January 15, 2010

சீமந்தம் (விழா/சடங்கு) (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி - 2 )

சீமந்தம்
______

பூணூல் விழாவிற்கும் மணவிழாவிற்கும் பொருந்துவது போலவே தற்காலத்தில் வைதீக முறைப்படி நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியும் வழி வகுத்திட்ட முறைப்படி நடப்பதில்லை. அதன் சாரம்சமே அழிந்து படாடோபமும் வீண் விரயச் செலவுகளும் டாம்பீகமும் மிஞ்சி நிற்கிறது. தேவையற்ற பகட்டும், பணமும் இரைக்கபடுகிறதேயல்லாமல் வேத மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாவை செய்பவர்கள் வெகு சொற்பம். தம் வருமான ஷக்திக்கும் மீறி போலி கௌரவத்திற்காக இவ்விழாக்களுக்கு அதீதமாக செலவு செய்வது தேவையற்றது.

சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் பகட்டுக்கும முக்கியத்துவம் கொடுப்பதை விட முக்கியமானது நம் விழக்களை சிறப்பித்து கொடுக்கும் / நடத்தி கொடுக்கும் ஏனைய உதவியாளார்கள், மந்திரம் ஓதும் புரோஹிதர்கள், தொழிலாளர்கள் முதலியோர். அவர்கள் மனம் கோணாது இன்புறும் வகையில் அவர்களை மரியாதை செய்து திருப்தி படுத்தி அனுப்புதல் விசேஷங்களின் பலன்களை முழுமையாக்கும்.

சிறு அளவிலான மனைவிழாக்களாகட்டும் அல்லது பெரிய அளவிலான யாகம் செய்யும் பொழுது அதற்கு உதவிய கீழ் நிலைத் தொழிலாளிகள், யாக மண்டபத்தை அலங்கரித்தொர், என்று தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பலவேறு மக்களுக்கும் உகந்த மரியாதை செலுத்தப்படவேண்டும். அப்பொழுது தான் யாகமோ பூஜையோ நிறைவு பெறும். பலன் முழுமை பெறும். எந்த வித மகத்தான காரியங்கள் நடைபெறுவதற்கும் தொழிலாளிகளின் உதவியன்றி அணுவளவும் முடியாது. தொழிலாளர்களின் 'நடைமுறை அனுபவமே' கற்றறிந்த சாஸ்திர சம்பிரதாயங்களைக் காட்டிலும் உடன் கை கொடுப்பது.

சீமந்த சுபநிகழ்வின் போது மந்திரங்கள் தாய் சேய் நலத்திற்காகவும், பிறக்கும் பிறவி நல்ல பிறவியாக அமைவதற்கும், அப்படி பிறந்த பிறப்பு தன் உயர் லக்ஷியமாம் பிறப்பின் தளை அறுத்து வீடுபேற்றை அடைய வேண்டி வேத மந்திரங்கள் ஓதி வேள்வி செய்யப்படுகிறது.

பும்சவனம் என்பது பிள்ளை வரம் வேண்டி செய்யப்படும் சடங்கு. பிள்ளைக் குழந்தைகள் சந்ததிகள் என்று கருதப்படுவதால், பிள்ளை வரம் வேண்டுகின்றனர். கர்ப்பகால அறிகுறிகள் தெரியும் போதே பும்சவனம் செய்யப்படவேண்டும் என்பது நியதி. சில சாரார்களின் வழக்கப்படி, முள்ளம்பன்றியின் முள்ளினால் வகிடு எடுக்கப்படுகிறது. புத்தி கூர்மையுள்ள சிசு பிறக்கவேண்டும் என்பதற்காகவும், கர்பமுள்ள ஸ்த்ரீயை அழகு படுத்தி, சந்தோஷபடுத்தும் வகையில் வகிடு எடுத்து, தலை பூச்சூட்டி, அலங்கரித்தும் நடத்தப்படுகிறது. அவள் இன்புறும் வகையில் போற்றப்படுகிறாள். சந்தோஷம் மிகுந்து தெளிந்த மனத்துடன் அவள் இருத்தலே ஆரோக்கிய சிசுவிற்கு வழிவகுக்கும்.

முள்ளம்பன்றியின் முள் கொண்டு வகிடு எடுத்தல் பல இனத்தவரிடையே இருந்து வரும் பழக்கம். அவர்கள் கற்பிக்கும் காரணங்கள் வித்தியாசமாகவும் வெவ்வேறாகவும் இருக்கிறது. கொங்கிணி பேசும் சில இனத்தவரும் இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், முள்ளம்பன்றியின் முள்ளால் நன்கு (இரத்தம் வரும் அளவு) அழுத்தல் வேண்டும். அப்படி அழுத்தும் பொழுது கர்பஸ்த்ரீ வலி பொறுக்கிறாள். இது பேறு கால வலிக்கு ஒரு முன் அறிவிப்பைப் போல் அவளை தயார் படுத்துவதற்காக செய்யப்படுகிறதாம்.

2 comments:

 1. //அவள் இன்புறும் வகையில் போற்றப்படுகிறாள். சந்தோஷம் மிகுந்து தெளிந்த மனத்துடன் அவள் இருத்தலே ஆரோக்கிய சிசுவிற்கு வழிவகுக்கும்.//

  இதான் தாத்பரியம். கருவுற்றிருக்கும் தாய் அடையும் சந்தோஷம்--அந்தத் தாய்க்கு அருமையான போஷாக்கு கொடுக்கும். அவள் அடையும் மகிழ்ச்சி, குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

  இதற்காகத் தான் ஊர் கூடி, சடங்கு- சம்பிரதாயம் எல்லாம். ஒருவருக்கொருவர்,தனி நபர்களுக்கும் சமுதாயத்திற்கும் என்று பிணைப்புகளை ஏற்படுத்த இந்த சம்பிரதாய நிகழ்ச்சிகளெல்லாம் வழி வகுப்பனவாய் ஆயிற்று. சீமந்தம் ஆயிற்றா, அந்தக் குடும்பம் மட்டுமில்லை, அந்தத் தெரு பூராவும், தெரிந்தவர்கள் என்று அடுத்து சிசுவை எதிர்பார்த்திருக்கும். நல்ல செய்தி கிடைத்ததும், அத்தனை பேரும் 'தெரியுமா, சேதி?' என்று ஒருத்தருக்கு ஒருத்தர் செய்தியைப் பரிமாறிக்கொள்ளல், சந்தோஷப் படுதல்.. அடுத்து தொட்டில்.. குழந்தைக்குப் பெயர் வைத்தல் என்று.. எல்லாமே, கூடி வாழும் சமூகத்தை சந்தோஷப்படுத்தத்தான்!

  தொடர்ந்து சொல்லுங்கள்.

  ReplyDelete
 2. //இதற்காகத் தான் ஊர் கூடி, சடங்கு- சம்பிரதாயம் எல்லாம். ஒருவருக்கொருவர்,தனி நபர்களுக்கும் சமுதாயத்திற்கும் என்று பிணைப்புகளை ஏற்படுத்த இந்த சம்பிரதாய நிகழ்ச்சிகளெல்லாம் வழி வகுப்பனவாய் ஆயிற்று//

  //ஒருத்தருக்கு ஒருத்தர் செய்தியைப் பரிமாறிக்கொள்ளல், சந்தோஷப் படுதல்.. அடுத்து தொட்டில்.. குழந்தைக்குப் பெயர் வைத்தல் என்று.. எல்லாமே, கூடி வாழும் சமூகத்தை சந்தோஷப்படுத்தத்தான்! //

  உண்மை தான். அதில் கிடைத்திருக்கும் மகிழ்ச்சி தனி. இந்த தலைமுறையினர் இழந்துவிட்டோம்.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete