March 17, 2024

புது உலகம் படைப்பதாலே, நானும் இறைவனே

 




வண்ணத்துப் பூச்சிகள்
அங்குமிங்கும் மலர்ந்தன;

பூக்களெல்லாம் சிறகு பெற்று
பூங்காவெங்கும் பறந்தன.
வண்டுகள் தரையில்
தட்டாமாலை சுற்றின.
.
வானவில்லால் வரைந்த வீதிகளில்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன.
நீர்வீழ்ச்சிகளில் வழியும் தேனாறு;
ஆறுகுளங்களில் தேங்கும் பழச்சாறு;
.
பாற்கடலும் பூமியில் பாய்விரிக்க
கடைந்து கிடைத்த அமுதத்தில் நீர்பாசனம்.
விளையும் பயிர்களில் நிறையும் ருசி
அதில் தணியும் பசி
.
காடு மேடுகளில், நாடு வீடுகளிலும்
கைகெட்டும் தூரத்தில் ஞானப் பழங்கள்
.
நடைபயிலும் மரங்கள்
பாடும் மயில்கள்
ஆடும் குயில்கள்
பேசும் பட்சிகள் ....
'என்ன இது முரணாய்'
முறைத்தான் இறைவன்.
.
புத்தியெனும் இந்திரியத்தால்
மனமெனும் ஆகாயத்தில்
சிருஷ்டித்து, காத்து, ஒடுக்குகிறேன்
'அஹம் பிரம்மாஸ்மி'
என்றேன்
'தத்துவமஸி'
என்றான்.
.
ShakthiPrabha
March 17 2024

No comments:

Post a Comment