January 18, 2011

ஆடுகளத்தில் வென்ற வெற்றிமாறன் (திரைப்பார்வை)



வட்டார மொழியில் முங்கி முத்தெடுக்க தெரியாதவர்களுக்கு படத்தை ரசிப்பது கடினம். ரசிப்பதென்பது பெருந்தூரம், படத்தின் மையக் கதை புரிவதே பெரும்பாடு. இப்படியெல்லாம் அவசரப்பட்டு நினைத்ததென்னவோ உண்மை. சத்தியமாக வட்டார மொழி புரியவில்லை. "சேவல்"ஐ "சாவல்" என்று குறிப்பிடுகிறார்கள் என்று ஏறக்குறைய முக்கால் மணி கழித்தே புரிந்தது. மொழியால் அந்நியப்படுத்திய போதும், கதை சொல்லும் விதத்தில் கட்டிப் போடுவது பாராட்டுக்குறிய திறன்.

முதல் ஒரு மணிநேரத்திற்கு கால், வால். தலை, மூக்கு என புரியாமல் பிய்ந்து, தொங்கும் கதையை, அழகான ஒவியமாக அடுத்த பாதியில் முடித்துக் கொடுக்கிறார். Rustic-rural story என்றால் காத தூரம் ஓடும் நகர்புற மக்களையும் கட்டி இழுப்பதற்கு அசாத்ய திறமை வேண்டும். சொல்லப்பட்ட கதையோ நமக்கு புரியாத விளையாட்டுத் துறையைப் பற்றியது. அதற்கென ஒரு பாரம்பர்யம், பயிற்சி எல்லாம் இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. களத்துமேட்டுக் காதல் கதை, அண்ணன் தங்கச்சி பாசம், ஊர் வன்முறை என தெரிந்த கோணங்களில் படம் பண்ணியிருந்தால் commercial hit. இது போன்ற அபூர்வ கதைக்கருவுக்கு மெருகூட்டி, அது சொல்லப்பட்ட விதத்தில் புது பரிமாணம் காட்டி, வெல்வதென்பது திறமை மட்டுமல்ல துணிச்சலான செயலும் கூட.

தனுஷ் என்ற நடிகனை பாராட்டியே ஆக வேண்டும். பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு படம் என்று, படம் பண்ணுவதே இல்லை. பஞ்ச் டயலாக் பேசி பஞ்சாய் பறந்து அடிக்காமல் யதார்த்த கதைகளில் அதற்கெனவே படைக்கப்பட்ட "Guy next door" முகததை பயன்படுத்தி நம்முடன் இயல்பாக ஒன்றிவிடுகிறார். போக வெண்டிய தூரத்தை கணக்கிட்டு தரமான வித்தியாசமான கதைகளும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் பாத்திரங்களும் தேர்ந்தெடுத்து வெற்றி நடை போடுவது நிஜம். வாழ்த்துவோம்.

காதல் என்பதைச் சுற்றி கதை நடைபெறவில்லை. அது ஒரு அத்தியாயமாக பின்னப்பட்டிருக்கிறது. அந்த அத்தியாத்திற்கு தேர்ந்தெடுத்த நடிகை தன் பங்கை செவ்வனே செய்திருந்த போதும், ஜி.வி.ப்ரகாஷ் பாடல்களால் மனதை இதமாக ஒற்றி எடுத்த போதும், காதல் சொல்லப்பட்ட விதத்தில் ஒரு மொழம் பூவை தாராளமாக காதில் சுற்றியிருக்கிறார்கள். காதலுக்கு கண்ணு இல்லை என்பதெல்லாம் அந்தக் காலம். இந்தப் படத்தின் காதலுக்கு அறிவே இல்லை. அதனால் தான் அதற்குப் பெயர் காதலோ என்னவோ!!

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் தம் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். கதை இப்படித் தான் நகரப் போகிறது என்று நம்மால் யூகிக்க முடியாத அளவு twist கொடுத்திருப்பதில் தான் கதையின் வெற்றி சிம்மாசமிட்டு அமர்ந்திருக்கிறது. மொழி புரியாத போது சற்றே ஆறுதலாக நம்மை உட்கார்த்துவது ராதாரவியின் பரிச்சயமான குரல். இறுதி வரை, நம்மை கட்டிப்போடுவதில் அக்குரலுக்கும் பங்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, யதார்த்தம் என்ற பெயரில், வெட்டு, குத்து, ரத்தக்களறி, மனநிலைகுன்றிய மனிதர்களின் வலி இப்படி படம் பண்ணி, நம் வாழ்வில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சசந்தோஷத்தையும் திரையரங்கில் பறிகொடுக்காமல் பண்ணியிருப்பதற்கு இயக்குனர் இரண்டு கைதட்டல் அதிகம் வாங்குகிறார்.

கதையின் சுருக்கம்: மனித மனம், அதன் போக்கு, அது சந்திக்கும் ஏமாற்றங்கள், வெற்றிகள், அதனால் அது செய்யும் செயல்பாடு எதுவும் கணிக்க முடியாதது. அதுவே ரத்தவெறி பிடித்து அலைய வல்லது. மனிதச் சேவல்களை ஏவி வேடிக்கைப் பார்க்கும் god father. Very crisp presentation.

இப்படத்தை,
வேறு மாதிரி நகர்த்தியிருந்தால் - சுமாரான படம்
வேறு மாதிரி முடித்திருந்தால் - வழக்கமான படம்
இப்படி நகர்த்தி இவ்வனே முடித்துள்ளதால் - விருது வாங்கத் தகுந்த படம்.

Story telling is an art. Approach towards story telling = crowing glory.

படத்தின் மெருகு - தனுஷ்
படத்தின் அழகு - யதார்த்தம்
படத்தின் வெற்றி - கதை / கதைக் களம் / இயக்கம் / வெற்றி மாறன்.

தனுஷ் உட்பட எல்லா கலைஞர்களையும் தாண்டி வெற்றிமாறன் தனியாக மிளிர்கிறார். திரைத்துறையின் ஆடுகளத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசுகிறார் அடுத்தடுத்து பல திறமையான ஆட்டத்தை எதிர்பார்ப்போம்.

2 comments:

  1. அழகான, தெளிவான விமர்சனம்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete