July 31, 2019

கோச்செங்கட் சோழன்


Image result for கோச்செங்கட் சோழன்
.

செங்கட் சொழரை தெரிந்து கொள்வதற்கு முன், திருவானைக்காவின் ஸ்தல புராணத்தை நினைவு படுத்திக்கொள்வோம்.
.

ஒரு அடர்ந்த காட்டில் வெண்-நாவல் மரமொன்று சிவலிங்கத்திற்கு குடையாகி நின்றிருந்தது. தவப்பயனால் மிக்க பக்தி கொண்ட யானை, அன்றாடம் காவிரி நீரால் திருமஞ்சனம் செய்து கொத்து மலர் உருவி, அதனால் இறைவனை வழிபட்டு வந்தது. சிவலிங்கத்தின் மேல் பக்தி கொண்ட சிலந்தியொன்றும் இறைவன் மேலுள்ள காதலால், அவருக்கு குடையென வலை பின்னியது. மரத்திலிருந்து சருகு உதிராதவாறு, இன்ன பிற பறவைகளின் எச்சமும் படாதவாறு கவனத்துடன் அழகிய பந்தலைப் போன்று வலை பின்னியது. 
.

யானைக்கு அவ்வலை அழகான பந்தலைப்போல் தோற்றம் தரவில்லை போலும், நீரால் அதை சுத்தப்படுத்தி, தனது பூஜையை தொடர்ந்தது. நீர் அபிஷேகம் செய்யும் பொழுது, துதிக்கை தவறி அமைத்த வலையை சிதைத்திருக்கும் என்றேண்ணிய சிலந்தி, மறுபடி அழகிய பந்தலைப் பின்னியது. அடுத்த நாளும் யானை அதனை அழிக்க, சிலந்தி சினம் தாளாமல் யானையின் துதிக்கையின் உடுபுகுந்து கடித்து துன்புறுத்தியது. வேதனையை தாளாத யானை துதிக்கையை நிலத்தில் மோதி உயிர் நீத்தது. அதனுள் இருந்த சிலந்தியும் இறந்து போனது. இறையனார் அருளால் யானைக்கு முக்தியும், சிலந்திக்கு சீரிய பிறப்பும் கிடடியது. 
.

இறந்து போன அந்த சிலந்தியின் தொடர்ச்சி தான் இந்த நாயன்மார் வரலாறு.
.

வலை பின்னி பக்தி செய்த சிலந்திக்கு அரும்பிறப்பு அருளிய இறைவன், கமலவதி எனும் சோழ பட்டட்தரசிக்கு மகனாக பிறக்கச் செய்தார். பிரசவ நேரத்தில், அரசியின் வயிற்றுக் கரு, இன்னமொரு நாழிகை கழித்து ஜனிக்குமானல், உலகாளும் பேரரசனாக விளங்குவான் என்று கணித்த ஜோதிடர்களின் வாக்கில் நம்பிக்கை கொண்டு, தன் இரு கால்களையும் பிணைத்து தலைகீழாக தொங்கவிடும் படி வேண்டிக் கொண்டாள். ஒரு நாழிகை கழித்து பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. "கோ செங்கண்ணானே" என்று பாசமேலிட அழைத்தபடி அரசி உடல் உகுத்தாள். 
.

பக்தியிலும் வீரத்திலும், மேம்பட்டு விளங்கினான் செங்கட்சோழன். தக்க பருவம் வந்ததும், அவனுக்கு முடிசூட்டிய தவமியற்றி சிவலோகம் அடைந்தான் அவன் தந்தையாகிய சோழ மன்னன் சுபதேவன். 
.

சிறந்து ஆட்சி செலுத்திய சோழனுக்கு இறைவன் அருளால் பூர்வஜன்ம வாசம் மிகுந்திருந்தது. முற்பிறப்பில் கொண்ட பக்தியும் தப்பாது நினைவில் இருந்தது. திருவானைக்கா எனும் இடத்தில் தனது சிலந்தி வாழ்வின் தொடர்ச்சியே இப்பிறவி அறிந்து சிலந்தியால் கட்டமுடியாத பந்தலை, செங்கட்சோழனாக, வெண்-நாவல் மரத்தின் கீழுள்ள சிவனாருக்கு திருக்கோவில் அமைத்தார். நாடெங்கும் வெவ்வேறு இடங்களில் கோவில் கட்டுவித்தார் . அனைத்து ஆலயங்களிலும், பூசைகளும் அன்றாட ஆகம விதிப்படியான வழிபாடுகளும் நடக்கும்படி செய்தார். தில்லையில் வாழும் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்தார். பல போற்றத்தகுந்த திருப்பணிகள் செய்தபடி சிவபக்தியில் ஈடுபட்டு சிவநெறி வழுவாது சிறந்த ஆட்சியும் செய்தார். 
.

செங்கட்சோழன் பக்தியில் மட்டுமின்றி சிறந்த அரசனாகவும் பெரும் போர்வீரனாகவும் திகழ்ந்தார். சேர மன்னனை கழுமலம் என்ற ஊரில் போரிட்டு வென்றார். அப்போரில் தோற்ற சேரனை கைது செய்தார். சேரனின் உற்ற நண்பரும் அவனது அவைப்புலவருமான பொய்கையார் சோழனின் படைவலிமையைப் போற்றி "களாவ்ழி நாற்பது" எனும் நூலில் செங்கட்சோழன் புகழ் பாடி அதன் பரிசாக சேரமன்னனை மீட்டுச் சென்றார் என்பது வரலாறு. 
.

திருவானைக்காவில் வேதமே நாவல் மரமாக இருந்து சிவனை வழிபட்டதாகவும் ஸ்தல வரலாறு. 
.

ஆலயங்கள் பல கட்டியும் சிவனை துதித்தும் நல்லறம் வளர்த்த செங்கட் சோழர் பெருவாழ்வு வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார். 
.
குறிப்பு:

அப்பர் சம்பந்தரால் பாடப் பட்டவர். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டவர். சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவில் நின்றவர் என்பதால் விஷ்ணு ஆலயங்களும் கட்டினார். இவரது காலம் 200-225 என்று தோராயமாகக் கூறலாம். 
.
(சிவகணங்களுள் இருவரான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் அகங்காரத்தின் வெளிப்பட்டால் தவறு செய்துவிட, யானையாகவும் சிலந்தியாகவும் பிறந்தனர் என்றும் குறிப்பு) 
ஓம் நமச்சிவாய 
.

2 comments:

  1. சோழன் செங்கணான் -- சேரமான் கணைக்கால் இரும்பொறை -- திருப்போர்புறம் போர் -- தொடர்பான வரலாறு என்று நினைத்து வந்தேன். இது வேறு ஒரு சோழன்.

    ReplyDelete
    Replies
    1. நாயன்மார் கோசெங்கட் சோழன். வருகைக்கு நன்றி ஜீவி சார் :)

      Delete