June 13, 2019

கூற்றுவ நாயனார்

Image result for கூற்றுவ நாயனார்


குறுநில மன்னர் ஒருவர் முக்கண்ணனது திருநாமம் ஓதி அவர் பேரருளுக்கு பாத்திரமானார். அவர் தான் கூற்றுவ நாயனார். நாமம் ஓதியும் அடியார்களை போற்றியும் சிவபணிகள் செய்து வந்தார். சிவபக்தி பெரும் கொண்ட அவர் மிக்க போர்வீரம் கொண்டு நாற்புறமும் வெற்றி கண்டு குறு நிலத்தை பெரு நிலமென விரியச் செய்து நல்லரசாண்டார். ரத கஜ துரக பதாதிகளுடனான பெரும் சேனை கொண்டு பல நாடுகளை தமது குடையின் கீழ் கொணர்ந்தார்.
,
கூற்றுவன் என்றால் யமதர்மராஜனைக் குறிக்கும். எதிர் நிற்போர்க்கெல்லாம் கூற்றுவன் போல் தெரிந்ததால் கூற்றுவர். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களையும் வென்றார். மூவேந்தர்களை 'முடியுடை மூவேந்தர்கள்' என்று உயர்த்திப் போற்றுவர். அவர்களையும் வென்ற நாயன்மார் மணிமுடி தரித்து ஆள வேண்டும் என்ற ஆவல் கொள்கிறார். மணிமுடி தவிர மற்றனைத்தையும் பெற்றவராய் விளங்கியவர், மணிமுடி சூட்டி கௌவரவிக்கும்படி தில்லையில் வாழும் அந்தணர்களிடம் விண்ணப்பம் செய்கிறார்.
.
சோழ குலத்தவருக்கே உண்மையாக விளங்குபவர்களான அவர்கள் சோழ மன்னர்களைத் தவிர எவர்களுக்கும் முடி சூட்ட முடியாது என்று மறுத்துரைத்து, கூற்றுவரிடம் உள்ள பயத்தின் காரணத்தால் சேர நாட்டுக்கு சென்று விடுகின்றனர (சோழ மன்னர்கள் தில்லை, உறையூர் முதலிய ஊர்களில் முடி சூட்டிக்கொள்வது வழக்கம்)
.
அதட்டி மிரட்டி மணிமகுடத்தை பெற விரும்பாத நாயன்மார், மன வருத்தம் தாளாமல் சிவனாரை சிந்தனையில் நிறுத்தி, "எம்மை அந்தணர்கள் தலைவனாக ஏற்று மகுடம் அணிவிக்க மறுத்தாலும் ஐயனே உமது நடமாடும் திருவடியே எனக்கு மணிமுடியாக அருளல் வேண்டும். அதுவே எமக்கு பெரும் நிறைவத் தரும்" என்றெண்ணியவாறு உறங்கிப் போனார்.
.
கனவில் எம்பெருமான் அவர் நினைத்தவாறே தம் ஆடும் பாதத்தை திருமுடியாக்கி அணிவித்தார். கண்விழித்த மன்னன் தாம் பெற்ற வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றியாக இறையனாரின் அருளமுதை எண்ணி நெகிழ்ந்தார். வென்ற பெரு நிலத்தையெல்லாம் ஒரு கொடியின் கீழ் ஆண்டு, இறையனாரின் திருப்பாதத்தையே முடியாகக் கொண்டு ஆட்சி செய்தார். சிவத்தொண்டு பெரிதும் புரிந்து, கோவில்கள் சிறக்கவும், ஆகமவிதிப்படி பூஜைகள் தவறாது நடக்கவும், ஆவன செய்தார். நல்வாழ்வு வாழ்ந்து இறைவனின் பாதகமலத்தில் சேர்ந்து இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment