நேற்றோடு மூன்று மாதங்களாக என்னுடனே ஒட்டி உறவாடிய உடையாருக்கு தற்காலிக விடைகொடுத்து அனுப்பியிருக்கிறேன் .
பொன்னியின் செல்வனாக விளையாட்டாய் விடலைப் பருவத்தில் வந்தமர்தவன், இன்று ராஜராஜத்தேவனாக உயர்ந்து, உடையாராக உள்ளமதில் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்டான்.
கல்கி அவர்களின் எழுத்து வண்ணத்தில் வர்ணமேறியவன், இன்று எழுத்துச் சித்தரின் உளிபட்டு செதுக்கிய சிற்பமாய் உயர்ந்து நிற்கிறான்.
சரித்திர சான்றுகளின் துணை கொண்டு, ஆங்காங்கே கற்பனைக் கோடுகள் விரிய, புதினமாக பரிசளித்திருக்கிறார் பாலகுமாரன் அவர்கள்.
தன்னை சிவபாதசேகரனாக உணர்ந்து சிவ வழிபாட்டின் உன்னதங்களை, சிவதரிசனத்தை உணர்தவனாக காட்சியளிக்கிறான். பாலகனாக, வாலிபனாக, மன்னனாக இருந்தவன், தன்னில் சிவனைக் காணும் சிவபக்தனாக நீங்காத காதல் ஏற்படுத்துகிறான். சோழ சாம்ராஜ்யத்தையும், நாகரீகத்தையும் உலகறியச் செய்து, ஒவ்வொருவரின் பங்களிப்பை சிரசில் தூக்கி வைத்து, அவர்களின் எளிய பங்களிப்பைப் பொறித்திருக்கிறான். எப்பேர்பட்ட மன்னன் என நம்மை வியக்க வைக்கிறான். சோழ மண்ணின் மீது மாறா பக்தி கொள்ள காரணமாகிறான்.
பஞ்சவன்மாதேவியின் பாத்திரப்படைப்பு அற்புதமாக வெளிவந்திருக்கிறது. ஏறக்குறைய நம் மனதில் வானதியின் இடத்தை பிடித்து விட எத்தனிக்கிறார். இன்றும் பழையாறையில் இவருக்கான பள்ளிப்படை தனது தாய்க்காக ராஜேந்திரன் கட்டிய கோவில் என்ற சான்றுடன் திகழ்கிறது. சுமக்காத தாய்க்கு பள்ளிப்படை கட்டும் அளவு அவளது வாழ்வும், பெருங்குணமும் கண்டிப்பாக அமைந்திருக்கலாம்.
இன்றுடன் பஞ்சவன்மாதேவியும், வானதியும், ராஜேந்திரனும், பிரம்மராயரும், வைணவதாசனும், உமையாளும், சீராளனும், கோவிலின் செங்கல் சுமந்தவரும், கல்வெட்டுக்களில் இருக்கும் ஆயிரமாயிரம் மாந்தர்களும் அவர்களைப் பற்றிய என் சிந்தனைகளும் தற்காலிகமாக என்னுடன் விடைபெற்றுக் கொண்டாலும், என்றும் என் சோழ காதலில் சுமந்து நிற்பேன்.
போர்காலங்களின் அவலங்கள், பயங்கள், வெற்றிக் களிப்புகள் அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்திவிட்டார் ஆசிரியர். அரசப் பதவியில் இருப்பவர்கள் அவர்களின் சேனாபதிகளின் அன்றாட பிரச்சனைகளும் உணர்வு பூர்வமாய் அலசப்பட்டிருக்கின்றன. அன்றைய நாகரீகம் சரித்திர சான்று கலந்த கற்பனையுடன் அழகாய் படம் விரிகிறது.
வணிகர்கள் அந்தணர்கள் மறவர்கள் பஞ்சமர்கள் கருமார்கள் இவர்கள் இடையே நடைபெறும் ஜாதிக்கலவரங்களுக்கும் பஞ்சமில்லை. மனிதன் என்னும் மாறவில்லை, என்றும் அவனது இயல்பு குணம் தொடரும் என்பதற்கு சான்று.
இவர்களை எல்லாம் தாண்டி ராஜராஜன் தற்காலிகமாகக் கூட விடைபெற மறுத்து என்னுள் உறைந்துவிட்டான்.
இனி பெரியகோவிலில் பரமசிவனார் மட்டுமல்ல, ராஜராஜனும், பஞ்சவன்மாதேவியும், பிரம்மராயர் கிருஷ்ணன் ராமனும், நித்த வினோதனும், குஞ்சரமல்லரும் இலத்திசடையனும் கதை சொல்வதை தடவிப் பார்க்கலாம். உணர்ந்து கண்ணீர் உகுக்கலாம்.
எழுத்துச்சித்தருக்கும், கல்கி அவர்களுக்கும் என் மண்ணின் சரித்திரத்தை, பெருமையை உணர்த்தியமைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
'நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்' என்றொரு கட்டுரை. அருமை பாலகுமாரனின் எழுத்துச் சிறப்புகளை அலசியதாய் ஒரு கட்டுரை. சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்னும் எனது நூலில் பாலகுமாரனைப் பற்றிய கட்டுரை மிகப் பிரமாதமாய் வெளிவந்திருக்கிறது. நீங்கள் வாசிக்க வேண்டும்.
ReplyDeleteநன்றி.....கட்டாயம் வாசிக்க வேண்டும். முயல்கிறேன்.
Deleteபெரிய பெரிய பிரபலங்களில் நாவல்களை படித்து ரஸித்து, அதனைப் பொறுமையாகவும் அருமையாகவும் ஜூஸாகப் பிழிந்து பருகக்கொடுத்ததுபோல, நம் மண்ணின் சரித்திரத்தையும் பெருமையையும் தங்களின் இந்தப்பதிவு மூலம் எனக்கும் உணர்த்தியமைக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.
ReplyDeleteநன்றி.....நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள்.
Deleteஒரு காலத்தில் எனக்கு ஆகப்பிடித்த எழுத்தாளராக பாலகுமாரன் இருந்தார். அவரது மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், சினேகமுள்ள சிங்கம், தாயுமானவன், கடலோரக் குருவிகள், கரையோர முதலைகள், நெல்லுக்கு இறைத்த நீர் என்பன எனக்கு மிகவும் பிடித்த அவரது படைப்புகள். முன்கதைச் சுருக்கம் என்கிற அவரது சுயவரலாற்று நூலில் இருந்து அறிந்து கொள்ள நிறைய எனக்கு இருந்தன. பின்னாட்களில் அவர் எழுதிய எழுத்துகளில் விலகல் ஏற்பட்டாலும், ஒரு காலத்தில் என்னை - நாளாந்த வாழ்விலும் கூட- பாதித்த எழுத்துகளை எழுதியவர் அவர்.
ReplyDeleteவெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலகுமாரன் குறித்து நான் எழுதிய 3 கட்டுரைகள் இங்கே,
https://arunmozhivarman.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/
நன்றி...வருகைக்கும் கருத்துக்கும், உங்கள் கட்டுரையின் சுட்டிக்கும் நன்றி. கட்டாயம் வாசிக்கிறேன்.
Delete