July 10, 2019

உங்களுக்கு சசீந்திரனைத் தெரியுமா (குறுங்கதைப் போட்டியில் பரிசு வென்ற கதை )


( நன்றி மத்யமர் குழு. இக்கதை மத்யமர் குழுவின் குறுங்கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றது)


இடைக்கால சோழர்களின் புலிக்கொடி பாரெங்கும் பரந்து வீசிக் கொண்டிருந்த காலமாக இருக்கக் கூடும். காவிரியாற்றங்கரைக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த கூடங்கள். என் முதல் நினைவே அவன் தீர்க்கமான முகம். ஊடுருவும் விழிகளோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கன்னத்தைத் தடவினான். மூக்கைத் திருத்தினான். அவன் கைகள் பட்ட இடமெல்லாம் நான் பூத்து வடிவம் பெற்றேன். என் காலுக்கு சலங்கையிட்டான். ஆடையை நுணுக்கமாக நேர்த்தியாக்கினான்.
*
எங்கும் ஒரே கிலிங்க் கிலிங்க் சப்த்ங்கள். கற்களுக்கும் உளிகளுக்குமான காதலில் பிறக்கும் அற்புதங்கள் உருபெற்றுக் கொண்டிருந்தன. அவன் என்னைப் பார்ப்பதும் ரசிப்பதும் செப்பனிடுவதும் எனக்கு பிடித்துப் போனது.
*
முன்பொரு சமயம் பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் ஆயனச்சிற்பி என்ற ஒருவர் இருந்ததாகவும் அவர் தனது மகளின் ஆடல் தோரணைகளை ஒட்டி அதியற்புத சிற்பங்கள் செதுக்கிய கதைகளை ஆச்சாரிய சிற்பி சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி ஒருவர் வாழ்ந்ததாக கல்வெட்டு சாட்சியமே இல்லை. தம்மை ஊக்குவிக்க பின்னப்பட்ட கதை என்ற சந்தேகம் சிற்பிகளுக்கு.
*
இதுவெல்லாம் எனக்கெப்படி தெரியுமா? நான் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேனே! கற்களுக்கு உணர்வு இல்லை என்று நீங்கள் கற்பிப்பது உங்கள் அறிவீனம். நீங்கள் நினைப்பதைக் கூட எங்களால் அறுதியிட்டு சொல்ல முடியும். சொல்லக்கூடிய புலன்கள் இல்லை என்பதனால் உணர்வும் இல்லை என்பதல்ல.
*
சோழமன்னரின் ஆணைப்படி ராமகாதை சொல்லும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ராமராஜ்ஜியத்து மாந்தர்களும் வானரப்படைகளும் உருவாகிக் கொண்டிருந்தனர். என் இடக்கைக்கு வாட்டமாக கற்தூண் அமைத்தான். அந்த கற்தூணை வேலைப்பாடுடன் செதுக்க ஆயுத்தமாகிக் கொண்டிருந்தான். அவன் பெயர் சசீந்திரனாகத்தான் இருக்கும். அப்படித்தான் அழைத்தனர். சசீ என்றோ இந்திரா என்றோ அழைத்த போதெல்லாம் திரும்புவான்.
*
நித்தமும் எனை ரசிப்பான். திருத்துவான். செதுக்குவான். தூணை செதுக்கியதும் நீ சென்று விடுவாயா. ராமனைப் போன்ற அவதாரம் மண்ணுதித்து உன்னையும் பெண்ணாக்குமோ சிலைக்கு உயிர் கொடுக்கும் கலை தெரியாமல் போயிற்றே என்று அவன் நினைப்பது தெளிவாகக் கேட்கும்.
*
இளந்தென்றல் கவரி வீசிக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதொன்றில் திடீரென புழுதி பறக்க புரவிகள் அங்குமங்கும் ஒடிக்கொண்டிருந்தன.எங்கும் ஒரே பதட்டம். கூச்சல். சிற்பிகள் பலரும் தாம் செதுக்கிய அரைகுறை சிற்பங்களை அங்கேயே விட்டுச் சென்றனர். சிலர் பள்ளங்கள் வெட்டி அதில் புதைத்துக் கொண்டிருந்தனர். சசீந்திரன் அவசரமாக என்னருகே வந்தான்.
*
'வேகமாக வா சசீந்திரா, கண்டிப்பாக சிலைகளை விட்டுவிட்டு வா. அவற்றை சாளுக்கிய சேனைகள் பறிமுதல் செய்கின்றன'. அவனுக்கு மனமில்லை. எனை அணைத்தான். இதழ் தடவினான். அவன் முதன்முதலில் வடித்த பெண்ணின் சிலை. சிலைக்கும் சிற்பிக்குமான முதற்காதல். பொங்கிய சோகத்திலும் புழுதியிலும் நான் நினைவற்றுப் போனேன்.
*
திரும்பிய நினைவு என் மேல் மண் மூடியிருப்பதை உணர்த்திற்று. என் மேனி சிதிலம் அடையாமல் இன்னும் மண்ணிலே புதையுண்டிருக்கிறேன். பலகாலம் மோனத்தவத்தில் இருந்தேனா? எல்லாம் மறந்து போனது சசீந்திரன் உட்பட.
*
மண்மூடி கண்மூடி கடந்த எனக்கு விமோசனமும் வந்தது. கரசரவென சத்தம். மண்வெட்டிகள் இங்குமங்கும் உரசின. சிலை கடத்தலா! ஒரு வேளை சாளுக்கிய சேனையோ! சோழ மண்ணைத் துறப்பேனோ நான்!
*
சூரியக் கிரணங்கள் மேனி தழுவ, நெடுநாள் மண்ணுள் அமிழ்ந்திருந்த வலி அற்றுப்போனது. கொண்டாடினேன். அவன் தான் என்னை மீட்ட ராமன். தவறு ராமர்கள். புதையுண்ட சிலைகளையெல்லாம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் பலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
*
அன்று இருந்த காலத்திற்கும் இதற்கும் எவ்வித பொருத்தமுமில்லை. அன்று கேட்ட மொழி இனிமையாக இருந்தது. கற்காலத்து எனக்கு, தற்கால தமிழ் புரிய பெரிதும் பாடுபட வேண்டி இருந்தது. பேச்சு புரியாமற் போனாலும் அவர்களின் நினைவுகளை என்னால் ஊகிக்க முடிந்தது. அணிந்திருந்த உடுப்புகளில் நாகரீகம் வெகுவாக மட்டுப் பட்டிருந்தது. சோழன் பாண்டியன் பல்லவனென்ற பிரிவில்லை.
*
எங்களை புதைபொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். மவுசு கூடிப்போனது. போவோர் வருவோர் எல்லாம் எங்களைப் பற்றி பேசினர். என்னுடன் இருந்த சிலைகள் இன்னும் அதிக விலை போனது. என்னையும் ஒருவன் வாங்கிப் போனான். ரசித்தான். சிலாகித்தான்.
*
சில காலம் அவன் கூடத்தை மெருகேற்றினேன். அவன் மனைவியாக இருக்கக்கூடும், அவளுக்கு ஏனோ என்னைப் பிடிக்கவில்லை. 'தூண் கூட செதுக்கப் படாம வெறுமையா இருக்கு. இதைப் போய் விலைகொடுத்து வாங்குவானேன்!' நாளா வட்டத்தில் தூணின் வெறுமை இவனையும் என்னவோ செய்தது. என்னை கோவில் ஒன்றில் சேர்பித்தான்.
*
பற்பல காலம் பிரசங்கங்களும் உபன்யாசங்களும் கேட்டு சிலாபயனை அடைந்தேன். என் காதில் விழும் கதைகளில் மீண்டும் மீண்டும் வீழுந்து எழும் அகலிகை. சிலைகளுக்கு சிந்தனையுண்டோ என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. கோவில்களில் மந்திரம் ஏற்றி தெய்வத்தை அதனுள் பிரவேசிக்க செய்கிறார்கள். சிலைகள் தான் தெய்வமாகிறன என்றால் எனக்கு சிந்தனை வருவதில் வியப்பேதுமில்லை. பூரித்தேன். இன்பமும் இன்னலும் மாறிமாறி வருவதென்பது சிலைகளுக்கும் பொருந்துமோ கண்பட்டுப் போயிருக்கும்.
*
கோவிலின் புனருத்தாரணம் என்றார்கள். எனை வேண்டாமெனக் உதறினார்கள். வேலைப்பாடு விடுப்பட்டுப் போன தூண் என்றனர். எனக்கு ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. என்னை செதுக்கிய அவன் பெயர் கூட...சந்திரனா, இந்திரனா...இல்லை சசீந்திரன். என் கற்காலத்து பெருமை சொல்ல எனக்கு புலன்கள் இல்லாதது பெருங்குறையாய் இருந்தது.
*
வீதிக்கு வந்தேன். நடைபாதையில் சிலை விற்பவர்கள் சணல் சாக்குப்பைகளில் அள்ளிக் கொண்டு போனார்கள். தூசி தட்டினார்கள். கடைகளில் விற்பனைக்கு பரப்பியிருந்தார்கள் என் அருமை புரியாதவர்கள். அடிக்கடி உடலைத் தடவி அங்கங்களில் கைவைத்தார்கள். பெரிதாக சிரித்தார்கள். கோவிலில் குடியிருந்த என்னை குப்பை மேட்டுக்கு விட்டுவிட்ட விதியின் மேல் கோபமாக வந்தது. இங்கிருக்க பிடிக்கவில்லை. மண்மூடிக் கிடந்திருக்கலாம். சிதிலமாகியிருக்கலாம். சாப விமோசனம் அடையும் வரை அகலிகையை யாரும் தீண்டியதில்லை. சீண்டியதில்லை. கல்லாய் சமைந்தவளுக்கும் இங்கு சொல்லாத துயரங்கள்.
*
கல்வெட்டுகள் சொல்லாத கதை இது. ராமாயணக் கதை சொல்ல விழைந்து பாதியில் விடப்பட்ட கலிகாலத்து அகலிகை நான். எனக்கு உயிர் கொடுக்க ராமன் இப்போது தோன்றப் போவதில்லை.
*
போவோர் வருவோர் கண்களில் நான் அவனைத்தான் தேடுகிறேன். சசீந்திரன். எங்கோ என்றோ மண்ணாகி நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். மானிடர்க்கு ஆயுசு அதிகமில்லை. தெரியுமெனக்கு. இருப்பினும் தன் பிரதியொன்றை அனுப்பி எனை மீட்க வருவான் என்றே பாதை பார்த்திருக்கிறேன். 'இன்னல் நிரந்தரமல்ல கடந்து போகும்' என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அவனைக் கண்டால் சொல்லுங்களேன். ''நீ உயிர்கொடுத்து செதுக்கிய சிலை, உனை எதிர்நோக்கி நடைபாதையில்' என்று சொல்லுங்களேன்.

8 comments:

  1. Santhanakrishnan R7/11/2019 01:37:00 AM

    Telling the story from the angle of a statue and its relationship with the sculpture and searching for him really touches me. Kudos Keep it up.

    ReplyDelete
  2. Thankyou so much sir. Your comment and encouragement would make me walk more with enthusiasm.

    ReplyDelete
  3. Brilliant Prabha. First of all, what thought process! How did you even conceptualize such a story?! Amazing. And the narrative. Reminded me of Kalki's great works in the beginning. And was thoroughly moved when you spoke about the emotions of your subject. Mama and Manni would have been so proud of you today! I simply loved it. Thank you for the lovely treat!

    ReplyDelete
    Replies
    1. Thankyou Sukanya! You moved me by mentioning maama and manni. Yes they would have loved it. Manni would be so generous with her words to acknowledge. Thanks for 'feeling the story'. Thats the best compliment anyone would wish for.

      Delete
  4. ஏடெடுத்து எழுவோர் பலருண்டு....
    ஏற்றமிக்க படைப்பை தருவோர் சிலர்
    சிலரில் ஒருவரின் திறனுக்கு பாராட்டு.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான அவதனிப்பு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      Delete
  5. "கல்லாய் சமைந்தவளுக்கும் இங்கு சொல்லாத துயரங்கள்." - Wow!!! :-)

    மிக நல்ல கதை அமைப்பு. அடிக்கடி எழுதவும்.

    ReplyDelete