January 17, 2010

இறைவனுடனான உறவு (சோ-வின் எங்கே பிராமணன்)


வைதீக காரியங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் சரியாகவும் முறையாகவும் சொல்லப்படுதல் அவசியம்। அப்படி சொல்லப்படும் போது அந்த வார்த்தைகேயுறிய அதிர்வுகள் சரியாக அமைந்து நல்லன விளைவிக்க வல்லது। குறிப்பாக வேத மந்திரங்கள் இறைவனையோ இன்னபிற தேவதைகளையோ வேண்டி அழைத்தும், போற்றியும் சொல்லப்படுவதால், உச்சரிப்பு கவனம் வெகு முக்கியம்। அது தவிர வேத மந்திரங்களுக்கென தொனியும் ஸ்வரங்களும் உண்டு. ஸ்வர பேதம் எதிர்மாறான விளைவுகளைக் கூட ஏற்படுத்த வல்லது। வேதம் ஓதும் பொழுது,

* ஸ்வர பேதம்
* ராகமாக இழுத்து உச்சரித்தல்
* அவசரமாக மந்திரம் ஓதுதல் (குறில் நெடில் முறையாய் பிரயோகித்து அதற்கென உரிய காலக் கணக்கில் உச்சரிக்கவேண்டும்)
* அதீத அங்க அசைவுகளுடன் ஓதுதல்
* இயந்திரத்தனமான உச்சரிப்பு
* அர்த்தம் மாறும் வகையில் உச்சரித்தல்
* குரல் கம்மி பிசிருதல்


முதலியவை செய்யக்கூடாத ஆறு குற்றங்களாம்.

பகுதி ஒன்றில் சோ அவர்கள் த்வஷ்டா என்ற தேவதச்சனின் கதையை பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்திற்கும் வரலாம். இந்திரனைக் கொல்லும் மகனுக்காக வேள்வி நடத்தி, மந்திரஹீனத்தால் இந்திரனால் கொல்லப்படும் மகனையே வரமாகப் பெற்றான் என்பது கருத்தில் கொள்ள உகந்தது. வேதத்தை முறையாக கற்றாலேயன்றி உச்சரிப்பதை தவிர்ப்பது நலம்.

இவ்வளவு மெனக்கெட்டு ஸ்வர சுத்தியும் சரியான உச்சரிப்பும் சேர்ந்து இறைவனை துதி செய்து, நித்தியம் தியானம் செய்தால், முக்காலமும் நினைந்தால், நம் முயற்சி எல்லாம் திருவினையாகுமா? கேட்டதாலாம் கொடுப்பானா? என்றால் இல்லை. சில முயற்சிகள் லபிக்கலாம். வேறு சில முயற்சிகள் கர்மவிதிப்படி நடவாமலும் போகலாம். நம் கர்மவினைப்படி தான் வாழ்க்கை அமைகிறது. இறைவன் நமக்கு மன அமைதியும், துன்பம் வரும் பொழுது அதை எதிர்கொள்ளும் ஷக்தியும் தர வல்லவன். இறையருளும் பலனும் வெகு விரைவில் கிட்ட நம்மில் பலர் இன்னும் உதாரண பக்தனின் நிலைக்கு உயரவில்லை.

சில நிகழ்வுகளுக்கு மனிதனுக்கு அப்பாற்பட்ட ஷக்தியும் காரணமாய் இருந்து வந்திருக்கிறது. இறைவன் செயல் என்று இதைச் சொல்லுகிறோம். கும்பகர்ணன் நித்திய வாழ்வு வேண்டி கடும் பனி, குளிர், வெப்பத்தில் தவமியற்றி அதன் பின் வரம் கேட்கிறான். இவனுக்கு நித்திய வாழ்வளித்தால் மக்கள் நிலைமை பரிதவிக்கும் என்று கருணைக் கொண்டு சரஸ்வதி உட்புகுந்து அவன் நாப்பிழற்றுகிறாள். இறுதியில் அவன் "நித்திரை வாழ்வு" வேண்டி நின்றான். இதனை தெய்வ சங்கல்பம் என்று கூறாமல் வேறு என்னவென்று அழைப்பது? தெய்வம் சில நிகழ்வுகளை நிகழ்த்தும், வார்த்தைகளை உதிர்க்க வைக்கும்.

மனிதன் தான் எப்பேர்பட்ட சுயநலவாதி! தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமே இறைவனை நாடுகிறான். பரிபூர்ண அன்பு இல்லாது இறைவனிடம் தனக்கு வேண்டியவற்றை பேரம் பேசுகிறான்! வியாபாரம் நடத்துகிறான். இது எப்படி சரியாகும்?

க்ருஷ்ணன் கீதையில் தன்னை நான்கு வகையான பக்தர்கள் வணங்குகின்றனர் அவற்றுள் ஞானியே உயர்ந்தான் என்று கூறுகிறான். அப்படியெனில் மற்ற வகை பக்தர்கள் மட்டம் என்றில்லை. இறைவனிடத்து நம்பிக்கையற்று இருப்பதைக் காட்டிலும் அவனை நம்பி உச்சி குளிர்வித்து தமக்கு வேண்டியதை பேரம் பேசும் பக்தி ஒரு படி மேல்.

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ஸுக்ருதினோ அர்ஜுன
ஆர்த்தோ ஜிக்ஞாஸுரர்தார்தீ ஞானீ ச பரதர்ஷப


(பகவத் கீதை)

என்னை நான்கு விதமான மக்கள் வணங்குகின்றனர். ஆசைகளின் ஆதிக்கம் மிகுந்தவன், துன்பத்தில் உழல்பவன், அறிவுத் தாகம் கொண்டு என்னை(தன்னை) அறிய முயல்பவன், அறிஞனாம் ஞானி. இவர்களுள் எனக்கு நான்கு பேரும் ப்ரியமானவர்கள் எனினும் அதில் ஞானி எனக்கு மிக அருகில் நிற்கிறான். என்னை அடைந்தவனாகிறான் என்கிறார்.

இறைவனிடம் பேரம் பேசும் வழியிலாவது அவனை நினைவது, அவனை நினையாமல் இருப்பதை விட மேலாம்.

4 comments:

  1. ஒருவர் சொல்வதை மனதில் வாங்கி மீண்டும் அதையே தான் அர்த்தப்படுத்திக் கொண்டவாறு மீண்டும் சொல்வதுஎன்பது சாதாரண காரியம் இல்லை. அதைக் கோர்வையாக நீங்கள் எடுத்துச் சொல்லும் பாங்கு நன்றாக இருக்கிறது.
    தொடருங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  2. //அறிவுத் தாகம் கொண்டு என்னை(தன்னை) அறிய முயல்பவன்//
    'அறிதலில் காதல்’ இதாங்க நம்ம ப்ளாக் slogan :)

    ReplyDelete
  3. பதின்ம தொடர் ஒன்று எழுதிட வாருங்கள் என அழைக்கின்றேன்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராதாக்ருஷ்ணன் :)
    பதின்ம தொடர்...ஹ்ம்ம்...எழுதலாம் தான்.
    எழுதுவதே மிகவும் குறைந்து விட்டது.... :) முயற்சிக்கிறேன். நன்றி :)

    ReplyDelete