January 21, 2010

பிரம்மச்சர்யம் ( சோ-வின் எங்கே பிராமணன் - பாகம் 2)


சில நூற்றாண்டுகள் முன்பு வரையும் கூட பிரம்மச்சரியம் பழவி வந்த வாழ்கை முறை. பிரம்மச்சர்யம் என்பது வேத அத்யாயனம் செய்யும் முறைகளும் அதற்கென கடைப்பிடிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் நிறைந்தது. பிரம்மம் என்ற உயர்ந்த லக்ஷியத்தை அடைவதற்கான முதல் படியாக இதைக் கருதலாம். இதனைப் பயில்பவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிற அகக் (மனக்) கட்டுப்பாடுகள் கடினம். அகக் கட்டுப்பாடுகளாக

* பெண்களிடம் பேசுவதை தவிர்த்தல்
* பிட்சையெடுத்து அந்த உணவையே உண்ணுதல் (பணிவு வளர்கிறது. அஹம் வெகுவாக அழிக்கப்படுகிறது)
* சத்தியம் பேசுதல்
* எப்பொழுதும் பகவத் சிந்தனையில் இருத்தல்


ஆகியவை சில விதிமுறைகள்.


"இனி நீ பிட்சை பெற்று உண்பாயாக" என்று உபநயன மந்திரமே கூறுகிறது.

இறைவனே திருவோடு ஏந்தி பிட்சை பெற்ற புராணம் உண்டு. கோபத்தில் சிவன் பிரம்மனின் தலையை பிடுங்கிவிட அந்தத் தலை அவரின் உள்ளங்கையில் திருவோடாக ஒட்டிக்கொண்டது. பார்வதிதேவியே அன்னபூரணி வடிவத்தில் பிட்சையிட்டு அவர் சாபத்திற்கு விமோசனம் அளித்தாள் என்பது புராண கூற்று. பிட்சை எடுத்தல் இன்னொருவரிடம் இல்லாத ஒன்றிருக்கு யாசகம் பெறுதல். நம்மிடம் இல்லை என்று கையேந்தும் போது உயர்வு மனப்பான்மை அகலும், பணிவு ஊற்றெடுக்கும். பிட்சையளிப்பவள் மஹதேவியாம் அன்னபூரணியிடம் ஞானத்தை பிட்சையாக கேட்கிறார் ஆதிசங்கரர்.


அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி


அன்னபூரணியே, பூரணத்துவம் நிறைந்தவளே ஷங்கரனினுக்கு உகந்தவளே அன்னையே பார்வதியே எனக்கு ஞானமும் வைராக்யம் பிட்சையாக கொடு. என்பது ஸ்லோகம்.


பிரம்மச்சர்யத்திற்கு புற கட்டுப்பாடுகளுக்காக,

* கட்டாந்தரையில் படுத்துறங்குதல் (சுகத்தை விட்டொழித்தல்)
* வாசனாதி திரவியங்களை தவிர்த்தல்
* சிகை (குடுமி) வைத்தல்


முதலியவை விதிக்கப்பட்டிருக்கின்றன.

பிரம்மச்சரியம் மிக கடினமான வாழ்கை முறையாக இருந்து வந்திருக்கிறது. புலனடக்கம் பிராதான பங்கு வகித்திருக்கிறது. பிரம்மச்சரியத்தை வேண்டி துவங்குபவன் சௌரம் என்னும் சிகை வைத்தலை மேற்கொள்கிறான் (தர்கால வழக்கில் குடுமி). தந்தையார் தமது மைந்தனுக்கு மந்திரங்கள் சொல்லி செய்யப்படுவது. அறிவும் செல்வமும் நிரம்பப் பெற இறைவனை வேண்டுகின்றனர். மந்தரங்கள் சரிவரச் சொல்லி பிரம்மச்சர்யத்தை முறையாக கடைபிடிப்பவன், தினமும் ஸ்நானம் செய்கையில் சிகை நீர் கொண்டு நரகத்தில் உழலும் ஜீவன்களுக்காக, உலக நன்மைக்காக மந்திரம் ஜபித்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

பிரம்மச்சரியம் எல்லா வர்ணத்தவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மசர்யம் முடிந்த பின் தொண்ணூறு சதவிகிதம் பேர் க்ருஹஸ்தாசிரமம் ஏற்று சிறந்த க்ருஹஸ்தனாக விளங்குகின்றனர். க்ருஹஸ்தாசிரமம் உயர்ந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. வெகு சொற்பம் பேர்கள் நைஷ்ட்கிக பிரம்மச்சாரியராய் (நித்திய பிரம்மாச்ச்சாரி) தொடர்கின்றனர். ஆதிசங்கரரைப் போல் சிலர் க்ருஹஸ்தாசிரமம் விடுத்து சன்யாசம் ஏற்கின்றனர். சன்யாசம் ஏற்பதற்கு பெற்றோரின் சம்மதம் மிக அவசியம். இறைவனே முதலை ரூபத்தில் தோன்றி அவர் தாயாரின் சம்மதம் பெற உதவினார் என்பது தெரிந்த கதை. மத்வாச்சார்யார் சன்னியாசம் மேற்கொள்ள பெற்றோர் மறுத்ததும், பின்னர் அவர் தந்தை நமஸ்கரித்து விண்ணப்பித்ததும், அதற்கு மத்வாசார்யார் "தந்தை நீர் வணங்கியதாலேயே நான் சன்யாசம் பெற்றேன்" என்று கூறி அவர்களுக்கும் இன்னொரு பிள்ளை பிறந்தவுடன் சன்யாசம் ஏற்பதும், முதல் பகுதியிலேயே நாம் பகிர்ந்து கொண்ட கதை. எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. வரலாற்று சான்றுகளின் படி நரேந்திரர் சன்யாசம் பெறுவதற்கும் நைஷ்டிக பிரம்மச்சரியம் தொடர்வதற்கும் அவர்கள் வீட்டில் அனுமதி வழங்கப்படவில்லை எனினும் அவர் தம் பயணத்தை தொடர்ந்தார்.

5 comments:

  1. பிரம்மச்சர்யம் பற்றி அழகிய பதிவு.

    ஆண்கள் மட்டுமா பிரம்மச்சர்யம் மேற்கொள்ள வேண்டும்?

    பெண்களும் மேற்கொள்ளலாம் அல்லவா?

    ஏன் பெண்கள் பிரம்மச்சர்யம் பெருமளவில் பேசப்பட்டது இல்லை?

    ReplyDelete
  2. பெண் துறவிகள் நிறையவே தொன்று தொட்டு இருந்திருக்கின்றனர் என்று தான் நினைக்கிறேன். சில நேரம் துறவிகளிலோ ஆன்மீகவாதிகளிலோ மௌனமாக சாதனை செய்பவர்களும் உள்ளனர். அவர்கள் பெருமளவு பேசப்பட்டதில்லை. வேதத்தில் 'மனிதனு'க்குறிய கோட்பாடுகள் என்று குறிப்பிட்டால் அது ஆண் பெண் இருவருக்கும் பொது என்று தான் சொல்லவேண்டும்.

    நிச்சயம் பெண்களும் மேற்கொள்ளலாம். பல துறவிகள் இதிஹாச புராணங்களில் இருந்திருக்கிறனர் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  3. நன்றி :) இராதாக்ருஷ்ணன் அவர்களே

    ReplyDelete
  4. மேலதிக விளக்கத்துக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  5. பிரம்மச்சர்யம் பற்றி சிறப்பாக செய்திகளைக் கோர்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete