October 13, 2010

பிடிக்காமல் பொன நவராத்திரி


நவராத்திரி என்றாலே அலங்காரங்கள், பூக்கோலங்கள் ரங்கோலிகள் என்று கண்முன் பல காட்சிகள் விரியும். சிறு வயது முதல் எனக்கு நவராத்திரி என்றாலே பிடிக்காது. என்ன பெண்பிள்ளை, இப்படிப் பேசுகிறாளே என்று நீங்கள் எண்ணலாம்.


நவராத்திரியில் அவரவர் திறமைகளைக் காண்பிப்பதில் பெண்கள் போட்டி போட்டுப் பெருமிதம் கொள்வர். எங்கள் வீட்டில் ஏழு படிகள் கட்டி கொலு வைக்கும் வழக்கம் உண்டு. தினம் ஒரு சுண்டல். வெள்ளிக்கிழமைகளில் அம்மா புட்டு செய்வாள். முதல் நான்கு நாட்கள் பூக்கோலம், அடுத்த மூன்று நாள்கள் கலர் கோலம், என அம்மாவும் நானும் பெரிய பெரிய கோலங்கள் போடுவோம். கிட்டத்தட்ட பனிரெண்டு வயது வரை, ராதை வேடம், 'மாமி' வேடம், வனதேவதை வேடம் என எனக்கு விதவிதமாய் வேடம் புனைந்து விடுவாள் அம்மா. இரவு ஒன்பது மணிக்கு மேல் பத்து சிறுவர்கள் குடிசைப்பக்கதிலிருந்து 'மாமி சுண்டல் மாமி' என்று மணியடிப்பார்கள். அவர்களுக்கென நிறையவே சுண்டல் செய்து தினமும் கொடுப்போம். எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது பின் ஏன் நவராத்திரி பிடிக்கவில்லை என்று நானே யோசித்த பொழுது நவராத்திரியில் பிடிக்காதவைகளைப் பட்டியலிடத் துவங்கினேன்.

முதல் முக்கிய காரணம் எனக்குத் தாவணியோ பாவாடையோ அணிவது பிடிக்காது. வற்புறுத்தலின் பேரில் அணிந்து கடுப்புடன் வெளியே வந்தால், 'அட! தாவணி போட்டுருக்கியே! நவராத்திரின்னா தான் தாவணி போட்டுப்பியா' என பக்கத்து விட்டு மாமி கமெண்ட் அடித்து இன்னும் வெறுப்பேற்றுவார்.

வீட்டிற்கு வரும் மாமிகள்(அம்மாவின் தோழிகள்) 'கொலு' பார்த்துவிட்டு சும்மா போக மாட்டார்கள். 'இது எங்க வாங்கினீங்க?' 'புடவை என்ன விலை' 'என் மாமியார் தொல்லை தாங்கலை' என்று கோவிலில் வம்படிப்பது போல், கொலுவில் கொலுவிருக்கும் அம்மனைத்தவிர வேறு எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.

இரண்டு வாண்டுகள் கூட வரும். அவர்களைப் பாடச் சொல்வார்கள். அது மிரண்டு விழிக்க, அம்மாக்கள் விழியாலேயே மிரட்டி, 'இப்போ பாடலைன்னா வீட்டுக்கு வந்தா மொத்து தான்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்ப்பார்கள். பரிதாபமாய் இரண்டும் பாடும். அதில் ஒரு குழந்தையின் குரலோ திறமையோ அதிகமிருப்பின் அடுத்த அம்மாளுக்கு முகம் சுருங்கிவிடும். 'என் பொண்ணும் பாடுவா, இன்னிக்கு மூட் இல்லை' என்று பெண்ணிற்கு ஆதரவாய்ப் பேசுவார். (வீட்டுக்குப் போனால் செமர்த்தியாய்த் திட்டு இருக்கும்).

நவராத்திரியின் போது அறிந்த அறியாத உறவினர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம். நானும் என் தோழியும் பக்கத்து வீடுகளுக்கு அழைக்கச் செல்வோம். நவராத்திரி வருவதற்கு முன்பே பாட்டு டென்ஷன் வந்து விடும். குறைந்தது பத்து பாட்டு பாடிப் பார்த்துக்கொள்வோம். கோடி விட்டில் ஒரு மாமி இருப்பார். அவர் வீட்டிற்கு தினமும் செல்லவில்லை என்றால் கோபம் வரும். அதனால் ஒன்பது விதமான பாட்டுடன் தயாராய் இருப்போம். 'பாடு' என்று சொல்வதற்கு முன், நாங்களே சாவி கொடுத்த பொம்மை மாதிரி பாடிவிட்டு, பயபக்தியோடு அந்த மாமியைப் பார்ப்போம். நாங்கள் பாடும் போதே இன்னும் இரண்டு குட்டிகள் வரும். அவற்றையும் பாடச் சொல்லி மாமி படுத்துவார். அந்த குட்டிகள் நெளிய, மாமியோ 'பாடினால் தான் சுண்டல்' என்று கறாராகப் பேசுவார். வேடிக்கைக்குச் சொன்னாலும் கூட, சுண்டலுக்குப் பாட வந்த லெவலுக்கு எங்களைத் தள்ளி விட்டாரே என்று கோபம் வரும். பாட்டு தெரியாது என்று சொல்லும் குழந்தைகளையும் குறைந்தது 'ஜனகனமன' பாட வைக்காமல் அனுப்ப மாட்டார். ஒரு முறை, பாடச் சொன்னவுடன் ஒரு குட்டி, 'சுண்டல் வேண்டாம் மாமி, நாங்க பாடலை' என்று சொல்ல, நாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டோம். மாமி எங்கள் வீட்டில் வந்து கோள்மூட்டி விட, அம்மாவுக்கு என் பேரில் வருத்தம். அவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் பொழுது, நாங்களும் தப்பித்து ஓடி விடவேண்டும், என்று அடிமேல் அடி வைத்து, சத்தமிடமால், குனிந்து கொண்டே நடப்போம். அப்படியும் மாமி கண்ணில் பட்டுவிடாமல் தப்ப இயலாது. வேறு யாராவது அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும், மொத்த கும்பலாக வெளியே நின்று, அழைக்க வந்த நபரை மட்டும் உள்ளே அனுப்பி, சில நாள் தப்பித்ததுண்டு.

ஒரு நாளுக்கு ஒரு பாடல் என்று ஒன்பது பாடல் பழகிக்கொண்டிருப்போம். ஒரே நாளில் ஐந்து வீடு அழைக்கச் சென்றால், ஐந்து வீட்டிலும் அதே பாட்டு! தப்பித் தவறி, அந்த வீடுகளில் தென்பட்ட முகங்கள் வேறு வீடுகளிலும் அன்றே தென்பட்டால், அதே பாட்டை நாங்கள் பாட, அவர்கள் கேலியாய் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ரொம்ப அவமானமாய் இருக்கும். ஒரு வாண்டு ஒரு முறை 'அக்கா சுதா மாமி ஆத்துலையும் இதே பாட்டு தானே பாடின' என்று பகிரங்கமாகவே மானத்தை வாங்கிவிட்டது.

என்னுடைய சித்தி பெண்ணை ஒரு முறை அடுத்த தெருவில் உள்ள வீட்டிற்கு நவராத்திரிக்கு அழைத்து செல்ல நேரிட்டது. அந்த வீட்டில் என் வயதொத்த ஒருவன் இருப்பான். தெருவில் போகும் போதும் வரும் போதும் பாட்டுப் பாடி வம்பிழுக்கும் 'ரௌடி' என்று நான் அவனைப் பற்றி கருவிக்கொண்டாலும், அவர்கள் வீட்டிற்கு, கொலுவிற்காக அழைக்கச் செல்வதிலிருந்து தப்ப முடியாது. என் சித்திப் பெண்ணை அழைத்து சென்ற அன்று, அவனுடைய அம்மா, "கொழந்தை பாடுவாளா?" என்று சித்திப் பெண்ணைப் பற்றிகேட்டார். அவளும் இல்லை என்று தலையாட்ட, நான் மட்டும் வழக்கம் போல் பாட அரம்பித்தேன். அடுத்த அறையிலிருந்து அவனும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அவசரமாய் முடித்து ஓடிவிடலாம் என்று நினைத்து, நான் பாடி முடித்து கிளம்பிக் கொண்டிருக்க, என் சித்திப் பெண்ணோ, "மாமி! நான் டான்ஸ் ஆடுவேன், ஆனா அக்கா பாடணம்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். 'நீ பாடினாத்தான் உண்டு, உன் பாட்டை யாரு கேட்டா, கொழந்தை ஆட்டத்துகாக பாடு' என்று மாமி கட்டளையிட மீண்டும் நான் பாடி அவள் ஆட்டம் தொடர்ந்தது. என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. தெருவில் இறங்கி நடக்கையில் 'ஏய், உன் பாட்டைவிட அவ டான்ஸ் நல்லா இருந்தது' என்று ஜன்னலில் இருந்து அந்த 'ரௌடி' கிண்டலுடன் கத்தினான்.

அடுத்த நாளோ 'மாமி' வேடமிட்டு அந்தப் பையன் வசிக்கும் தெருவிலேயே இன்னொரு வீட்டுக்கு அழைக்கச் செல்ல வேண்டியிருந்தது. வாசலில் நின்று கொண்டு, 'ஓ மாமி வேஷமா.. மாமி, கண்ணாடி போடாத மாமி! உன் ஜோடியக் காமி!' என்று பாடிக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான். ரொம்ப அழுகையாய் வந்தது. மறுநாள் அடம் பிடித்து ராதை வேடம் போட மாட்டேன் என்று மறுத்து எனக்கு பனிரெண்டு வயதாகிறது என்பதை என் அம்மாவுக்கு நினைவூட்டினேன். ஒரு வழியாக நவராத்திரிக்கு வேடம் புனைவது நின்றது.

தினம் குறைந்தது பத்து விதமான சுண்டல் பொட்டலம் கிடைக்கும். எது யார் வீட்டு சுண்டல் என்பது மறந்துவிடும். குத்து மதிப்பாய் இந்த சுண்டல் இந்த மாமி தான் செய்திருப்பார் என்று நாங்களே தீர்மானித்து விடுவோம். கொலுவின் ஹைலைட்டே "தேங்காய் மூடிப்பைகள்" தாம். பத்து வீட்டுக்கு கலெக்ஷன் செல்வதால் தேங்காய் சுண்டலுக்காக வலுக்கட்டாயமாய், ஒரு பை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். தெருவில் போகும் பசங்களெல்லாம் 'வந்துட்டாங்கப்பா கலெக்ஷனுக்கு' என்று சிறுமைப்படுத்திவிடுவர்.

இப்படி பல சோதனைகளுக்கு உள்ளாகி, ஒன்பது நாள் தேவி வழிபாடு செய்தால், ஒன்பதாம் நாள் அன்று அவள் அருள் பாலித்து படிக்க முடியாமல் செய்து விடுவாள். அதாவது சரஸ்வதி பூஜை. ஒரே குஷியாக இருக்கும். அப்பாடா! இன்று, புத்தகத்தைத் தொடவேண்டாம்! படிக்க யாரும் வற்புறுத்தவும் முடியாது.

மறு நாள் விஜயதசமியன்று, ஒவ்வொரு புத்தகத்திலிருந்து இரண்டு பக்கம் படிக்கச் செய்து, ஈடு செய்து விடுவாள் அம்மா. அன்று பாட்டு வகுப்புக்கு ஒரு மணி முன்பே சென்று பாட்டு மாமி வீட்டை அலங்கரித்து, மூன்று மணி நேரம் சந்தோஷமாக பாடுவோம். நாங்கள் சீனியர் என்பதால், ஜூனியர் குழந்தைகளை அதட்டி வேலை வாங்குவது சந்தோஷமாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம், நவராத்திரி என்றால் நண்பர்கள் கூடும் நல்ல பண்டிகை என்ற நினைப்பு மேலிடுகிறது. அம்பாளுக்கு தினம் ஒரு பாடல் நானே பாடி, இங்கு வரும் தோழிகளுடன் பேசும் போது, அட இப்படித் தானே அம்மாவும் பேசியிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஆசையாய் தைத்த பாவாடையை வலுக்கட்டாயமாய் இன்று என் பெண்ணுக்கு அணிவிக்கும் போது, அம்மா அணியச் சொல்லிய தாவணி நினைவு வருகிறது. வீட்டிற்கு வரும் குட்டிப் பெண்களைப் பாடச் சொல்லும்போது இப்படித் தானே அந்த மாமியும் என்னை பாடச் சொன்னார்கள் என்ற நினைப்புடன் புன்னகைக்க முடிகிறது. எனக்கு சிறு வயதில் பிடிக்காத நவராத்திரியை வேறு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டேன். வேடமிட்டு வீடுவீடாய் சென்ற நாங்கள் இப்பொழுது ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோம். எங்களைக் கிண்டல் செய்தவர்களெல்லாம் குடியும் குடித்தனமுமாக அதே ஊரில் வசிக்கிறார்கள். ஊருக்குச் சென்றால் மரியாதையான புன்னகையை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு நகர்கிறோம். எங்களைப் பாடச் சொல்லி வற்புறுத்திய மாமி மட்டும் நிரந்தரமாய், காண முடியாத இடத்திற்குச் சென்று விட்டார்.

இப்பொழுது நினைத்தாலும் கிட்டாது, அந்த இனிய நவராத்திரி நாள்கள்!

(மேலே உள்ள படம் எங்கள் வீட்டு கொலுவின் ஒரு பகுதி)

19 comments:

  1. சூப்பர் கொசுவத்தி.

    ரசித்தேன்.

    ReplyDelete
  2. நன்றி அஷோக், துளசி :)

    துளசி மேடம், நலமா?

    ReplyDelete
  3. நலமே ஷக்தி.

    குழந்தை எப்படி இருக்காள்?

    உங்கள் அனைவருக்கும் நவராத்திரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. அழகிய நினைவுகள் சகோதரி. அம்மா ஆனதும் குழந்தை காலம் புரிகிறது. :)


    //இப்பொழுது நினைத்தாலும் கிட்டாது, அந்த இனிய நவராத்திரி நாள்கள்!//

    எங்களுக்கெல்லாம் நவராத்திரி மறந்து போனது.

    ஆனாலும் வருடம் தவறாமல் லண்டனில் உள்ள முருகன் ஆலயத்தில் எனது மகன் மிருதங்கம் வாசிப்பான், கடந்த இரண்டு வருடமாக நானும் வாசிக்கின்றேன்.

    நவராத்திரியை அடுத்த வருடமாவது சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தினமும்.

    படம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  5. குழந்தை நலம். நன்றி துளசி. தங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி ராதாக்ருஷ்ணன் சார்.

    ///ஆனாலும் வருடம் தவறாமல் லண்டனில் உள்ள முருகன் ஆலயத்தில் எனது மகன் மிருதங்கம் வாசிப்பான், கடந்த இரண்டு வருடமாக நானும் வாசிக்கின்றேன். ///

    மிக்க சந்தோஷமாக இருக்கிறது. கலைக்கு என்றும் அழிவில்லை.

    ReplyDelete
  7. ரசித்து ரசித்து வாசித்தேன் ஷக்தி:)!

    நவராத்திரி வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. நன்றி ராமலக்ஷ்மி.

    உங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை/ நவராத்திரி வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. நல்ல பிளாஷ் பேக்

    ReplyDelete
  10. :)அருமை..
    \\ஒவ்வொரு புத்தகத்திலிருந்து இரண்டு பக்கம் படிக்கச் செய்து, ஈடு செய்து விடுவாள் அம்மா.ஒவ்வொரு புத்தகத்திலிருந்து இரண்டு பக்கம் படிக்கச் செய்து, ஈடு செய்து விடுவாள் அம்மா.// நல்ல மலரும் நினைவுகள்..

    ரசிக்கவைத்த பதிவு..

    ReplyDelete
  11. "ஒன்பதாம் நாள் அன்று அவள் அருள் பாலித்து படிக்க முடியாமல் செய்து விடுவாள் " :)

    நவராத்திரி வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. nandri muthuletchumi, madhevi and lk :)

    madhevi,

    navarathri vazhthukkaL :)

    ReplyDelete
  13. //இரவு ஒன்பது மணிக்கு மேல் பத்து சிறுவர்கள் குடிசைப்பக்கதிலிருந்து'மாமி சுண்டல் மாமி' என்று மணியடிப்பார்கள். அவர்களுக்கென நிறையவே சுண்டல் செய்து தினமும் கொடுப்போம். //

    சூப்பர்.... படிக்கவே சந்தோஷமா இருக்கு....

    //'அட! தாவணி போட்டுருக்கியே! நவராத்திரின்னா தான் தாவணி போட்டுப்பியா' என பக்கத்து விட்டு மாமி கமெண்ட் அடித்து இன்னும் வெறுப்பேற்றுவார்//

    அடுத்தாத்துல என்ன நடக்கறதுன்னு பாக்கறத தவிர மாமிகளுக்கு வேறென்ன வேலை..... இதுக்கெல்லாம் கோச்சுக்கப்டாதுன்னா ப்டாதுங்கறேன்...

    // 'இது எங்க வாங்கினீங்க?' 'புடவை என்ன விலை' 'என் மாமியார் தொல்லை தாங்கலை' என்று கோவிலில் வம்படிப்பது போல், கொலுவில் கொலுவிருக்கும் அம்மனைத்தவிர வேறு எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.//

    ஹா...ஹா...ஹா... நடைமுறையில் நடக்கும் ஒன்று...

    // 'இப்போபாடலைன்னா வீட்டுக்கு வந்தா மொத்து தான்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்ப்பார்கள். பரிதாபமாய் இரண்டும் பாடும்.//

    ஆமாம்... பாக்கறதுக்கே பாவமா இருக்கும்.... அப்படியும் பாடினா அதுல “பாவம்” குறைந்து காணப்படும்....

    //ஒரு முறை, பாடச் சொன்னவுடன் ஒரு குட்டி, 'சுண்டல் வேண்டாம் மாமி, நாங்க பாடலை' என்று சொல்ல, நாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டோம்.//

    கலக்கல் குட்டீஸ்....அதன் குறும்புகளை ரசிக்க கண் கோடி வேண்டும்....

    //ஒரு வாண்டு ஒரு முறை 'அக்கா சுதா மாமி ஆத்துலையும் இதே பாட்டு தானே பாடின' என்று பகிரங்கமாகவே மானத்தை வாங்கிவிட்டது.//

    நவராத்திரி கொலு கொலு சுண்டல்... இந்த ஒரு டயலாக் போறாதோ, சுண்டல் கலெக்‌ஷனுக்கு..... நாங்களே சின்ன வயசுல எல்லார் வீட்டுக்கும் போய், விதவிதமான சுண்டல்கள் கலெக்‌ஷன் பண்ணுவோமே....

    //ஓ மாமி வேஷமா.. மாமி, கண்ணாடி போடாத மாமி! உன் ஜோடியக் காமி!' என்று பாடிக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான். ரொம்ப அழுகையாய் வந்தது//

    ஹா...ஹா...ஹா.... படு கலக்கல்....

    ரொம்ப நன்னா இருந்தது.... பழைய நினைவுகளை ரொம்பவே கிளறி விட்டது.... இப்போ யோசிக்கறேன் எந்தெந்த டைப் சுண்டல்லாம் கலெக்ட் பண்ணி சாப்பிட்டிருக்கோம்னு..

    ReplyDelete
  14. //து'மாமி சுண்டல் மாமி' என்று மணியடிப்பார்கள். அவர்களுக்கென நிறையவே சுண்டல் செய்து தினமும் கொடுப்போம். //

    சூப்பர்.... படிக்கவே சந்தோஷமா இருக்கு....

    //நவராத்திரின்னா தான் தாவணி போட்டுப்பியா' என பக்கத்து விட்டு மாமி கமெண்ட்//

    அடுத்தாத்துல என்ன நடக்கறதுன்னு பாக்கறத தவிர மாமிகளுக்கு வேறென்ன வேலை..... இதுக்கெல்லாம் கோச்சுக்கப்டாதுன்னா ப்டாதுங்கறேன்...

    //கொலுவில் கொலுவிருக்கும் அம்மனைத்தவிர வேறு எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.//

    ஹா...ஹா...ஹா... நடைமுறையில் நடக்கும் ஒன்று...

    //வீட்டுக்கு வந்தா மொத்து தான்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்ப்பார்கள். பரிதாபமாய் இரண்டும் பாடும்.//

    ஆமாம்... பாக்கறதுக்கே பாவமா இருக்கும்.... .

    //ஒரு குட்டி, 'சுண்டல் வேண்டாம் மாமி, நாங்க பாடலை' என்று சொல்ல, நாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டோம்.//

    கலக்கல் குட்டீஸ். குறும்புகளை ரசிக்க கண் கோடி வேண்டும்....

    //ஒரு வாண்டு ஒரு முறை 'அக்கா சுதா மாமி ஆத்துலையும் இதே பாட்டு தானே பாடின' என்று பகிரங்கமாகவே மானத்தை வாங்கிவிட்டது.//

    நவராத்திரி கொலு கொலு சுண்டல்... இந்த ஒரு டயலாக் போறாதோ, சுண்டல் கலெக்‌ஷனுக்கு.....

    //ஓ மாமி வேஷமா.. மாமி, கண்ணாடி போடாத மாமி! உன் ஜோடியக் காமி!'//

    ஹா...ஹா...ஹா.... படு கலக்கல்....

    ரொம்ப நன்னா இருந்தது.... பழைய நினைவுகளை ரொம்பவே கிளறி விட்டது.... இப்போ யோசிக்கறேன் எந்தெந்த டைப் சுண்டல்லாம் கலெக்ட் பண்ணி சாப்பிட்டிருக்கோம்னு..

    ReplyDelete
    Replies
    1. Thankyou so much ஏறக்குறைய எல்லோருக்கும் இதே மாதிரி நினைவுகள் .. :)

      Delete
  15. Arumai. Clear description of those days memories

    ReplyDelete
  16. Thankyou...I lived those memories when I wrote them. :)

    ReplyDelete