கிரிவலம்
'திருவண்ணாமலை போய்ட்டு கிரி வலம் போகாம வருவாளோ? கட்டாயம் போய்ட்டு வரணம்' என்று பல நலம்விரும்பிகள் கூறியதன் பெயரில் மறு நாள் கிரிவலம் செல்லத் தீர்மானித்தோம்। மொத்தம் பதினாலு கிலோமிட்டர் நடை. 'திருப்பதியெல்லாம் முனகாமல் நடந்திருக்கேன், இது வெறும் ப்ளேயின்ஸ் தானே, ரொம்ப ஈஸி' என்று பெருமையடித்துக்கொண்டேன். 'அப்போ நீயே குழந்தையையும் தூக்கிண்டு நடந்துடு' என்றார் என் கணவர். உண்மை உறைக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தோம். 'பேசாம என் ஃப்ரெண்ட் ஷைலஜா சொன்ன மாதிரி, யாரானும் 'கிரி'ன்னு ஒரு ஆளை நிக்க வெச்சு, பிரதக்ஷணம் பண்ணிடலாம்' என்று பெரியதாய் ஜோக் அடித்ததை என் கணவர் ரசிக்கவில்லை.
கிரி என்றால் மலை.இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாய்க் கூறுகிறார்கள். மூலிகைகள் மண்டிக்கிடக்க, அதை வலம் வருதல், உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் பயக்கும். வேறு வழியின்றி, கடைசியில், காரிலேயே கிரிவலம் வரத் தீர்மானித்தோம். மறுநாள் காலை 'மனசே ரிலாக்ஸ்' ஒலி நாடாவை எடுத்துக் கொண்டு, கார் சகிதம் எங்கள் கிரிவலம் துவங்கியது.
கிரிவலம் வரும் பாதையில் சற்றே உள்ளடங்கி 'அடி அண்ணாமலை' கோவில் உள்ளது। உள்ளடங்கி இருப்பதாலேயே, அதிக ஆளரவம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. பத்து நிமிடம் கோவிலில் இருந்து விட்டு, மீண்டும் கிரிவலம் தொடர்ந்தோம். மலைவலம் வரும் பாதையில் பலர் பயண மூட்டையுடன் வலம் வந்து கொண்டிருந்தனர். எங்கள் காரின் கேசட்டில் இப்பொழுது தம்பதியர் ஒற்றுமையாய் வாழ்வதைப் பற்றி சுகபோதாநந்தாவின் போதனைகள் முழங்கிக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டே கடவுளைப்பற்றியும், இன்ன பிற நல்ல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு பயணித்திருந்தோம். எது எப்பொழுது எங்கே துவங்கும் என்றே தெரியாது. ஆதிபகவனான முழுமுதற் கடவுள், ஆதி அறியாதவன் என்றால், நாம் (குறிப்பாக கணவன்-மனைவி) துவங்கும் கருத்துவேறுபாட்டுத் தர்க்கங்களும் அதே போன்று தான். எங்கேயோ துவங்கி, எதிலோ முடிந்தது. எங்கள் சண்டைக்கு ஆதாரமே புரியாமல் என் பெண், மலங்க மலங்க விழித்தபடி இருந்தாள். கருத்துவேறுபாட்டின் பொழுது பேசுதல் மேலும் பிணக்கத்தை உண்டு பண்ணும் என்பது எங்கள் இருவரின் கருத்தும். அதனால் பேசாமலேயே வந்தோம். பக்தி மனநிலை பறந்தது. எரிச்சல் மேலிட, சுகபோதாநந்தா, 'எப்படி ஒற்றுமையாய் இருப்பது' என்று பேசிக் கொண்டிருந்த ஒலிநாடாவை பட்டென நிறுத்த மட்டும் முடிந்தது. கிரிவலம் ஏகத்துக்கு மௌன வலமாக மாறியது. தொலைப்பேசியில் என் அம்மாவிடம் பேசும்போது, காலையில் நடந்த தர்க்கம் நினைவில் வர, 'கிரிவலம் வந்தது ரொம்ப அமைதியா இருந்ததும்மா' என்று சொல்லி புன்னகைத்தேன்.
கனவா நனவா?
இரவு எத்தனை மணியானாலும் அன்று யோகி ராம்சூரத்குமார் ஆஸ்ரமம் சென்று விடுவது என்று முடிவு செய்திருந்தோம். இரவு எட்டு மணிக்கெல்லாம் நாங்கள் தங்கியிருந்த இடம், அமைதியாகி விடுகிறது. தெருவில் மனித நடமாட்டம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. ராம்சூரத்குமார் ஆஸ்ரமத்திற்கு முந்தைய தெருவில் 'சிவஷக்தி அம்மையார் ஆசிரமம்' என்ற பலகையைப் பார்த்து விட்டு அங்கும் செல்லலாமா என்று கேட்டு, கணவரின் முறைப்பைப் பரிசாய் பெற்றேன். 'இருக்கற ஆசிரமங்கள் போறும்' என்ற கறாரான பதிலுடன் வண்டியை ராம்சூரத்குமார் ஆஸ்ரமத்திற்கு முன் நிறுத்தினார். ஆசிரமக்கதவு மூடப்பட்டிருந்தது.சீக்கிரமே மூடிவிடுவார்கள் போலும் என்று முடிவு செய்து, வண்டியைத் திருப்பினோம். அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் "ஆசிரமம் போகணமா, இது பின் பக்கம், அடுத்த தெருவிற்கு போங்க அங்க திறந்திருக்கும்" என்றார். நன்றி கூறிவிட்டு, வண்டியை ரிவேர்ஸ் எடுக்க அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அவர் அந்தத் தெருவில் எந்த வீட்டிலும் நுழைந்த அடையாளம் தெரியவில்லை. எல்லா வீட்டு கதவுகளும் மூடியிருந்தன. எந்த வீட்டின் கேட்டின் ஒலியும் கேட்கவில்லை. எந்த வீட்டுக் கதவின் ஒலியும் கேட்கவில்லை. அந்த நீளத் தெருவில் எங்குமே அவர் தென்படவும் இல்லை. சரியாய் ஒரே நிமிடத்தில் சத்தமின்றி எங்கே போனார்? அப்பொழுது தான் உறைத்தது. அவர் எந்த வீட்டின் கதவையும், கேட்டையும் திறந்து கொண்டு வந்ததாகவும் தெரியவில்லை. இதெல்லாம் அதிசயம் என்று என்னால் நம்ப முடியவில்லை. சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து ஏதோ ஒரு வீட்டின் வாசற்புறத்தில் நின்று கொண்டிருக்கக்கூடும் என்று தோன்றி, கண்ணை அகல விரித்து எல்லா வீடுகளையும் பார்த்தேன். யாரும் வந்து போன அடையாளங்கள் இல்லை. நம்ப முடியாததாக இருந்தாலும், அவர் ஏதோ ஒரு வீட்டில், மின்னல் வேகத்தில் நுழைந்து தாளிட்டுக்கொண்டிருப்பார் என்று தான் என் மனம் வாதிடுகிறது. என் கண்ணுக்கு சித்தரோ, இறைவனோ தோன்றும் அளவு நான் இன்னும் புண்ணியம் செய்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
பயணம்
பயணங்களில் பிடித்தமான முதன்மையான விஷயம் என்னவென்றால் அது இலக்கையடைய நாம் பயணிக்கும் நேரம் தான்। வாழ்க்கைப்பயணம் முதல் சுற்றுலாப்பயணம் வரை, இலக்கை விட, பயணமே அதிக சுவாரஸ்யமானது। அடுத்த நாள் திருவண்ணாமலைப் பயணம் முடிந்து பெங்களூர் செல்லப் போகிறேன், என்ற வருத்தம் இருந்தாலும் நான்கு மணிநேரப் பயணத்தை எதிர்நோக்கியிருந்தேன். திருவண்ணாமலை வரும் பொழுது பாடிக்கொண்டு வந்த பாடல்களை மீண்டும் காற்றைக் கிழித்து கத்த வேண்டும். 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' சண்டை போடாமல் ரிலாக்ஸ்டாக கேட்க வேண்டும். மனம் முழுவதும் ஏகப்பட்ட கனவுகள். அன்று ரமணாஸ்ரமத்திலேயே உணவருந்தும் போது, 'நீங்கள் பெங்களூர் தானே செல்கிறீர்கள். இவரையும் அழைத்துச் செல்ல முடியுமா?' என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் கேட்க, 'ஹை ஐ அம் ரோலண்ட், கேன் ஐ ஜாயின் யூ இ·ப் யூ டோண்ட் மைண்ட்' என்று கேட்டுக்கொண்டு ஒரு வெளிநாட்டவர் நின்றிருந்தார். 'இல்லை நான் கத்திப் பாட வேண்டும். நீங்கள் வருவதில் ஆட்சேபம் உண்டு' என்றா சொல்ல முடியும்? 'மனித சேவையே மஹேசன் சேவை' என்று பலவாறாக மனதை சமாதானப் படுத்திக்கொண்டு, 'ஓ வித் ப்ளெஷர்' என்று அவருடன் பெங்களூர் பயணமானோம். பயணம் துவங்கிய பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டே வந்தார். சுவாரஸ்யமாக இருந்தது. ஹாலெண்டிலிருந்து வருவதாகக் கூறினார். மனைவியும், மகனும் பிறகு இந்தியா வரவிருப்பதாய் தெரிவித்தார். பளிங்கு போன்ற சுருக்கமற்ற முகம். அழகான சிரிப்பு, நல்ல கம்பீரமான தோற்றம் அதற்கேற்ற உயரம், எங்கள் வயதொத்தவராய் இருக்கக் கூடும் என்று கணக்கிட்டு, 'உங்கள் மகனுக்கு என்ன வயதாகிறது? பள்ளிக்குச் செல்கிறானா?' என்றேன். 'ஓ அவனா, அவனுக்கு பத்து வயதில் மகள் இருக்கிறாள். எனக்கு இப்போது வயது எழுவது' என்றாரே பார்க்கலாம்! வெளிநாட்டு நடிகர்களும் நடிகைகளும் நாற்பது வயதிலும் எவ்வாறு கதாநாயக வேடம் பூண்டு நடிக்க முடிகிறது என்று இவரைப் போன்றவர்களைப் பார்த்தால் விளங்கக்க்கூடும். மரியாதைக்கு அரை மணி பேசிக்கொண்டிருந்து விட்டு, 'பழைய ஹிந்திப்பாட்டுகள் கேளுங்கள் ரொம்ப மெலோடியஸ் ஆக இருக்கும்' என்று நானே கூறி, முகேஷின் குரலையும், ர·பியின் குரலையும் காரில் தவழவிட்டேன். கூடவே என்னால் அலற முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் மறையவில்லை.
முடித்து விடுவதாய் சொன்ன வேலைகளில் பத்து பர்சண்ட் கூட முடிக்காமல், தச்சர் அவரின் குடும்ப சகிதம் எங்கள் வீட்டில் சிரித்து புழங்கிக்கொண்டிருந்ததைக் கண்டதும் வருத்தம் கோபமாய் மாறியது। இருந்தாலும், "தச்சர் புண்ணியத்தால் திருவண்ணாமலை தரிசனம்" என்று எண்ணி அவரை கேள்விகேட்காமல் விட்டுவிட்டோம். அதன் பின் ஒரு மாதமாகியும் தொடர்ந்து கொண்டிருந்த வேலையுடன் அடிக்கடி வந்து போய்க்கொண்டு, எங்களின் ஆத்ம நண்பராகிவிட்டிருந்தார் தச்சர்.
[முடிந்தது]
உங்கள் நீண்ண்ண்ண்ட யாத்திரை படித்ததும் அண்ணாமலையார் தரிசனம்
ReplyDeleteகிடைத்த பாக்கியம் உணர்ந்தேன்.
//அதன் பின் ஒரு மாதமாகியும் தொடர்ந்து கொண்டிருந்த வேலையுடன் அடிக்கடி வந்து போய்க்கொண்டு, எங்களின் ஆத்மநண்பராகிவிட்டிருந்தார் தச்சர்//
தச்சர்(சித்தன்) போக்கு சிவன் போக்கு!
உங்கள் ஆன்மீக பயணத்தில் தச்சர்
ஒரு interesting காரக்டர். என் மனதில் ஒரு சிறுகதையின் நாட் விழுந்து விட்டது. சில மாதங்களில் கதையாக வரலாம்.
//உங்கள் நீண்ண்ண்ண்ட யாத்திரை படித்ததும் //
ReplyDelete:))) வருகைக்கு நன்றி
//அண்ணாமலையார் தரிசனம்
கிடைத்த பாக்கியம் உணர்ந்தேன். //
இதெல்லாம் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் :P எனினும் நன்றி :D
// சில மாதங்களில் கதையாக வரலாம்.//
ஆஹா Im waiting :thumbsup:
:)) நல்ல பதிவு..( நம்மூராச்சே)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி :)
ReplyDeleteஎதையும் நின்று நிதானித்துப் பார்வையால் பார்த்து, உள்மனத்தால் ஓர்ந்து தரிசித்து பெற்ற அனுபவத்தை மறைக்காமல் கோர்வையாக ரசனையோடு ஒன்றுவிடாமல் consolidated ஆக முழுமைபடுத்திச்
ReplyDeleteசொல்லும், எழுதும் திறமை பெற்றிருக்கிறீர்கள்..
இதே மனநிலை உள்ள இன்னொருவரும் இந்த அனுபவத்தில் கலந்து திளைக்கும் பொழுது எல்லாவற்றையும் 'ஹா...' என்று தன்னை மறந்து ரசித்து மகிழ்ச்சியில் சந்தோஷிக்கத் தோன்றுகிறது.
நல்ல ஒரு அனுபவத்தை மனசுக்குக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி, சக்திப்பிரபா!
நிறைவு பகுதி மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
ReplyDeleteநிறையச் சொல்ல வேண்டுமென்று எப்போவோ போட்ட பின்னூட்டம் பதியத் தவறி விட்டது போலும்..
உங்களின் எழுத்தைப் பற்றி என்பதால் இன்னொரு வேளை சொன்னால் போயிற்று..
நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
//'பேசாம என் ஃப்ரெண்ட் ஷைலஜா சொன்ன மாதிரி, யாரானும் 'கிரி'ன்னு ஒரு ஆளை நிக்க வெச்சு, பிரதக்ஷணம் பண்ணிடலாம்' என்று பெரியதாய் ஜோக் அடித்ததை என் கணவர் ரசிக்கவில்லை.//
ReplyDeleteஹா....ஹா.... படிக்கறச்சே சிரிப்பு வருது.... ஆனா, நிஜத்துல.....
//கிரி என்றால் மலை.இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாய்க் கூறுகிறார்கள். மூலிகைகள் மண்டிக்கிடக்க, அதை வலம் வருதல், உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் பயக்கும். வேறு வழியின்றி, கடைசியில், காரிலேயே கிரிவலம் வரத் தீர்மானித்தோம். மறுநாள் காலை 'மனசே ரிலாக்ஸ்' ஒலி நாடாவை எடுத்துக் கொண்டு, கார் சகிதம் எங்கள் கிரிவலம் துவங்கியது.//
உண்மைதான் ஷக்தி..... கிரிவலம், அதுவும் பவுர்ணமி அன்று வெகு விசேஷம்.... நான் தொடர்ச்சியாக 8 / 10 மாதங்கள் கிரிவலம் சென்றதுண்டு..... அதன் விசேஷமே தனி..... இப்போது, துபாய் வந்தவுடன் போகவில்லை....
ஆனாலும், என் சுட்டி மகனுக்காக நான் "அண்ணாமலை"யாரிடம் வேண்டி இருந்ததால், இம்முறை விடுப்பில் இந்தியா போனபோது, திருவண்ணாமலை சென்றேன்... என்ன நீங்கள் காரில், நான் லோக்கலில் பிடித்த ஆட்டோவில்..... அது ஒரு சுகானுபவம்...
//அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் "ஆசிரமம் போகணமா, இது பின் பக்கம், அடுத்த தெருவிற்கு போங்க அங்க திறந்திருக்கும்" என்றார்.//
சரி... தரிசனம் ஆச்சு.....
//என் கண்ணுக்கு சித்தரோ, இறைவனோ தோன்றும் அளவு நான் இன்னும் புண்ணியம் செய்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.//
எனக்கென்னவோ இது எல்லாம் நாம் முடிவு செய்ய முடியாது என்றே தோன்றுகிறது...
//'ஓ அவனா, அவனுக்கு பத்து வயதில் மகள் இருக்கிறாள். எனக்கு இப்போது வயது எழுவது' //
ஆ....ஹா......சூப்பர்....
நல்லா எழுதி இருக்கீங்க ஷக்தி..... வாழ்த்துக்கள்....
நன்றி ஜீவி, கோபி :)
ReplyDelete