September 02, 2009

நீங்களும் நானும் ஏன் வலை பின்னிக்கொள்கிறோம்?



இரண்டு தலைமுறைக்கு முன்னோக்கிச் சென்றால் 'பிரபல்யம்' என்பது "விலையுயர்ந்த" சொல். அதனைப் பெற பல தியாகங்கள், தடாலடிகள் செய்யப்பட்டன. வியர்வை சிந்தப்பட்டது. அப்படி கிடைத்த பிரபல்யம் அன்றைய தரத்திற்கு ஏற்றதாய் இருந்தது. இன்றைக்கோ "அதிவேக" உலகத்தில், எல்லாவற்றிற்கும் மின்வேகத்தில் ஒப்புதல் கிடைத்துவிடுகிறது. அதிலும் கூட Quality vs quantity என்றாகி, தரம் குறைந்து வச-வச என எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

எழுத்தாளன் ஆக பாடுபட்டு பகல் இரவு முழித்து நீள காவியங்கள் எழுதிய காலங்கள் போய்விட்டன. (எழுதினாலும் எத்தனை பேர் இன்று படிக்கிறார்கள்?! இரண்டே பத்திகள் நீளமாய் எழுதினாலே படிக்க நேரம் இருப்பதில்லை.) பெரிய பத்திரிகையில், ஒருவன் பெயர் வெளிவராத வரை, தேர்ந்த எழுத்தாளானாய் அவனை உலகம் ஒப்புக்கொண்டதில்லை.(இன்றைக்கும் இந்நிலை தொடர்ந்தாலும் "எது பெரிய பத்திரிகை" என்னும் கண்ணோட்டம் சற்றே மாறுபட்டுவிட்டது) கணினி அறிமுகமாகாத காலம் வரை, ஒரு கல்கி, ஒரு சுஜாதா என, ஆங்காங்கே நல்-முத்துக்கள் தோன்றியவண்ணம் இருந்தன.

இன்றோ 'கம்பன் வீட்டுக் கட்டுத் தரி'யாக பெரிய எழுத்தாளர்களின் படைப்புக்களை படித்தவர்களின் கைகளும் துடியாய் துடித்து ஆளுக்கொரு கீ-போர்ட்-டுடன் 'காலையில் பல் துலக்கியது' முதல் 'தூங்கப்போகும் போது பாடிய ஆராரோ' பாடல் வரை எழுதிக் குவிக்கிறோம். இரண்டு வினாடிக்கு ஒரு முறை யாராவது முதுகில் 'ஷொட்டு' கொடுத்து பாராட்டியிருக்கிறார்களா என ஆவல் மீறிடுகிறது.

எழுத்திற்கு பைசா வசூலாகாத இணைய தளத்தில், சீரியலை தியாகம் செய்து இல்லத்தரசிகளும், இரவு தூங்குவதற்கு முன், கணினியைக் கொஞ்சி, அதில் தன் எழுத்தை பதித்த பின்பே படுக்கச் செல்லும் எழுத்துப் பிரியர்களும், ஆபீஸ் வேலைக்கு நடுவில் மேனேஜருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பின்னூட்டத்தை நோட்டமிடும் ஆர்வலர்களும் ஏன் வந்து போகின்றனர்?

"என் உளறல்கள்", "கிறுக்கல்கள், "இது கவிதை அல்ல", "கவுஜ", "கவிதை-மாதிரி" என்றெல்லாம் தலைப்பிட்டு நம் எண்ணங்களை போலி அடக்கத்துடன் பவனி வரச் செய்கிறோம். கவிதை இல்லைன்னா ஏன் பதிக்கிறோம்? உளறல் என்றால் ஏன் பத்து பேர் முன்பு தயங்காமல் உளறுகிறோம்? தமிழ் தெலுங்கு ஆங்கிலம் ஜெர்மன் உட்பட அனைத்து இந்திய அல்லது வேற்று மொழிகளிலும், இணையத்தின் செய்தி தளங்களிலும் பேசப்பட்ட செய்தியை எதற்காக மீண்டும் ஒரு முறை நம் கைவண்ணத்தில் பதிக்கிறோம்?

எழுதுவதை விடுங்கள் . வேறு சில கேள்விகளைப் பார்ப்போம் ஏன் கலைகள் கற்க முயல்கிறோம்? ஏன் காதலிக்கிறோம்? ஏன் பகைமை பாராட்டுகிறோம்? ஏன் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்? ஏன் உடமைகளைத் தனதாக்கிக் கொள்கிறோம்? இப்படி பல 'ஏன்'கள் இருந்தாலும்,

அடிப்படை காரணம் ஒன்று தான். Quenching of desires/wants.

மனவியல் நிபுணரான ஏப்ரஹாம் மாஸ்லோவின் தத்துவம் படிப்படியாக மனிதனின் தேவைகளை வகைப் படுத்துகிறது.

முதலில் உடல் ரீதியான அடிப்படைத் தேவைகள். உண்ண உணவு-நீர், உடுக்க உடை, இருக்க இடம், புணர்ச்சி முதலியவை. இவை பூர்த்தியடையாத பொழுது, அடுத்த தேவைக்கு மனிதன் செல்வதில்லை.

அடுத்து அவனின் தேவை, பாதுகாப்பு. இதில் எல்லாவிதமான பாதுகாப்பும் அடங்கும். உடல்ரீதியாக பிற உயிரினிங்களிடமிருந்து, சக மனிதனிடமிருந்து, மிருகம், இயற்கை முதலான எல்லாவற்றின் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பு தேவை. பின் மனரீதியாக, உறவுகளின் அன்பு வளைய பாதுகாப்பு, உத்தியோகத்தின் பாதுகாப்பு.

அதன் பின் அவனது தேவை அன்பு, புரிதல். சுற்றத்தின் அங்கீகாரம். சமூகத்தின் ஒத்துழைப்பு முதலியன.

கடைசியாய் வருவது அஹங்கார திருப்தி. இப்பொழுது அவன் வெல்ல முற்படுகிறான். சாதிக்க விழைகிறான். புகழுக்கு ஏங்குகிறான். முதன்மை நிலைத் தேவைகள் பூர்த்தியடையாத பொழுது, அடுத்த நிலைக்கு மனிதன் பொதுவாய் முயலுவதில்லை.

சாதாரணமாக பொழுது போக்கிற்காக, ஒரு communicationக்காக எழுதும் மனிதர்கள், தங்கள் மன உணர்ச்சிகளை வெளிக் கொணரவே எழுதுகிறார்கள். ஆழ் மன எண்ணங்கள் சில வக்ரமானவை. சில வித்தியாசமானவை. பல வினோதமானவை. எழுத்தாளனின் மன-நிலையைப் பொறுத்து அவை வடிவம் பெறுகிறது. அவனுக்கு புகழ் சிறுகச் சேரும் பட்சத்தில் உணர்வுகளைப் பகிரும் முதல் நிலையைத் தாண்டி பதப்படாத அவன் மனத்தில், 'நான் உசத்தி/மேதை' என்ற எண்ணம் மேலோங்க, கடை நிலையான "அஹ்ங்கார திருப்தி" க்கு விழைகிறான். அவன் எழுத்து வடிவமும் படிப்படியாய் மாறுகிறது.

அதன் பின் அவன் "அகத்தின் பெருமைக்காக" எழுதத் துவங்குகிறான்.

இவையெல்லாம் தாண்டி பிரதிபலன் எதிர்பார்க்காமல் எழுதுவோர் சிலரும் உண்டு. நல்ல விஷயங்களை நல்லனவற்றை பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலால் எழுதுவோர்கள். அவர்கள் மனோ தத்துவப்படி, கடைநிலையான "ego-satisfaction"-த் தாண்டி, "தன்னை அறிதல்" என்ற பவ்ய நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ளும் படியில் மெல்ல தவழ்பவர்கள் ஆவார்கள். இவர்களின் எழுத்து மட்டுமின்றி செயல்கள் பலவும் "அங்கீகரத்தை" எதிர்பார்த்து நிற்பதில்லை.

இந்நிலை அடையும் வரை அடிப்படை தேவைகள் நிரம்ப பெற்றிருக்கும் பலரின் "ஏன்" களுக்கும் ஒரே விடை தான் - "அங்கீகாரம்".

21 comments:

  1. ஷக்தி.....நிதானமா படிச்சி பின்னூட்டமிடறேன் வெயிட்டீஸ்

    ReplyDelete
  2. என்ன இன்றைக்கு மாஸ்லோ இப்படி துரத்துகிறார்? இப்போதுதான் ஒரு ப்யூடி பார்லரில் காத்திருந்த நேரத்தில் பழைய வுமன்ஸ் இராவை பிரட்டினேன் - பார்த்தால் மும்பை தீவிரவாத நிகழ்வுகள் போது எப்படி மக்கள் அவதிப பட்டனர் - மனிதர்களுக்கு மாஸ்லோவின் அடிப்படை தேவைகள் என்று சுட்டிக்காட்டப் பட்ட பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டதே என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எனக்கு மாஸ்லோ யாரென்றே தெரியாது. சரி என்று மாஸ்லோ பெயரை செல்போனில் நோட் போட்டு வைத்துக் கொண்டேன். இங்கே உங்கள் வலைப்பதிவுக்கு முதன் முறையாக வருகிறேன். பார்த்தல் நீங்களும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. சரியாய் சொன்னிங்க போங்க

    ReplyDelete
  4. மிகச்சரியான அவதானிப்பு.

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் இடுகை...

    //
    முதலில் உடல் ரீதியான அடிப்படைத் தேவைகள். உண்ண உணவு-நீர், உடுக்க உடை, இருக்க இடம், புணர்ச்சி முதலியவை. இவை பூர்த்தியடையாத பொழுது, அடுத்த தேவைக்கு மனிதன் செல்வதில்லை.
    //

    நான் நினைத்ததும் இதுவே....

    ReplyDelete
  6. வலை பின்னுதல் என்ற சொற்பிரயோகம் எனக்குப் பிடித்த சர். வால்டர் ஸ்காட்-இன் வரியை நியாபகப்படுத்தியது:

    Oh what a tangled web we weave,
    When first we practise to deceive!

    வலையெழுத்தை deception என்று வகைப்படுத்துவது மிகையாகத் தோன்றலாம். இது 'ஐஸ்பெர்க்கின் நுனி..உள்ளுக்குள்ள நிறைய விஷயம் இருக்கு' என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறோம் என்பதால் இதையும் deception என்று சொல்லத் தோன்றுகிறது. நிறைய எழுதும்போது படிப்பது குறைந்துவிடுவதால் self-deception அபாயமும் உண்டு !

    வேண்டுமென்றே செய்யவேண்டியதில்லை. அவ்வாறு அமைந்துவிடுகிறது. தப்ப இயலாது.

    அகங்காரத் திருப்திக்கு இதெல்லாம் எனக்கு ஆரம்பிக்கும்போதே தெரியும் என்று தம்பட்டம் அடிக்கும்படி ஒரு self-promotion. :-)

    ReplyDelete
  7. //ஷக்தி.....நிதானமா படிச்சி பின்னூட்டமிடறேன் வெயிட்டீஸ்//

    மெதுவா வாங்க ஷை. வெயிட்டீஸ் வெற :)))))))எனக்கு பள்ளிக்கூடத்தில் விளையாடிய கோக்கோ கபடி நினைவுக்கு வரது :)))))))

    ReplyDelete
  8. //சரியாய் சொன்னிங்க போங்க//

    மிக்க நன்றி சங்கர்ராம் :)

    //மிகச்சரியான அவதானிப்பு.//

    மிக்க நன்றி யாத்ரா :)

    //சிந்திக்க வைக்கும் இடுகை...//

    மிக்க நன்றி "அதுசரி" :)

    ReplyDelete
  9. //என்ன இன்றைக்கு மாஸ்லோ இப்படி துரத்துகிறார்? இப்போதுதான் ஒரு ப்யூடி பார்லரில் காத்திருந்த நேரத்தில் பழைய வுமன்ஸ் இராவை பிரட்டினேன் - பார்த்தால் மும்பை தீவிரவாத நிகழ்வுகள் போது எப்படி மக்கள் அவதிப பட்டனர் - மனிதர்களுக்கு மாஸ்லோவின் அடிப்படை தேவைகள் என்று //

    என்ன ஒரு co-incidence!

    இல்லாட்டி ஒரு வேளாஇ மாஸ்லோ உங்க கிட்ட எதோ சொல்ல நினைக்கிறார் போலா :)))))) (kidding)

    வருகைக்கு நன்றி தில்லானா. :)

    ReplyDelete
  10. //Oh what a tangled web we weave,
    When first we practise to deceive! //

    ஆழ்ந்த அர்த்தமிக்க வரிகள்
    வாழ்கையின் மினியேச்சர் தான் வலையுலகமும் :D

    //வலையெழுத்தை deception என்று வகைப்படுத்துவது மிகையாகத் தோன்றலாம். //

    இல்லவே......இல்லை :D

    // இது 'ஐஸ்பெர்க்கின் நுனி..உள்ளுக்குள்ள நிறைய விஷயம் இருக்கு' என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறோம் என்பதால் இதையும் deception என்று சொல்லத் தோன்றுகிறது. //

    Perfect example :)

    // நிறைய எழுதும்போது படிப்பது குறைந்துவிடுவதால் self-deception அபாயமும் உண்டு !//


    hmmmm :?


    // அகங்காரத் திருப்திக்கு இதெல்லாம் எனக்கு ஆரம்பிக்கும்போதே தெரியும் என்று தம்பட்டம் அடிக்கும்படி ஒரு self-promotion. :-) //


    :D

    நன்றி பி.ஆர்.

    ReplyDelete
  11. pr,

    ur self-promotion is more entertaining. Loved reading it :)

    Like always more subtler it is, more sharper it gets... and hits the nail hard.

    awesome article.

    ReplyDelete
  12. எழுத வாய்ப்புக் கிடைக்கும் ஒரே காரணத்தினால் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவர்களே பலர். யார் யாருக்கு அங்கீகாரம் தர வேண்டும், யார் யாருக்கு பாராட்டுகள் தர வேண்டும் என்பதல்ல பிரச்சினை. இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி எந்த ஒரு சமுதாயத்திற்கும் உதவுமாறு எழுதப்படும் விசயமானது அமைந்தால் அது எழுதியவருக்கு கிடைக்கும் வெகுமதி, அவ்வளவே. எவ்வித எதிர்பார்ப்புமின்றி எழுதும் மனநிலை அத்தனை எளிதாக எவருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் பலர் அப்படித்தான் எழுதி வந்திருக்கிறார்கள். காலமெல்லாம் நாம் பாராட்டப்பட வேண்டும் என எவரும் நினைத்து எழுதுவதில்லை. அறிந்ததை எழுதுகிறார்கள், தெரிந்ததை எழுதுகிறார்கள்.

    எழுதிய எழுத்தின் மூலம் அங்கீகாரம் கிடைத்தபின்னர் அகங்காரம் கொள்ளாமல் இருந்தால் சரி.

    எழுத்து ஒருவகை கலை. கையில் பேனாத் தூக்கியவன் எல்லாம் கவிதை எழுதுகிறான், நீ என்ன வித்தியாசமாக எழுதப் போகிறாய் என்றே என்னை சிறுவயதில் கேட்டவர்கள் உண்டு. எழுத வேண்டும் எனும் ஆர்வமே எழுதத் தூண்டியதேயன்றி வித்தியாசமாக எழுத வேண்டும் எனும் ஆவல் இருப்பதில்லை.

    வலை பின்னாமலே நோட்டுகளில் எழுதி வைத்த காலங்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள் நிற்கின்றன, யாருக்கும் தெரியாமல் அவை என்னால் மட்டுமே வாசிக்கப்பட்டவையாக இருந்த நேரமும் உண்டு, பலரும் நோட்டினை வாசித்த தருணமும் உண்டு. இப்படி பலருக்கு நேர்ந்திருக்கலாம்.

    அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யாமலே எழுதியவர்கள் உண்டு. மனவியல் நிபுணர் சொல்வதெல்லாம் சரியெனத்தான் படும், காரணம் நம் மனம் அவரை ஏற்றுக்கொண்டுவிடுகிறது.

    அங்கீகாரம் கிடைத்தபின்னர் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்களா என்ன?! மிக்க நன்றி ஷக்தி.

    ReplyDelete
  13. வருகைக்கும் அழகான/ஆணித்தரமான கருத்துக்கு மிக்க நன்றி இராதாகிருஷ்ணன்.
    :)

    //இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி எந்த ஒரு சமுதாயத்திற்கும் உதவுமாறு எழுதப்படும் விசயமானது அமைந்தால் அது எழுதியவருக்கு கிடைக்கும் வெகுமதி, அவ்வளவே. //

    எழுத்தைப் பற்றியும் எழுத்தாளார்களைப் பற்றியும் நான் குறைவாக மதிப்பிட்டு விட்டதாக உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களின் மேற்கூறிய சொற்களை சற்றே படித்துப் பார்த்தால், நான் சொல்ல வந்ததும் அது தான் என புரியும்.

    "சமுதாயத்திற்கோ, தனிமனிதனுக்கோ "உதவுமாறு" எழுதும் எழுத்துக்கள் என்றுமே அங்கீகாரத்தின் பேரில் எழுதப்படுவதில்லை. அதன் நோக்கமே பல பேரை சென்றடைந்து நன்மை பயப்பது.

    இன்றைய இணைய எழுத்துக்களில் சில, பொழுதுப்போக்கிற்காக எழுதப்பட்டாலும், அவை தரும் "அங்கீகாரம்" ஒரு வித போதை உண்டு பண்ணக்கூடியது எனத் தோன்றியது. அந்த போதைக்காக நம்மில் பலரும் (நானும் உட்பட) பதிப்புக்கள் சிலவற்றை பதிக்கிறோம் என்றுதான் நான் சொல்ல வந்தது.

    எழுத்து ஒரு கலை. சரி தான். எவ்வித கலைகளின் பேரிலுஇம் 'passion' இருப்பதால் தான் தொடர்கிறோம்.

    அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாமலே கலைகளை நாடுவது 'passion'(not அங்கீகாரம்) என்பதற்காக்த் தான் என்பது சர்ச்சைக்குறிய விஷயமே அல்ல.

    ஆனாலும், பல பேரின் கலையார்வத்துள்ளும், செயல்களின் பின்னும் நம்மையும் அறியாமல் "அங்கீகாரம்" என்ற சொல் மறைந்திருக்கிறது. அதை கண்டுணர்வது கடினம். கண்டுணர்ந்தாலும் ஒப்புக்கொள்வது அதை விட கடினம்.

    பதிவில் சொல்லியிருந்ததைப் போல், அதைத் தாண்டி "எழுத்து பிரதி பலன் எதிர்பாராமல்" சிலர் (எழுத்து என்றால் எழுத்து மட்டும் அல்ல, எவ்வித செயலும் அடக்கம்) எழுதுவதும் உண்டு.

    அங்கீகாரத்தின் மூலம் நாம் அடுத்தகட்டத்தில் பெறுவது என்ன?

    சிலருக்கு "அஹங்கார திருப்தி" "ego satisfaction"

    வேறு சிலருக்கு "ஆத்ம திருப்தி" "self-satisfaction"

    இவற்றில் எது வாய்க்கிறது என்பதைப் பொறுத்து அவரின் எழுத்தோ கலையோ அதன் வடிவமோ அல்லது நோக்கமோ மாறுபடும் என்பதாக எனக்குப் பட்டது.

    தாங்களின் வலிமையான மாற்றுக் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. மிக்க நன்றி dr.rudhran :)

    ReplyDelete
  16. மிக்க நன்றி அப்துல்லா :)

    ReplyDelete
  17. பேசுவது ஏன் என்று பெரும்பாலும் கேட்பதில்லையே, ஏன்?.. எல்லாரும் அதைச் செய்து கொண்டிருப்பதாலா?.. எழுதுவதும் எல்லாரும் செய்யும் ஒரு காரியமாக ஆகிப்போயின், இந்தக் கேள்வியும் எழாதோ,என்னவோ என்று நினைப்பதற்கும் இல்லை.

    எழுத்து என்பது காற்றோடு போகிற சமாச்சாரம் இல்லை. அதனால் அதில் ஒரு பொறுப்பு வேண்டியிருக்கிறது. எழுதியதை இன்னொருவர் படித்து,
    'அட!' என வியப்பதை ரசிக்கத் தோன்றுகிறது. படித்தவர் விவரம் தெரிந்தவராய் இருந்து ரசிக்கையில், பெருமைப்படத் தோன்றுகிறது. இது எனக்குத் தெரியாமல் போயிற்றே
    என்று சிலர் ரசித்துச் சொல்வதை சிலாகிக்கத் தோன்றுகிறது.
    எழுதியவனுக்கே எழுத்தில் புதைந்து வெளிக்குப் புலப்படாத சூட்சுமத்தை படிப்பவர் சில நேரங்களில் புரிந்து புளகாங்கிதம் அடைவதும் உண்டு.

    எழுத்தை ஆள்பவன் எழுத ஆரம்பித்து விட்டால், அவன் சிந்தையே எழுத்தாய் உருமாற்றம்கொள்கிறது;அவ்வளவுதான். நாம எழுத்தாய்ப் பார்ப்பது எழுதியவனின் சிந்தையே. இந்த நேரத்தில் இவன் இதை எழுதினான் என்பது முக்கியம். அதனால் எழுதுபவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே எழுதுவதாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  18. ஷக்தி,

    இது 'அந்த' பதினைந்து நிமிடப் புகழை நினைவூட்டிருச்சுப்பா.......

    எப்படியோ...வலையில் சிக்கியபின் மீள வழி தெரியலை என்றதுதான் உண்மை:-)

    ReplyDelete
  19. நன்றி துளசி! :) ஆமாம் வலையில் மாட்டின மீன் தான் எல்லோரும் :|

    நன்றி ஜீவி. :)

    ReplyDelete