைவன் சிந்தனை அற்று இருந்த போதும், நாராயணன் நாமத்தை இறக்கும் தருவாயில் உச்சரித்ததற்கு அத்தனை பலன்! இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று உள்ளது. இறக்கும் தருவாயில் எவனுக்கு இறைவன் நினைவு வரும்? குறைந்த பட்சம் இறைவன் நாமத்தை உரைக்கும் பாக்கியம் எவனுக்கு கிட்டும் என்றால், எவன் ஒருவன் அதிக நேரம் இறை பக்தியில் ஈடுபட்டுள்ளானோ அப்படிப்பட்டவனுக்குத் தான் தன்னை மறந்த நிலையிலும் கூட, நினைவிலும், கனவிலும் கூட இறைவன் நினைவும், தியானமும் அல்லது அவன் நாமமும் உச்சரிக்கும் எண்ணம் வரும்.

மனிதனைப் போல சாமர்த்தியசாலிகள் காண்பதரிது. சிவன் வரம் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், மூப்பும் சாகாவரமும் பெறவதற்கு பலவாறாக யோசித்து சாமர்த்தியமாய் வரம் கேட்பதும், அப்படியும் கூட எப்பேர்பட்டவனுக்கும் மரணம் சம்பவிப்பதும் நமக்கு தெரிந்ததே. இறக்கும் தருவாயில் எப்படிபப்ட்ட சூழ்நிலையில் நாம் சிக்கியிருப்போம் என்று சொல்ல முடியாது. நினைவிழந்து இருக்கலாம். உறக்கத்தில் அமிழ்ந்து விடலாம், சாவின் பயம் பற்றிக்கொண்டு பரிதவிப்போடு இருக்கலாம், பாசப் பிணைப்பில் பக்கத்தில் பந்துக்களின் முகம் பார்த்துக்கொண்டு கட்டுண்டு இருக்கலாம். இதில் எத்தனை பேர் இறைவனை நினைக்கவோ, அல்லது பேயரை உச்சரிக்கவோ செய்கின்றனர்? நம்மைப் போன்றோரின் சார்பாக பெரியாழ்வார் இறைவனை முன்னமே வேண்டுகிறார்.

"இறக்கும் நேரம் நான் வியாதியில் வீழ்ந்து விட்டால் அங்கு உன்னை நினையேனோ மாட்டேனோ, ஆதலால் நாராயணா, அப்போதைக்கு இப்போதே உன் பெயரை சொல்லி வைத்தேன், நீ கணக்கில் வைத்துக்கொள்" என்று நம்மைப் போன்ற சாதார்ணர்களுக்காகவே சிறப்பு மிக்க இப்பாடலை இயற்றியுள்ளார்.

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
- பெரியாழ்வார்

அந்த மஹானுக்கு நன்றி கூறி, மேலே கூறிய வரிகளைக் நினைவு கூர்ந்து, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்து, இறைவனை தினமும் வணங்குவோம்.

4 comments:

  1. Iraivanai thinamum vanangkinaal mattum pothaathu, That should be accompanied by good thoughts, good words, and good deeds.Leading a good and useful life should take precedence over life after death.

    ReplyDelete
  2. உண்மைதான். மிகச் சரியான வார்த்தை. நன்றி ஜி.எம்.பி sir.

    ReplyDelete
  3. I found your blog thru tamilmanam.net and appreciate your efforts for the contents of this blog. I will be a regular visitor. I sent an email to your email id and it bounced back. I have added you blog to my bloglist

    Regards
    Sathish
    http://divyadesayatra.blogspot.com

    ReplyDelete
  4. thankyou Sathish. You can contact me at

    prabha2talk2@yahoo.com


    Is, http://divyadesayatra.blogspot.com ur blogspot? I shall visit sometime. thankyou for dropping in.

    ReplyDelete